மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

? ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?

உவைஸ்

எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான்.

சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.

அதிக மதிப்புள்ள பொருளை குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.

அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள்.

இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன.

முதல்வகை

நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள்.

உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால்  6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள்

இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள்.

பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள்.

தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும்.

ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள்.

அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார்.

இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள்.

இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும்.

இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்.

இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும்.

இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது.

பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.

இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்?

இரண்டாவது வகை

இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் மற்றொரு வகையான மோசடியும் நடைபெறுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி இல்லாத பொய்களைச் சொல்லி அதனை மிகப்பெரும் விலையில் யாருக்காவது விற்பதாகும்.

வியாபாரத்தில் பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் ஆகும். அது வியாபாரத்தின் பரக்கத்தை அழித்துவிடும்.

சாதாரண ஒரு படுக்கையை, “இது அதி அற்புதமான சக்தி வாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும். இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது” என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்ப வைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து தருகிறோம் என்று கூறி ஏதேனும் ஒரு மாத்திரையைத் தருவார்கள். இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் இனி ஒருபோதும் சர்க்கரை நோய் ஏற்படாது என்று அடித்துச் சொல்வார்கள். பத்து ரூபாய் மாத்திரையை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பார்கள்.

இப்படி மாத்திரை வாங்கியவர், இன்னும் ஆறு பேருக்கு அந்த மாத்திரையை விற்றால் நீங்கள் கொடுத்த பத்தாயிரம் உங்களுக்குக் கிடைத்து விடும். அந்த ஆறு பேரும் தலா ஆறு பேருக்கு விற்றால் உங்களுக்கு 60,000 லாபம் கிடைக்கும். இப்படி மூன்று அடுக்கு போய் விட்டால் உங்களுக்குக் கார் பரிசு கிடைக்கும். ஐந்து அடுக்கு போனால் பங்களா பரிசு கிடைக்கும். பத்து அடுக்கு போய் விட்டால் அமெரிக்காவுக்கு சுற்றுலா! இருபது அடுக்கு போய் விட்டால் தென்ஆப்பிரிக்காவில் ஒரு தீவு வாங்கித் தருவோம் என்று கற்பனையில் மிதக்க வைப்பார்கள்.

ஆனால் சர்க்கரை நோய்க்கு இப்படி ஒரு மருந்து இருந்தால் அது அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களுக்குத் தெரியாமல் போகுமா? பிரபல மருந்துக் கம்பெனிகள் அதைத் தயாரிக்காமல் இருக்குமா? என்றெல்லாம் யாரும் சிந்திக்க மாட்டார்கள். கார், பங்களா கனவு தான் பிரதானமாக இருக்கும்.

சாதாரண ஒரு பற்பசையைத் தந்து, இதனை பட்டாணி அளவில் வைத்தாலே அதிக அளவில் நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்ப வைத்து அதிகமான விலையில் விற்பனை செய்வார்கள்.

இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள். “நான் மிகவும் ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரனாகி விட்டேன்’ என்றெல்லாம்  சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள்.

உற்பத்திச் செலவு இரண்டாயிரம் உள்ள பொருளை இப்படிப் பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.

இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக்  கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்கு  கீழ் உள்ளவர்களுக்கு இலாபமாக வழங்குவார்.

ஒவ்வொருவரும் தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும் தான் அறிவார்கள். யாரும் கம்பெனியோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.

இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும் போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள்.

நாம் உதாரணத்திற்குத் தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள், பல பொருட்களை, பல விதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன.

இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்?

மூன்றாவது வகை

அன்றாடம் தேவைப்படக்கூடிய சில அவசியமான பொருட்களை  ஒரு கம்பெனி தயார் செய்யும். உதாரணத்திற்கு சோப்பு, பவுடர், பேஸ்ட், சட்டை இது போன்ற பொருட்களைத் தயார் செய்யக் கூடிய ஒரு கம்பெனியாக இருக்கும்.

இவர்கள் தயார் செய்யும் பொருட்களை இவர்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் ஆட்களைப் பிடித்து அவர்களின் மூலம் விற்பனை செய்வார்கள். இதற்கு அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். யார் அவர்களுடைய கம்பெனியில் உறுப்பினர்களாக இணைகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் வியாபாரச் சரக்கை வழங்குவார்கள். உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு வியாபாரச் சரக்கு வழங்க மாட்டார்கள்.

இப்படி உறுப்பினர்கள் மூலம் வியாபாரம் செய்வதால் விளம்பரச் செலவு கிடையாது; அதனால் அந்த லாபத்தை நாங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம் என்று வியாக்கியானம் கூறுவார்கள்.

அவர்களுடைய கம்பெனியில் நாம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொன்னால் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட வேண்டும். அதில் ஒரு கணிசமான தொகை உறுப்பினர் கட்டணம் என்று எடுத்துக் கொண்டு மீதித் தொகைக்கு நாம் வியாபாரம் செய்வதற்கு சரக்கு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஒருவர் 20,000 ரூபாய் செலுத்தினால் 10,000 ரூபாயை உறுப்பினர் கட்டணம் எனப் பிடித்துக் கொண்டு 10,000 ரூபாய்க்கு சரக்கு தருவார்கள். அவர்கள் நமக்கு குறிப்பிட்ட விலையில் சரக்கினைத் தருவார்கள். நாம் அதனை விற்றால் நமக்கு அதில் இலாபம் கிடைக்கும்.

இவ்வாறு மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இத்தோடு நில்லாமல் நீங்கள் விற்பனை செய்வதோடு நின்று விடாமல் நீங்கள் இரண்டு உறுப்பினர்களை எங்கள் கம்பெனியில் சேர்த்து விட்டால் அவர்கள் செய்யும் விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்று நமக்கு கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் சேர்த்து விடுகின்ற இருவர் ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் நமக்கு இலாபத்தில் இரண்டு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட ஒரு அளவு பங்கு தருவார்கள்.

இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்ட இரண்டு பேர் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு நபர்களைச் சேர்த்து விடுவார்கள். அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும்.

இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும் போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.

சில நேரங்களில் 100 பேர், 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும் போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்?

நாம் எந்த வியாபாரமும் செய்யாமல் நமக்கு இலாபம் கிடைக்கிறது எனும் போது அது ஹராமான சம்பாத்தியமாகத் தான் இருக்கும்.

இதுபோன்று சங்கிலித் தொடரில் விற்பனை செய்பவர்கள், ஹலாலான முறையில் விற்றார்களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் ஏமாற்றி விற்பனை செய்தால் அந்தப் பாவத்திலும் நமக்கு பங்கு இருக்கத் தானே செய்யும்?

நாம் சேர்த்து விடுவதினால் மட்டும் நமக்கு இலாபம் கிடைக்கும் என்பதே நியாயமானது கிடையாது. ஒரு வாதத்திற்கு இதைச் சரி என்று வைத்து கொண்டாலும் முதல் இருவரைத் தான் நாம் சேர்த்து விடுகிறோம். அவர்களுக்குப் பின்னால் இணைபவர்கள் செய்யும் வியாபாரத்தில் இருந்தும் நமக்கு பங்கு வருகிறதே?

இப்படி இலாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான உற்பத்திச் செலவுள்ள பொருட்களைக் கூட பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி அதிகமான விலைக்கு விற்பனை செய்ய வைக்கின்றார்கள். ஏமாற்றியதில் கிடைக்கும் பணத்தில் தான் பங்கு தருகின்றார்கள். எனவே இது எப்படி நமக்கு ஹலாலாக முடியும்?

இப்படி பொய்களைச் சொல்லி விற்பனை செய்வதன் மூலமும் அந்த வியாபாரம் ஹராமானதாக மாறிவிடுகிறது.

பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள் தான்.

வியாபாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்த சில போதனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள். (நூல்: முஸ்லிம் 3033)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.

உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2079

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2237