ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?

ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?

பதில்

கடமையான தொழுகையை ஜமாத்தாக தொழுது முடித்த பிறகு கூட்டாக சேர்ந்து ஒருவர் துஆ கேட்டு மற்றவர்கள் ஆமின் சொல்லும் கூட்டு துஆ முறை என்பது தான் இஸ்லாத்தில் சொல்லப்படாத ஆதாரமற்ற செயலாகும்.

இதை பற்றி விரிவாக அறிய

<https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-aatharam-ullatha>

<https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-kuduma>

அதே சமயம் தொழுகைக்குப் பின் தனித் தனியே அவரவர் தான் விரும்பியவைகளை துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது.

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். பணிந்து நடப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பெரும் பாரமாக இருக்கும்.

அல்குர்ஆன் 2: 45

இந்த வசனத்தில் தொழுகையின் மூலம் இறைவன் தன்னிடத்தில் உதவித் தேடுமாறு கட்டளையிடுகிறான்.

கடமையான, உபரியான என்று எந்தவொரு தொழுகையாயினும் அந்த தொழுகையை நிறைவேற்றிய பிறகு இறைவனிடத்தில் துஆ செய்யும் போது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது.

இவ்வாறு தொழுகையை முடித்த பிறகு துஆ கேட்பது தொடர்பான பொதுவாக வரக்கூடிய ஆதாரங்களும் இருக்கிறது.
நேரடியாக, நபி(ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகை முடித்த பிறகு துஆ கேட்டதற்கும் ஆதாரம் இருக்கிறது.

و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ مِسْعَرٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ ابْنِ الْبَرَاءِ عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَوْ تَجْمَعُ عِبَادَكَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது “தஜ்மஉ’) இபாதக்க’ (இறைவா! உன் அடியார்களை “உயிர் கொடுத்து எழுப்பும்’ நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)

நூல் : முஸ்லிம் 1280

மேலும், நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு பின்னால் கேட்க வேண்டிய ஏராளமான துஆக்களையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் (ரலி)
நூல்: புகாரீ 5384, 2822

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109

இவ்வாறான துஆக்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு பின் செய்ய வேண்டிய துஆக்களாக நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் நபித்தோழர்களும் தொழுகையை முடித்த பிறகு துஆ செய்துள்ளார்கள் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக இருக்கிறது.

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَصَلَّى فَلَمَّا فَرَغَ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي الْمَسْجِدِ فَأَسْرَعَ إِلَيْهِ النَّاسُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْرِيقُوا عَلَيْهِ سَجْلًا مِنْ مَاءٍ أَوْ دَلْوًا مِنْ مَاءٍ ثُمَّ قَالَ إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். அவர் தொழுது முடித்தவுடன் இறைவா எனக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள்புரிவாயாக. எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் அருள் புரிந்துவிடாதே என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீ (அல்லாஹ்வின்) விசாலமான அருளை (நம் இருவருக்காக மட்டும்) சுருக்கிவிட்டாயே என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 137

இந்த இடத்தில் அவர் கேட்ட பிரார்த்தனையின் கருத்தை தவறானது என்று தான் நபி(ஸல்) கண்டித்தார்களே தவிர தொழுகைக்கு பின் அவர் கேட்ட தருணத்தையும் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனை அல்லாமல் அவராக சுயமாக அவர் விரும்பியதை கேட்டதையும் கணடிக்கவில்லை.

எனவே, ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு கூட்டாக சேர்ந்து ஒருவர் துஆ கேட்க மற்றவர் ஆமின் சொல்வதற்கு தான் மார்க்தக்தில் ஆதாரம் இல்லையே தவிர ஒவ்வொருவரும் தனித தனியே துஆ கேட்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் மார்க்கத்தில் இருக்கிறது.