நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்…. ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார்.

 (அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

கே.எஸ். சுக்ருல்லாஹ்

நீங்கள் குறிப்பிடும் செய்தி திர்மிதீ, அபூதாவுத், இப்னு மாஜா, பைஹகீ, தப்ரானீ, ஹாகிம் மற்றும் பல ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் மற்ற இருவர் நரகத்திற்கும் செல்வர். உண்மையைப் புரிந்து அதனடிப்படையில் தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார். உண்மையை புரிந்த பின் அநியாயமாகத் தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச் செல்வார். (உண்மையை) அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச் செல்வார்.

இதை புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவுத் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டுப் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர் என்று துவங்கும் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியே இது தொடர்பாக வரும் அறிவிப்புகளில் சரியானதாக உள்ளது.

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. அனைத்து தொடர்களிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடர்களில் மேலுள்ள புரைதா (ரலி) அவர்கள் வழியாக வரும் தொடரே சிறந்ததாக அமைந்துள்ளது என இமாம் அபூதாவுத் கூறுகிறார்கள்.

இமாம் அபூதாவுத் கூறுவதைப் போன்று இந்த ஹதீஸ் வந்த வழிகள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளார். மேற்கண்ட அறிவிப்பிலும் ஹலஃப் பின் ஹலீஃபா என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

இருக்கக்கூடிய அறிவிப்புகளில் மேற்கண்ட அறிவிப்பு பராவாயில்லை என்பதைத் தான் இமாம் அபூதாவுத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹலஃப் பின் கலீஃபா நேர்மையானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையே மாற்றுக் கருத்தில்லை. இறுதி காலத்தில் இவருடைய நினைவாற்றல் பாதிப்படைந்தது என்பதே இவர் மீதுள்ள குறையாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இவர் நல்ல நிலையில் இருக்கும் போது இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானவை என்று கூறியுள்ளார்கள்.

ஹலஃப் பின் ஹலீஃபா மேற்கண்ட ஹதீஸை நல்ல நிலையில் அறிவித்தாரா? அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பின் அறிவித்தாரா? என்று முடிவு செய்ய சான்றுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.