? பாங்கு சொல்வதற்கு முன்னால் ஸலவாத் சொல்லலாம் என்று கேள்வி நேரத்தில் பதில் சொல்லப்பட்டது. இதற்கு முன்பு இந்த விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்படி இருந்தது? பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழியா?
குடியாத்தம் இர்ஃபான், துபை
பாங்குக்கு முன் ஸலாவத் சொல்வது பித்அத் என்று தான் அன்றும் இன்றும் கூறி வருகிறோம். கேள்வி நேரத்திலும் அப்படி எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை.
பாங்குக்கு முன் ஸலவாத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாங்கு முறைக்கு மாற்றமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்).
பின்னர் மீண்டும், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
பின்னர் “ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“ஹய்ய அலல் ஃபலாஹ்‘ என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக் கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)
நூல்: முஸ்லிம் 623
பாங்கு சொல்வதை அல்லாஹு அக்பர் என்று தான் துவக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் சான்றுகள் உள்ளன. பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்வது நபிவழி என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது “ஸலவாத்‘ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை “ஸலவாத்‘ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் “வஸீலா‘வைக் கேளுங்கள். “வஸீலா‘ என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 628
பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கு முன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் என்று பாங்கைத் துவக்க வேண்டும் என்று கூறியிருக்க, அதற்கு முன் ஸலவாத் சொல்லி விட்டு பாங்கைத் துவக்குவது பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத செயலாக இருப்பதால் தான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பித்அத்தைச் செய்கின்றனர். சில இடங்களில், இன்னல்லாஹ மலாய்கத்தஹு… என்ற வசனத்தை ஓதி, ஸலவாத் சொல்லி விட்டு பாங்கு சொல்வதும், வெவ்வேறு திக்ருகளைக் கொண்டு பாங்கைத் துவக்குவதும் நடைமுறையில் உள்ளது.
மொழி, இன பேதமின்றி அனைவருக்கும், உலகம் முழுமைக்கும் பொதுவான தொழுகை அழைப்பாக உள்ள பாங்கிலும் இது போன்ற பித்அத்துக்களால் வேறுபடுத்தி வைத்துள்ளது வேதனைக்குரியது.