எங்கள் ஊர் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகையில் இமாம் வரவில்லை. அங்கிருந்த ஒருவரை தொழுகை நடத்தச் சொன்னோம். அவர் பெரிய சூரா ஓத நினைத்து தட்டுத் தடுமாறி, தப்பும் தவறுமாக ஓதி தொழுகை நடத்தினார். இப்படித் தொழுதால் தொழுகை கூடாது என்றும், இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா?
திவான் மைதீன், பெரியகுளம்
பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாம் வரவில்லையென்றால் அதற்காக ஜமாஅத் தொழுகையே நடத்தாமல் தனித்தனியாகத் தொழக் கூடாது. ஏனெனில் பள்ளிவாசல்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதே ஜமாஅத் தொழுகைக்காகத் தான். இமாம் வரவில்லை என்பதற்காக ஜமாஅத் தொழுகை என்ற முக்கியமான நபிவழியைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
“தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 645
“ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப்படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி)
நூல்: அபூதாவூத் 460, நஸயீ 238
இமாம் வரவில்லை என்றால் இருக்கும் நபர்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவர் தொழுகை நடத்தலாம்.
எனது தந்தை (இஸ்லாத்தை ஏற்று விட்டு ஊருக்கு) வந்ததும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளேன். இன்னின்ன நேரத்தில் இந்த இந்த தொழுகைகளைத் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகைக்கு அழைக்கட்டும். மேலும் உங்களில் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள் (அத்தகுதியுடைய ஒருவரை தேடிப் பார்த்தார்கள்) நான் ஒட்டக வியாபாரக் கூட்டத்தாரிடமிருந்து ஓதத் தெரிந்து கொண்டிருந்ததால் என்னை விட அதிகமாகக் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் யாருமில்லை. எனவே தொழுகை நடத்த என்னை முன்னிறுத்தினர். அப்போது நான் ஆறு வயதுடையவனாக அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரி 4302
இவ்வாறு தொழுகை நடத்துபவர் குர்ஆனை முழுமையாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பதோ, பொருளுணர்ந்து ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பதோ இல்லை.
குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.
(அல்குர்ஆன் 73:20)
இந்த வசனத்தின் அடிப்படையில் சூரத்துல் ஃபாத்திஹாவுடன், திருக்குர்ஆனின் ஒரேயொரு வசனத்தை ஓதிக் கூட தொழுகை நடத்தலாம். தொழுகை நடத்துபவர் நிறைய ஓத வேண்டும் என்பதற்காக, தப்பும் தவறுமாக ஓதக் கூடாது. குறைவாக ஓதினாலும் தெரிந்த வசனங்களை ஓத வேண்டும்.
அப்படியே இமாம் தவறு செய்தாலும் அதனால் பின்பற்றித் தொழுபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
“அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார் களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 653