ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

கேள்வி

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

புதுச்சேரி அப்துல் அஜீஸ்

பதில்

மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட நறுமண பொருட்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது,

அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறைக்குர்ஆனில் சொல்லும் அடிப்படையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லக்கூடிய விளக்கத்தையும் பார்த்தால் இந்த கேள்விக்கான பதிலை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்  மதுபானத்தை தடை என்று மட்டும்,  சொல்லாமல் மதுபானம் எதற்கு தடை என்ற காரணத்தையும் சொல்கிறான்.

மதுபானத்தை பற்றியும் சூதாட்டத்தை பற்றியும் நபியே உம்மிடம் கேட்கிறார்கள்.அவ்விரண்டிலும்பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக.

திருக்குர்ஆன் 2;219

மதுவினால் நன்மையை விட அதிகம் கேடுதான் இருக்கிறது என்று அல்லாஹ் இந்த குர்ஆன் வசனத்தில் சொல்கிறான்.

கேடு என்பது அதை தயாரிப்பதாலோ, வேறு காரியங்களில் பயன் படுத்துவதாலோ ஏற்படுவது இல்லை. மதுவை உட்கொள்வதால் தான் கேடு ஏற்படுகிறது என்பதை இந்த வசனம் பேசுகிறது என்பதை அறியலாம்.

மதுவை உட்கொள்கின்ற காரணத்தால் உடலில் பாதிப்புகள் ஏற்படும், சிந்தனை மழுங்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மனிதன் நோயாளியாக மாறிவிடுவான்.

நபி ஸல் அவர்கள் கூட இதை தெளிவாக விளக்குகிறார்கள்

“போதை தரும் அனைத்தும் தடுக்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்.

நூல் புகாரி : 4343

ஆல்கஹால் என்பது போதை தரக்கூடியதாகும்.

மது எந்த வகையில் இருந்தாலும், அதை உட்கொள்வதால் போதை ஏற்படும் என்பதால் அதை நாம் சாப்பிடக் கூடாது. என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

போதை தரும் பொருளை உட்கொண்டால் தான் போதை வருமே தவிர அதை சாப்பிடாமல் வெறுமனே வைத்திருந்தால் போதை நமக்கு ஏற்படப்போவதில்லை.

போதை தரக்கூடியதை உட்கொள்ளாமல், உடலில் செலுத்தாமல்,  வேறு வேறு காரியத்திற்கு அதை நாம் பயன்படுத்துவதால் நமக்கு அது போதை ஏற்படுத்தாது.

அதே நேரத்தில் போதை தரும் பொருளை விற்பனை செய்வதும் கூடாது.

நபி ஸல் அவர்கள் எதை உண்பதற்கு தடை செய்திருக்கிறார்களோ அதை விற்பதும் ஹராம் ஆகும்.

ஆதாரம் நூல் புகாரி 2236

அதே போல தீமைக்கு  துணை போவதும் ஹராம் ஆகும்.

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் உள்ளிட்டவற்றை யாரும்  உட்கொள்வதில்லை அதனால் யாருக்கும் போதை ஏற்படுவதில்லை.

அதை நாம் உடலில் துர்நாற்றத்தை போக்கவே நம் உடலில்,  ஆடைகளில்  தடவுகின்றோம். மிகவும் குறைந்த அளவே நறுமணத்திலும் ஆல்கஹால் கலக்கப்படுகிறது.

அத்தர், செண்ட் உள்ளிட்டவற்றில் ஆல்கஹால் கலக்கப்படு விட்டதால் அதை நாம் நமது சட்டையில் அல்லது உடலில் தடவிக் கொள்வதால் தடுக்கப்படதாகி விடுமா என்றால் ஆகாது.

ஏனென்றால் மதுபானத்தை குடிப்பதால் வரும் பாதிப்பு, தடவக்கூடியதால் வராது.

இரண்டாவதாக சென்ட், அத்தர் போன்ற நறுமணத்தை நம்முடைய உடலில் தடவக்கூடிய நேரத்தில் அது காற்றில் கலந்து கரைந்து விடுகிறது.

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், சென்ட் உடலிலோ சட்டையிலோ தடவும் போது அது ஒட்டிக் கொண்டு அதிலேயே இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் ஸ்பிரே அடிக்கும் போது மனிதனுக்கு போதை தரக்கூடியதாக அது இல்லை என்பதால் அதை நாம் பூசிக்கொள்வதால் மார்க்கத்தில் தடை இல்லை என்பதை நாம் விளங்கி கொள்ளலாம்.