? பாங்கைப் பதிவு செய்து, அதை பாங்காகப் பயன்படுத்தலாமா? வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா?
அஜி
இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது வணக்க வழிபாடு தொடர்புடைய விஷயமாகும். பாங்கு சொல்வது சிறந்த நல்லறமாக மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் “ஆட்டை மேய்த்துக் கொண்டோ‘ அல்லது “பாலைவனத்திலோ‘ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (819)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து) விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (615)
ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் கூறுகிறார்:
(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (631)
நல்லறங்களைப் பொறுத்தவரை மனிதன் அவற்றைச் செய்தால் தான் அதன் நன்மைகளை அடைய முடியும். நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாங்கு சப்தத்தை ஒலிக்க விட்டால் நாம் பாங்கு சொன்னவராக முடியாது.
இவ்வாறு செய்யும் போது பாங்கு சொல்வதால் கிடைக்கும் சிறப்புகளை நம்மால் அடைய முடியாது. எனவே நாம் பாங்கு சொன்னால் தான் பாங்கிற்குரிய சிறப்புகள் நமக்கு கிடைக்கும்.
இந்த நல்லறத்தை மனிதர்களில் ஒருவரே செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இளைஞர்களான) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (819)
இந்த ஹதீஸில் உங்களில் ஒருவர் என்று சொல்லப்படுவது, தொழுபவர்களில் யாரேனும் ஒரு மனிதரையே குறிக்கின்றது. எனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆடியோவை பாட விடுவதன் மூலம் பாங்கு சொல்வது கூடாது. மனிதர்களில் யாராவது ஒருவரே பாங்கு சொல்ல வேண்டும்.