இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது நாமும் திருப்பித் தாக்கலாமா?

? ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்த நபித்தோழரை நபி (ஸல்) அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். அவர் திரும்ப மக்காவுக்குச் செல்லாமல் இடைப்பட்ட பகுதியிலிருந்து கொண்டு மக்காவிலிருந்து வரும் முஷ்ரிக்குகளைத் தாக்கிக் கொலை செய்து வந்தார். இது நபி (ஸல்) அவர்களது அங்கீகாரத்துடன் தான் நடந்தது. அப்போது இஸ்லாமிய ஆட்சியும் இல்லை. எனவே இதன் அடிப்படையில் இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது நாமும் திருப்பித் தாக்கலாம் என்ற வாதத்தை ஒரு சாரார் எடுத்து வைக்கின்றனர். இச்சம்பவத்தின் உண்மை நிலை என்ன?
எம். ஷபீர், திருவனந்தபுரம்

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடைபெற்ற சம்பவத்தைத் திரித்துக் கூறி இத்தகைய வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று கூறுவது தவறு! மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கும் நிலையில் தான்      மக்கா குறைஷிகளுடன் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

மக்காவிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்த நபித்தோழர் மக்காவுக்குத் திரும்பிச் செல்லாமல், இடைப்பட்ட பகுதியில் இருந்து கொண்டு மக்காவாசிகளைத் தாக்கி வந்தது நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூறுவதும் அப்பட்டமான பொய்யாகும்.

குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்று கொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள்.

அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள் தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், “எனக்குக் காட்டு. அதை நான் பார்க்கிறேன்என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்ட போது, “இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்என்று கூறினார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்ற போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

அறிவிப்பவர்கள்: மிஸ்வர் பின் மக்ரமா மர்வான் பின் ஹகம்

நூல்: புகாரி 2731

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூபஸீர் (ரலி) அவர்களை மக்காவுக்குத் திருப்பியனுப்புகின்றார்கள். ஆனால் அவரோ தம்மைப் பிடித்துச் செல்ல வந்திருந்த குறைஷியைக் கொலை செய்து விடுகின்றார். இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கவே செய்கின்றார்கள். தம்மை மீண்டும் மக்காவுக்கே அனுப்பி விடுவார்கள் என்று பயந்தே அபூபஸீர் அவர்கள் மதீனாவிலிருந்து தப்பிச் சென்று கடலோரப் பகுதியில் தங்குகின்றார். எனவே இது நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூறுவது அவதூறாகும்.

குறைஷிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எள்ளளவும் மாற்றமாக நடக்கவில்லை என்பது தான் இந்தச் சம்பவத்திலிருந்து தெளிவாகும் உண்மை!

இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது திருப்பித் தாக்குவதற்கு இந்தச் சம்பவத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக, நம்மை யாரேனும் தாக்குவதற்கு வந்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு மார்க்கத்திலும் அனுமதி உள்ளது; இந்திய அரசியல் சட்டமும் இதற்கு உரிமை வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு மேற்கண்ட சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுவது அறிவீனமாகும்.

இந்திய அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்ற ஒப்பந்தத்தில் இருக்கும் நாம் அதற்கு ஒரு போதும் மாறு செய்யக்கூடாது என்பது தான் இந்தச் சம்பவத்திலிருந்து நமக்குத் தெளிவாகும் படிப்பினை! மார்க்கத்திற்கு விரோதமாக அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவதற்கு இதை ஒரு போதும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு வாதத்திற்கு இந்தச் சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே இதைச் செய்ய முடியாது. இந்தியாவை விட்டு வெளியேறி, ஆட்சியில்லாத ஒரு பகுதியில் இருந்து கொண்டு இந்தக் காரியங்களைச் செய்யலாம் என்று தான் கூற முடியும்.

இந்தக் காலத்தில் அப்படியொரு பகுதி உலகில் எங்கும் இல்லை என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை இவர்கள் எந்த வகையிலும் நிலைநாட்ட முடியாது.