பித்அத் ஓர் வழிகேடு – பாகம் 5
இறை நேசமா? முன்னோர் பாசமா?
மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள்.
இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும்.
ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும்.
- அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும்விட அதிக நேரத்திற்குரியோராக இருக்க வேண்டும்.
- ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்க வேண்டும்.
- இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறைமறுப்பிற்கேத் திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் தான் விசப்படுவதைப் போன்று வெறுக்க வேண்டும்.
என்ற மூன்று தன்மைகள் யாரிடம் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: புகாரி 21
அல்லாஹ்வின் மீத நேசம் என்பது அனைவரும் நமக்கு இருப்பதாக தெரிவிக்கிறோம். ஆனால் அந்த நேசத்தின் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும்?
அல்லாஹ்வின் மார்க்கத்தை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்தே எடுக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிட்டிருக்கும் போது நாம் மார்க்கம் என்று எதை செய்வதாக இருந்தாலும் குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ அது அமையப் பெற்றிருக்க வேண்டும். அதில் இல்லாமல் அவர் செய்திருக்கிறார் இவர் செய்திருக்கிறார் என்று நாம் சென்று அதை மார்க்கமாக்கினால் இங்கு அல்லாஹ் வகுத்து கொடுத்த அடிப்படையை விட அந்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றாகிவிடும்.
இப்போது அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தை விட முன்னோர்களின் மீதுள்ள நேசம் மிகைக்கிறது. இத்தகைய நிலை நமது ஈமானிய தடுமாற்றமாகிவிடும்.
ஏற்கனவே கூறியதை போல நாம் அல்லாஹ் தான் எனக்கு எல்லாம் என்ற சொல் சான்றாகாது. அவ்வாறு சொல்லிக் கொண்டு மேற்படி செயல் வந்துவிடும் எனில் இந்த செயலும் நம்பிக்கையும் தான் சான்றாகும்.
மக்கத்து முஷ்ரிக்கீன்களையும் இறைநம்பிக்கையாளர்களையும் பற்றி இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
- அல்லாஹ் அல்லாதவர்களை இணை(க்கடவுள்)களாக ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிப்பவர்களும் மக்களில் உள்ளனர். அல்லாஹ்வை நேசிப்பதில் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மிக உறுதியானவர்கள். அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும்போது(ள்ள நிலையை) அறிவார்களாயின் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் (என்பதை உணர்ந்து கொள்வர்.)
அல்குர்ஆன் 2: 165
மக்கத்து இணை கற்பிப்பாளர்கள் வானத்தை படைத்தது அல்லாஹ்; பூமியை படைத்தது அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டே அவன் சொல்வதை போல அவனை மட்டும் ஏகத்துவ அடிப்படையில் வணங்க மறுத்து சிலைகளை வழிபட்டனர். இங்கே அவர்களுக்கு சிலை நேசமே மிகைத்தது. இறை நேசம் மறைந்தது.
ஆனால் இறை விசுவாசிகள் அல்லாஹ்வையே அதிகம் நேசிப்பார்கள். அதில் உறுதியாக இருப்பார்கள். மார்க்கத்தில் அவனை விடுத்து யாருக்கும் முக்கியத்துவம் வழங்க மாட்டார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.
- அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.
அல்குர்ஆன் 33: 36
இன்னும் முன்னோர்கள் மீது அசத்திய கொள்கையுடையோரின் பற்று எவ்வாறு இருந்தது என்பதை இறைவன் நமக்கு சொல்லித் தருகிறான்.
- “நீங்கள் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும்போது, “அவ்வாறல்ல! எதன்மீது எங்கள் முன்னோரைக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களுடைய முன்னோர் எதையும் சிந்திக்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?
அல்குர்ஆன் 2: 170
- இதற்கு முன் அவர்களுக்கு வேதத்தை நாம் வழங்கி, அவர்கள் அதை பற்றிப் பிடித்துக் கொண்டார்களா?
- அப்படியல்ல! “எங்களின் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளின் மீதே வழி நடக்கிறோம்” என்றே அவர்கள் கூறுகின்றனர்.
- (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் நாம் எந்த ஊருக்கு எச்சரிக்கையாளரை அனுப்பினாலும், அங்குள்ள சுகவாசிகள் “நாங்கள் எங்கள் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளில் நாங்கள் பின்பற்றிச் செல்வோர்” என்றே கூறினார்கள்.
- “உங்கள் முன்னோரை எதில் கண்டீர்களோ அதைவிடச் சிறந்த வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று (அத்தூதர்) கேட்டார். “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்கள்” என்று அவர்கள் கூறினர்.
- எனவே அவர்களை நாம் தண்டித்தோம். பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனிப்பீராக!
அல்குர்ஆன் 43: 21 – 25
இன்னும் இதே கருத்தில் 5: 104, 7: 71, 12: 40, 21: 52 – 54, 31: 21, 53: 23 ஆகிய இடங்களிலும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அல்லாஹ் அருளிய வஹி எனும் இறைச் செய்தி மட்டுமே மார்க்கம். அதை மட்டும் மார்க்கமாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறப்படும் போதெல்லாம் ஒவ்வொரு கால கட்டத்திலும் அசத்திய கொள்கையுடையோர் வழிகேட்டிற்கு சென்றதற்கு காரணம் அல்லாஹ்வை விட முன்னோர்களை முற்படுத்தியது தான்.
முன்னோர்கள் மீது கொண்ட நேசம் இறை நேசத்தை மறக்கடித்தது. நேர்வழிக்கு திரையிட்டது. சிந்தனைக்கு பூட்டு போட்டது.
இந்த நிலைக்கு இன்று நாம் ஆளாகிவிடக் கூடாது. அல்லாஹ் பழிக்கும் கூட்டத்தில் நாம் ஆகாமல் இருக்க மார்க்கம் என்று எதை செய்தாலும் இஸ்லாம் சொல்லுகிற அடிப்படையான குர்ஆன் ஹதீஸில் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும். அதுவே இறைவனின் திருப்திக்குரிய வழி.
குர்ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை எந்த முன்னோர் செய்தாலும் எந்த அறிஞர் சொன்னாலும் அத நம் வழியாக இருக்க கூடாது. அந்த இடத்தில் தான் நம் இறைநேசம் மிகைத்து நபி வழி புகுந்து புது வழி துறக்க வேண்டும். பித்அத்தை களைய வேண்டும்.
பித்அத்தின் பாதகம்
பித்அத்களை அரங்கேற்றும் போது இறைநேசத்தை விட முன்னோர் பாசத்தை முன்னிறுத்தும் நிலை ஏற்படுகிறது என்பதையும் அது ஈமானுக்கு உகந்தது அல்ல என்பதையும் மேலே கண்டோம்.
இதுமட்டும் பித்அத் ஏற்படுத்தும் மாபாதகம் அல்ல. இன்னும் ஏராளம் இருக்கிறது.
பித்அத்திற்கு நரகமே பரிசு
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).
நூல்: நஸாயீ 1578.
கவ்ஸர் தடாகத்திலிருந்து தடுக்கப்படுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே “அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.
“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப் படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன்.
நூல்: புகாரி 6584
புகாரி 6585வது செய்தியில், அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான்.
புகாரி 6587வது செய்தியில், “உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்” என்றார்.
இறைவனை குறை காண்பது
இறைவன் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
அப்படியென்றால் இந்த மார்க்கத்தில் ஒரு காரியம் என்றால் ஒன்று குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இருக்கும்.
அதில் இல்லாத காரியத்தை நடைமுறைப்படுத்தி அது இஸ்லாம் என்று அறிமுகப்படுத்தப்படுகிறது எனில் இறைவன் இஸ்லாத்தை முழுமைப்படுத்தும் போது இதை சொல்லாமல் விட்டு விட்டான் அல்லது மறந்துவிட்டான் என்று நம்புவதாக அர்த்தமாகிறது. இதை நாவால் சொல்லாவிட்டாலும் இந்த செயல் அவ்வாறு தான் அமைந்திருக்கிறது.
ஏனெனில் இறைவன் முழுமைப்படுத்திவிட்டேன் என்று சொன்ன பிறகு அவன் எப்போது முழுமைப்படுத்தினானோ அப்போது இல்லாத ஒன்றை பிறகு சேர்த்துக் கொண்டால் அதற்கு அதுவே அர்த்தம்.
இது இறைவனின் ஆற்றலில் ஞானத்தில் குறை காண்பதாகும்.
என் இறைவன் தவறிழைக்க மாட்டான்; மறக்கவும் மாட்டான்”
அல்குர்ஆன் 20: 52
உமது இறைவன் எதையும் மறப்பவன் அல்ல!” (என ஜிப்ரீல் கூறினார்.)
அல்குர்ஆன் 19: 64
அல்லாஹ்விற்கு கற்றுக் கொடுப்பதா?
மார்க்கத்தில் உள்ள ஒரு காரியம் என்றால் அல்லாஹ் நமக்கு வஹியின் மூலம் தந்திருப்பான். அப்படி இறைவன் தந்தது குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இருக்கிறது. அதில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று செய்யப்படும் எனில் அது அல்லாஹ்விற்கே கற்றுக் கொடுப்பது போன்ற செயல் என்று இறைவன் கண்டிக்கின்றான்.
- “வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்க, நீங்கள் அவனுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா?” என்று கேட்பீராக! ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 49: 16
தூதுத்துவத்தில் குறை காண்பது
அல்லது நபி(ஸல்) அவர்கள் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். மார்க்கத்தை முழுமையாக அவர்கள் எடுத்துச் சொல்லவில்லை. அதை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்று வாதிடுவதாகும்.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுச் செய்தியை எடுத்துரைத்தவராக மாட்டீர். அல்லாஹ், மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவான். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 7531
இவ்வளவு மறுமையில் கைசேதத்தை ஏற்படுத்தும் இந்த பித்அத்திலும் கூட நல்ல பித்அத்(!) என்று ஒரு விஷயம் இருக்கிறது என விநோதமான ஒரு வாதத்தை வைப்பார்கள். அது என்ன நல்ல பித்அத்?
நல்ல பித்அத்(?) என்பது மார்க்கதில் உள்ளதா?
இதுவரை பார்த்த அத்தனை விஷயங்களையும் சொல்லும் போது எதற்கும் பதில் சொல்லாமல் கடைசியில் ஒரு விநோதமான வார்த்தை பயன்படுத்தப்படும்.
அது தான் நல்ல பித்அத்(!) என்ற வார்த்தை. அதை அரபு மொழியில் பித்அத் ஹஸனா என்று கூறுவார்கள்.
இப்படி அரபு மொழியில் சொன்னதும் இது ஏதோ நபி(ஸல்) அவர்களே சொன்னதை போல ஒரு ஏமாற்று வேலையை செய்வார்கள்.
இப்படி பித்அத்தில் நல்ல பித்அத் என்றும் கெட்ட பித்அத் என்றும் நபி(ஸல்) எந்த இடத்திலும் பிரித்துக் கூறவில்லை.
மாறாக எல்லா பித்அத்தும் வழிகேடே என்றே கூறினார்கள்.
ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸாயீ 1578
நபி(ஸல்) அவர்கள் பித்அத்களில் நல்லது கெட்டது என்று எதற்கும் விதிவிலக்களிக்காமல் பித்அத் என்றாலே வழிகேடுதான் என தெள்ளத் தெளிவாக கூறிய பிறகு நல்ல பித்அத் என்று பிரித்து வழிகேட்டை நியாயப்படுத்த முனைபவர்களை என்னவென்று சொல்வது?
இவ்வாறு பித்அத்தை விட்டுவிட்டு குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டும் ஒன்றிணைய மனமில்லாதோர் நல்ல பித்அத் உள்ளது என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு செய்தியை தங்களுக்கு ஏற்றாற் போல வளைத்துக் கொள்வார்கள்.
“யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை நடைமுறைப்படுத்துகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை நடைமுறைப்படுத்துகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
முஸ்லிம் 1848
இந்த செய்தியை எடுத்துக் காண்பித்து பார்த்தீர்களா? ஒரு புது சுன்னத்தை நடைமுறைப்படுத்தினால் அதை செய்பவர்களின் செய்ய சொன்னவருக்கு கிடைக்கும் என்று நபிகளார் கூறியிருக்கிறார்கள் எனில் இது போன்று நன்மையாக காரியங்களை உருவாக்குவதற்கு நபிகளார் அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக கூறுவார்கள்.
மவ்லீது, மீலாது, ஃபாத்திஹா, கத்தம், கந்தூரி என அனைத்து வழிகேட்டிற்கும் இதை ஆதாரமாக்குவார்கள்.
உண்மையில் நாம் பார்த்த அடிப்படைக்கு முரணாக நபி(ஸல்) அவர்கள் கூறுவார்களா? என்ற அடிப்படை ஞானம் இல்லாமல் இவ்வாறு கூறுவதை பார்க்க முடிகிறது.
இந்த செய்தியின் முழுப் பகுதியைப் படித்தாலே இந்த செய்தியின் கருத்தை அறிந்துக் கொள்ளலாம்.
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்’ குலத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்’ குலத்தைச் சேர்ந்த வர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்க ளுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள ” இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஒவ்வொருவரும் நாளை(ய மறுமை)க்காகத் தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை (எண்ணி)ப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉ’ கோதுமை, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை யேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத் தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
முஸ்லிம் 1848
நபி(ஸல்) அவர்கள் எந்த நேரத்தில்? எதைப் பற்றி கூறினார்கள்? என்று இப்போது தெரிந்திருக்கும்.
கஷ்டப்படும் மக்களுக்கு தர்மம் செய்ய சொல்லும் போது சிறிது சிறிதாக தர்மம் செய்துக் கொண்டிருந்த போது ஒருவர் மாத்திரம் ஒரு பை நிறைய கொண்டு வந்தார். அதை பார்த்து ஏனைய மக்களும் நிறைய தர்மம் செய்தனர். அப்போது இந்த வார்த்தையை கூறினார்கள்.
தர்மம் என்ற காரியத்தையே அவர் உருவாக்கவில்லை. மார்க்கத்தில் இருக்கும் தர்மம் என்ற ஒரு காரியத்தை சிறந்த முறையில் செய்கிறார். மக்களை ஆர்வமூட்டும் வகையில் செய்கிறார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் யார் ஒரு சுன்னத்தை மக்களுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்துகிறாரோ…. என்று கூறுகிறார்கள்.
இங்கு அந்த சுன்னத் என்பது அவராக உருவாக்கியது அல்ல. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த சுன்னத்.
இதை தான் இந்த செய்தி கூறுகிறது. இது தெரிந்தும் ஆரம்ப பகுதியை விட்டுவிட்டு ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்றாற் போல வளைத்து தங்கள் வழிகேட்டிற்கு சான்றாக்க முயற்சிக்கிறார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) காட்டித் தந்த சுன்னத்தை செய்வதற்குள்ள ஆதாரத்தை மவ்லிது மீலாது போல இவர்களாக ஒரு வழிகேட்டை உருவாக்கி அதை நன்மை என்பதை போல காட்டுவதற்கு ஆதாரமாக்குகிறார்கள்.
எனவே, பித்அத்களில் நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்று எதுவும் கிடையாது. பித்அத் என்றாலே வழிகேடுதான் என்றே நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.