காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?

கேள்வி :

நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தைப் பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படிச் சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா?

காஸா

பதில் :

உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் உங்கள் கேள்வியில் உள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு அறிவுறுத்தும் கடமை நமக்கு இருக்கிறது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் சுகங்களை மட்டும் தியாகம் செய்யவில்லை. மானம், மரியாதையையும் இழந்து வேலை செய்கின்றனர் என்பது இவரது கேள்வியில் இருந்து தெரிகிறது.

கெட்ட வார்த்தைகளால் ஏச்சு வாங்கி, செருப்படி வாங்கி நாய் பிழைப்பு பிழைத்து சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தாயகத்தில் உள்ள உறவினரும், பெண்களும் பாழாக்கி வீண் விரயம் செய்வதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குடும்பத்தினர் சொகுசாக வாழ்வதற்காக ஆண்கள் எத்தகைய இழிவுகளையெல்லாம் சுமக்கிறார்கள் என்பதை உணராமல் சில பெண்கள் துரோகச் செயலில் ஈடுபடுவதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களைப் பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் இதை மாற்றி அமைக்க முடியும்.

அரபுகளில் சிலர் இன்னமும் அதே அறியாமைக் கால காட்டுமிராண்டிகளாகவே உள்ளனர் என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரிகிறது. பணத் திமிர் காரணமாக ஆட்டம் போடும் காட்டு அரபிகளால் இஸ்லாத்தின் மரியாதை குறைந்து வருகிறது. மனித உருவில் வாழும் மிருகங்களிடம் போய் அடிமை வேலை பார்க்க வேண்டுமா என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அடுத்ததாக இந்திய அரசாங்கம் தான் தனது குடிமக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு கொள்ளாமல் அநியாயம் செய்கிறது என்றால் இலங்கை அரசும் இந்தியாவைப் போலவே தனது குடிமக்களைக் காக்கத் தவறி வருகிறது என்பது உங்கள் மடலில் இருந்து தெரிய வருகிறது.

இது போல் எந்த அரபியாவது ஒரு அமெரிக்கனிடம் நடக்க முடியுமா? அமெரிக்கனையோ, அல்லது வேறு நாட்டவரையோ அரபி ஒருவன் செருப்பால் அடித்தால் அந்த அரபியைச் செருப்பால் திருப்பி அடித்து விட்டு தனது நாட்டு தூதரகத்துக்குள் போய் விட்டால் அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை தூதரகங்களில் உள்ளவர்கள் சொரணையற்றவர்களாகவும், கடமை தவறியவர்களாகவும் உள்ளனர் என்பதற்கு உங்கள் நிலைமை ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

இனி உங்கள் கேள்விக்கு நாம் வருவோம்.

ஒரு மனிதன் உலகில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்யலாம். அப்படி பணி செய்து சம்பாதிப்பது உலக நாடுகள் வகுத்துக் கொண்ட சட்டப்படி குற்றமாக இருந்தாலும் ஹராமாக ஆகாது.

இந்தச் சட்டங்கள் மனிதர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களாக இருப்பதால் அதைப் பேணி நடப்பது தான் நமக்குப் பாதுகாப்பானது.

மங்களூர் விமான விபத்தில் பலர் பலியான சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பலியானவர்களில் சிலர் ஆள் மாறாட்டம் செய்து பயணித்ததால் அவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்க இருந்த பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் கிடைக்கவில்லை.

பணி செய்த இடத்தில் மரணித்து விட்டால் அந்தச் செய்தி கூட குடும்பத்துக்கு தெரிவிக்க வழியில்லாமல் போய் விடும். இன்னும் பல நன்மைகளை இழக்க நேரிடும்.

எனவே முறைப்படி அனுமதி இல்லாமல் வெளிநாடுகளில் பணி செய்வது பல கேடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடக் கூடாது.