திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில், “குறை கூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்” என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வாறிருக்க நீங்கள் ஒவ்வொரு இயக்கத்தைப் பற்றியும், ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும் குறை கூறுகிறீர்கள். இது தவறில்லையா? இவ்வாறு செய்வதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா?
காஜா மைதீன், நெல்லை டவுண்
குறை கூறுதல், புறம் பேசுதல் போன்ற செயல்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், ஒருவரைப் பற்றிய குறையை எடுத்துச் சொல்லும் போது கேட்பவர்களுக்கு அதனால் பயன் ஏற்படும் என்றால் அது புறம் ஆகாது.
இன்னும் சொல்வதென்றால், இது போன்ற கட்டத்தில் எது உண்மையோ அதை உள்ளபடி கூற வேண்டும் என்பது தான் மார்க்கத்தின் நிலைபாடு.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.
நான் “இத்தா‘வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்து கொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் இரண்டு நபித் தோழர்களைப் பற்றிக் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இரு நபித்தோழர்களின் குறைகளையும் மறைக்காமல் எடுத்துக் கூறுகின்றார்கள். இது புறம் என்றிருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்” என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கெண்டீர்களே!‘ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6032
ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்கும் போது, அவர் கெட்டவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் அங்கிருப்பவர்களிடம் தெளிவுபடுத்துகிறார்கள். மற்றவர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.
எனவே கேட்பவரின் நலனுக்காக ஒருவரின் குறையைத் தெளிவு படுத்துவது தவறில்லை என்பதை இந்ந ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிபந்தனையின் அடிப்படையில் தனிப்பட்ட நபர்களின் குறைகளைப் பற்றியே தெளிவுபடுத்தலாம் எனும் போது, மார்க்கத்தின் பெயரால் இயக்கம் நடத்திக் கொண்டு, மக்களை வழி கெடுப்பவர்களை அடையாளம் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்ற அடிப்படையில் இவ்வாறு அடையாளம் காட்டுவது மார்க்கத்தில் கடமை என்று கூடச் சொல்லலாம்.
மக்கள் வழிகேட்டில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, சில நபர்களைப் பற்றியோ, இயக்கங்களைப் பற்றியோ விமர்சிப்பது புறம் என்ற வட்டத்திற்குள் வராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தவறு என்றால் எத்தனையோ நபர்களைப் பற்றியும், சமுதாயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணப்படும் குறைகள், விமர்சனங்கள் அனைத்தும் தவறு என்றாகி விடும். ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களை பற்றிய விமர்சனங்களையும் தவறு என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.