இயேசு எனும் ஈஸா நபி – இஸ்லாமும் கிறித்தவமும்

யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று ஆன்மீகக் கோட்பாடுகளின் வரலாற்றிலும் பேசப்படும் முக்கிய நபராக இயேசு கிறிஸ்து எனும் ஈஸா நபி இருக்கிறார்கள். யூதர்கள் ஈஸா நபியின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்; அவரைப் புறக்கணிக்கிறார்கள். கிறித்தவர்களோ அவரின் தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடித்து அவரைக் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். இப்படியிருக்க, முஸ்லிம்கள் மட்டுமே அவரின் தகுதிக்கேற்பப் புகழ்கிறார்கள்; முறைப்படி மதிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இஸ்லாம் மட்டுமே ஈஸா நபியின் வரலாற்றை உண்மையுடன் உரத்துச் சொல்கிறது. இவ்வகையில் ஈஸா நபி பற்றிய முக்கியச் செய்திகளை இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

இறைப்பணியில் மர்யம் (அலை):

இப்ராஹீம் நபியின் மகன்களுள் ஒருவர் இஸ்ஹாக். இவரின் பிள்ளையான யஃகூபிற்கு இஸ்ராயீல் என்ற பெயரும் உண்டு. இவரது சந்ததிகள் பனீ இஸ்ராயீல்கள், இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தற்போதைய பாலஸ்தீனம், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் ஆகியவை ஒருங்கிணைந்த தேசத்தில் இஸ்ரவேலர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தச் சமூகத்தில் இம்ரான் எனும் நல்லடியார் இருந்தார். அவரது மனைவி தமக்குப் பிறக்கும் பிள்ளையை இறைப்பாதையில் அர்ப்பணிப்பதாக நேர்ச்சை செய்திருந்தார். அக்காலத்தில் இறையில்லத்தைப் பராமரிக்கும் பணிக்காக ஆண் பிள்ளைகளை அர்ப்பணிப்பது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் மர்யம் (அலை) அவர்கள் பிறந்தார்கள். பெண் பிள்ளை பிறந்துவிட்டதென அதிர்ச்சி அடைந்த அவரின் தாயார், தமது நேர்ச்சையை உறுதியாக நிறைவேற்றும் பொருட்டு அவரை ஆலயத்தில் ஒப்படைத்தார். அங்கு அவரைப் பராமரித்துப் பாதுகாக்கும் பொறுப்பாளராக ஜக்கரிய்யா நபி திகழ்ந்தார்கள். இந்நிகழ்வுகள் விரிவாகத் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இறைவனின் உதவியால் இறையில்லத்தில் வளர்ந்து வந்த மர்யம் அவர்கள் இளம் பெண்ணாக இருக்கும் போது அவர் வழியாக அல்லாஹ் ஒரு மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தினான்.

ஈஸா எனும் அற்புதப் படைப்பு:

வானத்திலும் பூமியிலும் கோடான கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுள் சிறந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். மனிதனைப் படைக்கும் விசயத்திலும் அல்லாஹ் தனது படைப்பாற்றலைப் பல விதங்களில் வெளிப்படுத்தி இருக்கிறான். முதல் மனிதரான ஆதம் நபியவர்கள், தாய் தந்தை இல்லாமல் களிமண்ணால் படைக்கப்பட்டார்கள். ஈஸா நபியோ தந்தையின்றி அதிசயமாகப் பிறந்தார்கள். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமைப் போன்றது. அவரை மண்ணால் படைத்து, பின்னர் அவரிடம் ‘ஆகு!’ என்று கூறினான். உடனே அவர் (மனிதப் படைப்பாக) ஆகிவிட்டார். இவ்வுண்மை உமது இறைவனிடமிருந்து வந்தது. எனவே நீர் சந்தேகிப்போரில் ஆகிவிடாதீர்!

(அல்குர்ஆன்  3:59-60)

ஆதம் (அலை) அவர்களைப் போன்று ஈஸா நபி அவர்கள் அற்புதமான முறையில் பிறந்ததாகக் குறிப்பிடுவதோடு அந்த அற்புத நிகழ்வுகளை விரிவாகவும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான். அந்த வசனங்களைப் பாருங்கள்.

இவ்வேதத்தில் மர்யமையும் நினைவு கூர்வீராக! அவர் தமது குடும்பத்தாரை விட்டும் விலகி கிழக்குப் பகுதியிலுள்ள ஓரிடத்தில் தனித்திருந்தபோது, அவர்களை விட்டும் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது அவரிடம் (ஜிப்ரீல் எனும்) நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழு மனிதராக அவருக்குக் காட்சியளித்தார்.

“உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னை நெருங்காதீர்!)” என்று (மர்யம்) கூறினார். “தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார்.

 “எனக்கு எப்படி குழந்தை உண்டாக முடியும்? எந்த ஆணும் என்னைத் தீண்டியதில்லை; நான் நடத்தை கெட்டவளாகவும் இல்லை” என்று (மர்யம்) கூறினார். “அவ்வாறு தான்! ‘இது எனக்கு மிக எளிது. மக்களுக்கு ஒரு சான்றாகவும், நமது அருளாகவும் அவரை ஆக்குவதற்காகவே! இது தீர்மானிக்கப்பட்ட காரியமாக உள்ளது’ என உமது இறைவன் கூறுகிறான்” என்று (ஜிப்ரீல்) கூறினார்.

அவர் ஈஸாவைக் கருவுற்று, அதனுடன் தூரமான ஓரிடத்தில் ஒதுங்கினார். பிரசவ வேதனை, ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. “இதற்கு முன்பே நான் மரணித்து, முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று (மர்யம்) கூறினார்.

அதன் அடிப்புறத்திலிருந்து அவரை (வானவர்) அழைத்து, “கவலைப்படாதீர்! உமது கீழ்ப்புறத்தில் ஒரு நீரோடையை உம் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்” என்றார். “பேரீச்சை மரத்தண்டை உம்மை நோக்கி அசைப்பீராக! அது கனிந்த பழங்களை உம்மீது உதிர்க்கும்”

“உண்டு, பருகி, கண்குளிர்ச்சி அடைவீராக! நீர் எந்த மனிதரையேனும் பார்த்தால் ‘நான் அளவிலா அருளாளனுக்காக நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறி விடுவீராக!” (என்றும் அவர் கூறினார்.)

(அல்குர்ஆன் 19:16-26)

எந்தவொரு ஆண் துணையுமின்றி அல்லாஹ்வின் அற்புத ஆற்றல் மூலமாக மர்யம் (அலை) அவர்கள் குழந்தையைப் பெற்றெடுக்கப்போகும் தகவல் முன்னரே அவரிடம் வானவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைக் குர்ஆனிலுள்ள அத்தியாயம் 3:45 முதல் 48 வரையிலான வசனங்கள் வாயிலாகவும் அறியலாம். மர்யம் (அலை) அவர்கள், இறைவனின் நாட்டத்தை எவ்வித அதிருப்தியும் இல்லாமல் மனதார ஏற்றுக் கொண்டதோடு அதன்படி குழந்தையையும் பெற்றெடுத்தார்கள்.

தொட்டில் பருவத்தில் பேசிய ஈஸா நபி:

இறைவனது கட்டளையை ஏற்று, குழந்தையைப் பெற்றெடுத்து மர்யம் (அலை) அவர்கள் ஊருக்குள் வந்த போது, பலர் அவர்மீது பழிச்சொற்களை வீறியெறிந்தனர். அந்நேரம் அவர்மீது கூறப்பட்ட அபாண்டத்தைக் களைந்தெறியும் வகையில் மற்றொரு அற்புத நிகழ்வு அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது. அச்சம்பவத்தை அல்குர்ஆன் அழகாக விவரிக்கிறது.

(அற்புதமான முறையில் ஈஸா நபி பிறந்தார்). அவரைச் சுமந்து கொண்டு (மர்யம்) தமது சமுதாயத்தாரிடம் வந்தார். “மர்யமே! மோசமான காரியத்தைச் செய்து விட்டாய்! ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உமது தாயாரும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லையே!” என்று அவர்கள் கூறினர். (குழந்தையான) அவரை நோக்கிச் சுட்டிக் காட்டினார். “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்?” என அவர்கள் கேட்டனர்.

“நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 19:28-33)

ஏக இறைவனுடைய விருப்பத்தின்படி தாம் அற்புதமான முறையில் பிறந்திருப்பதாகவும் தம்மை அவன் இறைத்தூதராக ஆக்கவிருப்பதாகவும் தொட்டில் பருவத்தில் இருந்த ஈஸா நபி பேசினார்; விளக்கினார். இது சாதாரணமான நிகழ்வு அல்ல. இப்படி உலகில் இதுவரை மொத்தம் மூன்று பேர் மட்டுமே குழந்தைப் பருவத்தில் பேசியிருப்பதாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள். அம்மூவருள் ஈஸா நபியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நபித்துவமும் அற்புதங்களும்:

அரசியல் காரணங்களால் பெத்லகேம் நகரில் ஆண் பிள்ளைகளைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் நடந்தன. ஆகவே தமது மகனாரான ஈஸாவின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவரை மர்யம் (அலை) அவர்கள் எகிப்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். ஈஸா நபிக்கு முப்பது வயதாக இருக்கும் போது தான் மீண்டும் பெத்லகேம் நகருக்குத் திரும்பினார்கள். இந்தத் தருணத்தில் தான் ஈஸா (அலை) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தத் தகவல்களை வரலாற்று வழியாக அறிய முடிகிறது.

பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சீர்படுத்துவதற்கு அவர்களிலிருந்தே அல்லாஹ் பல நபிமார்களைத் தேர்வு செய்து அனுப்பினான். அவ்வாறான நபிமார்களுள் ஈஸா நபியும் ஒருவர். இது குறித்தும், அவர் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்டப் பிறகு மக்களிடம் செய்த பிரச்சாரத்தைப் பற்றியும் பின்வரும் வசனங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (ஈஸா நபியை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)

(அல்குர்ஆன் 3:49)

“எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும், உங்களுக்குத் தடைசெய்யப்பட்ட சிலவற்றை உங்களுக்கு அனுமதிப்பதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்.) உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்குக் கட்டுப்படுங்கள். என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே, அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி” (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன் 3:50,51)

அவர்களின் அடிச்சுவடுகளில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவர் தனக்கு முன்னிருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். அவருக்கு, நேர்வழியும் ஒளியும் கொண்ட இன்ஜீலை வழங்கினோம். அது, தனக்கு முன்னிருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும், இறையச்சமுடையோருக்கு நேர்வழி காட்டியாகவும் அறிவுரையாகவும் இருந்தது.

(அல்குர்ஆன் 5:46, 47)

ஈஸா நபி இறைத்தூதர் தான் என்பதை மக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் அவருக்குப் பல அற்புதமான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவருக்கு இன்ஜீல் எனும் வேதம் அருளப்பட்டது. இறைவன் ஒருவன் தான் என்றும் அந்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் ஏகத்துவக் கொள்கையின் பக்கமே ஈஸா நபி அவர்கள் மக்களை அழைத்தார்கள். மூஸா நபிக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை மெய்ப்படுத்தும் இறைத்தூதராக தாம் வந்திருப்பதாகவும் தமக்குக் கட்டுப்படுமாறும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சிலரே ஈஸா நபியை ஏற்றனர்:

மூஸா நபிக்கு அருளப்பட்ட தவ்ராத் வேதத்தைத் திரித்தும் மறைத்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த யூத மத அறிஞர்கள் மூலம் ஈஸா நபியின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அச்சமயம் அல்லாஹ்வின் ஆணைப்படி வானவர்களின் தலைவரான ஜிப்ரீல், ஈஸா நபிக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்தார். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கி, அவரை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாதவற்றை உங்களிடம் தூதர் கொண்டு வரும்போதெல்லாம் ஆணவம் கொள்கிறீர்களா? (தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; சிலரைக் கொலை செய்தீர்கள்.

(அல்குர்ஆன் 2:87)

அந்தத் தூதர்களில் சிலரைவிட வேறு சிலரை மேன்மைப்படுத்தி உள்ளோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியுள்ளான். அவர்களில் சிலருக்குப் பதவிகளை உயர்த்தியுள்ளான். மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்தோம். அவரை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின்வந்தவர்கள் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பிறகும் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அவர்களில் சிலர் இறைநம்பிக்கை கொண்டனர். அவர்களில் சிலர் மறுத்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.

(அல் குர்ஆன் 2:253)

இஸ்ரவேலர்களில் சில மக்கள் மட்டுமே ஈஸா நபியைத் தூதராக ஏற்றுக் கொண்டனர். அவர்களுள் பலர் புறக்கணித்தனர். ஈஸா நபியை இறைத்தூதரென ஏற்றுக் கொண்டவர்களுள் சிலர் அவருக்கு நெருங்கிய தோழர்களாகத் திகந்தனர். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதோடு அதைப் பிரச்சாரம் செய்வதற்கு ஈஸா நபிக்குத் துணையாக இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் அல்லாஹ் அருள்மறையில் கூறியுள்ளான்.

(பனீ இஸ்ராயீல்களான) அவர்களிடமிருந்து இறைமறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” என்று கேட்டார்.  “நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோர். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சி கூறுவீராக!” என (அவருக்கு) நெருக்கமான தோழர்கள் கூறினர். “எங்கள் இறைவனே! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுவோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக!” (என்று பிரார்த்தித்தனர்.)

(அல்குர்ஆன் 3:52-53)

“என்னையும் எனது தூதரையும் நம்புங்கள்!” என்று (ஈஸாவின்) நெருக்கமான தோழர்களுக்கு நான் அறிவித்தபோது, “நாங்கள் நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று அவர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன் 5:111)

ஈஸா நபி கொல்லப்படவில்லை:

ஆன்மிகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் யூத மத அறிஞர்களுக்குப் பெரும் தடையாகவும் இடையூறாகவும் ஈஸா நபி இருந்தார்கள். ஆகவே, தங்கள் மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாக அவர்மீது அவதூறு பரப்பினார்கள். ஒரு கட்டத்தில் அவரைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொண்டு களமிறங்கினர். அப்போது அவர்களின் சூழ்ச்சியில் இருந்து ஈஸா நபியைக் காப்பாற்றப் போவதை அல்லாஹ் முன்கூட்டியே அவருக்கு அறிவித்தான். அந்த வாக்குறுதியின்படி அவரைக் காப்பாற்றவும் செய்தான். இது தொடர்பாக அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

(ஈஸாவை மறுத்தோர்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹ் சிறந்தவன். “ஈஸாவே! உம்மை நான் கைப்பற்றி என்னளவில் உயர்த்திக் கொள்வேன். இறை மறுப்பாளர்களிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். உம்மைப் பின்பற்றுவோரை மறுமை நாள்வரை இறைமறுப்பாளர்களைவிட மேலாக ஆக்குவேன். பிறகு என்னிடமே உங்கள் திரும்புதல் உள்ளது. நீங்கள் எதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதுபற்றி உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 3:54-55)

அவர்களின் இறைமறுப்பாலும், மர்யமின் மீது பயங்கரமான அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மகனுமாகிய ஈஸா எனும் மஸீஹை நாங்கள்தான் கொன்றோம்” என்ற அவர்களின் கூற்றாலும் (அவர்களைச் சபித்தோம்.) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவர்களுக்கு (ஈஸாவைப் போன்று) ஒருவர் தோற்றத்தில் ஒப்பாக்கப்பட்டார். இதில் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் அதுகுறித்து சந்தேகத்திலேயே உள்ளனர். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இதில் எந்த அறிவுமில்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:156-158)

ஈஸா நபியைக் கொல்வதற்காக அவரைத் தேடி எதிரிகள் வந்தபோது அவருக்குப் பதிலாக அவரது இடத்தில் அவரைப் போன்று வேறொரு நபரை அல்லாஹ் வைத்துவிட்டான். அவரைத் தான் யூதர்களாகிய எதிரிகள் கொலை செய்தார்களே ஒழிய, ஈஸா நபி ஒருபோதும் கொல்லப்படவில்லை. மாறாக, அவரைக் காப்பாற்றிய அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. மேலும் அவரிடம் அல்லாஹ் பேசிய நிகழ்வும் விளக்கப்பட்டுள்ளது.

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும் உமது தாயாருக்கும் நான் செய்த அருளையும், உம்மை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தியதை நினைத்துப் பார்ப்பீராக! தொட்டில் பருவத்திலும் பெரிய வயதிலும் நீர் மக்களிடம் பேசினீர். வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் உமக்குக் கற்றுத் தந்ததை நினைத்துப் பார்ப்பீராக! எனது ஆணைப்படி களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப் போன்று நீர் வடிவமைத்து அதில் ஊதியபோது அது எனது ஆணைப்படி பறவையாக மாறியதையும், எனது ஆணைப்படி பிறவிக் குருடர் மற்றும் தொழுநோயாளியை நீர் குணப்படுத்தியதையும் நினைத்துப் பார்ப்பீராக! எனது ஆணைப்படி இறந்தவர்களை (உயிருடன்) நீர் வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் தெளிவான சான்றுகளுடன் நீர் வந்தபோது அவர்களிலுள்ள இறைமறுப்பாளர்கள், ‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை’ என்று கூறியபோது அவர்களிடமிருந்து உம்மை நான் காப்பாற்றியதையும் நினைத்துப் பார்ப்பீராக!” என (ஈஸாவிடம்) அல்லாஹ் கூறியதை (நபியே!) நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 5:110)

மறுமையும், ஈஸா நபியின் மீள் வருகையும்:

அல்லாஹ்வால் மேலுயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மீண்டும் ஒரு நாள் பூமிக்குத் திரும்ப வருவார்கள். வானிலிருந்து கீழிறங்கி வந்து மக்களோடு மக்களாக பூமியில் வாழ்வார்கள். மீண்டும் ஈஸா நபி பூமிக்கு வரும் நிகழ்வானது உலக அழிவின் பெரும் அடையாளங்களுள் ஒன்றாக இஸ்லாம் குறிப்பிடுகிறது.

(ஈஸாவாகிய) அவர் இறப்பதற்கு முன்னர், வேதமுடையோர் எவரும் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அவர் மறுமை நாளில் அவர்களுக்குச் சாட்சியாக இருப்பார்.

(அல்குர்ஆன் 4:159)

இயேசு எனும் ஈஸா நபி அவர்கள் பூமிக்கு வரும்போது மக்களைக் கொடுமைப்படுத்தி வழிகெடுத்துக் கொண்டிருக்கும் தஜ்ஜால் எனும் பொய்யனைக் கொன்றொழிப்பார்கள். மேலும், ஈஸா நபி இறைத்தூதராக அல்லாமல் நபிகள் நாயகத்தை ஏற்றுப் பின்பற்றி வாழும் ஒரு முஸ்லிமாக இருப்பார்கள் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

ஈஸா நபி இறைவனின் மகன் அல்ல:

ஈஸா நபி அவர்கள் சிலுவையில் அறைந்து படுகொலை செய்யப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்தி மக்களிடம் பரவியது. அதையொட்டி அவரின் ஆதரவாளர்கள் வழியாகப் பல்வேறு கட்டுக்கதைகள் பரவத் துவங்கின. அவர் இறைவனின் மகன் என்றும், ஒட்டுமொத்த மனித இனத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக தாமாக விரும்பி சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட அவர் மூன்று இரவு, மூன்று பகலுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் கற்பனைகளைப் பரப்பினர்.

இஸ்ரவேலர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தையும் காக்க வந்தவர் என்று கதை எழுதினர். கர்த்தரும் அவரே; மானிட உருவில் வந்து பலியானவரும் அவரே! பரிசுத்த ஆவியும் அவரே! என்று புதிய கொள்கையைப் புகுத்தினர். அவரும் அவரது தாயாரான மர்யமும் அவருக்கு இறைச்செய்திய அருளிய வானத்தூதுவரும் கடவுளாகப் பாவிக்கப்பட்டனர். இப்படியான உண்மைக்குப் புறம்பான கூற்றுகள், கொள்கைகள் அனைத்தையும் அல்லாஹ் அருள்மறையில் கடுமையாகக் கண்டிக்கிறான்.

யூதர்கள், ‘உஸைர் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். கிறித்தவர்களோ, ‘மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன்’ என்று கூறுகின்றனர். இது, தமது வாயளவில் அவர்கள் கூறும் கூற்றாகும். அவர்கள் இதற்கு முன்பிருந்த இறைமறுப்பாளர்களின் கூற்றுக்கு ஒத்துப் போகின்றனர். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! அவர்கள் எங்கே திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன் 9:30)

“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன் 5:72)

அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.

(அல்குர்ஆன் 9:31)

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள்! அல்லாஹ்வின்மீது உண்மையே கூறுங்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அந்த வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவர் அவனிடமிருந்துள்ள உயிரும் ஆவார். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! “மூன்று (கடவுள்)” என்று கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அதுவே) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மட்டுமே ஒரே கடவுள். தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவை. பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.

(அல்குர்ஆன் 4:171)

“(கடவுள்கள்) மூன்று பேரில் அல்லாஹ் மூன்றாமவன்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். ஒரே கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (இத்தகைய) இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும். அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.

(அல்குர்ஆன் 5:73, 74)

அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருப்பவனான அல்லாஹ் எவ்விதத் தேவையும் இல்லாதவன். எந்தவொரு பலவீனமும் இல்லாதவன். ஆகவே அவன் எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனைத் தவிர்த்துள்ள அனைத்தும் அவனது படைப்புகளே; அனைவரும் அவனது அடிமைகளே! அந்த வகையில் ஈஸா நபியும் அவரது தாயாரும் அல்லாஹ்வின் படைப்புகளே தவிர அவர்கள் ஒருபோதும் கடவுளாக ஆக இயலாது. இது தொடர்பாக திருக்குர்ஆனில் தர்க்க ரீதியாகவும் அல்லாஹ் நமக்குப் புரிய வைக்கிறான்.

“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், உலகிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அவர்களைக் காக்க) சிறிதேனும் ஆற்றல் பெற்றவர் யார்?” என்று கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியதை அவன் படைக்கிறான். அனைத்துப் பொருட்கள்மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்.

(அல் குர்ஆன் 5:17)

மர்யமின் மகன் மஸீஹ், தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவரது தாயார் உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிடுவோராக இருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை மீண்டும் கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 5:75)

மறுமையில் ஈஸா நபியின் பதில்:

யூத மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறிய, இயேசுவின் ஓரிறைக் கோட்பாட்டினை எதிர்க்கும் எதிரியாக இருந்து பிறகு ஆதரவாளராக மாறிய சவுல் எனும் பவுல் என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையையே இன்று கிறித்துவ மக்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவையும் அவரது தாயாரையும் கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் இயேசு எனும் ஈஸா நபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதை மறுமை நாளில் ஈஸா நபி வாக்குமூலமாக வழங்குவார்கள். இது குறித்து ஏக இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.

“நீ எனக்கு ஏவியவாறு, ‘என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாய் இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன் அடியார்களே! நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் ஈஸா கூறுவார்.).

“இது உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கும் நாள்” என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்குச் சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 5:116-119)

மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதை விட்டும் பெருமையடித்து, கர்வம் கொள்வோர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:172)

ஒரே இறைவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு இறைத்தூதரான ஈஸா நபியையும், அவரது தாயாரையும் கடவுளாகப் பின்பற்றும் மக்கள் மறுமையில் வெற்றி பெற முடியாது என்பதே உண்மை. இந்த உண்மையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு உரியது.

ஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்கள்:

ஈஸா நபி விசயத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் திருக்குர்ஆனில் வழங்கப்பட்டுள்ளது.

“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டோர்” என்று கூறுங்கள்.

(அல்குர்ஆன் 2:136)

“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா மற்றும் நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:84)

ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபிகள் நாயகம் வரை அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களுக்கு மத்தியில் எவ்விதமான பாகுபாடும் பார்க்காமல் அவர்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். அதேசமயம் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தைப் பின்பற்றி அவரது வழிகாட்டுதல் படி அழகிய முறையில் வாழ வேண்டும். இந்த அடிப்படையிலேயே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இயேசு எனும் ஈஸா நபியையும் அவரது தாயாரையும் மதிக்கிறார்கள். அவர்களின் பெயர்களைக் கூறும்போதெல்லாம் அவர்களுக்காகப் படைத்தவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.