பாங்கைப் பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?

கேள்வி :

வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா?

அஜி

பதில் :

இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் வணக்கமாகும்.

صحيح البخاري

609 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الأَنْصَارِيِّ ثُمَّ المَازِنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، قَالَ لَهُ: إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ، جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»، قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அபூ ஸஅஸஆ அப்துர்ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“ஆட்டையும், பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் “ஆட்டை மேய்த்துக் கொண்டோ’ அல்லது “பாலைவனத்திலோ’ நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லும் போது) உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவுவரை உள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக்கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” என்று என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரி 609

615حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பாங்கு சொல்வதிலும், முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும், ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 615

580حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمِّهِ قَالَ كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلَاةِ فَقَالَ مُعَاوِيَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ

ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார் :

முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் முஅத்தின் வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 631

நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றைச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி ஒருவர் பாங்கு சப்தத்தைக் கேட்கச் செய்தால் அவர் பாங்கு சொன்னவராக முடியாது.

இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும்.

819 حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ أَنَّ مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ قَالَ لِأَصْحَابِهِ أَلَا أُنَبِّئُكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَذَاكَ فِي غَيْرِ حِينِ صَلَاةٍ فَقَامَ ثُمَّ رَكَعَ فَكَبَّرَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ هُنَيَّةً ثُمَّ سَجَدَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ هُنَيَّةً فَصَلَّى صَلَاةَ عَمْرِو بْنِ سَلِمَةَ شَيْخِنَا هَذَا قَالَ أَيُّوبُ كَانَ يَفْعَلُ شَيْئًا لَمْ أَرَهُمْ يَفْعَلُونَهُ كَانَ يَقْعُدُ فِي الثَّالِثَةِ وَالرَّابِعَةِ قَالَ فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَمْنَا عِنْدَهُ فَقَالَ لَوْ رَجَعْتُمْ إِلَى أَهْلِيكُمْ صَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا صَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا فَإِذَا حَضَرَتْ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ رواه البخار

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று தங்கினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 819

எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாடவிடுவதின் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில் யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும்.