கருக்கலைப்பு செய்வது கூடுமா? – மறு ஆய்வு

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறியாமை காலத்து மக்களிடையே வறுமைக்குப் பயந்து குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் இருந்தது. பெண் குழந்தையை இழிவு எனக்கருதி பிறந்த உடனேயே புதைப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இஸ்லாம் இவற்றை எல்லாம் மிகப்பெரும் பாவம் எனக்கூறி தடை செய்தது.
எனினும் கருவாக இருக்கும் போதே அவற்றை கலைத்தார்கள் என்பதற்கு நேரடிச் சான்றை நாம் பார்க்க இயலவில்லை.
இன்றைய காலங்களில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, தாயின் கர்ப்ப அறையில் கருவாக இருக்கும் போதே, நவீன சாதனங்களின் துணையுடன் கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.
முந்தைய நிலைபாடு
கருக்கலைப்பு செய்வது கூடுமா என்று கடந்த காலங்களில் கேட்கப்பட்ட போது நாம் பின்வருமாறு பதில் அளித்து இருந்தோம்.
கரு உருவாகி 120 நாள் ஆன பின்னர் கலைத்தால் அது கொலைக் குற்றத்தில் சேரும் என்றும், 120 நாட்களுக்கு முன்னர் உள்ள கருவைக் கலைத்தால் அது கொலைக் குற்றத்தில் சேராது. அதேவேளை கருக்கலைப்பு செய்வதால் பல்வேறு பாதிப்புகள் உள்ளன. அந்த வகையில் நமக்கு நாமே தீங்கிழைக்கும் குற்றத்தைச் செய்ததாக ஆகும் என்றும் பதில் அளித்து இருந்தோம்.
120 நாள்களுக்குப் பின்னர் கருவைக் கலைப்பது கொலைக் குற்றமாகும் என்ற நமது கருத்துக்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ “” إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ “”.

உண்மை பேசுபவரும், உண்மை அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா? நற்பாக்கியசாலியா? என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.
இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஸஹீஹ் புகாரி 3332
120 நாள்கள் கடந்த பின்னரே மனிதன் என்பதற்குரிய (ரூஹ்) உயிர் ஊதப்படுகின்றது என்று இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. எனவே அதற்கு முன்புள்ள கருவைக் கலைப்பது மனித உயிரைக் கொலை செய்ததாக ஆகாது.
இது தான் நமது முந்தைய பதிலாக இருந்தது.
ஆனால் ரூஹ் ஊதப்படுவது குறித்து வேறு சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது, மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள புகாரி ஹதீஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. அதை விரிவாக காண்போம்.

கரு வளர்ச்சி பற்றித் திருக்குர்ஆன்
கருவில் உருவாக்கப்படும் சிசு எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது குறித்து இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றான். ஆனால் எத்தனை நாள்களில் இந்த வளர்ச்சி உண்டாகிறது என்று குர்ஆனில் கூறப்படவில்லை.
உங்களை(த் தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும், பின்னர் வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப் படாததுமான சதைத் துண்டிலிருந்தும் படைத்தோம். நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்கச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.
அல்குர்ஆன் 22:5
பின்னர் அந்த விந்துத்துளியைச் சூல் கொண்ட கருமுட்டையாக்கினோம். அதன்பின் அந்தச் சூல்கொண்ட கருமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். பிறகு அச்சதைத்துண்டை எலும்புகளாக உருவாக்கினோம். அவ்வெலும்புகளுக்கு இறைச்சியைப் போர்த்தினோம். பின்னர் அதை வேறொரு படைப்பாகத் தோற்றுவித்தோம். படைப்பாளர்களில் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.
அல்குர்ஆன் 23:14
செலுத்தப்படும் விந்துத்துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் அவன் சூல்கொண்ட கருமுட்டையாக இருந்தான். (அல்லாஹ்வே) படைத்துச் செம்மைப்படுத்தினான்.
அல்குர்ஆன் 75:37,38
முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் கருவில் மனிதனுக்குரிய ரூஹ் எப்போது ஊதப்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 46)
6898 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِى خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِى بُكَيْرٍ حَدَّثَنَا زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَطَاءٍ أَنَّ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ حَدَّثَهُ أَنَّ أَبَا الطُّفَيْلِ حَدَّثَهُ قَالَ دَخَلْتُ عَلَى أَبِى سَرِيحَةَ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِىِّ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- بِأُذُنَىَّ هَاتَيْنِ يَقُولُ « إِنَّ النُّطْفَةَ تَقَعُ فِى الرَّحِمِ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ يَتَصَوَّرُ عَلَيْهَا الْمَلَكُ யு. قَالَ زُهَيْرٌ حَسِبْتُهُ قَالَ الَّذِى يَخْلُقُهَا « فَيَقُولُ يَا رَبِّ أَذَكَرٌ أَوْ أُنْثَى فَيَجْعَلُهُ اللَّهُ ذَكَرًا أَوْ أُنْثَى ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَسَوِىٌّ أَوْ غَيْرُ سَوِىٍّ فَيَجْعَلُهُ اللَّهُ سَوِيًّا أَوْ غَيْرَ سَوِىٍّ ثُمَّ يَقُولُ يَا رَبِّ مَا رِزْقُهُ مَا أَجَلُهُ مَا خُلُقُهُ ثُمَّ يَجْعَلُهُ اللَّهُ شَقِيًّا أَوْ سَعِيدًا .

அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை இந்த என் காதுகளால் கேட்டேன் என்று கூறினார்கள்:
விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது இரவுகள் தங்கியிருக்கிறது. பிறகு அந்தக் கருவிடத்தில் வானவர் ஒருவர் அனுப்பப்படுகின்றார். அதைப் படைக்கவிருக்கும் வானவர் “இது ஆணா,பெண்ணா?” என்று கேட்கிறார். அப்போது அல்லாஹ் அதை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஆக்குகிறான்.
பிறகு அவ்வானவர், “இறைவா! இவன் ஊனமற்றவனா? ஊனமுள்ளவனா?” என்று கேட்கிறார். அப்போது அவனை அல்லாஹ் ஆரோக்கியமானவனாகவோ அல்லது ஆரோக்கியமற்றவனாகவோ ஆக்குகிறான். பிறகு அவ்வானவர், “இவனது வாழ்வாதாரம் என்ன? இவனது வாழ்நாள் எவ்வளவு? இவனுடைய குணங்கள் என்ன?” என்று கேட்கிறார். பிறகு அவனை அல்லாஹ் நற்பேறற்றவனாகவோ அல்லது நற்பேறு பெற்றவனாகவோ ஆக்குகிறான்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 5148
தாயின் கருப்பையில் நாற்பது இரவுகள் கழிந்த பின்னர், அந்த கருப்பைக்கு நியமிக்கப்பட்ட வானவர் வந்து ரூஹை ஊதுகிறார் என இந்த ஹதீஸ் கூறுகிறது.

நாற்பத்து இரண்டு (42) இரவுகள்:
இது தொடர்பாக மற்றொரு செய்தியில், விந்துத்துளி தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு இரவுகள் கழிந்ததும், அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்பி வைக்கின்றான்.பிறகு, உருவமளித்து, செவி, பார்வை, தோல், சதை, எலும்பு ஆகியவற்றைப் படைக்கின்றான்! பிறகு, அந்த உயிருக்கு வாழ்நாளின் அனைத்து அம்சங்களையும் அல்லாஹ்வின் நாட்டப்படி நாற்பத்தி இரண்டாவது நாளில் பதிவு செய்து விட்டு, பதிவு செய்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகின்றார் என்று இடம்பெற்றுள்ளது.

4783 – حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ أَنَّ عَامِرَ بْنَ وَاثِلَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُا الشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ وَالسَّعِيدُ مَنْ وُعِظَ بِغَيْرِهِ فَأَتَى رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهُ حُذَيْفَةُ بْنُ أَسِيدٍ الْغِفَارِيُّ فَحَدَّثَهُ بِذَلِكَ مِنْ قَوْلِ ابْنِ مَسْعُودٍ فَقَالَ وَكَيْفَ يَشْقَى رَجُلٌ بِغَيْرِ عَمَلٍ فَقَالَ لَهُ الرَّجُلُ أَتَعْجَبُ مِنْ ذَلِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ

அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:
விந்து கருப்பைக்குச் சென்று நாற்பத்து இரண்டு இரவுகள் கழிந்ததும் அதனிடம் அல்லாஹ் வானவர் ஒருவரை அனுப்புகிறான். பிறகு அதற்கு உருவமளித்து, அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.
பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், “இறைவா! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)” என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.
பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?” என்று கேட்கிறார். அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். (அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்துவிட்டுப் பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகிறார். (தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 5147
வித்துத்துளி செலுத்தப்பட்டு நாற்பத்தி இரண்டு நாட்கள் கழிந்த பிறகு, வானவரை அல்லாஹ் அனுப்பி, அதற்கு உருவமளிக்கிறான் என்றும் அவ்வானவர் கருவில் உருவாகும் மனிதனின் வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வதாகவும் இந்தச் செய்தி தெரிவிக்கிறது.

6895 – حَدَّثنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لاِبْنِ نُمَيْرٍ – قَالاَ حَدَّثنَا سُفْيَانُ بْنُ عُيينَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ أَبِى الطُّفَيْلِ عَنْ حُذَيفَةَ بْنِ أَسِيدٍ يبلُغُ بِهِ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « يَدْخُلُ الْمَلَكُ عَلَى النُّطْفَةِ بَعْدَ مَا تَسْتَقِرُّ فِى الرَّحِمِ بِأَرْبَعِينَ أَوْ خَمْسَةٍ وَأَرْبَعِينَ لَيلَةً فيقُولُ يَا رَبِّ أَشَقِىٌّ أَوْ سَعِيدٌ فيُكْتبَانِ فيقُولُ أَىْ رَبِّ أَذَكَرٌ أَوْ أُنثَى فيُكْتبَانِ وَيُكْتَبُ عَمَلُهُ وَأَثرُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ ثُمَّ تُطْوَى الصُّحُفُ فَلاَ يزَادُ فِيهَا وَلاَ يُنقَصُயு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அதனிடத்தில் வானவர் ஒருவர் சென்று, “இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா?” என்று கேட்கிறார். பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு “இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?” என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது.
அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை.
இதை ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 5146
மனித உயிர் ஊதப்படுவதற்கான கால அளவாக முஸ்லிமில் இடம் பெறும் மொத்த ஹதீஸ்கள் மூன்று கால அளவைக் குறிப்பிடுகின்றன.
40 – நாற்பது நாட்கள்
42 – நாற்பத்தி இரண்டு நாட்கள்
45 – நாற்ப்பத்தி ஐந்து நாட்கள்
45 நாட்கள் என்று வரும் அறிவிப்பின் 40 அல்லது 45 நாள்கள் என்று சந்தேகத்துடன் அறிவிக்கப்பட்டிருப்பது அறிவிப்பாளர் சுஃப்யான் அவர்களின் வார்த்தையாகும். எனவே, அதில் குறிப்பிடப்பட்ட 40 நாட்கள் என்ற வார்த்தை மற்ற அறிவிப்புகளுக்குத் தோதுவாக இருப்பதால் 40 என்றே எடுத்துக் கொள்ளலாம்.

நாற்பதா? நாறபத்தி இரண்டா?

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 46)
6899 – حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ حَدَّثَنِى أَبِى حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ كُلْثُومٍ حَدَّثَنِى أَبِى كُلْثُومٌ عَنْ أَبِى الطُّفَيْلِ عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِىِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- رَفَعَ الْحَدِيثَ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَنَّ مَلَكًا مُوَكَّلاً بِالرَّحِمِ إِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَخْلُقَ شَيْئًا بِإِذْنِ اللَّهِ لِبِضْعٍ وَأَرْبَعِينَ لَيْلَةً யு. ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ.

“அல்லாஹ் தனது நாட்டப்படி எதையேனும் படைக்க நாடும்போது, நாற்பது சொச்சம் இரவுகள் கழிந்தபின் அந்தக் கருப்பைக்கென நியமிக்கப்பட்ட வானவர் வருவார்….
ஆதாரம்: முஸ்லிம் 5148
இந்த அறிவிப்பில் 40 சொச்சம் இரவுகள் கழிந்த பின் என்று மூடலாக இடம்பெறுகிறது.
எண்ணிக்கை தெளிவாகக் குறிப்பிட்டு அறிவிக்கப்படும் அறிவிப்புகளில் 40 என்றும் 42 என்றும் அறிவிக்கப்படுவதால் இவையனைத்தையும் ஒரு சேரக் கவனிக்கும் போது 40வது இரவோ அல்லது அதற்கு ஓரிரு நாட்களிலோ உயிர் கருவில் ஊதப்படுகிறது என்பது தெளிவாகிறது.
தாயின் கருப்பையில் உருவாகி விட்ட கரு நாற்பது நாட்களைத் தாண்டியதும், அந்தக் கருவிற்கு மனித உயிர் கொடுக்கப்படுகின்றது.
மனித உயிர் கொடுக்கப்பட்ட கருவைக் கலைப்பது ஒரு உயிரைக் கொன்ற பாரதூரமான தண்டனைக்குரிய குற்றமாகி விடுகின்றது என்பதால் பேணுதலின் அடிப்படையில் 40 மற்றும் 42 என்ற எண்ணிக்கையில் குறைந்தபட்ச எண்ணிக்கையான 40ஐ எடுத்துக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, 40 நாள் ஆகிவிட்ட கருவைக் கலைப்பது கொலைக் குற்றத்தில் சேரும்.

கரு தொடர்பாக புகாரி ஹதீஸ் கூறுவது என்ன?
கரு உருவாகி 120 நாள்களுக்குப் பின்னரே உயிர் ஊதப்படுவதாக புகாரி ஹதீஸ் கூறியதே அதன் நிலை என்ன? என்ற கேள்வி எழலாம்.
கருவின் உருவாக்கம் குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைக் கவனமாக அறிந்து கொண்டால் கருவில் ரூஹ் ஊதப்படுவது 120 நாள்களில் தான் எனக் கூறவில்லை என்பதையும், புகாரி ஹதீசும் 40 நாள்களில் உயிர் ஊதப்படுவதாகவே கூறுகிறது என்பதையும் அறியலாம்.

புகாரி ஹதீஸை நன்றாகப் பாருங்கள்!

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ “” إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ “”.

உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.
இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3332
120 நாள்களுக்குப் பிறகு உயிர் ஊதப்படுகிறது என்று இந்த ஹதீஸ் வரையறுத்துக் கூறவில்லை என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே அந்தக் கரு ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை அனுப்பி – என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.
40 நாள்களில் கருவாக சேமிக்கப்படுகிறீர்கள் என்று கூறிவிட்டு, பிறகு அவ்வாறே கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அவ்வாறே சதைப்பிண்டமாக மாறுகிறது என்று தான் இடம்பெறுகிறது.
இங்கே எண்ணிக்கையாகக் குறிப்பிடப்படுவது நாற்பது நாட்கள் மட்டும் தான்.
அப்படியெனில் இந்த ஹதீஸை 120 நாள்கள் என எப்படிப் புரிந்து கொண்டார்கள்?
முதலில் 40 நாள்களில் கருவாக சேமித்தலைப் பற்றி குறிப்பிட்டு விட்டுப் பிறகு அவ்வாறு என்று வருவதை இன்னொரு 40 நாள்கள் எனப் புரிந்து கொண்டார்கள். அதற்கு பிறகு அவ்வாறே என்று வருவதை இன்னுமொரு 40 ஆக மொத்தம் 120 நாள்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.
இதனாலேயே புகாரி ஹதீஸ் 120 நாள்களுக்குப் பிறகு உயிர் ஊதப்படுவதாகக் கூறுகிறது என விளங்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. (முந்தைய அறிஞர்கள் பலரும் அவ்வாறே விளங்கி கொண்டார்கள்)
இவ்வாறு புரிந்து கொள்ளும் போது முஸ்லிம் ஹதீஸ்கள் கூறியதற்கு மாற்றமாக, முரணாக அமைந்து விடுகிறது.
ஆனால் நன்றாகக் கவனித்தால் புகாரி ஹதீஸ் நேரடியாக அவ்வாறு கூறவில்லை. புகாரி மட்டுமின்றி வேறு எந்த ஹதீஸ் நூலிலும் 120 நாள்களுக்குப் பிறகு ரூஹ் ஊதப்படுகிறது என நேரடியாக கூறப்படவில்லை. எனவே முஸ்லிம் ஹதீஸிற்கு முரணில்லாமல் இக்கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
40 நாள்களில் கருவாக சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே என்று இடம் பெறுவதில் “மிஸ்ல தாலிக” என்ற அரபி வார்த்தை வருகிறது.
இதற்கு அது போன்று என்று அர்த்தம்.
அது போன்று என்று கூறினால் முன்னால் எதைப் பற்றி கூறப்படுகிறதோ அது போல என்று விளங்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தாயிற்றின் வயிற்றில் 40 நாள்களில் சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு “அது போல” என்று சொன்னால் இங்கே முன்னர் இரண்டு விஷயம் கூறப்பட்டுள்ளது.
1. 40 நாள்கள்
2. சேமிக்கப்படுகிறீர்கள்
என இரண்டு விஷயம் முன்னர் உள்ளது.
“அது போல்” என்பதை ‘அதுபோல் 40 நாள்களில்’ என்று விளங்காமல் ‘அது போல சேமிக்கப்படுகிறீர்கள்’ என்று புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சனையுமில்லை.
உதாரணமாக இட்லி சாப்பிட்டேன். அது போல சிக்கன் சாப்பிட்டேன் என்றால் இங்கே இட்லி, சிக்கன் போல உள்ளது என்று பொருளாகாது. இட்லி சாப்பிட்டதைப் போல சிக்கன் சாப்பிட்டேன் என்று தான் அர்த்தம்.
சாப்பிடுவதில் தான் ஒப்புமை காட்டப்படுகிறது. இட்லியில் அல்ல.
நீங்கள் 40 நாள்களில் ஒருங்கிணைக்கப் படுகிறீர்கள்! பிறகு அவ்வாறே கருக்கட்டியாகிறது என்பதில், தாயின் வயிற்றில் ஒருங்கிணைக்கப்படுவதில் தான் ஒப்புமை காட்டப்படுகிறதே தவிர 40 நாட்களில் என்பதல்ல.
இவ்வாறு புரிந்து கொள்ளும் போது முஸ்லிம் ஹதீஸின் கருத்தையே புகாரி ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது என்றாகி விடும்.
அதாவது 40 நாட்கள் ஆன நிலையில் ரூஹ் ஊதப்படுகிறது என்ற கருத்தையே புகாரி ஹதீசும் கூறுகிறது. இரண்டு ஹதீஸ்களுக்கு மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை.
எனவே 40 நாட்களுக்கு பிறகு கருவை கலைப்பது மனித உயிரை கொலை செய்த குற்றமாகி விடும்.
மேலும், உயிர் ஊதப்படுவதற்கு முன்பு அதாவது, நாற்பது (40) நாட்களுக்கு முன்னதாகவும் ஏற்க்கத்தக்க காரணமின்றி கருவைக் கலைப்பது குற்றம் தான்!
என்றாலும், உயிரைக் கொன்ற கொலைக் குற்றம் என்கிற பாரதூரமான அளவிற்குச் செல்லாது. தனக்குத் தானே தீங்கு ஏற்படுத்திக் கொள்ளும் குற்றமாகும். இரண்டும் குற்றம் என்றாலும் எந்த வகை குற்றம் என்பதில் வேறுபடுகிறது.
சில நேரங்களில் தாயின் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற காரணங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் இறையச்சத்தின் அடிப்படையில் இறைவனுக்குப் பயந்து முடிவு எடுத்துக் கொள்வதே சிறந்தது!
எவருக்கும் தான் வழங்கியதைத் தவிர (அதற்கு மேல்) அவரை அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். கஷ்டத்திற்குப்பின் அல்லாஹ் எளிதானதை ஏற்படுத்துவான்.
அல்குர்ஆன் 65:7
இறுதியாக…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான கூற்றுப்படி, தாயின் கருப்பையில் கரு உருவாகி 40 நாட்களை நெருங்கி விட்டாலே, அந்தக் கருவிற்கு மனித உயிர் உட்பட அனைத்து விதமான வாழ்வியல் செயல்பாடுகளும் இறைக்கட்டளைப்படி வானவரால் எழுதப்பட்டு நிர்ணயிக்கப்படுகின்றது.
எனவே கரு உருவாகி 40 நாட்களை நெருங்கி விட்டால், உருவாகி விட்ட கருவைக் கலைப்பது ஒரு மனித உயிரைக் கொன்ற மிகப் பெரிய பாரதூரமான குற்றமாகக் கருதப்படுகின்றது.எனவே, இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற பாரதூரமான செயல்பாடுகள் செய்வதிலிருந்து விலகி, எச்சரிக்கை உணர்வோடு வாழ்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.