இணை வைத்தல் – மாபெரும் அநியாயம்

லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அறிந்து வருகின்றோம். அவைகளில் முதலாவதாக அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான்.

லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் – 31:13

முதலாவதாக, இணைவைத்தல் என்ற மகத்தான அநியாயத்தைக் குறித்தே தமது பிள்ளைக்கு லுக்மான் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் எண்ணற்ற நற்காரியங்களை வாரியிறைத்தாலும், நன்மைகளால் விண்ணை முட்டுமளவு கோபுரங்களைக் கட்டி எழுப்பினாலும், இணைவைப்பு என்ற கொடிய விஷம் அந்த நல்லறங்களில் நுழைந்துவிட்டால் சிரமப்பட்டுச் செய்த அனைத்து நன்மைகளும் மிச்ச மீதமின்றி நம்மைவிட்டு நாசமாகிவிடும். இதுமட்டுமின்றி நாம் நரக நெருப்பில் நிலையாக, நிரந்தரமாக இருக்கவும் நேரிடும்.

இதை உணராமல் அதிகமானவர்கள், அதிலும் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் இந்த மகத்தான அநியாயத்தைச் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர். உண்மையிலேயே இணைவைப்பு என்பது முற்றிலுமாக விலகவேண்டிய ஓர் கொடிய பாவமே! ஆக இந்தப் பாவத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகுவதோடு, பிறரையும் அதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

நாம் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமெனில் உறவினருக்கும், ஊர் மக்களுக்கும் இணைவைப்பின் விபரீதத்தை விபரமாகவும் வீரியமாகவும் விவரிக்க வேண்டும். எனவே இணைவைப்பு குறித்து இஸ்லாம் கூறும் அடிப்படைகளை அறிந்துகொள்வோம்.

படைப்பின் நோக்கம்

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை இறைவன் விவரிக்கும்போது, தன்னை வணக்குவதற்காகத்தான் மனிதனை நான் படைத்தேன் என்கிறான்.

ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறெதற்கும்) நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன் – 51:56)

இறைவன்தான் நம்மைப் படைத்தான், அவன்தான் நமது அரசன், அதிபதி. அவனை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அவனை வணங்குவது தான் நமக்கான முதன்மைப் பணியாகும். இதை மறந்ததன் விளைவு, அல்லது மறுத்ததன் விளைவு இறைவணக்கத்தை விட்டும் விலகி, இறைவனுக்கு நிகராக இணை வணக்கத்திலும், இறைமறுப்பிலும் நம்மில் பலர் உள்ளனர்.

அல்லாஹ்வையே வணங்குங்கள்!

மனித சமூகத்திற்கு இறைவன் கூறும் முதன்மையான அறிவுரையும், நபிமார்களை அனுப்பி மக்களுக்கு கூறச் சொன்ன அறிவுரையும் ‘அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு யாரையும், எதையும் இணையாக்காதீர்கள்’ என்பதே!

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்!

அல்குர்ஆன் – 4:36

“என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் இல்லை! எனவே, என்னையே வணங்குங்கள்!” என்று நாம் அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.

அல்குர்ஆன் – 21:25

அனைத்தையும் படைத்த படைப்பாளன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி வேறு இறைவன் இல்லை. நமக்கு மகிழ்ச்சி, புன்னகை, கவலை, அழுகை, நோய், நிவாரணம், செல்வம், ஏழ்மை, பிள்ளை, பிள்ளையின்மை என எதுவாயினும் அவை அனைத்தும் இறைவனின் ஏற்பாடே! இவையனைத்தையும் இறைவனே நமக்குத் தருகிறான். இவ்வாறு நம்மைப் படைத்த, பரிபாலிக்கின்ற படைப்பாளனையே நாம் வணங்கவேண்டும். யாரையும், எதையும் அவனுக்கு இணையாக, நிகராக நிறுத்தி விடக்கூடாது. எந்த நிலையானாலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும், அவனுக்கே வணக்கத்தையும், வேண்டுதலையும் உரித்தாக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். “அவர்கள் அவனையே வணங்குவதும், எதையும் அவனுக்கு இணைவைக்காமலிருப்பதும் ஆகும்’’ என்று கூறினார்கள்.

நூல்கள்: புகாரி (7373), முஸ்லிம் (48)

எனவே எந்த வகையிலும் இறைவனுக்கு நாம் இணைகற்பித்துவிடக் கூடாது.

இறைவனுக்கு இணையில்லை

இணைவைப்பு என்பது இறைவனுக்கு இணையாக, நிகராக ஒருவரை அல்லது ஒரு பொருளை வணங்குவது மட்டுமல்ல! இறைவனே இல்லை என்று கூறுவதும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்வதும், அல்லாஹ்விற்கு மட்டும் உரித்தான ஆற்றல், பண்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சிறிதளவேனும் பிறருக்கோ, பிற பொருட்களுக்கோ இருப்பதாக நினைத்து, இறைவனால் மட்டும் சாத்தியமாகும் செயல்களை மனிதர்களோ, மற்ற பொருட்களோ செய்திட, சாதித்திட முடியும் என நம்புவதும் இணைவைப்பே! இது இறைமறுப்பு என்றும் கூறப்படும்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! வானங்களிலும் பூமியிலும் அணுவளவு கூட அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு உதவியாளர் யாருமில்லை” என்று (நபியே!) கூறுவீராக!

அல்குர்ஆன் – 34:22

அணுவளவு கூட அந்நியர்கள், அல்லாஹ்வின் ஆற்றலிலும், அதிகாரத்திலும் சக்திபெற மாட்டார்கள். அனைத்து ஆற்றலும் அதிகாரமும் அகிலங்களின் அரசனான அல்லாஹ் ஒருவனுக்கே! இந்த ஏகத்துவக் கொள்கையில் இணைவைப்பின் சாயல்கூட இருந்துவிடக்கூடாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காத நிலையிலேயே அவனைச் சந்திக்க வேண்டும்.

“தமது இறைவனைச் சந்திக்க விரும்புபவர் நற்செயல் செய்யட்டும். தமது இறைவனை வணங்குவதில் யாரையும் அவர் இணையாக்க வேண்டாம்” என்று (நபியே!) கூறுவீராக!

அல்குர்ஆன் – 18:110

இணைவைக்க நியாயமே இல்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்:  நான் இணையாளர்களை விட்டும், இணைகற்பித்தலை விட்டும் அறவே தேவைகளற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும், பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும், அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டு விடுவேன்.

நூல்கள்: முஸ்லிம் (5708), இப்னுமாஜா (4192)

அகிலங்களையும், அகிலத்தாரையும் படைத்த படைப்பாளனாகவும், அனைத்திற்கும் ஆற்றல் படைத்தவனாகவும் அல்லாஹ் இருக்க அவனுக்கு இணையாக ஒன்றை கற்பனை செய்வது எவ்விதத்திலும் நியாயமே இல்லை.

நம்மைப் படைப்பதிலோ, பாதுகாப்பதிலோ பிறருக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையிலும், அவனது அருட்கொடைகள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அல்லாஹ்விற்கே இணையாளர்களை ஏற்படுத்துவது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது மாபெரும் துரோகமாகும். அகிலத்தார்களின் மீது அருளுடையவனாக அல்லாஹ் இருக்க அடுத்தவர்களின் மீது நமக்கு என்ன தேவையுள்ளது?

நாம் ஒருவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்த நிலையில் அவர் நமக்கு ஒரு துரோகம் செய்துவிட்டால் அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்துவிட்டால் அதை நாம் எவ்வாறு கருதுவோம்? இதை ஒரு சாதாரண பாவமாகக் கருதிவிட முடியுமா என்ன?

மனிதனாக இருக்கும் நமக்கே இவ்வாறென்றால் நமக்கான எல்லா வசதி, வாய்ப்புகளையும், அருட்கொடைகளையும் வழங்கிய வல்லோனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அடுத்தவர்களுக்குச் செய்வது மட்டும் எப்படி நியாயமாகும்? இது மகத்தான அநியாயமே! இதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான்.

மன்னிக்கப்படாத குற்றம்

அல்லாஹ்வின் அன்பு என்பது அளப்பெரியதாகும். அவன் அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன். அவன் மனிதர்களின் மீது இரக்கமுடையவன். மனிதன் எந்தப் பாவத்தைச் செய்தாலும் அதை மன்னிக்க அல்லாஹ் ஒருபோதும் தயங்குவதில்லை. பாவம் செய்த மனிதனையும் பாசமாகவே பார்க்கிறான் படைப்பாளன்.

நாம் இணைவைப்பு என்ற பெரும் பாவத்தைச் செய்தாலும் கூட திருந்தி அதிலிருந்து மீண்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடினால் அதையும் மன்னிக்கவே அல்லாஹ் நாடுகிறான்.

“தமக்குத் தாமே வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று (இறைவன் கூறுகிறான் என நபியே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 39:53

இணைவைப்பிற்குப் பிறகு பாவமன்னிப்பு கேட்காமல் இணைவைப்பாளராகவே மரணித்து விட்டால் தனக்கு இணைவைத்ததை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்கிறான் இறைவன்.

தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.

அல்குர்ஆன் 4:48

மகத்தான மன்னிப்பாளனான அல்லாஹ்வே ஒரு பாவத்தை மன்னிக்க முன்வருவதில்லை என்றால் அது எம்மாம்பெரிய பாவமாக இருக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும். எனவே இந்தப் பாவத்திலிருந்து நாம் தவிர்ந்து வாழவேண்டும்.

நல்லறம் அழிந்துவிடும்

இணைவைப்பு என்பது மன்னிக்கப்படா குற்றம் என்பதோடு இதற்கு முன்பாக நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்த போதிலும் அவையனைத்தையும் பரப்பப்பட்ட புளுதியாக ஒன்றுமில்லாமல் முற்றாக அழித்து நாசமாக்கிவிடும்.

இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். தனது அடியார்களில் அவன் நாடியோருக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். அவர்கள் இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்கள் அவர்களை விட்டு அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இறைவனுக்கு இணைவைத்தவர்களாக எந்த நல்லறத்தை நாம் செய்தாலும், அதற்காக எவ்வளவு சிரமங்களைச் சந்தித்தாலும் அதனால் எந்தப் புண்ணியமும் நமக்கில்லை. இணைவைத்தல் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஒட்டுமொத்த அமலும் அழிந்துபோய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நபியாயினும் நல்லறம் அழிந்துவிடும்

நன்மைகள் நாசமாகும் என்பது நமக்கு மட்டுமானதல்ல. நபிமார்களே இந்தக் கொடிய பாவத்தைச் செய்தாலும் அவர்களின் நிலையும் இதுவே என்றான் இறைவன்!

“நீர் இணை வைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 39:65

நல்லடியார்களான நபிமார்களுக்கே இதில் விதிவிலக்கில்லை என்றால் மற்றவர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா? இணைவைப்பு என்ற பெரும் பாவத்தை யார் செய்தாலும் அதை அல்லாஹ் சாதாரணமாக விட்டுவிடமாட்டான். அவர்களைக் கடுமையான முறையில் தண்டிப்பான். இதிலிருந்தே இந்தப் பாவத்தின் பின்விளைவை நாம் புரிந்து கொள்ளலாம்.

நிலையான நிரந்தர நரகம் நிச்சயம்

நாம் செய்த நல்லறங்களே நாசமாகிய பின்னர் நமது மறுமை நிலை மட்டும் நலமாக இருக்குமா? ஒட்டுமொத்த நன்மையும் நம்மைவிட்டு நழுவி, கொடூர வேதனை நிறைந்த நரகப் படுகுழியில் நிரந்தரமாக இருக்கச் செய்திடும்.

யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.

அல்குர்ஆன் 5:72

“யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி (1238), முஸ்லிம் (150)

இந்த உலகில் வாழ்வதே மறுமையில் வெற்றி பெற்றுவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில்தான். ஆனால் உலகில் இணைவைப்பு என்ற பாவத்தைச் செய்ததால் மறுமை வாழ்க்கை இருள் சூழ்ந்துவிடும்.

இணைவைப்பாளர்களின் ஏக்கம்

அருள்வளங்களை அள்ளித் தந்த அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பதே இணைவைப்பு இல்லா நல்லறத்தைத்தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம், “பூமியிலிருக்கும் பொருட்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தந்து (இந்த வேதனையிலிருந்து விடுதலை பெற்று) விட முன்வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ஆம் என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்த போது இதைவிட இலேசான ஒன்றை – எனக்கு எதையும் இணை வைக்கக்கூடாது என்பதை – உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை வைப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!” என்று கூறுவான்.

நூல்கள்: புகாரி (6557), முஸ்லிம் (5403)

அல்லாஹ்வின் அருளை அனுபவித்த அடியார்கள் அல்லாஹ்விற்கு ஒருபோதும் அநியாயம் செய்ய வேண்டாம். அவ்வாறு அநியாயம் செய்தவர்களும் மறுமையில் வருந்துவார்கள்.

மறுமைநாளில் நரக வேதனையில் தத்தளிக்கும் இணைவைப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து, தாங்களும் இறைநம்பிக்கை கொண்டிருக்கலாமே என்று ஏங்கும் நிலையை இறைவன் ஏற்படுத்துவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தில் சிலர் அவர்களின் பாவங்களுக்காக வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற அல்லாஹ் நாடிய (கால) அளவுக்கு அவர்கள் நரகத்தில் இருப்பார்கள். (இதனால் நரகத்தில் இருக்கும்) இணைவைப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைக் குறைகூறும் வகையில் “நீங்கள் (இறைத் தூதரை) உண்மைப்படுத்தியும், (அல்லாஹ்வின்மீது) நம்பிக்கை கொண்டும் எங்களுக்கு மாற்றமாக (உலகில்) இருந்தீர்கள். அது உங்களுக்குப் பயனளிப்பதை நாங்கள் காணவில்லையே?” என்று கூறுவார்கள். அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்குப் பெரும் துயரத்தைக் காட்டுவதற்கு நாடுவான். எனவே எல்லா ஏகத்துவவாதிகளையும் அல்லாஹ் (நரகத்திலிருந்து) வெளியேற்றி(ச் சொர்க்கத்திற்கு அனுப்பி) விடுவான். (இவ்வாறு கூறிய) பின்னர் “தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று இறைமறுப்பாளர்கள் சில வேளைகளில் விரும்புவார்கள்” என்ற (15:2) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

நூல்: நஸாயீ-குப்ரா(11207)

நாமும் இந்த துர்பாக்கியவான்களில் ஒருவராக இருந்துவிடாமல் இவ்வுலகிலேயே இறைவனை முழுமையாக நம்பி உண்மையான இறைநம்பிக்கையாளராக மரணிப்போமாக!

இணைவைத்தவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கக்கூடாது

ஏகத்துவக் கொள்கையில் உள்ள ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்ய மார்க்கம் வழிகாட்டுகிறது, வலியுறுத்துகிறது. இதன் மூலமாக அவருக்கு ஏராளமான நன்மைகளும், பாவமன்னிப்பும் கிடைக்கும். ஆனால் இறைமறுப்பாளராக, இணைவைப்பாளராக ஒருவர் மரணித்து விட்டால் அவர் யாராக இருந்தாலும் அவருக்காகப் பிரார்த்திப்பதையும், பாவமன்னிப்பு தேடுவதையும் தடை செய்கிறான் இறைவன்.

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரை” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இணைவைப்போர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்குத் தெளிவான பிறகு, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகுதியானதல்ல!” எனும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், “(நபியே!) நீர் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது” எனும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

நூல்கள்: புகாரி (3884), முஸ்லிம் (39)

நம்மைப் பெற்றெடுத்த தாய், தந்தையாக இருந்தாலும் நமக்கு நெருக்கமான உறவாக இருந்தாலும் இணைவைப்புக் கொள்கையில் மரணித்துவிட்டால் அவருக்காக மன்னிப்புக் கூட நம்மால் கேட்க முடியாது. இந்த நிலையில் நமது உறவை நாம் விட்டுவிடக்கூடாது. அவர்களின் மீது நாம் உண்மையான அன்பு வைத்துள்ளோமென்றால் இணைவைப்பை விட்டு முதலில் அவர்களை மீட்டெடுக்க வேண்டும். இதுவே நமது முதன்மைப் பணியாகும்.

இன்று தங்களுக்கு ஒரு தேவை, கோரிக்கை என்றவுடனே அல்லாஹ்விடம் கேட்பதைப் போன்றே அடுத்தவர்களிடமும், அவ்லியாக்களிடமும் சிலர் உதவி கேட்பதைப் பார்க்கின்றோம். அல்லாஹ்வை சார்ந்திருப்பதுபோல் மற்றவர்களையும் சார்ந்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள், அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்று கூறி இவ்வாறு செய்கிறார்கள்.

ஒருவருக்கு ஏதேனும் தேவை, பாதிப்பு ஏற்பட்டால், நோய் ஏற்பட்டால் தாயத்து அணிவது, தர்ஹாக்களில் வேண்டுவது, மார்க்கம் தடுத்த வகையில் ஓதிப் பார்ப்பது போன்ற தீய காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி வேறு யாராலும் அதற்கான தீர்வைத் தரவே முடியாது.

எந்தத் தேவை வந்தாலும், பாதிப்பு வந்தாலும், யாருக்கு வந்தாலும், ஏன்! நபிமார்களுக்கே வந்தாலும் அதை நீக்கும், போக்கும், தீர்க்கும் அதிகாரமும், ஆற்றலும் அல்லாஹ்விற்கு மட்டும்தான் உள்ளது. அவை மற்றவர்களுக்கும் இருப்பதாக நினைப்பது பகிரங்க இணைவைப்பாகும். இது போன்ற இணைவைப்பை உணராமல் பலர் செய்துவருகின்றனர். எனவே இணைவைப்பின் விபரீதத்தை மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

ஆனால் இன்றைய குடும்பத்தின் நிலையோ தந்தை ஏகத்துவத்திலும் பிள்ளை இணைவைப்பிலும் உள்ளனர், இல்லையெனில் பிள்ளை ஏகத்துவத்திலும் தந்தை இணைவைப்பிலும் உள்ளனர். இவ்வாறு இருக்கும் குடும்பத்தார்கள் சத்தியக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையை அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்க முன்வருவதில்லை தயங்குகின்றனர், இந்த விசயத்தில் தடுமாறுகின்றனர்.

ஆனால் லுக்மான் (அலை) அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. இணைவைப்பு குறித்து தமது பிள்ளைக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இது போன்று நமது பிள்ளைகளுக்கு நாம் மார்க்கப் பணியைச் செய்ததுண்டா?

இன்றைய தந்தை, மகனின் உறவை விவரிப்பதாக இருந்தால் பிள்ளை தந்தையையும், தந்தை பிள்ளையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள், முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள், சலாம் கூடச் சொல்ல மாட்டார்கள்.

பிள்ளையிடம் தந்தை எதைப் பற்றியும் பேச மாட்டார். அதிலும் குறிப்பாக மார்க்கம் தொடர்பாக அறவே பேச மாட்டார். இன்னும் சிலர் உலகம் சார்ந்த விஷயங்களைத் தமது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். தாம் அறியாதவற்றையெல்லாம் தம் பிள்ளை அறிய வேண்டும் என பல முயற்சியை முன்னெடுப்பார்கள். இருந்தாலும் அவர்களும் மார்க்கம் பற்றி எதையும் அவர்களிடம் பேசவே மாட்டார்கள்.

பல ஆசைகளுடனும், கனவுகளுடனும் பிள்ளையைப் பெற்றெடுத்து அவர்களுக்காகப் பல கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு, நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை எனது பிள்ளை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக எல்லா முன் ஏற்பாடுகளையும் உலகில் செய்து கொடுக்கின்றோம்.

இவ்வாறு உலக வாழ்க்கைக்கு முயற்சி செய்யும் நாம், மறுமையைக் கருத்தில் கொண்டு அதற்காக என்ன செய்துள்ளோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உலகில் பார்த்துப் பார்த்து வளர்த்த பாசப்பிள்ளையை நாளை மறுமையில் நரக நெருப்பில் பார்க்கும் அவல நிலைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

எனவே அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்போமாக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகமாக பிரார்த்திப்போமாக! நாம் என்னதான் அவர்களுக்கு நன்மையை எடுத்து சொன்னாலும் சிலர் வழிகேட்டை நோக்கி விரைவாகச் செல்வர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, இருக்கவும் முடியாது. இருப்பினும் நமது கடமையை நாம் செய்திட வேண்டும்.

இந்தத் துறையிலும் லுக்மான் (அலை) அவர்கள் சிறந்து விளங்கினார்கள். தனது கடமையை அழகிய முறையில் நிறைவேற்றி விட்டார்கள். இணைவைப்பைக் குறித்து எச்சரித்து விட்டர்கள்.

நாமும் பிள்ளைகளின் மீது வெளிவேஷமாக இல்லாமல்  லுக்மான் (அலை) அவர்களைப் போன்று உண்மையான பாசமாக இருந்து இணைவைப்பு என்ற கொடிய பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்து அந்தப் பாவத்திலிருந்து பிள்ளைகளையும், பிற மக்களையும் பாதுகாப்போமாக!

அறிவுரைகள் தொடரும்…