ஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?

ஜமாஅத் தொழுகை நடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?

فَقَالَ إِنَّمَا الإِمَامُ ، أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ – لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا. (رواه البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்’ அவர் தக்பீர் (அல்லாஹ் அக்பர்’ என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ் அக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறினால், நீங்களும் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.”

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி (733)

இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதின் நோக்கத்தை மேற்கண்ட நபிமொழி தெளிவாகக் குறிப்பிடுகிறது இமாம் தக்பீர் கூறும் போதும், ருகூஉ செய்யும் போதும், ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போதும், சஜ்தா செய்யும் போதும், அவருடன் நாம் சேர்ந்து அவரைப் பின்பற்றுவதுதான் இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பதின் நோக்கமாகும்.

இடவசதி இன்மையாலோ, அல்லது அதிகமான மக்களின் வருகையினாலோ அல்லது நிர்பந்தமான வேறு காரணங்களினாலோ தொடர்ச்சியான வரிசைகளில் நின்று தொழுவதற்கு இயலாவிட்டால் தேவையின் நிமித்தம் பள்ளியின் வெளியிலோ, மாடியிலோ அல்லது பள்ளிக்கும் அந்த கட்டடத்திற்கும் இடைவெளி இல்லாத அருகில் இணைந்த கட்டிடங்களிலோ தொழுது கொள்ளலாம். ஆனால் அக்கட்டிடம் இமாமைப் பின்பற்றும் வகையில், அல்லது இமாம் கூறுவதை அருகில் இருப்பவர்கள் எடுத்துக் கூறினால் அதைக் கேட்டு பின்பற்றித் தொழும் வகையில் இருக்க வேண்டும். அது போன்று அக்கட்டிடம் இமாமுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.

நபியவர்கள் காயமுற்ற காலகட்டதில் தமது வீட்டின் மாடியறையில் இருந்தவாறே இமாமத் செய்துள்ளார்கள். நபித்தோழர்கள் பள்ளியில் இருந்தவாறே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதுள்ளனர்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ أَوْ كَتِفُهُ وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا (رواه البخاري)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்து கொண்டிருந்த போது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால்’ அல்லது தோள்பட்டை’ கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்’ என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காக இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தாச் செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (378)

இமாம் கூறுவதை அவருக்கு அருகில் இருப்பவர்கள் பின்னால் இருக்கும் மக்களுக்குக் கேட்கும் வகையில் சப்தமாக எடுத்துச் சொன்னால் கேட்கும் வகையில் கட்டிடங்கள் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீர் மக்களுக்கு கேட்காத நிலையில் அபூபக்கர் (ரலி) நபியவர்கள் கூறிய தக்பீரை மக்களுக்கு கேட்கும் படி எடுத்துக் கூறியுள்ளார்கள்.

…அபூபக்ர் (ரலி) தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவர்களாக (பள்ளிக்குச்) சென்றார்கள். அவர்களைக் கண்ட அபூபக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூபக்ர் (ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (712)

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் இமாமைப் பின்பற்றும் வகையில், அல்லது இமாம் கூறுவதை எடுத்துரைத்தால் கேட்டுப் பின்பற்றி தொழும் வகையில் அருகிலுள்ள கட்டிடம் இருந்தால் தேவைகளின் நிமித்தம் தொழுது கொள்ளலாம்.

ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும், மின்சாரம் இல்லாவிட்டாலும் தடையின்றித் தொழும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டிடங்களில் தொழுவது கூடாது.

ஒலி பெருக்கி வசதி என்பது நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒன்றுதான். எனவே அதனுடைய சப்தம் கேட்பதை வைத்து மார்க்கச் சட்டங்களை நாம் வரையறுக்க இயலாது.