ஜாக் விடுக்கும் ஜோக் சவ(டா)ல்

ஜாக் விடுக்கும் ஜோக் சவ(டா)ல்

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனத்தைப் படிக்கின்ற எந்தவொரு யூதனும், “எங்கள் சமுதாயத்தை எப்படிக் கழுதை என்று குறிப்பிடலாம்; கழுதையைப் போல் நான்கு கால்கள் எங்களுக்கு இருக்கின்றனவா? வால் இருக்கிறதா? கதி கலங்க வைக்கும் காட்டுச் சப்தம் இருக்கின்றதா?” என்ற கேள்வியைக் கேட்க மாட்டான்.

காரணம், இதில் கூறப்படுகின்ற உவமை, ஒப்பு நோக்கு யூத சமுதாயம் வேதத்தின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தது பற்றித் தான் என்பதை அந்த யூதன் புரிந்து கொள்வான். சாதாரண அறிவு உள்ளவர்கள் இப்படித் தான் புரிந்து கொள்வார்கள்.

ஒருவனைப் பார்த்து சிங்கம் என்று கூறினால், படிப்பறிவற்ற பாமரன் கூட, சிங்கம் என்றால் நான்கு கால்களும், வாலும் இருக்கின்றதா? என்று கேட்க மாட்டான்.

ஆனால் ஜாக் புத்திசாலிகள் (?)  இப்படித் தான் கேட்கிறார்கள்.

“கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு” என்ற தலைப்பில் ஏகத்துவம் அக்டோபர் 2006 இதழிலும், “நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரையல்ல!” என்ற தலைப்பில் நவம்பர் 2006 இதழிலும் கட்டுரைகள் எழுதியிருந்தோம். அதில் ஜாக்கின் செயல்கள் யூதர்களின் செயல்பாட்டுக்கு ஒத்திருப்பதை ஒப்பு நோக்கியிருந்தோம்.

“ஜாக் பின்பற்றுவது இஸ்லாமிய காலண்டரல்ல! இஸ்ரேலியக் காலண்டர் தான்”  என்று செப்டம்பர் 2008 இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதாவது ஜாக்கை யூத மார்க்கத்துடன் ஒப்பிட்டிருந்தோம்.

யூத மதத்துடன் ஜாக் எதில் ஒத்துப் போகின்றது?

கணிப்பு விஷயத்தில் ஒத்துப் போகின்றது. அதாவது ஜாக்கிற்கும் யூத மதத்திற்கும் உள்ள ஒற்றுமை பிறை விஷயத்தில் செய்யும் கணிப்பும் கணக்குமாகும்.

கணிப்புக் காலண்டர் கண்ட வரலாறு

யூதர்களிடம், “சேன்ஹெட்ரின்’ (லத்தீன் மொழியில் “ஒன்றாக அமர்தல்’ என்று பொருள்) என்ற உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பிறை அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் பணியை இந்த உச்ச நீதிமன்றம் தான் செய்து வந்தது. இருவர் சாட்சி சொல்வர்; அந்த சாட்சியத்தை வைத்து மாதத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்துக் கொண்டிருந்தது.

இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூத மக்களுக்குக் குன்றின் மேல் நின்று தீப்பந்தம் அசைத்துக் காட்டப்படும். மற்றொரு குன்றின் மேல் நிற்பவர் பதிலுக்கு அது போல் தீப்பந்தம் அசைப்பார். இதை வைத்து வெளியூர் யூத மக்கள் அதை மாதத்தின் துவக்க நாள் என்று விளங்கிக் கொள்வர்.

இந்த உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை உடைப்பதற்காக பிரிவினைவாதிகள், மாதத்தின் வேறு நாட்களிலும் தீப்பந்தத்தை அசைத்து இடையூறு செய்தனர். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் இரவில் தூதர்களை அனுப்பி மாதத்தின் துவக்கத்தைத் தெரிவித்தது. இந்தத் தூதர்கள் வந்து சேர்வதற்கு முன்னால் மறு நாள் துவங்கி, பண்டிகையை யூத சமுதாயம் இரு வேறு நாட்களில் கொண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. (ஜாக்கினர் போல் அவர்களும் இதற்காகக் கவலைப்பட்டனர்.) எனவே இதையெல்லாம் தவிர்ப்பதற்காக யூத உச்ச நீதிமன்றம் நான்காம் நூற்றாண்டில் நிரந்தரக் காலண்டருக்குத் தாவியது. அதாவது கணக்கு, கணிப்பின் பக்கம் தாவியது.

கண்ணால் பார்க்கும் நடைமுறையிலிருந்து கணிப்பிற்குத் தாவிய யூதர்களின் வரலாறு இது! இணைய தளங்களில் ஹிப்ரு காலண்டர் என்ற தலைப்பில் தேடினால் இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் தான் செப்டம்பர் இதழில், ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் என்று ஒப்பிட்டு எழுதப்பட்டது. அதாவது யூதக் காலண்டரும் கணிப்பு!  இவர்களுடைய காலண்டரும் கணிப்பு!

இங்கு ஒப்பீடு செய்திருப்பது கணிப்பைத் தான். இதைப் புரிந்து கொள்ளாத பேர்ணாம்பட்டு ஜாக்கினர், “ஐந்து வருடக் காலண்டரைக் கொண்டு வாருங்கள்; ஆறு வருடக் காலண்டரைக் கொண்டு வாருங்கள்; அது எங்கள் காலண்டருடன் எப்படி ஒத்திருக்கின்றது என்று காட்டுங்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது கழுதையைப் போல் கால்களும் வாலும் இருக்கின்றதா? என்று ஜாக்கினர் ஜோக்கான சவடால்களை எழுப்பியுள்ளனர். இதிலிருந்து ஜாக்கின் அபார ஞானத்தைத் தெரிந்து கொள்ளாலம்.

அண்மையில் கோவையில் ஜாக்குடன் விவாதம் செய்த கேரள நத்வத்துல் முஜாஹிதீன் அமைப்பினர்  “ஜாக் காலண்டர் இஸ்லாமிய காலண்டரல்ல, இஸ்ரேலிய காலண்டர் தான்” என்று சொன்னதை மேற்கோள் காட்டியே செப்டம்பர் 2008 இதழில் இந்தத் தலைப்பில் இதை வெளியிட்டிருந்தோம். இது நாம் ஏற்கனவே எழுதியதை உறுதிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டிருந்தோம்.

“கே.என்.எம். மார்க்க அறிஞர் ஜக்கரிய்யா சுலாஹி அவர்கள், “ஜாக்கின் காலண்டர் யூதக் காலண்டர் தான். அதை நான் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். யூதக் காலண்டரில் 31 வரும். இந்த விஷயத்தைத் தவிர மற்றவைகளில் ஜாக் காலண்டர், இஸ்ரேலியக் காலண்டரை ஒத்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்,”

இது தான் அந்த இதழில் குறிப்பிட்ட செய்தியாகும். அதாவது இந்தச் செய்தியில், “யூதக் காலண்டருக்கும் ஜாக் காலண்டருக்கும் உள்ள வித்தியாசம் யூதக் காலண்டரில் 31 தேதி வரும்’ என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளோம்.

இது விளங்காத பேர்ணாம்பட்டு ஜாக்கினர், ஐந்து வருடக் காலண்டரை வைத்து ஒப்பிட்டுக் காட்ட முடியுமா? என்று சவடால் விட்டுள்ளனர்.

“31 தேதி வருவது தான் வித்தியாசம்’ என்று கூறுவதிலேயே இரண்டு காலண்டருக்கும் தேதி வித்தியாசம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. கணிப்பு என்ற அடிப்படையில் யூதர்களும், ஜாக்கினரும் ஒத்துப் போகின்றனர் என்பது தான் மேற்கண்ட விவாதத்தின் சாராம்சம். இந்தக் கருத்தைத் தான் அக்டோபர், நவம்பர் 2006 இதழ்களிலும், செப்டம்பர் 2008 இதழிலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

கே.எம்.என். அமைப்பைச் சேர்ந்த ஜக்கரியா சுலாஹி அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது அதற்குப் பதிலளிக்காத ஜாக்கினர், தவ்ஹீது ஜமாஅத்தினரை நோக்கிச் சவடால் விடுவது வேடிக்கையாக உள்ளது.

பேர்ணாம்பட்டு ஜாக்கினரே! உலகப் பிறை கொண்டு வருவதாகப் புறப்பட்ட உங்கள் அமைப்பிலேயே ஒருவர் நோன்பு நோற்று, மற்றவர் நோன்பு நோற்காமல் நாறிப் போன பின்னரும் இது குறித்துப் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

கே.எம்.என். விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தான் கமாலுத்தீன் மதனி உட்பட ஜாக்கினர் பலர் யூதக் கணிப்புக் காலண்டரை ஏற்காமல், மறு நாள் நோன்பு நோற்றனர். ஜாக்கின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் சிலரைத் தவிர ஜாக்கில் யாரும் யூதக் கணிப்புக் காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த உண்மை பேர்ணாம்பட்டு ஜாக்கிற்குத் தெரியாதா?

பிறை விஷயத்தில் நீங்கள் முதலில் ஒத்த கருத்துக்கு வந்து விட்டு அதன் பின்னர் மற்றவர்களுக்குச் சவால் விடுங்கள்; சவடால் பேசுங்கள். இல்லையேல், “ஒரு நாள் கழித்து நோன்பு நோற்றதால் எங்களைக் காஃபிரைப் போல் பேசியும் எழுதியும் வருகிறார்களே’ என்று உங்களைப் பற்றி உங்கள் அமீர் புலம்பித் தீர்த்த கடிதத்தை வெளியிட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.