இஸ்லாம், மனைவிமார்களை அடிப்பதற்குத் தூண்டுகிறதா?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34 கூறுகிறது.

திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன்.

“குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை”

என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் குர்ஆனைக் குறை காண்கிறார் என்பதையும், குர்ஆனில் மனிதாபிமானமற்ற கருத்துக்கள் உள்ளன என்றே கூற வருகிறார் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மார்க்கண்டேய கட்சு அவர்கள் திருக்குர்ஆனை விமர்சிப்பதற்கு முன் திருக்குர்ஆனை எவ்வாறு புரிய வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதற்கு முற்பட்டதாகத் தெரியவில்லை.

மார்க்கண்டேய கட்சு அவர்களின் விமர்சனம் நியாயமானதுதானா? கீழ்ப்படியாவிட்டால் உடனேயே மனைவியரை அடிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இஸ்லாம் உத்தரவிட்டுள்ளதா? என்பதற்கான விளக்கங்களைக் காண்போம்.

அவர் குறிப்பிடும் திருமறை வசனம் இதுதான்.

மனைவியர் மாறுசெய்வதை நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! அவர்களைப் படுக்கைகளில் விலக்கி வையுங்கள்! அவர்களை (இலேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழியையும் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:34)

மேற்கண்ட வசனத்தில் (இலேசாக) என்று அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ள வாசகத்தை நீக்கிவிட்டுப் படித்தால் “அவர்களை அடியுங்கள்!” என்று வரும்.

திருமறைக் குர்ஆனின் இந்த வாசகத்தைத்தான் அவர் மனிதாபிமானமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மனைவி என்றாலே அவளை அடிக்க வேண்டும் என்றோ, அல்லது அவளிடம் சிறு குறையைக் கண்டுவிட்டாலே அவளை அடிக்க வேண்டும் என்றோ திருக்குர்ஆன் குறிப்பிடுவதாக மார்க்கண்டேய கட்சு சித்தரிக்க முனைகிறார்.

மனைவியரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவளுடைய குறைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கணவன், தன் மனைவியிடம் வெறுக்கும் விஷயங்களைக் கண்டால், அல்லது கணவனுக்கு நல்ல காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படவில்லையென்றால்  உடனடியாக அவளை அடிக்க வேண்டும் என்று திருமறைக்குர்ஆன் கட்டளையிடவில்லை.

  • முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.
  • அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.
  • அதுவும் பயன் தராத போது அடித்துத் திருத்த வேண்டும்.

எல்லாக் காரியங்களிலும் கணவனுக்கு மாறு செய்வதைக் காணும் போதும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட, ஒழுக்கமாண்புகளுக்கு எதிரான செயல்பாடுகளின் அடையாளங்களை, வெளிப்பாடுகளை ஒருவன் தன் மனைவியிடம் காணும் போதும் உடனடியாக விவாகரத்து என்ற பிரிவினைக்குச் சென்றுவிடாமல், அல்லது கொலை போன்ற பாதகமான காரியங்களில் ஈடுபட்டு விடாமல் இருப்பதற்காகவே ரோஷமிக்க ஆண்களுக்காக இஸ்லாம் இலேசாக அடித்துத் திருத்துவதை வழிகாட்டுகிறது.

ஒருவன் தன்னுடைய மனைவியிடம் ஒழுக்க மாண்புகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் காண்கிறான்.

அவளுக்கு அவன் அறிவுரை கூறித் திருத்த முற்படுகிறான். ஆனால் அதில் அவள் திருந்தவில்லை.

பின்னர் அவளை படுக்கறையில் விலக்கி வைத்தால் தனது தவறான செயல்களை அவள் விட்டுவிடுவாள் என்று பார்க்கிறான். அதிலும் அவள் திருந்தவில்லை.

பின்னர் அவளை இலேசாக அடித்துத் திருத்துவதற்கு முற்படலாம் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

அதிலும் அவள் திருந்தாவிட்டால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது,

மனைவியர் மாறுசெய்வதை நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! அவர்களைப் படுக்கைகளில் விலக்கி வையுங்கள்! அவர்களை (இலேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழியையும் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

அவ்விருவருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் பயந்தால் அவனது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள்! அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நன்கு தெரிந்தவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:34, 35)

ஒழுக்கத்திற்கு எதிரான செயல்பாடுகள் மனைவியிடம் வெளிப்பட்டால் ரோஷமிக்க கணவன் அவளுக்கு அறிவுரை கூற வேண்டும், அதிலும் திருந்தாவிட்டால் அவளைப் படுக்கையில் விலக்கித் திருத்த முற்பட வேண்டும். அதிலும் திருந்தாவிட்டால் இலேசாக அடிக்கலாம். அதிலும் திருந்தாவிட்டால் குடும்பத்தாரிடம் முறையிட்டு அதற்குரிய தீர்வைத் தேடவேண்டும் எனக் குர்ஆன் குறிப்பிடுவதை ஒழுக்கத்தை விரும்பும் எந்த ஆண்மகனாவது மறுக்க முடியுமா?

மனைவியின் துரோகத்தைத் தாங்க இயலாமல், அல்லது சின்னஞ்சிறு பிரச்சினைக்குக் கூட அவளைக் கொலை செய்யும் மனித குலச் செயல்பாடுகளில் ஒரு பெண் தனது தவறான செயல்பாடுகளால் அவள் தனது வாழ்வை இழந்துவிடக்கூடாது என்ற கருணையில் இறைவன் கூறும் வழிகாட்டுதல்கள் எப்படி தவறாக இருக்கமுடியும்?

அடிக்க வேண்டும் என்றால் மனிதாபிமானமற்ற முறையில் அடிப்பது அல்ல,

திருமறைக் குர்ஆனுடைய வசனங்களை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (மனைவியைக்  கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது  அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு!. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே! நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?)” என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் (19190)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) உபதேசங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். 

நூல்: திர்மிதி (1083)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டாம். (ஏனெனில்) பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள் 

நூல்: புகாரி (5204)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்)  என்னுடைய அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில் பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும் விலா எலும்பிலேயே அதன் மேல் பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலானதாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். 

நூல்: புகாரி (3331)

மனைவியை ஒருபோதும் வரம்புமீறித் தாக்குவதையோ, கணவனுக்கு மாறுசெய்வதைக் கண்டவுடனேயே அடித்துத் துவைக்க வேண்டும் என்பதையோ இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

அகில உலக முஸ்லிம்களுக்கும் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருதடவை கூடத் தமது மனைவியைரை அடித்தது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (4651)

அவர்களுடன் அழகிய முறையில் வாழ்க்கை நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், அப்படி நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும்; ஆனால் அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான்.

(அல்குர்ஆன் 4:19)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி கொள்ளட்டும்.

நூல்: முஸ்லிம் 2915

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளர்களில் ஈமானில் முழுமையானவர் அவர்களில் அழகிய நற்குணமுடையவரே தன்னுடைய மனைவியிடத்தில் குணத்தால் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி (1082)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார். நான் என்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவனாவேன்.

நூல்: திர்மிதி (3830)

மனைவியிடம் பிடிக்காத குணங்களைக் காணும் போதும் அதைப் பொறுத்துக் கொண்டு வாழ்வோரே சிறந்த கணவர் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“அல்லாஹ்வின் பெண் அடியார்களான (உங்கள் மனைவியரை) அடிக்காதீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் (உத்தரவாகக்) கூறினார்கள். (சிறிது காலத்திற்குப் பிறகு) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”(அல்லாஹ்வின் தூதரே!) பெண்கள் தமது கணவன்மார்களை எதிர்க்கத் துணிந்து விட்டனர். (செய்யவேண்டிய கடமைகளை சரிவரச் செய்வதில்லை)” என முறையிட்டார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் மனைவியரை அடிப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். (மறுநாளே) அதிகமான பெண்கள் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரிடம் திரும்பத்திரும்ப வந்து தமது கணவர்களைப் பற்றி (அவர்கள் தம்மை அடிப்பதாக) முறையிட்டனர். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள்  “அதிகமான பெண்கள் முஹம்மதுடைய மனைவியரிடம் திரும்பத் திரும்ப வந்து தமது கணவர்களைப் பற்றி  (அவர்கள் தம்மை அதிகமாக அடிப்பதாக) முறையிடுகின்றனர். (மனைவியரை அடிக்கும்) அவர்கள் உங்கள் மிகச் சிறந்வர்களாக இல்லை”  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அபீ துபாப் (ரலி),

நூல் : அபூ தாவூத் (2146), இப்னு ஹிப்பான் (4189)

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்தால் கூட, கணவனிடம் கடுகடுப்பாக நடந்து கொண்டால் கூட அவர்களை அடிப்பவர்கள் சிறந்த கணவர்களாக இருக்க முடியாது என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

அநியாயமாக மனைவியை அடிப்போருக்குத் திருக்குர்ஆனின் எச்சரிக்கை

மார்க்க வரம்புகளை மீறி, நியாயமின்றி மனைவியை அடிப்போரும் கணிசமாக உள்ளனர் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

நியாயமின்றி ஒருவர் தனது மனைவியை அடிப்பதும், காயம் உண்டாகும் அளவிற்கு அடிப்பதும், பொதுவெளியில் வைத்து வெறுப்பைக் காட்டுவதும், அசிங்கமாகப் பேசுவதும் மாபெரும் அநியாயமாகும்.

குர்ஆனும், சுன்னாவும் அநியாயம் செய்வதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகிறான்:  “என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடைசெய்து கொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்: முஸ்லிம் (5033)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி (2447)

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத (தவறு) ஒன்றுக்காகத் துன்புறுத்துபவர்கள் அவதூறையும், அப்பட்டமான பாவத்தையுமே சுமந்து கொண்டனர்.

(அல்குர்ஆன் 33:58)

எனவே எந்த நேரத்திலும் ஒரு கணவன் தனது மனைவியை அநியாயமாக அடிப்பதையும், மார்க்க வரம்புகளை மீறி அவளிடம் நடந்து கொள்வதையும் இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் மனிதகுல நன்மைக்கானது. அதைப் பின்பற்றுபவர்கள்தான் அதன் பயனை அடைந்து கொள்ளமுடியும். திறந்த மனதுடன் சரியான வழிமுறையில் குர்ஆனைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் அது இறைவேதம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.