நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா?

2202QA033

கேள்வி :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா?

பதில் :

நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இல்லாத செய்திகளை நபிகளாருடன் இணைத்து சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவைகளில் உள்ளவைதான் இந்த செய்தியும்.
நபிகளாருக்க ஏரளாமான உண்மையான சிறப்புகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றை கூறி நபிகளாரின் சிறப்புகளை உலகறிச் செய்யலாம். பொய்யான, இல்லாத செய்திகளை சொல்லி நபிகளாருக்கு இழுக்கை ஏற்படுத்தக் கூடாது.

“நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்களது கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு இறைச்செய்தி அறிவிக்கப்படுகிறது.

அல்குர்ஆன் 41:6

நபி (ஸல்) அவர்களுக்கும் தூக்கம், மறதி, பசி போன்ற மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்தும் ஏற்படும் என்பதை அல்லாஹ் “நான் உங்களைப் போன்ற மனிதனே!” என்ற வாசகத்திலிருந்து விளக்கியுள்ளான்.

நபி (ஸல்) மற்ற மனிதர்களைப் போன்றே இருந்தார்கள். உண்ணுதல், குடித்தல், உறங்குதல், தும்மல், கொட்டாவி வருதல் போன்றவை மனிதர்களுக்கு இயற்கையாக வருபவை. இவை நபிகளாருக்கு வராது என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடையாது.

நபிகளாருக்கு நிழல் கிடையாது என்பதற்கும் ஆதாரம் கிடையாது. நபிகளாரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி மகிழ்கின்றனர். இவ்வாறு ஆதாரமற்றவைகளை சொல்லி நபிகளாருக்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை புகழ்வதற்கு ஆதாரப்பூர்வமான உண்மையான செய்திகள் ஏராளம் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்தான் என்றாலும் இறைவன் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வழங்கப்படுகிறது. அந்த இறைச் செய்திதான் மிகப் பெரிய அற்புதமாகும்.

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புகாரி (4981), முஸ்லிம் (239)

இந்த இறைச் செய்தியைப் போன்று உலகில் யாரும்கொண்டு வர முடியாத அளவு மிக சிறப்பு பெற்றதாகும். இது போன்றவற்றை கூறி நபிகளாரின் சிறப்பை மக்களிடம் கொண்டு செல்லலாம்.