ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்கு சொல்வது சிறந்ததா? அல்லது ஒரு பாங்கு மட்டும் போதுமா?

 நபிகள் நாயகம் காலத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டதாக ஹதீஸ்களில் காண முடிகின்றது. இப்போது நபிவழி பேணப்படுகின்ற பள்ளிகளில் இரண்டு பாங்குகள் சொல்லப்படுவதில்லையே! இரண்டு பாங்கு சொல்வது சிறந்ததா? அல்லது ஒரு பாங்கு மட்டும் போதுமா? விளக்கவும்.
எம். முஹம்மது கடாஃபி, கொடிக்கால் பாளையம்

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது “ஸவ்ராஎனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 912

ஜுமுஆ நாளில் இன்னொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட்டார்கள்.- பள்ளிவாசலில் மக்கள் அதிகரித்த போதே (இவ்வாறு செய்தார்கள். அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடை மீது) அமரும் போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 915

ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் ஏறி அமரும் போது ஒரு பாங்கு சொல்வது மட்டுமே நபிவழி என்பதற்கு இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் சான்றாக உள்ளன. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டதாக ஹதீஸ்களில் கூறப்படுவது பாங்கு மற்றும் இகாமத் ஆகியவை பற்றியதாகும். பொதுவாக ஹதீஸ்களில் இகாமத்தையும் பாங்கு என்றே கூறப்படும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகளும், உஸ்மான் (ரலி) அவர்கள் மூன்றாவது அழைப்பை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் என்பது, இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு மற்றும் தொழுகை துவங்குவதற்காகச் சொல்லப்படும் இகாமத் ஆகிய இரண்டைப் பற்றித் தான் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

இமாம் (மிம்பருக்கு) வரும் போதும், தொழுகை நடத்தப்படும் போதும் பாங்கு சொல்வதே (அதாவது பாங்கும், இகாமத்தும் சொல்வதே) நபி (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) காலத்திலும் நடைமுறையில் இருந்தது. உஸ்மான் (ரலி) கடைத்தெருவில் உள்ள ஸவ்ரா எனுமிடத்தில் மூன்றாவது அழைப்பை அதிகப்படுத்தினார்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: திர்மிதீ 474

தற்போது நடைமுறையில் உள்ளது போன்று இரண்டு பாங்கு மற்றும் ஒரு இகாமத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.