இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் நபி

சுப்ஹான மவ்லிதுக்கு எதிராக
சூடு பிடிக்கட்டும் நம் பிரச்சாரம்….

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)என்ற செயல்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாத செயல்திட்டமாக “இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் நபி” என்ற தலைப்பில் செயலாற்ற மக்கள் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செயல்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மைல் கல்லை அடைந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றது.
தோன்றியிருப்பது ரபீயுல் அவ்வல் மாதம். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் என்பதைக் காரணம் காட்டி, அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் சுப்ஹான மவ்லிது வீடுகள் தோறும் ஓதப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3445.
இந்த ஹதீஸின் எச்சரிக்கையை மீறி சமுதாய மக்கள் நபி (ஸல்) அவர்களை சுப்ஹான மவ்லிது பாடல்கள் மூலம் கடவுளாக ஆக்கி அழகு பார்க்கின்றனர். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு யாநபி பைத்தில் இடம்பெறும் இந்தக் கவிதை வரியாகும்.
அன்த கஃப்ஃபாருல் கதாயா
வத்துனூபில் மூபிகாத்தி
அன்த சத்தாருல் மஸாவீ
வ முகீலுல் அஸராத்தி
இதன் பொருள், “நீங்களே பிழைகளையும் அழிவில் தள்ளும் பாவங்களையும் மன்னிக்கக் கூடியவர். நீங்கள் குறைகளை மறைப்பவர். நீங்கள் இன்னல்களை நீக்கக் கூடியவர்” என்பதாகும்.
இது சொல்வதென்ன? அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள் என்று ஏகத்துவத்தைப் போதித்த நபி (ஸல்) அவர்களையே கடவுளாக்கும் கொடுமையை இந்தக் கவிதை வரிகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘முதலில் படைப்பை நாம் தொடங்கியது போலவே அதை மீட்டெடுப்போம். (இது) நம்மீது கடமையாகவுள்ள வாக்குறுதி! நாம் (இதைச்) செய்வோராகவே இருக்கிறோம்’ (அல்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர்.
என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்’ என்று (அவர்களைவிட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை அவர்கள்) கூறியதைப் போல், “நீ எனக்கு ஏவியவாறு, ‘என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாய் இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன் அடியார்களே! நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (அல்குர்ஆன் 5:117, 118) என்று நான் கூறுவேன்.
அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3349
ஈஸா (அலை) அவர்கள் கடவுளாக்கப்பட்டது போன்று முஹம்மது (ஸல்) அவர்களும் கடவுளாக்கப்படுவார்கள் என்பதைத்தான் இந்த ஹதீஸ் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றது. அதற்கு இந்த மவ்லிது வரிகள் சாட்சிகளாக அமைந்திருக்கின்றன. இந்த இணைவைப்பை வேரறுக்க, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியிலும் பாதையிலும் நின்று இம்மாதத்தில் போர் முழக்கமிடுவோமாக!
இப்ராஹீம் நபியின் இணை வைப்புக்கு எதிரான வேரறுப்பு முழக்கம் இதோ:
“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை மறுத்து விட்டோம். உங்களுக்கும், எங்களுக்குமிடையே என்றென்றும் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது” என்று தமது சமுதாயத்தினரிடம் கூறியதில் இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. “அல்லாஹ்விடமிருந்து உமக்கு (உதவ) எந்த ஒன்றுக்கும் நான் சக்தி பெறாத நிலையில், உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று இப்ராஹீம், தமது தந்தையிடம் கூறியதைத் தவிர! (மற்றவற்றில் முன்மாதிரி உள்ளது.) “எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டு விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் 60:4
சமுதாய மக்களை இணைவைப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணியில், சுப்ஹான மவ்லிது எனும் கவிதைக்கு எதிராக நம்முடைய போர் முழக்கம் சூடு பிடிக்கட்டுமாக! எட்டுத் திக்கிலும் ஏகத்துவப் பிரச்சாரம் எதிரொலிக்கட்டுமாக! இணை வைப்புக்கு எதிராக எரிமலையாய் வெடிக்கட்டுமாக! மவ்லிது கூடாரங்கள் சுக்கு நூறாய் நொறுங்கட்டுமாக!