கேள்வி :
பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?
ஜே. முபாரக் அலீ, மதுரை
பதில் :
“பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 15036, 15037
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு குழந்தையை முஸ்லிமாகவோ அல்லது முஸ்லிமல்லாதவராகவோ மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர் தான்.
ஏனெனில் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத் திலிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். கடவுள் கொள்கையையும் அவர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
அந்த அடிப்படையில் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கென்று பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே பின்பற்றுவதில்லை. எது தனக்கு நன்மை தரும் என்பதை ஆராய்ந்து அதைத் தான் எடுத்துக் கொள்கிறான்.
இது போன்றே கடவுள் கொள்கையிலும் மனிதன் சிந்தித்து, எது உண்மையான மார்க்கம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.
திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வானம், பூமி, மலைகள், காற்று, மழை, சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கூறி விட்டு, இவற்றையெல்லாம் படைத்தது யார் என்பதைச் சிந்திக்கச் சொல்கிறது. இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால் அவற்றைப் படைத்தது ஓர் இறைவன் தான் என்பதை மனிதன் அறிந்து கொள்வான். இவ்வாறு சிந்தித்து இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை வாரிசு அடிப்படையிலோ அல்லது பெயர் அடிப்படையிலோ யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது. முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள், முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இன்று இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இவர்களெல்லாம் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தாலும் இறைவனின் பார்வையில் இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்களாக முடியாது.
எனவே இஸ்லாம் என்பது பிறப்பு அடிப்படையில் ஏற்படுவதல்ல. ஒரு மனிதனிடம் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!
அல்குர்ஆன் 47:19
வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்லுங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை. மாறாக, அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.
ஃபஅலம் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றான். சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளுங்கள் என்பது இதன் கருத்து! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று வாயளவில் சொன்னால் போதாது. அதை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தவிர கடவுள் இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
எனவே முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது. அதே போல் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் அந்த மார்க்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான். இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.
எனவே பெற்றோர்கள் தங்களது மார்க்கத்தைப் பிள்ளைகளுக்குப் போதித்தாலும், இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, எந்த மார்க்கம் உண்மையானது என்பதை விளங்கி ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும்.
ஒரு கடவுள் தான் இருக்க முடியும்; அந்த ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்ற இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை முஸ்லிம்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பணியை முழுமையாகச் செய்யாததால் தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.