கேள்வி:
அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ என்று ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்கிறார்.
– எஸ். ஷேக் பீர் முஹம்மது, மேலப்பாளையம்.
பதில்:
விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.
‘நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்’ என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.
நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.
நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.
நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.
அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.
இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
مسند أحمد بن حنبل
6668 – حدثنا عبد الله حدثني أبي ثنا أبو معاوية ثنا داود بن أبي هند عن عمرو بن شعيب عن أبيه عن جده قال : خرج رسول الله صلى الله عليه و سلم ذات يوم والناس يتكلمون في القدر قال وكأنما تفقأ في وجهه حب الرمان من الغضب قال فقال لهم مالكم تضربون كتاب الله بعضه ببعض بهذا هلك من كان قبلكم قال فما غبطت نفسي بمجلس فيه رسول الله صلى الله عليه و سلم لم أشهده بما غبطت نفسي بذلك المجلس اني لم أشهده
تعليق شعيب الأرنؤوط : صحيح وهذا إسناد حسن
‘விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே’ என்று கூறியுள்ளார்கள்.
நூல்: அஹ்மத்
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.
அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களில் உள்ள நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.
‘எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே’ என்று இஸ்லாம் கூறவில்லை.
மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.
எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.
அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவதுதான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.
ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
விதியை நம்புகின்றவனாக இருந்தால் ‘நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?’ எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.
விதியை நம்பாதவனாக இருந்தால் இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மனநோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் இயல்பு நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 57:23
விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
விதியை நம்புவதன் மூலம் இந்த மனநோயிலிருந்து விடுபடலாம்.
‘இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல’ என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
அதுபோல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மனநோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.
‘நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்’ என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் இயல்பு நிலையை அடைவான்.
இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ‘நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்’ என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.
விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற்கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர்.
மேலும் இவர்கள் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால் எல்லா விஷயத்திலும் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் விதி இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை, பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.
இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா?
தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.