குடும்பக் கட்டுப்பாடு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

? குடும்பக் கட்டுப்பாடு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? கூடாது எனில் ஏன் கூடாது? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

ஃபவாஸ்

கருவில் குழந்தை உருவாவதைத் தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சக்கட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் “அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5209

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “(அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்குப் பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கர்ப்பமாகி விடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2606

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2610

மேலுள்ள செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ, நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளைக் கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 2542

தற்காலிகமாகக் குழந்தை உருவாவதைத் தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வது சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாகக் குழந்தை உருவாகாதவாறு குடும்பக் கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிகக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்த பின் பெற்றெடுத்த குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படிப் பெறமுடியும்? இதைச் சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்ய மாட்டார்கள்.

மேலும் இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் 4:119

எனவே பெரும் பாக்கியமான குழந்தை பாக்கியத்தை நிரந்தரமாக நீக்கி இறைப் படைப்பில் மாற்றம் செய்வது கூடாது.