மகத்துவம் நிறைந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதை விட மனிதர்களுக்கு மிகப்பெரும் அருட்கொடை உலகத்தில் வேறெதுவும் இல்லை. உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் இறைச்செய்திகளைக் கடைப்பிடித்து வாழும் போது, அத்தகயோரின் வாழ்க்கை உன்னதமான வாழ்க்கையாக மாற்றம் பெறுகின்றது!
உலக மாந்தர்களுக்கு தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் இறைச்செய்திகளின் அடிப்படையில் மக்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். நபிகளாரின் வழிமுறைகள் தான் காலங்களால் அழிக்க முடியாத நிரந்தரமாக இருக்கக் கூடிய சுன்னாக்கள்.
இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் உலக முஸ்லிம்களைப் பார்த்து கட்டளை வாக்கியத்தில் பேசுகின்றான்.
தூதர் உங்களுக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.
அல்குர்ஆன் 59:7
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் ஆணையிட்டால் அதை உங்களால் முடிந்தளவிற்குச் செய்யுங்கள்.
ஆதாரம்: புகாரி 7288, முஸ்லிம் 2599
நபிகளார் சொன்னதை மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகி விட வேண்டும். இதுவே உலக மாந்தர்களுக்கு நபிகளாரின் கட்டளை! இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கும் முதல் கருவி திருக்குர்ஆன் ஆகும். இரண்டாவது கருவி நபிகளாரின் வழிமுறையாகத் திகழும் சுன்னாக்கள்.
உலக முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மனம்போன போக்கில் கொள்கைக் கோட்பாடுகளை வகுத்து வைத்துக் கொண்டு, அப்பாவி மக்களை வழிகெட்ட பாதைக்கு அழைத்து செல்வதைப் பார்க்கின்றோம்.
நம்முடைய மன விருப்பங்கள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், இறைக்கட்டளைகளும், நபிகளாரின் வார்த்தையும் வேறொன்றாக இருக்கும். ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் நம்முடைய மன விருப்பங்களை விட, நபிகளாரின் வார்த்தையே மேலானதாக உச்சத்தில் அமைந்திருக்க வேண்டும். நம்முடைய மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட, நபியின் வார்த்தைகளைப் பின்பற்றுபவர் தான் உண்மையான முஃமினாக மாற முடியும்.
சில நேரங்களில் நம்முடைய விருப்பமும் – ஆசைகளும் ஒன்றாக இருக்கலாம். நாம் பயணிக்கின்ற பாதை ஒன்றாக இருக்கலாம். ஆனால், நபிகளாரின் பாதையும், வழியும் வேறொன்றாக அமைந்திருக்கும். நம்முடைய பாதைகளை விட, நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்த பாதைக்கே முன்னுரிமையும் – முக்கியத்துவமும் வழங்கப்படல் வேண்டும்.
ஒரு முஸ்லிம் அவனது வாழ்வின் எந்த எல்லைகளுக்கு சென்றாலும், எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எனக்கு இந்த இடத்தில், இந்தச் சூழலில் வாழ்வதற்கு நபிகளாரின் வழிகாட்டுதல்கள் இல்லை என்று எந்த ஒரு மனிதனாலும் சொல்ல முடியாத அளவிற்கு வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக வழிகாட்டி இருக்கின்றார்கள்.
இறைச்செய்திகளின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய ஆழமான உபதேசங்கள் நம்முடைய நேர்வழிக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு ஒரு கோட்டை வரைந்தார்கள். அதன் வலது புறம் ஒரு கோட்டையும் இடது புறம் ஒரு கோட்டையும் வரைந்தார்கள். பிறகு “இதுதான் அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள். பின்னர் இன்னும் பல கோடுகளை வரைந்து “இவை (வழிகேடான) பலவழிகளாகும். இந்த வழிகள் அனைத்திலும் ஷைத்தான் இருந்து கொண்டு அவற்றை நோக்கி அழைத்துக் கொண்டிருக்கின்றான்.
பிறகு “இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனைப் பின்பற்றுங்கள்! (வேறு) வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அது அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்” (அல்குர்ஆன் 6:153) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.
ஆதாரம்: முஸ்னத் பஸ்ஸார் 1546
முஸ்லிம்களின் வாழ்க்கையில் நாலாப் புறங்களிலிருந்தும் ஏராளமான குழப்பங்கள் தாறுமாறாக தலைவிரித்தாடக் கூடியதாக திகழும். அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும். பல்வேறு வகையான வழிகள் ஷைத்தான் அழைத்துக் கொண்டிருக்கும் வழிகேடான பாதைகளாகும் என்று கூறி எச்சரிக்கை செய்தார்கள்.
இறைச்செய்திகளை விட்டு வழிதவறச் செய்கின்ற பல்வேறு வகையான குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று இறைச்செய்திகளின் மூலமாக பாடம் பயின்ற நபித்தோழர்களின் அறிவுரைகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஹுதைஃபா (ரலி) அறிவித்தார்கள்:
இறைவேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள் (அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிகமாக முன்னுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். (அந்த நேர்பாதையை விடுத்து) வலப்பக்கமோ, இடப்பக்கமோ (திசை மாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழிதவறிச் சென்றுவிடுவீர்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 7282
இறைவேதத்தைக் கடைப்பிடிப்பதிலும், நபிவழியின் அடிப்படையில் நடப்பதிலும் மிக உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு நடக்கத் தவறினால், பல்வேறு விதமான பாதைகள் வாழ்க்கையை திசை திருப்பச் செய்து வழிகேட்டின் ஆழத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அற்புதமான அறிவுரைகள் இன்னும் உறுதியாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 7280
என்னுடைய சமுதாயத்தில் ஏற்க மறுத்தவர் நரகம் செல்வார் என்று கூறி எச்சரிக்கை செய்கின்றார்கள். அதாவது நபிகளாரின் பாதைக்கு மாற்றமாக நபியின் கொள்கைக்கு மாறு செய்தவர் நபியை ஏற்க மறுத்தவர் என்கிற மாபாதக நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 7277
இறைவேதத்தில் சொல்லப்பட்ட, இறைவனால் உருவாக்கப்பட்ட பாதைகள் மிகச் சிறந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டித் தந்த பாதைகள் மிகச் சிறந்தது. இவ்விரண்டு வெற்றிப் பாதைகள் அல்லாமல், இவ்விரண்டு பாதைகளுக்கும் மாற்றமாக உருவாக்கப்படுகின்ற எப்படிப்பட்ட பாதையாக இருந்தாலும் அவைகள் வழிகெட்ட பாதைகளாகும்.
மேலும் பல்வேறு விதமான செய்திகள் திருக்குர்ஆன் வழிதான், நபிவழி! திருக்குர்ஆன் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கையை நாம் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பறைசாற்றும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மனித குலத்திற்குக் கட்டளையிடுகின்றார்கள்.
நபிகளார் இறக்கும் தருவாயில் கூட, அங்கே குழுமி இருந்த மக்களின் மனநிலை என்னவென்றால், அல்லாஹ்வின் வேதம் கையில் இருக்கும் போது நமக்கு என்ன கவலை! நபி (ஸல்) அவர்களை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்! என்று சொல்லி திருக்குர்ஆன் வழியே! நபிவழி! நபிவழியே நம்வழி! என்ற உறுதிமிக்க கருத்தை சக மனிதர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்திருந்தார்கள்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்” என்று கூறிவிட்டு, “(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2334
அல்லாஹ்வின் வேதப்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரே, உண்மையில் இறைச் செய்தியை பலமாகப் பற்றிப் பிடித்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.
இறைச்செய்தியை இறுக்கப்பற்றிய நபித்தோழர்கள்:
இறைவனின் புறத்திலிருந்து அருளப்படும் இறைச்செய்திகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து, தங்களின் வாழ்க்கை முழுவதும் நபிகளாரின் தோழர்கள் இறைச் செய்திகளை மட்டுமே மிக இறுக்கமாக கவ்விப் பிடித்தார்கள்.
(நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
இது உமக்கும், உமது சமுதாயத்திற்கும் உரிய நல்லுரையாகும். நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 43:43, 44
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு பற்றிப் பிடிக்கின்ற போது மட்டுமே நீங்கள் நேரான பாதையில் இருக்கின்றீர்கள். இதுதான் உங்களுக்கும் உங்கள் சமுதாய மக்களுக்கான நல்லுரை என்று அல்லாஹ் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.
இறைவனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, இறைச்செய்தியை இறுகப்பற்றிய நபித்தோழர்களின் அழகிய வாழ்க்கை வழிநெடுகிலும் நம்முடைய வாழ்க்கையை மிக அழகாய் வழிநடத்துவதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது.
இறைச்செய்திக்கு செவி சாய்த்த அண்ணலாரின் தோழர் அபூபக்கர்(ரலி):
அபூபக்ர் (ரலி) அவர்களின் அன்பு மகளார் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது ஒரு கூட்டத்தார் அவதூறுகளை அள்ளி வீசிய போதும், அவதூறு சொன்னவர்களில் சிலருக்கு, தான் செய்து வந்த உதவியை இனிமேல் செய்யவே மாட்டேன் என்று சபதம் ஏற்ற பிறகு, இறைவனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொண்டார் உன்னதத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்கள்!
என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின்மீது ஆணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் பொருளும், வசதியும் உடையோர், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (தர்மங்களைக்) கொடுக்காமல் இருப்பதற்காகச் சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின்மீது ஆணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின்மீது ஆணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்த மாட்டேன்” என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 6679
என்னுடைய கௌரவத்தை விட, ஆத்திரத்தை விட, கோபத்தை விட இறைவனின் வார்த்தையே மேலானது என்பதை அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னுடைய செயல்பாடுகளின் மூலமாக மிகச் சிறப்பாக செய்து காட்டுகின்றார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்:
என் தந்தை (அபூபக்ர்) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர்(ரலி), ‘நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 4614
வீணுக்காகவும், விளையாட்டுக்காகவும் சத்தியத்தைக் கேலிப் பொருளாகப் பயன்படுத்துகின்ற அவல நிலையை இன்றைய கணிசனமான இஸ்லாமிய மக்களிடத்திலே பார்க்கின்றோம். ஆனால், அபூபக்கர் (ரலி) அவர்கள் இறைவனின் பெயரால் சத்தியம் செய்து விட்டால், தான் செய்த சத்தியத்தை எக்காரணம் கொண்டும் முறித்ததாக நிகழ்வுகள் இல்லை.
பிறகு, அல்லாஹ் பரிகாரத்திற்கான சலுகையை அளித்த பிறகு, அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுக் கொண்டு சிறந்ததை மட்டுமே நான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறி இறைச்செய்தியை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.
குரல்களை உயர்த்தாமல் இறைச்செய்திக்குக் கட்டுப்பட்ட நபித்தோழர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையில், ஒரு சமயம் உமர் (ரலி) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரின் குரல்களின் சப்தங்களும் உயர ஆரம்பிக்கின்றது. பிறகு, இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்ட இறைச்செய்திகளை கேட்டதற்கு பிறகு, வாழ்நாள் முழுவதும் இருவரும் பணிந்து விட்டதைப் பார்க்கின்றோம். நபிக்கு முன்னால் உயர்ந்த குரல்கள் இறைச்செய்தியை கேட்டு வாழ்நாள் முழுவதும் மென்மையாய் பணிந்து நின்றது. அப்படிபட்ட அற்புதமான கட்டுப்படுதலை கற்றுத் தந்தது இறைவனின் வார்த்தைகள்!
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அறிவித்தார்
நல்லவர்களான அபூபக்ர்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாயுஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். ‘அந்த இனனொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது’ என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்: அப்போது அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘எனக்கு மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று’ என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!’ எனும் (திருக்குர்ஆன் 49:2வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இப்னு ஸுபைர் (ரலி) கூறினார்:
இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 4845
அறியாமல் செய்து விட்ட காரியங்கள் குறித்து, இறைவனின் வார்த்தைகள் மூலமாக அறிவுறுத்தப்படுகின்ற போது, உடனே தங்களின் செயல்பாடுகளை இறைதிருப்தியைப் பெறுவதற்காக மாற்றிக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் இறைச்செய்தியை இறுகப் பற்றிக் கொண்டார்கள் நபித்தோழர்கள்!
ஆசைகளை விட அல்லாஹ்வின் வார்த்தைகளே மேலானது:
மர்ஸத் பின் அபீ மர்ஸத் அவர்களுக்கு “அனாக்” என்கிற பெண் தோழியாக இருந்தார். “அனாக்” என்பவள் நடத்தை கெட்டவளாகவும் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணை நேசித்த மர்ஸத் அவர்கள் இறைச்செய்திக்கு கட்டுப்பட்டு தன்னுடைய ஆசைகளை வீசி எறிந்து, குழிதோண்டிப் புதைத்து விட்டதைப் பார்க்கின்றோம்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்குக்) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் “அனாக்” என்ற ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார்:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன்” என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது “விபச்சாரம் செய்தவன், ஒரு விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டான். (அதுபோல) விபச்சாரி, விபச்சாரம் செய்த ஒருவனையோ அல்லது இணைவைப்பவனையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டாள். இது, இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது” எனும் (24:3) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி, “அவளை மணமுடிக்காதே!” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அபூதாவுத் 1755,
திர்மிதீ 3101, நஸாயீ 3176
ஒரு நபித்தோழருக்குத் தான் நேசித்த பெண் நடத்தை கெட்டவளாக இருக்கிறார். என்றாலும் அவரது விருப்பத்தின் காரணமாக அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்வதற்கு விரும்புகின்றார். நபி (ஸல்) அவர்களிடம் அனுமதியும் கேட்கின்றார்.
அவர் கேள்வி கேட்ட மறுகணமே, விபச்சாரியையோ, இணைவைப்பவளையோ ஒரு இறைநம்பிக்கையாளர் திருமணம் முடிக்க தடுக்கப்பட்டுள்ளது என்கிற இறைவசனம் அருளப்படுகின்றது. இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்ட இறைச்செய்தியை மிக உறுதியாய் பற்றிப் பிடித்துக் கொண்ட அபூ மர்ஸத் (ரலி) அவர்கள் தன்னுடைய ஆசையை விட இறைவனின் வார்த்தைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இறைச்செய்தியை விரும்பிய காரணத்தினால், விரும்பிய பொருளை வாரிவழங்கிய நபித்தோழர்:
தியாகத் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் மிகவும் நேசித்த பொருளாதாரத்தை இறைவனின் திருப்திக்காகவும், இறைச்செய்தியை நேசித்த காரணத்தினாலும் ஒட்டு மொத்தமாக வாரி வழங்கிய அற்புத நிகழ்வுகளை வரலாற்றிலே பார்க்கின்றோம்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
அபூதல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்சை மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
‘உங்களுக்கு விருப்பமானவற்றிலிருந்து (அறவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது. நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிபவன்’ என்ற (திருக்குர்ஆன் 3:92) இறைவசனம் அருளப்பட்டதும், அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, ‘உங்களுக்கு விருப்பமானவற்றிலிருந்து (அறவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ‘இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் ‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்’ எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!’ எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டு விட்டார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1461
விரும்பியதைக் கொடுத்து, இறைவனின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிற அறிவுரை சொல்லப்பட்டவுடன் தன்னுடைய சொத்துக்களில் சிறந்ததும், மதிப்புமிக்கதுமான அழகிய தோட்டத்தை இறைவனுக்காக அள்ளிக் கொடுத்து இறைச்செய்தியை இறுகப் பற்றிக் கொள்கின்றார் அபூதல்ஹா (ரலி) அவர்கள்!
ஏழ்மை நிலையில் இருந்தவர்களை இறைச்செய்திகளுக்காக அரவணைத்தவர்கள்
செருப்பணியாத, ஆடைகள் கிழிந்த நிலையில் ஏழ்மையின் உச்சத்தில் இருந்த கூட்டத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபைக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரையும் இறைவனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, அந்தக் கூட்டத்தாரின் வறுமை நிலை போக்கி, அரவணைத்த நபித்தோழர்களின் மெய்சிலிர்க்க வைக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்” குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்” குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான்” எனும் (4:1வது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஒவ்வொருவரும் நாளை(ய மறுமை)க்காகத் தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை (எண்ணி)ப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு “ஸாஉ” கோதுமை, ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ” கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும், ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1848
பேரீச்சை பழத்தின் துண்டையேனும் தர்மம் செய்து நரக நெருப்பை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் என்று இறைச்செய்திகளின் மூலமாகப் பாடம் நடத்திய கணப்பொழுதிலே, அள்ளி அள்ளி தர்மம் செய்த அளப்பரிய நிகழ்வைப் பார்க்கின்றோம்.
பல நபித்தோழர்கள் இரு கைகள் நிரம்ப பொருட்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள். பொருட்களை எடுத்து வரும்போது கைகள் திணறிய நிலையில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து, இறைச்செய்திகளுக்குக் கட்டுப்பட்டு குவியல்கள் நிரம்ப அள்ளிப் போட்டார்கள் தியாகத் தோழர்கள்.
இறைச்செய்திக்காக பிடிவாதத்தை கைவிட்ட மஅகில் (ரலி):
மஅகில் (ரலி) அவர்களின் சகோதரியை ஒரு மனிதர் தலாக் கொடுத்து விடுகின்றார். இத்தா காலம் முடிகின்ற வரை மீட்டிக் கொள்ளாமல் பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் மஅகில் (ரலி) அவர்களின் சகோதரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினார். இந்த நிகழ்வை மஅகில் (ரலி) அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அறிவித்தார்
மஅகில் இப்னு யஸார்(ரலி) தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித்துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவரின் கணவர் மணவிலக்கு அளித்து விட்டார். பின்னர் அவரின் ‘இத்தா’ காலம் முடியும் வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியே விட்டு விட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில் (ரலி) பிடிவாதமாக மறுத்து விட்டார்கள்.
மேலும், ‘(என் சகோதரி ‘இத்தா’வில் இருந்த போது) அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அவருக்கு சக்தியிருந்தும் அப்படியே விட்டு விட்டு, (‘இத்தா’ முடிந்த) பிறகு (இப்போது வந்து) பெண் கேட்கிறாரே!’ என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார்.
அப்போதுதான் அல்லாஹ் ‘பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்து, அவர்கள் தமது தவணையை அடையும்போது, அப்பெண்கள் தம(து விருப்பத்து)க்குரிய கணவர்களை, அவர்கள் தமக்கிடையே பொருந்திக் கொண்டு நன்முறையில் (மறு) திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 2:232வது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மஅகில்(ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு முன் ஓதிக் காட்டினார்கள். எனவே, அவர் தம் பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 5330, 5331
மணவிலக்கு செய்து விட்டுப் பிறகு தன்னுடைய பழைய கணவருடன் மனம் விரும்பியும், முறையோடும் சேர்ந்து கொள்வோரைத் தடுக்க வேண்டாம் என்கிற இறைவசனத்தை மஅகில் (ரலி) அவர்களுக்கு முன்னால் நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.
மஅகில் (ரலி) அவர்கள் உடனே தன்னுடைய பிடிவாதத்தை விட, இறைச்செய்தியே மேலானது என்பதை உணர்ந்தவர்களாய் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்கும், இறைச்செய்திக்கும் கட்டுப்பட்டு சிறப்பிற்குரிய கீழ்படிதலை வெளிப்படுத்தினார்.
இறைச்செய்திக்குக் கட்டுப்பட்டு கீழாடையைக் கிழித்து மறைத்து கொண்ட நபித்தோழியர்கள்:
பெண்கள் தலைமுக்காடுகள் அணிந்து கொள்ள வேண்டும். முக்காட்டுத் துணிகளால் தங்களின் மேற்பகுதியை மறைத்துக் கொள்ள வேண்டும். என்கிற இறைக்கட்டளைக்கு உடனே கட்டுப்பட்ட நபித்தோழியர்களின் நிகழ்வுகள் மிகச் சிறந்த படிப்பினையாய் திகழ்கின்றது.
தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். (24:31)
தொடக்க கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணைபுரிவானாக! “அவர்கள் தமது தலை முக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும்!” எனும் (24:31) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழாடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.
ஆதாரம்: புகாரி 4758, அபூதாவுத் 3579
இன்றைய காலப் பெண்களில் நூற்றுக்கணக்கான வகைவகையான ஆடைகள் இருந்த போதும், கண்ணியத்தைப் பெற்றுத் தருகின்ற ஹிஜாப் ஆடைகளை அணிவதிலிருந்து ஒழுக்கமில்லா சில பெண்கள் விலகி நிற்பதைப் பார்க்கின்றோம்.
முக்காட்டுத் துணியை மேனியிலே போட்டு மறைத்துக் கொள் என்கிற இறைக்கட்டளை அருளப்பட்டவுடன் நபித்தோழியர்களில் பலர் ஒரே ஒரு ஆடை மட்டுமே அணிந்திருந்தாலும், தான் அணிந்திருந்த ஆடையின் கீழ்ப்பகுதியை கிழித்து இறைச்செய்தியை இறுகப் பற்றிக் கொண்டார்கள் தியாகத் தோழியர்கள்!
தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே இறைச்செய்திக்குக் கட்டுப்பட்டவர்கள்
இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்ட இறைச்செய்தியில், குறிப்பிட்ட காலங்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கித் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்த நிலை பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் நீடிக்கின்றது. பிறகு அல்லாஹ் கஅபத்துல்லாவை நோக்கித் தொழுங்கள் என்று கூறி கட்டளையை மாற்றி விடுகின்றான்.
மாற்றப்பட்ட சட்டத்தை அறியாதவர்கள் தொழுகையில் நிற்கின்ற நிலையிலேயே இறைச்செய்தியின் குரலுக்கு எந்த அளவிற்குக் கட்டுப்பட்டார்கள் என்பதை கீழ்க்கண்ட சம்பவம் மிகத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஅபாவை நோக்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், ‘நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஅபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்’ என்று கூறினார்.
உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்தபடியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திரும்பினார்கள். (தொழுகையில்) தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாயிருந்தோம். அப்போது, ‘உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்’ என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். என்று காணப்படுகிறது’ என பராவு அறிவித்தார்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 40
தொழும் திசை மாற்றப்பட்டு கஅபாவை நோக்கித் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்கிற இறைக்கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு தொழும் திசையை மாற்றிக் கொண்டார்கள்.
இந்த மாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்த தருணத்தில், நபியுடன் தொழுகையை நிறைவேற்றிய ஒரு நபித்தோழர் தொழுது முடித்து விட்டு, தன்னுடைய சமுதாய மக்களிடத்திலே அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நேரத்திலே வருகின்றார்.
மாற்றப்பட்ட சட்டத்தை அறியாத அம்மக்கள், பைத்துல் முகத்தஸ் திசையை நோக்கியே தொழுது கொண்டிருப்பதைக் காண்கின்றார். உடனே, அந்த நேரத்திலேயே “தொழும் திசை மாற்றப்பட்டு விட்டது” என்று உரத்த குரலிலே சப்தமிடுகின்றார். அந்தக் குரலை கேட்ட கணப்பொழுதிலே தொழும் திசையை தொழுது கொண்டிருக்கின்ற ஒரு கூட்டமே மாற்றிய மெய்சிலிர்க்க வைக்கின்ற நிகழ்வைப் பார்க்கின்றோம்!
இறைச்செய்தி வந்து விட்டது என்று கூறப்பட்டவுடன், எப்போது வந்தது? எந்த நேரத்தில் வந்தது? யாருக்கு வந்தது? திடீரென்று ஏன் வந்தது? தொழுது முடித்து பொறுமையாய் கேட்டு அறிந்து கொள்வோம். அடுத்த தொழுகையிலே மாற்றித் தொழுது கொள்வோம் என்கிற எந்தக் கேள்விக் கணைகளையும் முன்வைக்காமல் இறைச்செய்தியை இறுகப் பற்றிக் கொண்டார்கள் தியாகத் தோழர்கள்!
இறைச்செய்தியை நேசித்து வீரமரணம் அடைந்த உமைர் (ரலி):
வானம், பூமி பரப்பளவு கொண்ட சொர்க்கத்தை நோக்கி விரையுங்கள் என்று இறைக்கட்டளையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்திலே ஆஹா! ஆஹா! என்று கூறியவாறு வீரமரணம் அடைந்த தியாகியின் வரலாற்றைப் பார்க்கின்றோம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. (“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர” என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது” என்ற) தகவலைச் சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். “நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்” என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)” என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு “பத்ர்” வந்து சேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்” என்று கூறினார்கள்.
இணைவைப்பாளர்கள் நெருங்கி வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்”என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.
அதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும் வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகி விடுமே!” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்து விட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 3858
வானம், பூமி பரப்பளவு கொண்ட சொர்க்கத்தில் நுழைந்து, சொர்க்கவாசிகளில் ஒருவராகத் தானும் மாறுவதற்கு போர்க்களத்தில் முன்னேறிச் சென்று உயிரைக் கொடுத்து வீர்மரணம் அடைந்து உச்சகட்ட தியாக நிகழ்வை செய்து காட்டி, இறைச்செய்தியை இறுகப் பற்றிக் கொள்கின்றார் உமைர் (ரலி) அவர்கள்..!
நபித்தோழர்கள் இறைச் செய்தியை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட, இதுபோன்ற ஏராளமான, உள்ளங்களை உருக வைக்கும் சம்பவங்கள் வரலாறுகள் நெடுகிலும் பொன்னெழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ளது.
நபித்தோழர்கள் இறைச் செய்தியை மட்டும் எவ்வாறு பற்றிப் பிடித்துக் கொண்டு தங்களின் வாழ்நாள் முழுவதும் சிறப்பிற்குரிய முன்னுதாரமான வாழ்வை வாழ்ந்து காட்டினார்களோ, அத்தகைய சிறப்பிற்குரிய வாழ்வை படிப்பினையாய் பெற்று வாழ்வதற்கு வல்ல இறைவன் பேருதவி செய்வானாக…!
