தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

2201QA023

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் :

மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான்.

நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான்.

இது போன்ற நேரங்களில் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும்.

என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:53

உமக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 7:200

“என் இறைவனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இறைவனே! அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 23:97,98

நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!

அல்குர்ஆன் 16:98

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ الْبَاهِلِىُّ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى عَنْ سَعِيدٍ الْجُرَيْرِىِّ عَنْ أَبِى الْعَلاَءِ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِى الْعَاصِ أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِى وَبَيْنَ صَلاَتِى وَقِرَاءَتِى يَلْبِسُهَا عَلَىَّ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خِنْزِبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلاَثًا ». قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّى. رواه مسلم

உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன்தான் “கின்ஸப்’ எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.

அறிவிப்பவர் : அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்)
நூல் : முஸ்லிம் (4431)

இவ்வாறு தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல் உட்பட நல்லறங்கள் அனைத்திலும் தீய எண்ணங்களை ஷைத்தான் ஏற்படுத்துவான். அப்போது அல்லாஹ் கூறி வழிகாட்டுதல்படி ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளவேண்டும்.

மர்யம் (அலை) அவர்கள், அவர்களுடைய குழந்தை மற்றும் சந்ததிகளுக்கும் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடியது போல் நாமும் தேடிக் கொள்ளலாம்.

விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து இவருக்கும், இவரது பிள்ளைக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்குர்ஆன் 3:36