கேள்வி :
அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா?
பதில் :
அல்ஜன்னத் இதழில் ஜனவரி 1996ல் அளித்த பதில்
உங்களுடைய இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன பதில் கூறலாம்.
ஏ.ஜீனத்துன்னிஸா, நாகப்பட்டினம்.
அரபு நாடுகளில் மாமிசங்களைப் புதைத்து விடுகின்றனர் என்பது தவறான தகவல் ஆகும். நாம் விசாரித்து அறிந்த வரை அந்த மாமிசங்களைப் பக்குவப்படுத்திப் பெட்டிகளில் அடைத்து சோமாலியா, பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளுக்கு அனுப்புவதாக அறிகிறோம்.
உங்கள் தோழி கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட அதற்கு மக்களின் அறியாமை தான் காரணமே தவிர இஸ்லாம் காரணமில்லை. எந்தப் பொருளையும் யாருக்கும் பயனில்லாத வகையில் பாழாக்குவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஹஜ் பெருநாளில் பிராணிகளைப் பலியிடுவதை இஸ்லாம் கட்டாயப்படுத்துவது மோலோட்டமாகப் பாக்கும்போது சிலருக்கு அது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதில் உள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டால் குறை காணமாட்டார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நாளாகும். அறுத்துப் பலியிடுவதை வசதிமிக்கவர்கள் மீது கடமையாக்கும் போது ஏழைகளுக்கு தாராளமாக மாமிசம் கிடைக்கிறது. அந்த ஒரு நாளிலாவது செல்வந்தர்களைப் போலவே ஏழைகளும் சிறந்த உணவை உட்கொள்ள முடியும். முஸ்லிம் சமுதாயம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க முடியும்.
حدثنا خلاد بن يحيى حدثنا سفيان عن عبد الرحمن بن عابس عن أبيه قال قلت لعائشة أنهى النبي صلى الله عليه وسلم أن تؤكل لحوم الأضاحي فوق ثلاث قالت ما فعله إلا في عام جاع الناس فيه فأراد أن يطعم الغني الفقير وإن كنا لنرفع الكراع فنأكله بعد خمس عشرة قيل ما اضطركم إليه فضحكت قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز بر مأدوم ثلاثة أيام حتى لحق بالله وقال ابن كثير أخبرنا سفيان حدثنا عبد الرحمن بن عابس بهذا
ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அள்ஹா’ பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள், மக்கள் (பஞ்சத்தால்) பசிபட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படிச் செய்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள். உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5423
حدثنا أبو عاصم عن يزيد بن أبي عبيد عن سلمة بن الأكوع قال قال النبي صلى الله عليه وسلم من ضحى منكم فلا يصبحن بعد ثالثة وبقي في بيته منه شيء فلما كان العام المقبل قالوا يا رسول الله نفعل كما فعلنا عام الماضي قال كلوا وأطعموا وادخروا فإن ذلك العام كان بالناس جهد فأردت أن تعينوا فيها
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்களில் யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் மூன்று நாட்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரது வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம் என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வந்த போது, மக்கள் அல்லாஹ்வின் தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 5569, 5570
பெருநாள் தினத்தில் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திற்காகத் தான் இஸ்லாத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
இதைத் தவிர இன்னொரு முக்கியமான நோக்கமும் இதற்கு உள்ளது. இப்ராஹீம் எனும் தீர்க்கதரிசி இறைவனுக்காகத் தம் புதல்வரைப் பலியிட முன் வந்தார்கள். ஆட்டைப் பலியிடுமாறு இறைவன் வழிகாட்டினான். அந்தத் தியாக உணர்வை நினைவுபடுத்திக் கொள்வதற்காக முஸ்லிம்கள் மீது பலியிடுவது கடமையாக்கப்பட்டது. வெளித் தோற்றத்தில் ஆட்டைப் பலியிடுவது போல் இது தோன்றினாலும் இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய நான் தயார்; அதற்கு அடையாளமாகவே இந்த ஆட்டைப் பலியிடுகிறேன். என்று உறுதிமொழி கொடுப்பதே இதன் நோக்கம்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.
அல்குஆன் 22:37
பலியிடுவதன் நோக்கம் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது தான். இறையச்சத்தை வளர்க்காமல் அறுக்கப்படுவது இறைவனால் ஏற்கப்படாது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது. இறைவன் கட்டளையிட்டால் என் மகனைக் கூட நான் பலியிடத் தயார். அதன் அடையாளமாகவே பிராணியைப் பலியிடுகிறேன் என்ற எண்ணத்தில் பலியிடுபவர் இறைவனின் எல்லாக் கட்டளைகளையும் நிச்சயம் நடைமுறைப் படுத்துவார்.
வட்டி வாங்கமாட்டார்,
திருட மாட்டார்,
கொலை செய்யமாட்டார்,
ஏமாற்றமாட்டார்,
யாரையும் புண்படுத்தமாட்டார்,
எவரது உமைகளையும் பறிக்க மாட்டார்.
ஏனெனில் இது போன்ற அக்கிரமங்களை இறைவன் தடை செய்துள்ளான்.
இந்தப் பயிற்சியின் மூலம் அவர் மட்டுமின்றி மனித சமுதாயம் முழுவதுமே பயனடைகின்றது. இந்த உயர்ந்த பயிற்சியை அளிப்பதற்காகவே பலியிடுதல் இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் வேறு பல பயன்களும் உலகுக்குக் கிடைக்கின்றன.
கடவுளுக்கு எதையேனும் பலியிட வேண்டும் என்ற நம்பிக்கை எல்லா மதத்தவர்களிடமும் உள்ளது. சில சமயங்களில் கடவுளுக்காக மனிதர்களைப் பலியிடும் மக்களும் உள்ளனர். தாம் பெற்ற மக்களையே கடவுளுக்காக அறுத்துப் பலியிடுவோரும் உள்ளனர்.
மனிதனைப் பலியிடக் கூடாது; வேண்டுமானால் அதற்காக ஒரு ஆட்டைப் பலியிடுங்கள் என்று மறைமுகமாக இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. கடவுளுக்காகப் பலியிடுவதென்றால் அதிகபட்சமாக பிராணிகளைத் தான் பலியிடலாம் என்று முஸ்லிம்கள் விளங்கியிருப்பதனால் தான் முஸ்லிம்கள் கடவுளுக்காக நரபலி இடுவதில்லை என்பதைக் காண்கிறோம். குர்பானியால் ஏற்படும் நன்மையில் இதுவும் அடங்கும்.
மனிதனிடம் இரக்கமும், கருணையும் இருக்க வேண்டியது அவசியமாகும். இதுபோல் சில சமயங்களில் கடுமையும் தீயவர்களுக்கு எதிராக மூர்க்கமான தாக்குதலும் அவசியம். ஆனால் மனிதன் தன்னிடம் கொள்ளையடிக்க வருபவர்களைக் கூட எதிர்த்துத் தாக்குவதற்கு அஞ்சுவதை நாம் பாக்கிறோம். இரத்தத்தைக் கண்டதும் மயங்கி விழக் கூடியவர்களையும் நாம் பார்க்கிறோம்.
அந்தக் கோழைத்தனத்தைப் பிராணிகளைப் பலியிடுவது நிச்சயம் மாற்றியமைக்கும். அக்கிரமத்தை எதிர்க்கும் துணிவை இது வழங்கும்.
இது போன்ற பயன்களை உங்கள் தோழி உணர்ந்து கொண்டால் நிச்சயம் இஸ்லாம் கூறும் பலியிடுதலைக் குறை கூற மாட்டார்.