கேள்வி :
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?
எஸ். முஹம்மது இம்ரான், ஈரோடு
பதில் :
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தை, மார்க்க வழிபாடுகளை நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும்.
“நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2697
வணக்க வழிபாடுகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களில் செய்யப்படும் புதுமைகளை பித்அத் என்று கூறக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் சைக்கிள் ஓட்டுவதையும், கார் ஓட்டுவதையும் பித்அத் என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். இந்த அடிப்படை வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சுதந்திர தினத்தில் இரத்த தானம் செய்தால் கூடுதல் நன்மை என்று கருதி யாரும் செய்வதில்லை. அன்றைய தினத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் போது அரசாங்கத்திற்குத் தங்கள் அமைப்பின் மீது நற்பெயர் ஏற்படும் என்று கருதித் தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
மேலும் சுதந்திர தினம் என்பது எந்த மதத்தின் பண்டிகையும் அல்ல. நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கும் ஒரு நாள் தான். வணக்க வழிபாடுகள் சம்பந்தமில்லாத ஒரு செயலை பித்அத் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.