சமீபத்தில் பெய்த பெருமழையால் சென்னை, தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டாலும் தாமிரபரணி கரையோரக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை அதிரச் செய்தன. பெரும்பாலான கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. தாமிரபரணி பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதமடைந்துவிட்டன.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை, கடலோரக் காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, காவல் துறையில் பயிற்சி பெற்ற மீட்புப் படையினர் ஆகியோர் களத்தில் வருவதற்கு முன்னரே இஸ்லாமிய சமுதாயம் மனிதநேயப் பணிகளில் சங்கமித்துவிட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை தங்களின் உயிரைப் பணயம் வைத்து உதவிக்கரம் நீட்டினர்.பசித்தோருக்கு உணவளிப்பதிலும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கொஞ்சமும் குறை வைக்காத அளவிற்கும் இஸ்லாமியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வருடந்தோறும் ஏற்படும் ஒவ்வொரு பேரிடர்களிலும் முஸ்லிம்களின் மனிதநேயப் பணிகளால் பூரிப்படையும் பிறமத அன்பர்கள், ‘பாய்மார்கள் எங்கள் தாய்மார்கள்’ எனவும் ‘இனி ஒரு பள்ளிவாசலை இடித்து விடாதீர்கள்! பள்ளிவாசல்கள்தான் பேரிடரின்போது நமக்குப் பாதுகாப்பு மையம்’ என்றெல்லாம் நெகிழ்ந்துபோகும் வகையில் முஸ்லிம் இளைஞர்கள் தன்னலம் பாராது இந்த சேவைகளில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொய்யான பிம்பத்தை, சங்கிகளின் பொய்ப் பிரச்சாரங்களை பேரிடர் மீட்புப்பணிகள் புரட்டிப்போட்டுள்ளன.எல்லாப் புகழும் இறைவனுக்கே!
சேவைகள் யாருக்காக?
அரசாங்கம் செய்யவேண்டிய பேரிடர் மீட்புப் பணிகளை முஸ்லிம் சமுதாய மக்கள் முண்டி அடித்துக்கொண்டு செய்வதற்குக் காரணம் என்ன? எதற்காக இந்தப் பணிகள்? இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பயன்தான் என்ன என்பதை பிறருக்குச் சொல்வதற்கு முன்னால் களப்பணி ஆற்றிய சகோதர, சகோதரிகள் ஒரு கணம் சிந்தனை செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே செய்யத் துவங்கிய இந்த மனிதநேயப் பணிகள் சில நேரங்களில் திசை மாறிவிடுகிறது.அதனால் படைத்த இறைவனிடம் நமக்கு சுவனம் கிடைப்பதற்குப் பதிலாக நரகத்தில் விழும் அவலம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே எந்த நோக்கத்திற்காக இந்த மனிதநேயப் பணிகள் செய்யப்படுகின்றனவோ அதைத் தெளிவாக உணர்ந்து களம் காண வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.
மார்க்கத்தைப் பொறுத்தவரையில், நன்மைகளைச் செய்வது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதை விட முக்கியமாக அந்த நன்மைகளை, இறைவனின் திருப்திக்காகத்தான் செய்யப்படுகிறது என்ற தூய மனதுடன் செய்வது மிக முக்கியமாகும்.
இதில் மனிதர்கள் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், புகழ்கிறார்கள் என்பதற்காகச் செய்யக் கூடாது.
அகத்தூய்மை, அல்லாஹ்வின் ஆணை!
அவர்கள் வாய்மை நெறியில் நின்று, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கியவர்களாக அவனை வணங்கவும், தொழுகையை நிலைநிறுத்தவும், ஸகாத்தைக் கொடுக்கவுமே ஆணையிடப்பட்டிருந்தனர். இதுவே நேரான மார்க்கமாகும்.
(அல்குர்ஆன் 98:5)
அதிகாலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை அனுதினமும் நிறைவேற்றப்படுகிற ஐவேளைத் தொழுகையிலும், தமது செல்வங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு வழங்கும் ஜகாத் எனும் கட்டாய தர்மத்திலும் நாம் மக்களிடத்தில் பெயர் பெறுவதற்காக, போற்றப்படுவதற்காகச் செய்து விடக்கூடாது. இவை அல்லாஹ்வின் கட்டளை, அவனின் திருமுகத்திற்கே செய்யப்படுகிறது என்கிற மனத்தூய்மையுடன் தான் செய்யப்பட வேண்டும் என்று இறைவன் ஆணையிடுகிறான்.
தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற சாகும் வரை நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்களில் நம்மிடம் இருக்கும் மனத்தூய்மையைப் போன்று அவ்வப்போது நாம் சந்திக்கும் பேரிடர்களிலும் நாம் செய்யும் மனிதநேய பணிகளில் இந்த மனத்தூய்மை இருக்க வேண்டும்.
இறைவனுக்காகத் தொழும் தொழுகையைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ, தொழுகையாளி என்ற பெயருக்காகவோ, எல்லாரும் தொழுகிறார்கள், நாமும் அவர்களோடு சேர்ந்து தொழ வேண்டும், இல்லாவிட்டால் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்பதற்காகவோ, சோம்பேறித்தனத்தோடு தொழும் பல மக்கள் இருக்கிறார்கள். இது இறைநம்பிக்கையாளனின் இனிய குணம் அல்ல! மாறாக நயவஞ்சகனின் கொடிய குணம் என்று அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கை செய்கிறான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை ஏமாற்றக் கூடியவன். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.
(அல்குர்ஆன் 4:142)
நமக்கும் இறைவனுக்கும் இடையே தொடர்புடைய தொழுகையில் நாம் மனத்தூய்மையோடு இருப்பதைப் போல நமக்கும் மக்களுக்கும் இடையேயான ஒரு தொடர்புப் பாலத்தை ஏற்படுத்தும் தான தர்மங்களிலும் மனத்தூய்மை கடைப்பிடித்தல் வேண்டும். இதில் மனிதர்கள் சருகிப்போக அநேக வாய்ப்புகள் உண்டு.
நாம் ஒருவருக்கு தர்மம் செய்கிறோம் என்றால், அவர்கள் நம்மைப் பார்த்து மனம் குளிர்வார்கள். நன்றி கூறுவார்கள். நமக்கு விசுவாசமாக இருப்பார்கள். நம்முடைய சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். ஒரு கட்டத்தில் நாம் அநியாயம் செய்தாலும் அதற்குத் துணை போகும் அளவிற்கு அவர்கள் உடந்தையாக வந்து விடுவார்கள்.
அல்லாஹ் அதிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற இடங்களில் தான் மனிதர்களின் புகழ்ச்சியை விட இறைவனின் திருப்திக்காகவே, திருமுகத்திற்காகவே தர்மம் செய்யப்படுகிறது என்கிற மனநிலை வரவேண்டும்.
சிலர் தர்மம் செய்து விட்டு, இறைவனுக்காக செய்தோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக, பிறருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுவார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி எச்சரிக்கிறான். அதற்கு ஓர் உதாரணமும் கூறுகிறான்.
இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும், மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செல்வத்தைச் செலவிடுபவனைப் போன்று, சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள். இத்தகையவனுக்கு எடுத்துக்காட்டு, மண் படிந்திருக்கும் ஒரு வழுக்குப் பாறையின் தன்மையைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்து அதை வெறும் பாறையாக ஆக்கிவிட்டது. அவர்கள், தாம் சம்பாதித்தவற்றிலிருந்து எந்தப் பலனையும் அடைய மாட்டார்கள். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதற்காகவும், தமது உள்ளங்களிலுள்ள உறுதிப்பாட்டின் காரணமாகவும் தமது செல்வங்களைச் செலவு செய்வோர்க்கு எடுத்துக்காட்டு, உயரமான இடத்திலுள்ள தோட்டத்தைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்ததும் அது இரு மடங்கு விளைச்சலைத் தந்தது. பெருமழை பொழியாவிட்டாலும் சிறு தூறல் போதுமானது. நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 2:264,265
மனத்தூய்மைக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் பெருமழையை உதாரணம் கூறுகிறான். அந்த மனத்தூய்மையைப் பற்றி பெருமழைக் காலங்களில் செய்யப்படும் சேவைகளின் போது நாம் அறிவுரையாக நினைவுபடுத்துகிறோம்.
மனத்தூய்மை இல்லாமல் மக்களின் பெயருக்காகத் தானதர்மங்கள் செய்தவர்களின் அவல நிலையைப் பற்றி மேற்கண்ட வசனத்தில் நாம் உணர முடிகிறது. அதே நேரத்தில் தர்மம் செய்துவிட்டு, அதைப் பெற்றவர்களை நோவினைப்படுத்தும் பழக்கம் வீடுகளில் உள்ள பணக்காரர்களிடத்தில் காணப்படுகிறது. அவர்கள் தங்களிடம் வேலை செய்யக்கூடிய பணியாளர்களுக்குச் சில உதவிகளைச் செய்துவிட்டு அதற்குப் பிறகு அதை சொல்லிக்காட்டியும் அதை குத்திக் காட்டியும் அதை வைத்து அவர்களை நோவினை செய்தும் வேலை வாங்கக்கூடிய அவலம் இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்கள் இதிலிருந்து விடுபட வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் பொது சேவைகளில் ஈடுபடுகிற பொழுது, நான் அதைச் செய்தேன். இதைச் செய்தேன், வெள்ளத்தில் மிதந்தேன், கால் கடுக்க நடந்தேன், பல நாட்கள் உறங்கவில்லை, சரியாகச் சாப்பிடவில்லை என்றெல்லாம் புலம்பித் தள்ளி தன்னுடைய சேவைகளைச் சிதைத்து விடக்கூடாது.
சில நேரங்களில் நாம் செய்கிற நிவாரணப் பணிகள் பிற மக்களை நன்மையான காரியத்தின் பக்கம் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விளம்பரப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் தீண்டாமை என்ற கொடுமைக்கு எள்ளளவும் இடமில்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதுகிற மார்க்கம் இஸ்லாம் என்பதை இந்த சேவைப் பணிகளும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
மனிதர்களைத் தொட்டால் தீட்டு! கை பட்டால் தீட்டு என்று இருக்கக்கூடிய பிரிவினர்கள் எல்லாம் இதுபோன்ற பேரிடர் காலங்களில் தலைமறைவாகி விடுவார்கள். அவர்கள் மக்களைத் தொடவே விரும்பாதவர்கள். எப்படி அவர்களைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றுவார்கள்? எப்படி அவர்களுக்குத் தோள் கொடுப்பார்கள்? இப்படிப்பட்ட தீண்டாமை கொடுமையைப் போதிக்கின்ற மார்க்கங்கள் வழி கெட்டவைகள்.
தீண்டாமையை ஒழித்து மனித குலத்தைக் காக்கின்ற இஸ்லாமிய மார்க்கம் தான் சிறந்தது என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்தச் சேவைகளை முகநூல், ட்விட்டர் போன்ற சமூகத்தளங்களில் எடுத்து பரப்புவதோ அதன் மூலமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு போவதோ தவறில்லை.
மாறாக ஒரு சிலர் இந்த சேவைக் காலங்களில் காலை முதல் இரவு வரை எங்கே செல்கிறோம்? யாரைச் சந்திக்கிறோம்? என்ன செய்கிறோம் அவர்களுக்கு என்ன உதவி செய்கிறோம்? அந்த உதவிகளுக்கு மக்கள் எப்படிப்பட்ட ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றெல்லாம் விடிய விடிய வீடியோ போடுவார்கள்.
இது சமீப காலத்தில் இணையதளங்களில் ஊடுருவி இருக்கின்ற ஒருவகை வியாபாரமாக இருக்கிறது. ஒருவர் தங்களுடைய வீட்டினுடைய வீட்டினுடைய கட்டிட அமைப்பாக இருக்கட்டும், சமையலறையாக இருக்கட்டும். அதை விளக்கி வீடியோ போடுவது, அவர்கள் கடைவீதிக்குச் செல்வது, கடையில் சில பொருட்களை வாங்குவது என அதைப் பற்றி விவரித்துக் கூறுவது, இதன் மூலமாக முகநூலில் ஹ்ஷீutuதீமீ தளங்களில் பணம் சம்பாதிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்.
அதைப் போல சிலர் இந்த சேவைப் பணிகளையும் விரிவாக விளக்கமாக எடுத்துச் சொல்லி அதன் மூலமாக மக்களிடத்திலே தொடர்ந்து பேசுபொருளாக இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிற அளவிற்கு களம் கண்டு கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்வது நம்முடைய அமல்களைப் பாழாக்கி நம்முடைய சேவைகளை சின்னாபின்னப் படுத்தக்கூடிய தவறான செயல் என்பதை இதுபோன்றவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
பொதுவாக எதைச் செய்தாலும் உடனடியாக அதற்கு ஒரு வீடியோ பதிவு வெளியிட வேண்டும், அதுகுறித்து சில கருத்துக்களைச் சொல்லி ஆக வேண்டும் என்கிற நோய் ஒருவருக்கு வந்து விட்டால் அவர்களால் அன்றாடம் வீடியோ வெளியிடாமல் உயிர் வாழ முடியாது. இதுபோன்ற மன நோயிலிருந்து விடுபட வேண்டும். நமது சேவைகளுக்கு உலகத்தில் ஆதாயத்தை விரும்பினால் உலகத்திலேயே கிடைக்கும். ஆனால் மறுமையில் எந்தப் பலனும் கிடைக்காது. தண்டனையே கிடைக்கும்.
யார் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் விரும்புகிறார்களோ அவர்களின் செயல்களுக்கு இங்கே முழுமையாகக் கூலி கொடுப்போம். அவர்கள் அதில் குறைவு செய்யப்பட மாட்டார்கள். மறுமையில் அவர்களுக்கு நரக நெருப்பைத் தவிர எதுவுமில்லை. அவர்கள் உருவாக்கியவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாகக் கூடியவையாகும்.
அல்குர்ஆன் 11:15,16
ஒரு சிலர் இந்தச் சேவைகளில் தங்களது இயக்கங்களின் பெயருடன் வலம் வருவார்கள். இது தவறல்ல. அதே வேளையில் அந்த இயக்கங்கள் இந்தச் சேவைகளின் மூலம் எதிர்பார்க்கக் கூடிய பயன்கள் என்ன? என்பதுதான் முக்கியம்.
ஒரு சில முஸ்லிம் இயக்கங்கள் அரசியல் களப்பணிகளில் ஈடுபடுபவர்களாக இருந்தால் உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்கைப் பெறுவதற்குத் தான் இந்தச் சேவை என்ற மனநிலை இருந்தால் இவ்வுலகில் அதன் பலனை அனுபவிப்பார்கள்.ஆனால் நிரந்தர மறுமையில் அதற்கான பலனை இழந்து நிற்பார்கள்.
இறுதியாக இரண்டு நபிமொழிகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான்.
அதை அவர் அறிந்து கொண்டதும், ‘இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய்?’ என்று கேட்பான். அதற்கு அவர் “நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். “நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது’’ என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.
அடுத்து தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் “இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான்.
அதற்கு அவர் “நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன்’’ என்று பதில் சொல்வார். ‘‘நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.
அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான்.
அதற்கு அவர், ‘‘நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை’’ என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காகவே தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3865, 3537
ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம் உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2363, முஸ்லிம் 2244
மேற்கண்ட இரண்டு நபிமொழிகள் நமக்கு உணர்த்துவதென்ன? ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆக உயர்ந்த நற்செயலாகும். கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும். மேலும், நேரடியாக சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் காரியம். மார்க்கக் கல்வி கற்பது சுவனத்தின் பாதையை இலகுவாக்கும் காரியம். தர்மங்கள் செய்வது நிலையான நன்மையைப் பெற்றுத் தரும் காரியம்.
இப்படி இஸ்லாத்தில் தலைசிறந்த மூன்று காரியங்களை இவர்கள் செய்திருந்தாலும் இவர்களின் நோக்கம் முகஸ்துதிக்காக இருந்தமையினால் நரகத்தில் தள்ளப்படுகின்றனர். மற்றொரு நபி மொழியில் நாய்க்குத் தண்ணீர் கொடுத்ததற்காக சொர்க்கம் எனும் பாக்கியத்தை ஒருவர் பெறுகிறார்.
இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்னவென்றால் நாம் செய்யும் செயல்கள் அளவில் பெரியதாக இருந்தாலும் அகத்தில் தூய்மையுடன், இறைதிருப்தியை நாடி செய்யப்படாவிட்டால் அது நமக்கு நன்மையைப் பெற்றுத் தராது. மாறாக நரகத்தையே பெற்றுத் தரும்.
அதே சமயம் நாம் செய்யும் காரியம் மிக மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி தூய உள்ளத்துடன் செய்கின்ற பொழுது அதற்காக நமக்கு சொர்க்கத்தையே இறைவன் பரிசளிக்கிறான். இதை உணர்ந்து இந்தப் பேரிடர் காலங்களில் மட்டுமல்லாது அனைத்து சமூகப் பணிகளிலும் மனத்தூய்மையுடன் செயல்படும் பக்குவத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!