தஸ்பிஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

? தஸ்பிஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள். ஏனென்றால் சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே என்று என்னுடைய நண்பர் சொல்லுகிறார்.

தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நான்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்என கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: திர்மிதீ 3477

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை. மேலும் அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ் மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ் செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூற முடியாது என்று வாதிடுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், “இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை” என்று குறை கூறியுள்ளார்கள்.

மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்…

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491

இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள். எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது.

“யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: பஸ்ஸார்)

சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுவதால் தஹ்பீஹ் மணி மார்க்கத்தில் உள்ளது என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஒரு காரியம் கூடுமா? கூடாதா? என்று முடிவெடுக்க குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.