பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படித் தொழுகையை நிறைவேற்றுவது?

? நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் செல்லும் போது உபரியான தொழுகைகளை வாகனத்திலேயே தொழுவார்கள். கடமையான தொழுகையின் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று புகாரியில் இடம் பெற்றுள்ளது. சென்னைக்குப் பேருந்தில் பயணம் செய்யும் போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய தொழுகைகளைப் பேருந்திலேயே நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் எப்படித் தொழுகையை நிறைவேற்றுவது?

திவான் மைதீன், பெரியகுளம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான தொழுகைகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி)

நூல்: புகாரி 1097

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடமையான தொழுகைகளைத் தொழும் போது, வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தான் தொழ வேண்டும். எனினும் நமது சொந்த வாகனமாக இருந்தால் அல்லது நாமே தனியாக வாடகைக்கு அமர்த்திச் சென்றால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் பேருந்து, ரயில் போன்ற பொது வாகனங்களில் இது சாத்தியமில்லை. இவ்வாறு நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் நமக்கு எது சாத்தியமோ அதைச் செய்து கொண்டால் குற்றமாகாது.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

எனவே நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகைகளை வாகனம் செல்லும் திசையை நோக்கித் தொழுது வழி காட்டியிருந்தாலும், இது போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் கடமையான தொழுகைகளையும் அவ்வாறு தொழுவதில் தவறில்லை.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115