மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

? சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள மேனேஜர், மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஜாஃபர் சாதிக்

விபச்சாரம் செய்யும் போது காசு கொடுக்கப்படுவது போல் திருமணத்திற்காகப் பெண்ணுக்கு மஹர் கொடுப்பதும் ஒன்றாக இவருக்குத் தோன்றுகிறது. ஆனால் இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

ஒவ்வொரு தடவை மனைவியுடன் சேரும் போதும் மஹர் கொடுப்பதில்லை. விபச்சாரம் செய்யும் ஒவ்வொரு தடவையும் அதற்கான கட்டணத்தை (?) கொடுக்க வேண்டும்.

யாரிடம் விபச்சாரம் செய்கிறானோ அவள் இவனுக்கு மட்டும் உரியவளாக மாட்டாள். இவனைப் போல் இன்னும் பலருக்குப் படுக்கை விரிப்பாள். ஆனால் மஹர் கொடுப்பதன் மூலம் ஒரு பெண் வேறு யாருக்கும் சொந்தமாகாமல் தடுக்கப்படுகிறாள். இந்த அடிப்படை வேறுபாடு புரியாமல் இப்படி அவர் கேட்டுள்ளார்.

விபச்சாரம் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதில் சொற்ப நேர இன்பம் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. அந்த உறவு முடிந்தவுடன் இருவருக்குமான மொத்த உறவும் முடிந்து விடுகிறது. விபச்சாரத்தில் உடல் சுகம் அனுபவிப்பது ஒன்றே நோக்கம்.

ஆனால் இஸ்லாம் மஹர் கொடுத்து திருமணம் செய்யச் சொல்வதில் உடலின்பம் மாத்திரம் நோக்கமன்று. அத்துடன் அவர்களுடைய பந்தம் முடிந்து விடுவதுமில்லை. அதையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் இஸ்லாம் கூறும் திருமணத்தில் உள்ளன.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதின் மூலம் அவளின் முழுப் பாதுகாப்புக்கு அந்த ஆண் பொறுப்பாகிறான். அவன் சாகும் வரையிலும் அவளுக்காக உழைத்து, சம்பாதித்து அவளின் உணவு, இருப்பிடம், உடை, ஆரோக்கியம் போன்ற சகலத்திற்கும் பொறுப்பேற்று, அவளின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறான். அவள் மூலம், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் அவனே பொறுப்பேற்று அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.

அதே போன்று அந்தப் பெண்ணும் தன் கணவனையும், குழந்தைகளையும் கவனிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். இவை யாவும் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.

இவ்வாறு குடும்ப மகிழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் செயல்படும் நல்லதொரு சூழல், அமைப்பு திருமண பந்தத்தில் காணப்படுகிறது. மேலும் திருமண பந்தத்தில் அந்தப் பெண்ணுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது.

இவற்றில் எந்த ஒன்றாவது விபச்சாரத்தில் உண்டா?

திருமணத்தின் மூலம் ஆண், பெண் இருவருக்கும் மத்தியில் இனம்புரியாத நேசமும் பாசப்பிணைப்பும் உண்டாகிறது. இந்த நேசத்தை இறைவனே ஏற்படுத்துகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:21

அதனால் கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவியும் மனைவிக்கு ஒரு துன்பம் என்றால் கணவனும் பரிதவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய கலப்பற்ற நேசம், பாசம் எல்லாம் நிறைந்திருந்திருக்கிற இஸ்லாம் கூறும் திருமணமும் காசுக்காக உடலை விற்பதும் ஒன்றா?

திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்கள் மூலம் தங்களது சந்ததிகளைப் பெருகச் செய்து அதில் மகிழ்ச்சி அடைவதும் நோக்கமாக உள்ளது. இது தான் இயற்கை நியதியும், இறை நியதியுமாகும். சமூக அமைப்பைக் கட்டமைக்கக் கூடிய வழிமுறை திருமணமாகும். இந்தத் திருமணத்தால் சமூகத்திற்கு நன்மை தானே தவிர எந்த தீங்கும் ஏற்படுவதில்லை.

ஆனால் முறைகேடான ஆண்-பெண் உறவுகள் குடும்ப அமைப்பைத் தகர்க்கக் கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் ஈனச் செயலாகும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. இன்று உலகையே அச்சுறுத்தும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸ் வருவதற்கு காரணமே முறைகேடான பாலியல் உறவுகள் தான் என்பதை அறியாதவர் எவரும் இல்லை.

 மன நோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாகக் கண்டித்து, தடை செய்துள்ளது

 சமூகத்திற்கு நன்மை பயத்து, சமூக அமைப்பை தழைக்கச் செய்யும் திருமணமும், சமூகத்தைச் சீரழித்து சின்னாபின்னமாக்கும் விபச்சாரமும் ஒரு போதும் சமமாகாது. இப்படி திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.