இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?

2202QA037

கேள்வி :
இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?

பதில் :
ஒரு விஷயத்தில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது தொழும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நேரத்தில் ஓதுவதற்கென ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّٰهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِيْنِي وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِي دِيْنِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பிகுத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ஃபள்லி(க்)கல் அளீம். ஃபஇன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்(த்)த அல்லாமுல் குயூப் அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ஃபீ தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ஃபக்துர்ஹு லீ வயஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ஃபஸ்ரிப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ

பொருள்: இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் கோருகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் (அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’) நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் (அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’) தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தை விட்டுத் திருப்பி விடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.

என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்கள்: புகாரி (1166), திர்மிதீ (442)

இவ்வாறு தொழுது மேலுள்ள துஆவை ஓதிவிட்டு நம்முடைய தேவையை அல்லாஹ்விடம் குறிப்பிட்டுப் பிரார்த்திக்க வேண்டும்.

இதற்கு ‘இஸ்திகாரா தொழுகை’ இதற்கு என்று பெயர். இந்த தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. தடை செய்யப்பட்ட நேரங்கள் அல்லாத எந்த நேரத்தில் இந்த தொழுகையை நிறைவேற்றலாம்.