42:2353 முஸாக்காத் – நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்

பாடம் : 3 நீர்நிலையின் உரிமையாளர், தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளும் வரை அதன் நீரைப் பயன்படுத்த முன்னுரிமை பெற்றவர் ஆவார். ஏனெனில், தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) தடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
2353. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, ‘உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்’ என்றார்கள். 
Book : 42