ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?

பதில் :
ஸஹர் நேரங்களில் மார்க்க உபதேசங்களை ஒளிபரப்பு செய்வதால் யாருமே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற வாதம், அறியாமையான வாதமாகும்.

மார்க்க உபதேசங்களை மக்களுக்கு வாய்ப்பாக உள்ள அனுமதிக்கப்பட்ட எந்த நேரத்திலும் எடுத்துரைக்கலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

ஸஹர் நேரங்களில் தொழுகையில் ஈடுபடுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, திருக்குர்ஆன் ஓதுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது மிகச் சிறந்த நற்காரியங்களில் உள்ளவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை நாம் மக்களுக்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் எடுத்துரைக்கவே செய்கின்றோம்.

அது போன்று மார்க்க உபதேசங்களைக் கேட்பதும் நற்காரியங்கள்தான்.

யாரையும் நீங்கள் தொழாதீர்கள், திக்ர், துஆ செய்யாதீர்கள், ஸஹர் நேர நிகழ்ச்சிகளை மட்டும் காணுங்கள் என்று யாரையும் வற்புறுத்தப்படுவதில்லை. அவ்வாறு கூறினால்மட்டும்தான் இதை ஒரு குற்றச் சாட்டாகக் கூற இயலும்.

ஸஹர் நேரங்களில் மக்கள் அனைவரும் ஒரே சூழலில் இருப்பதில்லை.

சிலர் ஆரம்ப நேரத்திலேயே இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு ஸஹர் நேரத்தில் ஓய்வாக இருப்பார்கள். சிலர் தொழ இயலாதவர்களாகக் கூட இருப்பார்கள். ஸஹர் நேரங்களில் சமையல் வேலைகளில் ஈடுபடும் பெண்கள் இருப்பார்கள். அது போன்று வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு ஒளிபரப்பு செய்யும் நேரம் ஸஹர் நேரமாக இருக்காது அவர்களும் மார்க்க நிகழ்சிகளை காண்பதற்கு வாய்ப்புள்ள ஒரு தருணமாக இருக்கும். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் மார்க்க விசயங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காகத்தான் ஸஹர் நேரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஸஹர் நேரங்களில் இபாதத்துகளில் ஈடுபடாமல் வீண் பேச்சுக்களில் மூழ்கியிருப்பவர்கள் கூட அதிலிருந்து விடுபட்டு பயனுள்ள வகையில் தமது நேரத்தைச் செலவிடுவதற்கு ஸஹர் நேர நிகழ்ச்சிகள் வாய்ப்பாக உள்ளது.
அது போன்று ஸஹர் உணவை உண்ணும் நேரத்தில் மார்க்க உபதேசங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

ஸஹர் நேரத்தில வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்கள் தாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இணையதளங்கள் வாயிலாக நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளலாம். இது அவரவர் விருபத்தைச் சார்ந்ததாகும்.