தினசரி பத்திரிகைகளில் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. அவற்றை வாசித்து முடித்த பின் வேறு உபயோகத்திற்கு எடுக்க முடியுமா?

? தினசரி பத்திரிகைகளில் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. அவற்றை வாசித்து முடித்த பின் வேறு உபயோகத்திற்கு எடுக்க முடியுமா? உதாரணமாக, சாப்பாட்டு விரிப்பு, கண்ணாடி துடைப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாமா? விளக்கம் தரவும்

நிஜாமுத்தீன்

குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்துகொண்டால் தான் இது பற்றிச் சரியான முடிவை எடுக்க முடியும்.

அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது.  இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களில் காகிதத் தன்மையைத் தாண்டி அவற்றில் வேறு எந்த புனிதமும் இல்லை.

இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும் கணிணியிலும் செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டுவிட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருதமாட்டோம்.

குர்ஆன் என்பது மக்களுக்குப் பயன்படுகின்ற நல்லுபதேசமாகும். நல்லுபதேசத்தை மதிப்பதாக இருந்தால் அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். பிறருக்கு அதைப் பரப்ப வேண்டும். நல்லுபதேசங்களை மதிப்பதற்கு இதைத் தவிர்த்து வேறு வழி இல்லை.

ஒருவர் பெற்றோரின் உபதேசங்களை எழுதிக்கொண்டு எழுதப்பட்ட காகிதங்களுக்கு மரியாதை செலுத்தினால் அவர் காகிதத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார் என்று கூறலாமே தவிர பெற்றோரையோ அவர்கள் செய்த உபதேசத்தையோ மதித்தவராகக் கருதப்படமாட்டார். உபதேசங்களை வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் தான் அவர் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும்.

குர்ஆனுக்கு மரியாதை செலுத்துவதும் இதைப் போன்றதாகும். அதாவது அதன் போதனைகளைப் பேணி நடப்பது மட்டுமே குர்ஆனுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக்கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்துவிடுவோம். குர்ஆனுடைய கருத்துக்களில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்க கூடாது. ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான்.

குர்ஆன் மீது நமக்குள்ள மரியாதையை, அதனைக் கடைபிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.