இன்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும் அதிக அளவு மக்கள் பின்பற்றி வருகின்ற ஒரு மதம் கிறிஸ்துவ மதம் தான். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த உலக வாழ்க்கையே முழுமையானது என நினைக்காமல் இறந்ததற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும், பரலோக ராஜியத்தில் உள்ள கடவுளை (கர்த்தரை) சந்திக்கப் போகிறோம் என்பதையும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடு கடவுள் கொள்கையாகும். இஸ்லாமியர்கள் ஒரு கடவுளான அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றனர். கிறிஸ்தவர்கள் கர்த்தரை (அல்லாஹ்வை) வணங்குவதுடன், அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரான இயேசுவையும் கடவுளின் மகன் என்று கூறி அவரையும் வணங்குகின்றார்கள்.
ஆனால் இயேசு என்பவர் கடவுள் கிடையாது என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற பைபிள் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்கிறது.
இயேசு எனப்படும் ஈஸா என்பவர் யார் என்று தெளிவாக திருமறைக் குர்ஆனும் நமக்கு எடுத்துரைக்கிறது.
கடவுளைக் குறித்து பைபிளும், குர்ஆனும் கூறுவது என்ன?
- என்னையன்றி உமக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
(யாத்திராகமம் =20:3) - கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும் படிக்கு இது உமக்குக் காட்டப்பட்டது.
(உபாகமம் = 4:35) - நானே தேவன்: வேறொருவரும் இல்லை: நானே தேவன்: எனக்குச் சமானமில்லை.
(ஏசாயா = 46:9)
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள அனைத்து வசனங்களும் பைபிளில் சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்த எல்லா வசனங்களிலும் கர்த்தர் மட்டும் தான் கடவுள் ஆவார்.வேறு கடவுள் இல்லை என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றது. இன்னும் இதைப்போன்று பல வசனங்களும் இதே கருத்தைதான் சொல்கின்றன. இதற்கு மாற்றமில்லாமல் அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்று இஸ்லாமிய மார்க்கமும் சொல்கின்றது.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ், தேவைகள் அற்றவன். அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எவருமே இல்லை.
(அல்குர்ஆன் – அத்தியாயம்: 112)
அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை
அவன் என்றென்றும் உயிருடன் இருக்கக்கூடியவன்.
(அல்குர்ஆன் 2:255)
மேலே சொல்லப்பட்டுள்ள உதாரணங்களை வைத்து சிந்துத்துப் பார்க்கையில் இரண்டு மதத்திலும் கடவுள் ஒருவன்தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றது. இதில் இஸ்லாமியர்கள் சரியாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவையும் கடவுளாக வணங்குகிறார்கள்.
எதை வைத்து இயேசுவை வணங்குகிறார்கள்?
அப்படி வணங்கினால் அதுவே பைபிளுக்கு மாற்றமானதாகுமே?
இயேசுவைக் கடவுளாக வணங்குபவர்கள் வைக்கும் ஆதாரம் என்ன?
இயேசுவை கடவுள் என்று சொல்லக் கூடியவர்கள் பல ஆதாரங்களைச் சொல்கிறார்கள்.
அவர்கள் வைக்கக்கூடிய ஆதாரங்களில் மிக முக்கியமானவை:
1. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேச குமாரர்:
(மத்தேயு =3 :17)
இந்த பைபிள் வசனத்தில் கடவுளுக்கு மகன் (பிள்ளை) இருப்பதாகப் பேசப்படுகிறது. இதை வைத்துதான் கடவுளுடைய பிள்ளையும் கடவுள்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் இதை வைத்து இயேசு கடவுள் என்று சொன்னால் இதைப்போன்று பைபிளில் இயேசு மட்டும் இல்லாமல் பல நபர்களை கர்த்தர் தன்னுடைய குமாரர் என்று சொல்லி இருக்கிறாரே! அவர்களை யாவரையும் நீங்கள் எதற்காகக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள் என்று கேட்டால் கிறிஸ்தவர்களிடம் பதில் இல்லை.
பைபிளில் கர்த்தர் கூறுகையில்:
- எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறேன்.
(எரேமியா = 31 :9) - நீர் என்னுடைய குமாரன்: இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்.
(சங்கீதம் = 2:7) - எப்ராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா = 31:9) - நான் அவனுக்கு பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்
(இரண்டாம் சாமுவேல் = 7 :14) - நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்
(உபாகமம் = 14:1)
இந்த வசனங்கள் அனைத்தும் கர்த்தர் தன்னுடைய பிள்ளைகள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இருந்தாலும் இவர்கள் இயேசுவை மட்டும் கடவுளாக எடுப்பதற்குப் பல காரணங்களைச் சொல்கையில் இயேசு அதிகமான அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்; இன்னும் தந்தையின்றி பிறந்து இருக்கிறார்; இதுவே இவரை மட்டும் கடவுள் என்று சொல்வதற்குரிய ஆதாரம்.
இன்னும் இதைப்போல் பல விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் இப்படி இவர்கள் சொல்வதன் மூலம் அவர்களுக்கு இடையே பல முரண்பாடுகள் வருகின்றது. அப்படி இயேசு கடவுள் என்று வைத்துக் கொண்டால் கர்த்தர் சொல்லக்கூடிய வார்த்தை பொய்யாகிவிடும். கர்த்தர் சொல்கிறார்.
- என்னையன்றி உமக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
(யாத்திராகமம் = 20:3) - கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும் படிக்கு இது உமக்குக் காட்டப்பட்டது.
(உபாகமம் = 4:35)
இதோ இந்த வாசகங்களை பாருங்கள்! கடவுள் என்றால் அது கர்த்தர் மட்டும் தான் என்று அழகாகச் சொல்லி இருக்கையில் இவர்களுக்கு மத்தியிலே ஒரு குழப்பம்!
ஏசுவையும் கடவுளாக எடுத்துக் கொண்டு அவர்களுடைய அந்த பைபிளுக்கே மாற்றமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இவ்வளவும் தெரிந்தவர்கள் கூட இதை ஈடுகட்டும் விதமாக முட்டாள் தனமாக பல விஷயங்களை வளைத்துச் சொல்கின்றார்கள். இருந்தாலும் அவருக்கு (இயேசுக்கு) கடவுளுடைய தகுதிகள் இருக்கிறதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். பைபிள் கடவுளின் இலக்கணம் குறித்து என்ன சொல்கிறது? அது அனைத்தும் இயேசுக்கு இருக்கிறதா? இல்லையா?
கடவுளின் தன்மை
- தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
(யோவான் = 1:18) - “கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக்கூடாது. அவர் ஆவி வடிவிலே இருக்க வேண்டும்” எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
(யோவான் = 4:24)
இந்த வனங்களை மட்டும் சிந்தித்துப் பார்த்தாலே போதுமானதாகும்.
ஒருவர் கடவுள் என்றால் அவரை யாரும் பார்த்திருக்கக்கூடாது. இதுதான் உண்மை. ஆனால் இயேசுவைக் கடவுள் என்று சொல்கிறார்கள். இயேசுவை யாரும் பார்க்காமல் இருந்தார்களா? யாரும் அவருடன் பழகாமல் இருந்தார்களா?
அதுமட்டுமல்ல! கடவுள் என்றால் இரத்தம் இருக்காது, எலும்பு இருக்காது, சதைகள் இருக்காது என்றும் கடவுள் இலக்கணம் சொல்லப்படுகிறது. இதைப்போன்று தான் இயேசு இருந்தாரா? அவருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டன என்று பைபிளில் சொல்லப்படுகிறது, இன்னும் அவருக்கு இரத்தம் வந்தது என்று சொல்லப்படுகிறது, இன்னும் அவருக்குச் சதைகள் இருந்து, அது கிழிக்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. இன்னும் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது.
இப்படி கடவுளுடைய தகுதிகள் என்று பைபிள் எதைச் சொல்கிறதோ அது எதுவும் இல்லாமல் நம்மைப்போன்று சாதாரண மனிதரைப் போன்றுதான் அவரும் வாழ்ந்திருக்கின்றார். இயேசு கடவுள் இல்லை என்பதற்கு இதுபோதுமே! சிந்தியுங்கள் மக்களே!
இயேசு குறித்துத் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது?
கிறிஸ்தவர்கள் வணங்கக்கூடிய இயேசு கடவுள் இல்லை என்பதை பைபிள் தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லிவிட்டது. இன்னும் இயேசு என்று அழைக்கப்படுபவர் யார்? இவரைக் குறித்துத் திருக்குர்ஆன் என்ன பறைசாற்றுகிறது என்பதைப் பார்க்கையில்,
பனூ இஸ்ரவேல் மக்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான் ஈஸா (அலை) அவர்கள்.
இவரைத்தான் கிறிஸ்தவர்கள் இயேசு என்று சொல்கிறார்கள்.
இவர் தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இறைவன் அழகாக நமக்கு உணர்த்துகிறான்.
நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான்.
(அல்குர்ஆன் 19:30)
இறைவன் சொல்லக்கூடிய இந்த வசனத்தில் இருந்து ஈஸா(அலை) (இயேசு) இறைவனின் மகன் கிடையாது. எனினும் இறைவனின் அடிமைதான் என்றும், இன்னும் அவனுடைய தூதர் என்றும் நன்கு விளங்குகின்றது.
“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், உலகிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அவர்களைக் காக்க) சிறிதேனும் ஆற்றல் பெற்றவர் யார்?” என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 5:17)
ஈஸா (அலை) என்ற இயேசு அவர்கள் அல்லாஹ்வின் பிள்ளை கிடையாது என்பதை திருமறைக் குர்ஆன் சரியான முறையில் எடுத்துக்காட்டுகிறது.
இறைத்தூதர் இயேசு அவர்கள் இறைவனின் மகன் கிடையாது என்பதற்கு மேலும் பல வசனங்கள் சான்றாக இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் எதைத் தங்கள் வேதம் என்று நம்புகிறார்களோ அந்த பைபிளும் இதையே வலியுறுத்துகின்றது.
இவை அனைத்தையும் நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லி சத்தியத்தின் பக்கம் அழைத்து வருகின்ற பாக்கியத்தை இறைவன் நமக்கு ஏற்படுத்துவானாக!
