வஜ்ஜஹ்து ஓதுகின்ற வரை ஓதி விட்டு இமாம் ஓத ஆரம்பித்தவுடன் ஓதுவதை விட்டு விடலாமா?

கேள்வி :
? தொழுகையில் வஜ்ஜஹ்து என்ற நீளமான ஸனாவை ஓதி வருகிறேன். ஜமாஅத்தோடு நின்று தொழும் போது, இமாம் அல்ஹம்து சூரா முக்கால்வாசி ஓதி முடிக்கும் வரை எனது ஸனா நீள்கின்றது. குர்ஆன் ஓதப்பட்டால் வாய் மூடுங்கள் என்ற வசனத்திற்கு இது முரணானதா? அல்லது வஜ்ஜஹ்து ஓதுகின்ற வரை ஓதி விட்டு இமாம் ஓத ஆரம்பித்தவுடன் ஓதுவதை விட்டு விடலாமா?

எப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டணம்

பதில் :

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர், இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. அவ்வாறு ஓதுவது குர்ஆன் வசனத்திற்கும், ஆதாரப்பூர்வமான நபிவழிக்கும் மாற்றமானதாகும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 7:204

இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

எனவே இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓத ஆரம்பித்து விட்டால் நீங்கள் எது வரை ஓதினீர்களோ அத்துடன் விட்டு விட்டு, இமாமின் கிராஅத்தைத் தான் செவிமடுக்க வேண்டும்.

ஜமாஅத் தொழுகையில், இமாம் ருகூவில் நிற்கும் போது வந்து சேர்ந்தால் கூட அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஸனாவை பாதியில் நிறுத்துவதால் தொழுகைக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

எனினும் இது போன்ற கட்டங்களில், அல்லாஹும்ம பாயித் பைனீ… போன்ற சிறிய துஆக்களை ஓதினால் முழுமையாக ஓதி முடிக்க முடியும்.