? குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

? குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

ரஸ்னா

தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை மட்டுமே நேர்ச்சையாகச் செய்ய முடியும். வணக்க வழிபாடுகள் இல்லாத காரியங்களில் நேர்ச்சை செய்ய முடியாது.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று இதைத் தெளிவுபடுத்துகின்றது.

முஹம்மது என்ற தன் பெயரைச் சூட்டுவது வணக்கம் என்றோ, அதனால் நன்மை கிடைக்கும் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இவ்வாறு பெயர் வைக்குமாறு அவர்கள் ஆர்வமூட்டவுமில்லை. எனவே இவ்வாறு பெயர் சூட்டுவது வணக்கம் அல்ல. வணக்கமில்லாத இந்தக் காரியத்தை நேர்ச்சையாகச் செய்ய முடியாது.

இதை நேர்ச்சையாக ஆக்காமல் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு முஹம்மது எனப் பெயரிட்டால் அதில் தவறேதுமில்லை. அவ்வாறு பெயர் வைக்கலாம்.

பொதுவாக நோச்சை செய்வதை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. நேர்ச்சை செய்யுமாறு அவர்கள் ஆர்வமூட்டவுமில்லை. இதைச் செய்யாமல் இருக்க வேண்டும். இதனால் எந்த நன்மையும் இல்லை என்றே போதித்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக் கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், “நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6608

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6609

எனவே நேர்ச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் நேர்ச்சை செய்துவிட்டால் அதை நிறைவேற்றுவது அவரின் கடமையாகி விடுகின்றது.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்

அல்குர்ஆன் 22:29

புவானாஎன்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லைஎன்று கூறினார்கள். “அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் “இல்லைஎன்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கைவசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881