இறைச் செய்தியின் ஒளியில்.. இறைத்தூதர் (ஸல்) வழியில்… ரமலான் கண்ட மறுமலர்ச்சி

பிறை முதல் ஃபித்ரா வரை

தவ்ஹீது ஜமாஅத்தின் உதயத்திற்கு அடிப்படைக் காரணமே, மக்களிடம் நடைமுறையில் இருக்கும் மார்க்கமும் குர்ஆன், ஹதீஸ் என்ற ஆதாரப்பூர்வமான இரு ஏடுகளிலும் இருக்கும் மார்க்கமும் வெவ்வேறாக இருந்தது தான். அதனால் தவ்ஹீது ஜமாஅத் உதயமானது.

அது உதயமானதும் செய்த முதல் பணி இஸ்லாத்தின் மூல ஆதாரமான, மூலப்பத்திரமான குர்ஆன், ஹதீஸில் இருக்கும் மார்க்கத்தை மக்களிடம் கொண்டுவருவது தான். அந்த இலக்கோடும் இலட்சியத்தோடும் தனது பணியையும் பயணத்தையும் தொடங்கியது. அன்றிலிருந்து இடைவிடாமல் இன்னும் அந்தப் பயணத்தில் பாதை மாறாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தின் இதர வணக்க வழிபாடுகள் போன்றே இனிய ரமலான் மாதத்தின் வணக்க, வழிபாடுகளும் தலைகீழாக, குப்புறக் கவிழ்ந்து கிடந்தன. இறைச் செய்தி எனும் இறை வேதம் இறங்கிய மாதத்திலேயே ரமலான் தலைப்பிறை முதல் பெருநாள் தலைப்பிறை வரை அத்தனையும் குர்ஆன், ஹதீஸ் என்ற ஆவண ஏடுகளில் இடம்பெற்ற ஆதாரங்களுக்கு நேர்மாற்றமாகவும் நேர் முரணாகவும் அமைந்திருந்தன.

அதனால் பிறை முதல் பிற விஷயங்கள் அனைத்திலும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மூலப்பத்திரங்களான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எப்படி மாற்றி அமைத்து, ஒரு மாற்றத்தை, ஒரு மறுமலர்ச்சியை மக்களிடம் எப்படி கொண்டு வந்தது; இறைச் செய்தி எனும் நேர்கோட்டில், நிலைபாட்டில் மக்களை எப்படி கொண்டு வந்தது என்பதை வரிசையாகப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

தலைப் பிறையிலேயே தடம் புரண்ட தமிழகம்

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1906

புனித ரமலான் மாதத்தின் புண்ணியம் தரும் நோன்பு நோற்கும் நாளை, மாதத்தை முடிவு செய்வதே அடிவானத்தில் சூரியன் அடைக்கலமானதும் நூல் இழை போன்று காட்சியளிக்கும் மெல்லிய தலைப் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதை வைத்துத்தான். ஆனால் தமிழகத்தில் வஹீ எனும் வான் செய்தி கூறும் வான் பிறை அடிப்படையில் தான் நடந்ததா? என்றால் இல்லை. அறவே இல்லை.

தவ்ஹீது ஜமாஅத் தனது பிறை தொடர்பான ஹதீஸ் அடிப்படையிலான நிலைபாடுகளைக் கடைப்பிடித்து தமிழக முஸ்லிம்களிடம் கொண்டு வருவதற்கு முன்னால் தமிழக முஸ்லிம்களிடம் நோன்பு எப்படி அமைந்தது? பெருநாட்கள் எப்படி அமைந்தன? கடந்த காலத்தில் பெரும்பாலும் தமிழக முஸ்லிம்களின் நோன்புக்கு ஆதாரம் இலங்கை வானொலி அறிவிப்பு தான். இருபெருநாட்களுக்கு ஆதாரம் இலங்கை வானொலி முழங்கும் பெருநாள் தக்பீர் தான். சென்னையில் ஒரு பெருநாள், மற்ற இடங்களில் அடுத்த நாளில் ஒரு பெருநாள் என இரு பெருநாட்கள் நடந்திருக்கின்றன.

அர்த்த ராத்திரியில், சஹ்ருக்காக ஆயத்தமாகும் அதிகாலை நேரத்தில் பள்ளிகளில் நஹரா ஓசை இடியாக முழங்கும். அதைத் தொடர்ந்து தக்பீர்கள் முழங்கும். பெருநாள் என்று அறிவிப்பு ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும். தையல்காரன் கடையில் சட்டைக்கு காசா தைத்திருப்பான். பட்டன் வைத்திருக்க மாட்டன். சட்டை தைத்திருப்பான். கழுத்துப் பட்டை வைத்திருக்க மாட்டான். அல்லது கை வைத்திருக்கமாட்டான். லுங்கி எடுத்திருப்பான், அதை மூட்டியிருக்க மாட்டான். பேண்டுக்கு ஒரு கால் இருக்கும். இன்னொரு கால் இருக்காது. நாளைக்கு தானே பெருநாள். நாளை இரவு ரெடிமேட் சட்டை எடுத்துக் கொள்வோம் என்று காத்திருந்திருப்பான். அதற்குள்ளாக விடிவதற்குள்ளாக பெருநாள் வந்து விழுந்து விடும். மொத்தத்தில் தமிழகத்தில் இருவேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவது அப்போதிலிருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கு அடிப்படைக் காரணமே இலங்கை வானொலி தான்.

இலங்கை வானொலியிலிருந்து இறைவன் வஹீயை நோக்கி……

ஒட்டுமொத்த தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையில் நாமறிந்தவரையில் டவுண் காஜியின் அறிவிப்பின் படியும் தென்மாவட்டங்கள், கடற்கரைப் பகுதியினர் இலங்கைப் பிறையைப் கணக்கில் கொண்டும் நோன்பு நோற்கவும் பெருநாள் கொண்டாடவும் ஆரம்பித்து விடுவார்கள்.

அப்போதைய தஞ்சை மாவட்ட பகுதிகள் (தற்போதைய நாகை மாவட்டம் பகுதிகள்) இலங்கைப் பிறையை அல்லது இலங்கை வானொலியை அடிப்படையாகக் கொண்டு நோன்பு மற்றும் பெருநாளை முடிவு செய்து விடுவார்கள். இலங்கையில் யாழ்ப்பாணம், வவுன்யா, கொழும்பு, கண்டி என்று அங்குள்ள ஆலிம்கள் அறிவிக்கும் அறிவிப்பை மய்யமாக வைத்து நோன்பும் பெருநாள்கள் அறிவிக்கப்பட்டு விடும். இன்றைக்கு துருவி துருவி விசாரிப்பது போன்று இலங்கையில் யாரும் துருவி விசாரிப்பதற்கு தொலைபேசியைத் தவிர தொலைத்தொடர்பு சாதனங்களில் அன்றைக்கு எந்தப் புரட்சியும் கிடையாது.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இலங்கை பிறையைத் தான் தமிழக முஸ்லிம்கள் ஏற்பார்கள். தமிழகத்தில் கண்ட பிறையை ஏற்று இலங்கை முஸ்லிம்கள் நோன்பு நோற்றதையும் பெருநாள் கொண்டாடியதையும் நமக்குத் தெரிந்த அளவுக்கு நினைவில் இல்லை.

இலங்கைப் பிறையை ஏற்று தமிழக முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக நோன்பும் நோற்றிருக்கின்றார்கள். பெருநாளும் கொண்டாடியிருக்கின்றார்கள். இரண்டு நோன்பு பெருநாட்கள் தமிழக வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.

அன்றைய காலத்தில் தவ்ஹீது கொள்கையாளர்களுக்கு என்று தனி ஜமாஅத் ஏதுமில்லை. தனி பள்ளிவாசல்கள் இல்லை. அதனால் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் அறிவிப்பின்படியே நோன்பு நோற்றனர். பெருநாளைக் கொண்டாடினர்.

இந்தக் கட்டத்தில் தான் தவ்ஹீது கொள்கை தமிழ்நாடு மக்களிடம் வேர்பிடிக்கின்றது. பின்னர் விழுது விட்டு ஒரு ஜமாஅத்தாக ஆலமரமாக உருவெடுத்து வளர்ந்து நின்றது. ஆயிரக்கணக்கான அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் உருவாயின. அப்போது தான் தவ்ஹீது ஜமாஅத்தின் கவனம் பிறையின் பக்கம் திரும்பியது. அவ்வாறு அது கவனத்தைத் திருப்பிய போது சவூதிப் பிறையை மய்யமாக வைத்து சர்வதேசப் பிறை, கணிப்புப் பிறை, உள்ளூர் பிறை என்று பல பிறைகள் வரிசையாகக் கிளம்பின. இதற்காக தவ்ஹீது ஜமாஅத் பல ஆய்வுக் கூட்டங்களை சென்னை, திருச்சி என்று முக்கிய நகரங்களில் பெரும் பொருட்செலவில் நடத்தியிருக்கின்றது. அதன் இறுதி வடிவம் பிறை ஓர் ஆய்வு என்று நூல் வடிவில் வெளியானது.

அதன் பின் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த ஆய்வின் முடிவின் படி, பின்வரும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூரில் பிறையைப் பார்த்து, பிறை கிடைக்காவிட்டால் முந்திய மாதத்தை 30 முழுமையாக்கி நோன்பு நோற்போம்; பெருநாள் கொண்டாடுவோம் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அதாவது இறைத்தூதரின் வஹீ எனும் செய்தியை நோக்கி சமுதாயத்தைத் திருப்பியிருக்கின்றோம்.

இப்போது நமது நிலைபாட்டிற்குக் காரணமான அந்த ஹதீஸைப் பார்ப்போம்:

“உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். “முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “போதாது! நபி (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம் எண்: 1819

இந்த ஹதீஸ் அடிப்படையில் உள்ளூர் பிறையை செயல்படுத்தத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நோன்பு மற்றும் பெருநாள் வேறுபட்டது. பின்னர் மாவட்டத்தின் எல்லையை மாநில அளவிற்கு நீண்ட ஆய்விற்குப் பிறகு விரிவாக்கம் செய்தோம்.

இதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் நோன்பு பிறை, பெருநாள் பிறை, ஹஜ்பெருநாள் பிறை ஆகிய விஷயத்தில் ஒரு குடையின் கீழ் வந்தது.

கடந்த காலத்தில், நெல்லை மாவட்டத்தில் நெல்லை ஜங்ஷனுக்கு ஒரு நோன்புப் பெருநாள், அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேலப்பாளையத்திற்கு இன்னொரு பெருநாள் என்று கொண்டாடியிருக்கின்றார்கள். தவ்ஹீது ஜமாஅத்தின் பிறை எல்லை விரிவாக்கத்திற்குப் பின்னால் இந்த அவலம் நீங்கியது. சொல்லப்போனால், சுன்னத் வல் ஜமாஅத் தமிழ்நாடு முழுவதும் ஒரு பிறை என்ற குடையின் கீழ் வந்தததற்கு அடிப்படைக் காரணமே தவ்ஹீத் ஜமாஅத் பிறை நிலைப்பாடுதான்.

தலைமை காஜியின் எல்லை

தலை நகரம் மட்டும் தான்

கடந்த காலத்தில் தமிழக அரசின் தலைமை காஜியின் எல்லை வானளாவிய எல்லை கிடையாது. அதிகபட்சம் சென்னை, அதன் சுற்றுவட்டாரம் போன்ற பகுதிகள் தான். மீதி எல்லையை ஆக்கிரமிப்பு செய்தது ஏற்கனவே நாம் கூறியதுபோன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் தான்!

இப்போது இங்கு இயல்பாக எழும் கேள்வி இதுதான். தவ்ஹீது ஜமாஅத்தும், சுன்னத் வல் ஜமாஅத்தும் உள்ளூர் பிறை என்ற ஒரு மையப்புள்ளியில் சந்திக்கும் போது ஒரே நோன்பு பெருநாள் ஏன் இரு பெருநாட்களாக ஆகின்றன? தவ்ஹீது ஜமாஅத்திற்கு ஒரு பெருநாள், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு இன்னொரு பெருநாள் ஏன் இரண்டு பெருநாட்கள் ஏற்படுகின்றன? ஏன் பெருநாளைப் பிரித்து தவ்ஹீது ஜமாஅத் கொண்டாட வேண்டும்?  என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

குழப்பத்திற்குக் காரணம் தலைமை காஜி தான்

ஆரம்பக் கட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? ரமலான் மாதத் துவக்கத்தில் ஊர் கூடி பிறை பார்ப்பார்கள். ரமளான் முடிவில் ஊர் கூடி பெருநாள் பிறை பார்ப்பார்கள். அதன் பின்னர் அஸ்தமன அடி வானை எந்தப் புண்ணியவானும் கண்ணியவானும் ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது. பிறை பார்க்கும் படலமும் பழக்கமும் அறவே கிடையாது. அடுத்து பிறை பார்ப்பது அடுத்த ரமலான் தான். இதனால் தலைமை காஜி வைத்தது தான் வரிசை என்ற நிலையில் இருந்தது.

ஆனால் தலைமை காஜி மார்க்க அடிப்படையில்லாமல் மனோ இச்சை அடிப்படையில் பிறை விஷயத்தில் விளையாடுகின்றார் என்ற ஐயம் ஏற்பட்டு, தவ்ஹீது ஜமாஅத் மாதாமாதம் பிறையைப் பார்த்து அறிக்கை வெளியிட்டது. முகநூல் சகாப்தமும் சாம்ராஜ்யம் மலர்ந்த பிறகு அதில் ஒவ்வொரு மாதமும் பதிவு செய்தது. சங்கைமிகு (?) உலமா சபையும் இந்த நடைமுறையை இப்போது தான் கடைப்பிடித்து வருகின்றது. இப்படி கவனமாக தவ்ஹீது ஜமாஅத் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிறையில் பிரச்சனை செய்வது, குழப்பம் விளைவிக்கும் வேலையைச் செய்வது வேறு யாருமல்ல! டவுண் காஜி தான் வேலியே பயிரை மேயும் வேலையாகச் செய்கின்றார். நபி (ஸல்) அவர்களது உத்தரவுக்கு மாற்றமாக, அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று தவ்ஹீது ஜமாஅத் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைக்கின்றது. மேம்போக்காக அல்ல! பத்தாண்டுகளுகளுக்கு மேலாக அவருடையை பிறை அறிவிப்புகளைத் தொடர்ந்து பார்த்த பின்னர் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் பிறை விஷயத்தில் மனோ இச்சைப்படி விளையாடிக் கொண்டிருக்கின்றார். அப்படி மார்க்கத்திற்கு முரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டவுண் காஜிக்கு மாநில ஜமாஅத்துல் உலமா சபை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவர் பிறை விஷயத்தில் எப்படி மார்க்கத்திற்கு முரணாக நடந்தார் என்பதற்கு அண்மைக் காலத்தில் நடந்த 3 நிகழ்வுகளை இப்போது சமுதாய மக்களின் பார்வைக்குத் தருகின்றோம்.

  1. குமரிப் பிறை

1) 22.03.2023 புதன்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஒரு பள்ளிவாசல் கமிட்டித் தலைவர், செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய நால்வர் தங்கள் பகுதியான குளச்சல் கடற்கரையில் பிறை பார்த்ததாகத் தகவல் தெரிவிக்கின்றார்கள். அதற்கான இணைப்பு இதோ:

<https://www.facebook.com/share/p/4iumqiTi1YuhuY71/?mibextid=oFDknk>

பொதுவாகக் குமரி மாவட்டம் என்றால் தலைமை காஜிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குமட்டலும் வாந்தியும் வந்து விடும். பார்த்தது சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றாலும் அதை ஏற்க மறுத்து தலைமை காஜி 24.03.2023 வெள்ளியன்று நோன்பு என்று அறிவித்தார்.

  1. கோவைப் பிறை

“பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாகத் தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 10.04.2024 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் ஆரம்பமாகின்றது என்பதையும் 11.04.2024 வியாழக் கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்”

இது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலத் தலைமை 09.04.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பாகும். இதன் பிறகு கோவை சகோதரர் அஸ்கர் அவர்கள் பிறை பார்த்த தகவல் கிடைத்தது.

பார்க்க:

லீttஜீs://ஷ்ஷ்ஷ்.யீணீநீமீதீஷீஷீளீ.நீஷீனீ/shttps://www.facebook.com/share/v/bgAW3LcVSLAnDJFE/?mibextid=w8EBqM>லீணீக்ஷீமீ/ஸ்/தீரீகிகீ3லிநீக்ஷிஷிலிகிஸீஞியிதிணி/?னீவீதீமீஜ்tவீபீ=ஷ்8ணிஙிஹீவி>

அதுபோல் குமரியிலிருந்தும் பிறை பார்த்த தகவல் கிடைத்தது. இதையொட்டி தவ்ஹீது ஜமாஅத் தனது அறிவிப்பை திரும்பப் பெற்று புதன்கிழமை என்று மாற்றி அறிவித்தது. ஆனால் தலைமை காஜியோ, குமரிப் பிறையை முன்பு மறுத்தது போலவே கோவைப் பிறையையும் ஏற்க மறுத்து விட்டார்.

  1. ஷஃபான் பிறை அறிவிப்பு 2025

தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 30.01.2025 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாகத் தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து வரும் 31.01.2025 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் ஷஃபான் பிறை அறிவிப்பு.

தலைமையின் காஜியின் பிறை அறிவிப்பு இதோ:

2023ல் சுன்னத் வல்ஜமாஅத்தினரே கண்ணால் கண்ட குமரிப் பிறையையும், 2024 கோவையில் தவ்ஹீது ஜமாஅத்தைச் சாராத அஸ்கர் அவர்கள் பார்த்து அறிவித்த பிறையையும் டவுண் காஜி ஏற்க மறுத்து விட்டார்.

ஆனால் தற்போது 2025ல் கடந்த ரஜப் மாதத்தில் 29ஆம் தேதி ஆந்திரா மாநிலம் கடப்பா, அதோனிக்கு ஒரே தாவாகத் தாவியிருக்கின்றார். இதிலிருந்து இவருக்கு மார்க்கம் அல்ல அளவுகோல்; மார்க்கம் அல்ல ஆதாரம்; இவருக்கு அளவுகோல், ஆதாரம் எல்லாம் அரசாங்கமும் சிவகாசி காலண்டரும் தான்! மொத்தத்தில், மனோ இச்சை தான் மார்க்கம் என்பது உறுதியாகிவிட்டது. மாநில ஜமாஅத்துல் உலமாவும் டவுண் காஜியின் இந்த சித்து விளையாட்டுகளுக்குத் துணை போவதுதான் வேதனை.

கடந்த ஆண்டு கோவையிலும் குமரியிலும் பிறை பார்த்த தகவல் வந்தபோது, யார் கண்ணுக்கும் தெரியாமல் இவர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? 7 மணிக்கு எப்படித் தெரிந்தது? 8 மணிக்கு ஏன் தகவல் சொன்னார்கள்? என்றெல்லாம் எழுபத்தெட்டு கேள்வி கேட்டவர்கள், இன்று ஆந்திரா மாநிலம் கடப்பாவுக்கும், அதோனிக்கும் சென்று எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. குறைந்தபட்சம் அது உண்மைதானா என்று உறுதிப்படுத்தியதாகக் கூட எந்த அறிவிப்பும் இல்லை. இதிலிருந்து இவர்கள் பிறை விஷயத்தில் மார்க்கத்தைப் பின்பற்றவில்லை, மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால் தவ்ஹீது ஜமாஅத், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை அடிப்படையில் ரமலானின் தலைப்பிறை, ஷவ்வால், துல்ஹஜ் மொத்தத்தில் அத்தனையிலும் வஹீயைப் பின்பற்றி செயல்படுகின்றது. மக்களிடம் பிறையிலும் இறைச்செய்தியைப் பின்பற்ற வேண்டும் என்ற மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் கொண்டு வந்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்

சங்கைமிகு ரமளானில் ஸஹர் பாங்கு அமலாக்கம்

தவ்ஹீது ஜமாஅத் புனித ரமளான் மாதத்தில் வஹீயின் வெளிச்சத்தின் படி அமல்படுத்திய வணக்கங்களில் ஒன்று ஸஹர் பாங்காகும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.

நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து வருகின்றனர். இது ஒட்டுமொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ்செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.

பிற மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இது காரணமாக அமைந்து விடும்.

பல ஊர்களில் ஃபகீர்கள் தஃப் அடித்துக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டு வருவார்கள்.

சில ஊர்களில் சஹரில் எழுப்பி விடுவதற்காக நஹரா அடிப்பார்கள். இது இறைத்தூதர் காட்டி தராத ஒரு பழக்கமாகும். இன்னும் சொல்லப் போனால் பிறமதக் கலாச்சாரமாகும்

இப்படிப்பட்ட சூழலில் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் முதன் முதலில் ஸஹர் பாங்கை அமல்படுத்தியது. காரணம் இது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமல்படுத்திய நடைமுறையாகும். இது தொடர்பாக வருகின்ற ஹதீஸ்கள் வருமாறு:

பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி  620.

நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ரலி

நூல்:புகாரி 7247

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி) அவர்கள். (மற்றொருவர்) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று சொன்னார்கள்.

அவர் அறிவிப்புச் செய்துவிட்டு இறங்குவார்; இவர் அறிவிப்புச் செய்வதற்காக ஏறுவார். இதைத் தவிர இருவரு(டைய அறிவிப்பு நேரங்களு)க்கிடையே (பெரிய இடைவெளி) ஏதும் இருக்காது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1993

மேற்கண்ட இந்த ஹதீஸ்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் எவரும் அமல்படுத்த முன்வரவில்லை. அதே வேளையில் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவோரிடமும் இந்த ஹதீஸ் அமலாகவில்லை.

இந்த நபிவழியை நாம் அமல்படுத்திய போது அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. அதையும் அது தொடர்பாக நமது ஜமாஅத் அளித்த விளக்கத்தையும் அப்போதைய நமது மாத இதழ்களில் வந்த ஆக்கத்தை இங்கே மறுபதிவு செய்கின்றோம்.

குர்ஆன் ஹதீசைச் சரியாக பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் என்ற இயக்கத்தினர் ஸஹருக்கு பாங்கு சொல்லும் நபிவழியைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி ஹதீஸை நிராகரித்துள்ளனர்.

இது குறித்து அவர்களது இதழில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்களது உளறலும், அதற்கு நமது விளக்கத்தையும் இங்கே காண்போம்.

ஸஹர் பாங்கு குழப்பமா?

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.

திருக்குர்ஆன் 33:36

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இந்த ஹதீஸை நிராகரிக்க ஜாக் இயக்கம் சொல்லும் காரணம் இதுதான்:

தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்

என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகத் தான் ஸஹர் பாங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரை ஒரு காரணத்துக்காக அது ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர் வணக்கமாக ஆக்கப்பட்டால் அதை மாற்ற முடியாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கை எடுத்துக் கொள்வோம்.

தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம் என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது. ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும் என்றும் ஜாக் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில், ‘ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும்’ என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி 1921)

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம் என்று கூறாமல் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை எப்படியாவது நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இதுபோன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராஃபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இவர்கள் ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள். இதுதான் தெளிவான ஹதீஸ் நிராகரிப்பு. இவர்கள் தான் உண்மையிலேயே ஹதீஸ் மறுப்பாளர்கள்.

இது நாம் அன்று அளித்த விளக்கமாகும். அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும். இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாது மாற்று விளக்கம் கொடுக்காமல் தவ்ஹீது ஜமாஅத் புனிதமிகு ரமளான் மாதத்தில் ஸஹர் பாங்கு என்ற வழிமுறையை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

லைலத்துல் கத்ரைத் தேடி

பிந்திய 10 இரவுகளிலும் வணங்கும் மக்கள்

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் உதயமான பிறகு ரமளான் கண்ட மாற்றங்களில் முக்கியமான மாற்றமும் மறுமலர்ச்சியும் ரமளான் மாதத்தின் பிந்திய 10 இரவுகள் உயிர் பெற்றதாகும். சொர்க்கம், நரகம் பற்றிய நம்பிக்கை பெருக்கெடுத்ததாகும். அதன் வெளிப்பாடாய் ரமளான் மாதத்தின் பிந்திய 10 இரவுகளில் உள்ளம் பொங்க, உவகை பொங்க ஆண்களும் பெண்களும் கொளுத்தும் வெயில் காலத்து கோடை இரவுகளிலும் கொட்டும் மழை, பனிக் காலத்து இரவுகளிலும் அதிலும் குறிப்பாக நள்ளிரவு நடுநிசி நேரத்தில் 12 மணிக்குக் கூட படை, படையாய் கிளம்பி வரும் சமுதாய மாற்றம், சமூகப் புரட்சி ஏற்பட்டிருக்கின்றது. சரித்திர மாற்றம் உருவாகியிருக்கின்றது.

அதற்கு முன் சமுதாயத்தின் நிலை என்ன? ரமளான் 27வது இரவில் மட்டும் பெருங்கூட்டம் பள்ளியில் புத்தாடை உடுத்தி வெள்ளமாய் கூடுவார்கள். அது போலவே பள்ளிவாசல்களில் வண்ண அலங்கார விளக்குகளை உடுத்தி மினாராக்களில் சீரியல் லைட்டுகள் சோடனையுடன் காட்சியளித்து அவை 27ஆம் இரவு தான் லைலத்துல் கத்ர் என்று சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். அன்று இரவு அதுவும் அதிகபட்சம் ஒரு 12 மணி வரை மக்கள் திக்ர், ராத்திபுகள், தஸ்பீஹ் தொழுகைகள், சிறப்பு பயான்கள் என்று பள்ளிவாசல்களில் வணக்கங்கள் களைக் கட்டி நிற்கும். வணக்கத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ராவாக் கஞ்சிகள், சேமியா பாயாசங்கள், புரோட்டாக் கறி, பிரியாணிப் பொட்டலங்கள் என்று தபரூக்குகள், நேர்ச்சைகள் பகிரப்படும். கூடவே எனக்குக் கிடைக்கவில்லை உனக்குக் கிடைக்கவில்லை என்று சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு குர்ஆன் இறங்கிய இரவில் குர்ஆன் கூறும் சகோதரத்தைப் பறைசாற்றிக் கொள்வார்கள். இது சமுதாயம் கண்ட லைலத்துல் கத்ராகும். இதற்கு அசத்தலான ஆதாரம் என்ன?

3 லைலத்துல் கத்ர்கள் – 27 எழுத்துகள்

இ(வ்வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.

அல்குர்ஆன் அத்தியாயம் 97

இந்த அத்தியாயத்தில் லைலத்துல் கத்ர் என்று வார்த்தை 3 தடவை இடம் பெறுகின்றது. லைலத்துல் கத்ர் என்ற அந்த வார்த்தையில் 9 எழுத்துக்கள் இடம் பெறுகின்றன. ஆக மொத்தம் 3×9=27 எழுத்துக்கள். அதனால் லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் தான் அடங்கியிருக்கின்றது என்ற அதிஅற்புதமான எண் கணித அறிவியல் வாதத்தை வைத்து அன்று தான் லைலத்துல் கத்ர் என்று ஆலிம் வர்க்கங்கள் வாதிடுகின்றன என்று சொன்னால் அறிவு ஞானத்தை, அதாவது சூன்யத்தை என்னவென்று சொல்வது? இவர்களின் அசத்தல் ஆதாரத்தை என்னவென்று மெச்சுவது?

ஆனால் திருக்குர்ஆனின் நேரடி விளக்கவுரையாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவிக்கும் ஆதாரப்பூர்வமான அடுக்கடுக்கான ஹதீஸ்கள் இதோ:

ரமளானின் பிந்திய 10 இரவுகளில்…

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: “ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (2020)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) ‘லைலத்துல் கத்ர்’ இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்க வைக்கப்பட்டேன். ஆகவே, (ரமளானின்) இறுதிப் பத்து இரவு களில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (2167)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) ‘லைலத்துல் கத்ர்’ இரவைத் தேடிக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (2166)

பிந்திய 10ல் ஒற்றப்படை இரவுகளில்…

இரமலானில் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் தேடுமாறு வந்துள்ள நபிமொழிகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது என்றார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது) என்று கூறினார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டுவிட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தா செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காண வில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருக்கக் கண்டேன்.

 அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி (813)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி),

நூல்: புகாரி (2036)

இறுதி ஏழு நாட்களில்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (2164)

இவை தவிர 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளைக் குறிப்பிட்டு இன்ன இரவுதான் லைலத்துல் கத்ர் என்று தனித்தனியாகவும் சேர்த்தும் பல்வேறு செய்திகள் உள்ளன. அதாவது 21வது இரவுதான் என்றோ, 23வது இரவுதான் என்றோ அல்லது 23, 27 ஆகிய இரவுகளில் தேடுங்கள் என்றோ குறிப்பிட்டு ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளன. அவற்றில் ஒரு சில நபித்தோழர்களின் சுய ஆய்வின் அடிப்படையில் இன்ன இரவுதான் என்று குறிப்பிட்டுக் கூறப்படுவதாக இடம்பெற்றுள்ளன.

பிந்திய 10 இரவுகளில் அதிலும் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவு அடங்கியிருக்கின்றது என்ற செய்திதான் மேற்கண்ட அத்தனை செய்திகளுக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அதாவது இந்த ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அத்தனை ஹதீஸ்களையும் செயல்படுத்திய நன்மை கிடைக்கும்.

எனவே 21, 23, 25, 27, 29 ஆகிய ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவு இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாகச் சொன்ன பிறகு 27ஆம் இரவு என்று வரையறுப்பது என்ன வகையில் நியாயமாகும்? ஆலிம்கள் திட்டமிட்டு தங்களது மனோ இச்சைக்கு மக்களை வழிகெடுப்பதை தவிர வேறெந்த நியாயமும் இல்லை

லைலத்துல் கத்ரின் சிறப்புகள், நன்மைகள்

தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக! பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம். அதில்தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது நமது ஆணைப்படியே (பிரிக்கப்படுகிறது.) நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். (இது) உமது இறைவனின் அருளாகும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 44:2-6)

இது அல்லாஹ் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை விவரித்துச் சொல்கின்றான். இதில் கொடுமை என்னவென்றால், லைலத்துல் கத்ர் இரவுக்குரிய இந்தச் சிறப்பை மடைமாற்றம் செய்து ஷஃபான் 15ல் பராஅத் இரவு என்ற பெயரில் ஒன்றை உருவாக்கி அந்த இரவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (35)

(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (2024)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிந்திய 10 இரவுகள் நின்று தொழுவதற்கு ஆர்வமூட்டியதுடன் தானும் 10 இரவுகளை உயிராக்கி, தன்னுடைய குடும்பத்தையும் இரவில் நின்று தொழுவதற்கு விழிப்பூட்டியிருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

லைலத்துல் கத்ரை அடைய இஃதிகாஃப்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா பின் உமர் ரலி

நூல்: புகாரி 2025

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தது எதற்கு? 27ல் மட்டும் லைலத்துல் கத்ர் இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் தேவையே இல்லை. ஆனால் இந்த அதிபுத்திசாலி ஆலிம்கள் 27ல் மட்டும் நின்று தொழுவதை வலியுறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் மறுமை நன்மையை மக்கள் அடைய விடாத அளவுக்கு குறுக்கே வந்து நிற்கின்றார்கள்.

இவ்வளவு சிறப்புமிகு இரவில் நின்று தொழும் வணக்கத்தை பிந்திய 10 இரவுகளில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் செய்வதை விட்டும் தடுக்கும் வேலைகளில் இந்த ஆலிம்கள் மும்முரமாக முனைப்பாக முண்டாசு கட்டிக் கொண்டு ஈடுபடுகின்றார்கள். இது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற கொடிய பாவத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும?

அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அறிவிக்கப்பட்ட லைலத்துல் கத்ர் எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது என்று சொன்ன பிறகு அந்த 27ஆம் இரவில் மட்டும் அதிலும் முன்னேரத்தில் ராத்திபு என்று கூப்பாடுகளை போடச் செய்து விட்டு சிறப்புமிகு பின்னேரத்தில் எந்த வணக்கத்தையும் செய்ய முடியாதுவாறு மக்களை இந்த ஆலிம்கள் ஆக்கி விடுகின்றார்கள். இவர்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் கொஞ்சம் கூட இல்லாதவர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் பிந்திய 10 இரவுகளிலும் தமிழக முழுவதில் மக்களைக் கொண்டு வந்து பள்ளிவாசல்களில் இபாதத்தில், வணக்க வழிபாடுகளில் ஈடுபட வைத்து இந்த தவ்ஹீது ஜமாஅத் ஆகும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இஃதிகாஃப் இருக்கும் இளைஞர் படையினர்

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் இஃதிகாஃப் என்பது பொதுவுடைமையாக இருந்தது. ஆனால் இன்று இளைஞர்கள் தேனடையை மொய்க்கும் ஈக்களாக இஃதிகாஃப் இருக்கின்றார்கள். வயதானவர்களை வீட்டிற்குப் பாரம் என்று பெண்களே வழியனுப்பி வைப்பார்கள். ஆனால் இளைஞர்களின் நிலை அப்படியல்ல; அவர்கள் இல்லறத்தை துறந்து விட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடி இஃதிகாஃப் இருக்க வருகின்றார்கள். இது ஹதீஸ் அமல்படுத்தும் எழுச்சியின் வெளிப்பாடாகும் அல்ஹம்துலில்லாஹ்

லைலத்துல் கத்ரின் சிறப்புமிகு துஆ

“அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ருடன் நான் ஒன்றுபட்டால் அதில் நான் என்ன கூற வேண்டும் எனத் தாங்கள் எனக்குக் கூறுங்கள்” என்று நான் (நபியவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள்

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன். துஹிப்புல் அஃப்வ. ஃப’ஃபு அன்னீ

என்று கூறுவாயாக! என்றார்கள்.

பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மாபெரும் மன்னிப்பாளன். மன்னிப்பதையே நீ விரும்புகிறாய். எனவே, என்னை மன்னித்தருள்வாயாக!

நூல்: நஸாயீ அல்குப்ரா (10713)

மார்க்கத்தில் இல்லாத, தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத எத்தனையோ திக்ருகளையும், துஆக்களையும் லைலத்துல் கத்ரில் ஆலிம்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரத்தினச் சுருக்கமாக சொல்லித் தந்தது இந்த துஆ மட்டும் தான். இதையும் மக்கள் நபிவழியில் பிந்திய 10 இரவுகளில் செய்து லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரு ஸதகாவில் ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இதுவரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

திடலுக்கு வந்த பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

“மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாசலிலேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆ செய்வது போன்ற தொழுகையைத் தவிரவுள்ள ஏனைய நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.

ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள் அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

இவ்வாறு பிறை பார்ப்பதிலிருந்து பெருநாள் வரைக்கும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் இறைச் செய்தி ஒளியில், இறைத்தூதர் வழியில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் வஹீயின் அடிப்படையில் மக்களிடம் தூய மார்க்கத்தை இந்த ஜமாஅத் கொண்டு சென்றிருக்கின்றது. இது வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற தவ்ஹீது ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மைல் கல்லே தவிர இது எல்லையல்ல, இறுதியல்ல! இன்னும் அந்தப் பயணம் தொடரும் இன்ஷா அல்லாஹ்!