கேள்வி :
இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா?
முஹம்மது இஸ்மாயில், பிரான்ஸ்
பதில் :
தாங்கள் குறிப்பிடும் அந்த வளையத்தை மருத்துவக் குணம் கொண்ட பொருட்களால் தயாரித்துள்ளார்களா? அல்லது மந்திரத்தின் பெயரால் தயாரித்து விற்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நாமறிந்த வரை இது போன்ற உலோக வளையங்களை அணிவதால் எந்த நோயும் குணமடைவதாக மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறியிருப்பதால் மேற்படி செம்பு வளையங்கள் பெரும்பாலும் மந்திர சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் தயாரிக்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்து மதத்திலும், இஸ்லாத்தின் பெயரால் லெப்பைத் தொழில் நடத்தி ஏமாற்றுபவர்களிடமும் செம்புத் தகடு, வளையம் போன்றவற்றை மந்திரத்திற்காகப் பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகிறது.
எனவே மருத்துவக் குணம் கொண்டது என்று தெளிவாக நிரூபிக்கப்படாத வரை இது போன்ற பொருட்களால் குணம் கிடைக்கும் என்று நம்பினால் அது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகத் தான் ஆகும். நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதற்கும், குர்ஆன் வசனங்களை ஓதி நிவாரணம் தேடுவதற்கும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.