கடந்த 26.05.2024 அன்று ஈரோடு பிளாட்டினம் மஹாலில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் 24வது மாநிலப் பொதுக்குழுவில், தஃவா களத்தை பற்றி எரியச் செய்வதற்காக ‘அழகிய முன் மாதிரி இப்ராஹீம் (அலை)’ என்ற தலைப்பின் கீழ் பத்து மாத கால செயல் திட்டத்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 21.07.2024 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் எஸ்.எஸ். மஹாலில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் இளைமைப் பருவம் என்ற தலைப்பில் அன்னாரின் அனல் பறந்த ஏகத்துவப் பிரச்சாரத்தையும், அதற்காக அவர்கள் செய்த அளப்பரிய தியாகத்தையும், அதில் அவர்கள் அடுக்கடுக்காகச் சந்தித்த சோதனைகளையும் மொத்தத்தில் அவர்களது இளமைப் பருவம் முழு வாழ்க்கைப் பரிமாணத்தையும் சமுதாயத்திற்கு முன் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாத சத்திய முழக்கம் இதழில் இப்ராஹீம் நபியின் இளமைப் பருவம் குறித்த பல்வேறு செய்திகளைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக சில செய்திகளை இவ்விதழிலும் காண்போம்.
இணைவைப்பில், உலக வாழ்க்கை மோகத்தில், போதைப் பொருட்களில், காதல், காமவலையில் வீழ்ந்து கிடக்கும் இளைஞர்களின் கவனத்தை ஏகத்துவத்தின் பால் ஈர்ப்பது இதன் இலட்சியமும் இலக்கும் ஆகும்.
அத்துடன் நமது கொள்கைச் சகோதரர்களிடையே ஒரு விதமான மந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அழைப்புப் பணியில் ஒரு தொய்வு விழுந்திருக்கின்றது. தஃவாவில் ஓர் எல்லையைத் தொட்டு விட்டோம்; ஓர் இலக்கை அடைந்து விட்டோம்; இனி நமக்கு தஃவாவில் வேலையில்லை; நாம் உண்டு, நமது பாடுண்டு என்று இருந்து விடுவோம் என்ற மனநிலையும் உருவாகி விட்டது.
இவை அனைத்தையும் களைந்து, தஃவா களத்தை சூடு பிடிக்க வைப்பதற்கு இப்ராஹீம் நபியின் இளைமைப் பருவம் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டது.
இளைஞர் இப்ராஹீம் நபியின் பிரச்சாரப் பாங்கும் போங்கும்
இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம், “சிலைகளைக் கடவுள்களாக எடுத்துக் கொள்கிறீரா? உம்மையும், உமது கூட்டத்தாரையும் பகிரங்க வழிகேட்டிலேயே காண்கிறேன்” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
இவ்வாறும், உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராக இப்ராஹீம் ஆவதற்காகவும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியை அவருக்குக் காட்டினோம்.
அவரை இரவு சூழ்ந்தபோது நட்சத்திரத்தைக் கண்டு, “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது “மறையக்கூடியவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
சந்திரன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது, “எனது இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லை என்றால் நானும் வழிதவறிய கூட்டத்தில் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார்.
சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன். இது மிகப் பெரியது” என்று கூறினார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணையாக்குபவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனை நோக்கி, சத்திய நெறியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை வைப்போரில் உள்ளவன் அல்ல” என்று கூறினார்.
அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.
“உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” (என்று கேட்டார்.)
இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள்.
இது நமது ஆதாரமாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக அவருக்கு இதை வழங்கினோம். நாம் நாடியோருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். உமது இறைவனே நுண்ணறிவாளன். நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 6:74-83
இந்த வசனங்கள் அத்தனையும் இப்ராஹீம் நபி அவர்களின் பிரச்சாரத்தின் பாங்கையும் போங்கையும் விவரிக்கின்றது. இந்த வசனங்களில் சில வசனங்கள் நமது கவனத்தை ஈர்ப்பவையும் நமது சிந்தனையைக் கவர்பவையும் ஆகும். துவக்கத்திலிருந்து இறுதி வரை இந்த வசனங்களில் ஓர் இடைவெளி இல்லாமல் படிப்பதில் நம்ம சொக்க வைக்கும் ஒருவிதமான சுவை அடங்கியிருக்கின்றது. அதனால் அப்படியே இடையில் பிரிக்காமல் படிப்போரின் கனிவான கவனத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றோம்.
இப்போது விளக்கத்திற்கு வருவோம்:
இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரச்சாரம் தனது தந்தையிடமிருந்து, அதாவது தனது குடும்பத்திலிருந்து துவங்குகின்றது என்பதைப் பார்க்கின்றோம். அது பின்னால் இடம்பிடிக்கவிருக்கின்றது. அதில் நாம் விரிவாகப் பார்த்துக் கொள்வோம் இன்ஷாஅல்லாஹ். இப்போது தொடர் வசனத்தை பார்ப்போம்.
அல்லாஹ், அவர்களுக்கு வானத்தின் அற்புதங்களையும் அதிசயங்களையும் பிரமிக்கத் தக்க பிரமாண்டங்களையும் படைப்பின் மாபெரும் ஆற்றலையும் காண்பித்துக் கொடுத்த பின்பு, முதலில் நட்சத்திரத்திலிருந்து கடவுள் தேடலை ஆரம்பிக்கின்றார்கள். நட்சத்திரம் முதல் பிரமிக்க வைக்கும் சூரியன் வரை அத்தனையும் இந்தப் பேரண்டத்தில் மக்களின் பார்வைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மறைந்து விடுகின்றன. மறைபவை ஒரு போதும் கடவுளாக இருக்க முடியாது என்று மண்டையில் சம்மட்டி வைத்து அடிப்பது போல் இந்த வசனத்தில் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஒரு சிலர் இந்த வசனங்களின் போங்கைக் கவனத்தில் கொண்டு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அப்போதுதான் தவ்ஹீது கருத்து துளிர் விடுகின்றது என்பது போல் விளக்கமளிக்கின்றார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அப்போது தான் தவ்ஹீது சிந்தனை துளிர்க்கின்றது. அப்போதுதான் ஏகத்துவக் கண்ணோட்டம் அவர்களிடத்தில் உதயமாகின்றது என்று தெரிவிக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” (அல்குர்ஆன் 2:135) என்று குறிப்பிடுகின்றான். இதுபோல் அவர்களை அல்லாஹ் பல வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
அதனால் தனது சமுதாய மக்களுக்கு மத்தியில் வானத்தைப் பற்றியும், அதில் வண்ணமிட்டு ஜொலிக்கும் நடசத்திரத்தைப் பற்றியும், வலம் வரும் சூரியன், சந்திரன் பற்றியும் வகுப்புப் பாடம் எடுக்கின்றார்கள். அவர்கள் அதில் சொல்லவருகின்ற விஷயம் ஒருபோதும் மறையும் பொருள் கடவுளாக இருக்க முடியாது என்பதாகும். கடவுளாக இருப்பவரின் பார்வையிலிருந்து உயிருள்ள எந்த ஓர் உயிரினமும் ஒரு நொடிப்பொழுது கூட மறையக்கூடாது. அதனால்தான் மறைகின்ற ஒரு பொருள் என் இறைவனாக இருக்க முடியாது என்று சொல்கின்றார்கள்.
இதில் கப்ருகளைக் கட்டி அழக்கூடிய மக்களுக்குச் சரியான பாடமும் படிப்பினையும் இருக்கின்றது. கண்ணிலிருந்து மறையும் பொருள் கடவுளாக முடியாது எனும் போது கண்ணிலிருந்து மண்ணுக்குள் சதாவும் மறைந்து விட்ட நல்லடியார்கள் எப்படி நமது குறைகளை அறிய முடியும்? என்று தர்ஹாக்களை வழிபாட்டுத் தலங்களாக்கியோருக்கு இப்ராஹீம் (அலை) தக்க பாடத்தை நடத்தி முடிக்கின்றார்கள். கப்ருகளில் காலமெல்லாம் மறைந்து கிடப்போருக்கு ஒருபோதும் காக்கும் சக்தி கிடையாது என்பதைத் தெளிவாக உணர்த்தி விடுகின்றார்கள். இறுதியில் பிரமிப்பூட்டும் சூரியனை, சந்திரனை, வானத்தை, இந்தப் பேரண்டத்தைப் படைத்த அந்தப் பேராற்றல் மிக்கவனின் திருமுகத்தை நோக்கி என்னை ஒருமுகப்படுத்திக் கொண்டேன் என்று பிரகடனம் செய்கின்றார்கள்.
அவ்வாறு பிரகடனம் செய்த மாத்திரத்தில் அவர்களிடம் மக்கள் வாதம் புரிய ஆரம்பித்து விடுகின்றனர். ‘எங்களது தெய்வங்கள் உன்னைச் சும்மா விடாது உன்னை விட்டு வைக்காது; உன்னைத் தொலைத்து விடும்’ என்பது போன்று இப்ராஹீம் என்ற இளைஞரை மிரட்டுகின்றனர். அதற்கு இப்ராஹீம் கிஞ்சிற்றும் அஞ்சவில்லை. அப்போது அவரிடம் வந்த பதில்:
அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.
அல்குர்ஆன் 6:80
அசாத்தியமான, அசத்தலான துணிச்சலுடன் அவர்களுக்குப் பதிலடிக் கொடுக்கின்றார்கள்.
“உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் 6:81
படைத்த இறைவனை நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை வைக்கும் தெய்வங்களுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்று மூளையில் உரைக்கும் அளவுக்கு சுளீர் என்று பதிலளிக்கின்றார்கள். அந்தப் பதிலில் ‘எனக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அது உங்களது போலித் தெய்வத்தின் தீண்டுதலால் அல்ல! அது எனது இறைவன் அளித்த தீங்காகும்’ என்று விவரமான பதிலை அளிக்கின்றார்கள். ஏனென்றால் மனிதனுக்கு நோய் வாய் ஏற்படாமல் இருக்காது. அப்படி ஏற்பட்டு விட்டால் அது என்னுடைய இறைவனுடைய நாட்டபடி என்று பாதுகாப்பான கவசமிக்க பதிலை அவர்களுக்குச் சமர்பிக்கின்றாரகள்.
ஹூது சமூதாயம் வைத்த வாதம்
இப்ராஹீம் நபி சமுதாயம் வைத்த வாதம் புதிய வாதமில்லை. ஏற்கனவே ஹூது நபியின் சமுதாயம் வைத்த வாதமாகும். அதற்கு ஹூது (அலை) சம்மட்டி அடி கொடுக்கின்றார்கள். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குத் தீங்கை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்கிறோம்” (என்றும் கூறினர்.) “நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன். அவனை விட்டுவிட்டு, நீங்கள் (அவனுக்கு) எதனை இணையாக்குகின்றீர்களோ அதனைவிட்டும் நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்! நீங்கள் அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (அதன்) பின்னர் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11:54,55
‘எங்கள் தெய்வம் உன்னைக் காலியாக்கி விடும், உனது சோலியை முடித்து விடும்’ என்று ஹூது சமுதாயம் ஹூது நபியை அச்சுறுத்தும்போது, கொஞ்சம் கூடக் கலங்காமல் ஹூது (அலை) அம்மக்களை நோக்கி அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அறை கூவல் விடுக்கின்றார்கள். இதே பதிலைத் தான் இப்ராஹீம் நபி தனது சமுதாய மக்களுக்கு நச்சென்று நறுக்கென்று வைக்கின்றார்கள்.
ஹூத் நபி, இப்ராஹீம் நபி (அலை) ஆகிய தூதர்கள் சந்தித்த இந்தக் கேள்வி அந்தக் காலத்து சமுதாய மக்கள் சந்தித்த கேள்விகள் என்று நாம் நினைத்து விடக்கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த விமர்சனத்தைச் சந்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்கள் தெய்வங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று இணைவைப்பாளர்கள், இறைமறுப்பாளர்கள் பயமுறுத்தினார்கள்.
அல்லாஹ், தன் அடியானுக்குப் போதுமானவனாக இல்லையா? அவனல்லாத மற்றவர்களைக் (மற்ற கடவுளர்களைக்) கொண்டு அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாருமில்லை.
அல்குர்ஆன் 39:36
இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முந்தைய இறைத்தூதர்கள் பாணியில் முஹம்மது நபி அவர்களையும் பதிலடி கொடுக்கச் செய்து இதுபோல் அறைகூவல் விடுக்கச் செய்கின்றான் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் அழைப்பாளர்கள் ஒருபோதும் போலி தெய்வ பக்தர்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைப் பிரார்த்தியுங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
நடக்கும் கால்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது பிடிக்கும் கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது பார்க்கும் கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது கேட்கும் காதுகள் அவர்களுக்கு உண்டா? “உங்களுடைய இணைக்கடவுள்களை அழையுங்கள்! பின்னர் எனக்கு (எதிராக)ச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:194, 195
தமிழக ஆலிம்கள் தயங்கியது ஏன்?
தமிழகத்தில் தவ்ஹீது கொள்கை மூலை முடுக்குகளில் முழங்குவதற்கு முன்னால் தவ்ஹீது சிந்தனை அறவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது. கப்ர் வணக்கம், தர்ஹா வழிபாடு மார்க்கத்தில் கூடாது என்று உண்மையை உணர்ந்த உலமாக்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் உண்மையை உரத்து முழங்க குறுக்கே நின்றது, தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால், தங்கள் குடும்பங்களுக்கு ஏதேனும் சோதனை ஏற்பட்டு விட்டால் அது அவ்லியாக்களால் தான் ஏற்பட்டது என்று சத்தியத்தின் எதிரிகள் முடிச்சுப் போட்டு முத்திரை குத்தி விடுவார்களே என்ற அச்சம் தான்! அந்த அச்சம் தான் அவர்களை சத்தியத்தைச் சொல்வதை விட்டும் தயங்க வைத்தது. இந்த அச்சம் எந்த அழைப்பானின் உள்ளத்திலும் ஆட்கொள்ளக்கூடாது என்பதற்குத் தான் இப்ராஹீம் நபி, ஹூது நபி, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இந்தப் பதில் எல்லாக் காலத்திற்கும் தேவைப்படும் துணிச்சலான பதிலாகும்.
இப்ராஹீம் நபியின் உன்னதமான வாதம்
அடுத்து “உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” என்று உத்தமர் இப்ராஹீம் (அலை) எழுப்புகின்ற கேள்வி, வைக்கின்ற வாதம் உன்னதமான கேள்வியும் உத்ததமான வாதம் ஆகும்.
விமானத்தில் பயணம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு பயணியிடம் உங்கள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கின்றது என்று ஒருவர் எச்சரிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இது வாதப் பொருளாகி, ஒரு சாரார் இல்லை என்றும், மற்றொரு சாரார் இருக்கின்றது என்றும் மாறி மாறிச் சொல்கின்றனர். இந்தக் கட்டத்தில் ஒரு புத்திசாலி எடுக்கும் பாதுகாப்பான முடிவு என்ன? வெடிகுண்டு இல்லை என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் அது இருந்து விட்டால்? அது உயிருக்கு உலை வைத்து விடும். அதனால் உன்னதமான, உத்தமமான முடிவு அடுத்த விமானப் பயணம் தான் என்று முடிவு எடுப்பார். இது தான் அவரது உயிருக்கும் உடமைக்கும் உகந்த பாதுகாப்பான முடிவாகும்.
இதை தான் இப்ராஹீம் நபி தனது சமுதாய மக்களை நோக்கி நீங்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கையில் இணை வைப்பு என்ற அநியாயம் கலந்து இருக்கின்றது என்று எச்சரிக்கின்றேன். அது இல்லை என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் இருந்து விட்டால் நீங்கள் நரகத்திற்குச் சென்று விடுவீர்கள்.
நான் இணைவைப்பு எனும் அநியாயத்தை என் வணக்கத்தில், வாழ்வில், வழியில் கலக்கவில்லை. ஆனால் நீங்கள் கலக்கின்றீர்கள். அதற்கு எதிராக உங்களை நான் எச்சரித்தும் நீங்கள் பயணிக்கின்றீர்கள். நம்மிரு சாரார்களில் யார் பயமற்ற பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றார்கள்? என்று ஓர் அருமையான கேள்வியை எழுப்பி ஓர் அற்புதமான வாதத்தை வைக்கின்றார்கள். ஏகத்துவப் பயணம் தான் மிகவும் பாதுகாப்புக்குரிய, காவல் அரண் நிறைந்த பயணம் என்று அழகாக எடுத்து வைக்கின்றார்கள்.
அதனால்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனங்களின் இறுதியில், “இது நமது ஆதாரமாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக அவருக்கு இதை வழங்கினோம். நாம் நாடியோருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். உமது இறைவனே நுண்ணறிவாளன். நன்கறிந்தவன்” என மெத்தவும் மெச்சி, பாராட்டிச் சொல்கின்றான். இவ்வாறு அறிவுப்பூர்வமான தனது வாதத்தை தன் தந்தையிடமும் மக்களிடமும் அழகுற எடுத்து வைக்கின்றார்கள்.
தந்தையை தவ்ஹீதுக்கு அழைக்கும் தனயன்
ஒரு பக்கம் மறுக்கமுடியாத வாதங்களுடன் சமுதாய மக்களை அழைக்கும் அவர்கள் இன்னொரு பக்கம் தனது தந்தையை பாசத்துடனும் தனித்துவத்துடனும் தவ்ஹீது கொள்கையின் பக்கம் அழைக்கின்றார்கள். அதை அல்லாஹ் பின்வருமாறு பட்டியிலிடுகின்றான்.
இப்ராஹீமையும் இவ்வேதத்தில் நினைவு கூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவற்ற அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”
“என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)
அல்குர்ஆன் 19:41-45
பாசத்துடனும் தன் தந்தை நரகத்திற்குப் போய்விடக்கூடாது என்ற பரிதவிப்புடனும் அவரிடம் நேரடியாக அழைப்பு விடுக்கையில் அதை அவர் முகத்திற்கு நேராக ஏற்க மறுப்பதுடன் கல்லால் அடித்துக் கொல்வேன் என்று தனது சொல்லால் அடித்துத் துரத்துகின்றார். வீட்டை விட்டும் துரத்தியும் அடிக்கின்றார். இப்போது இந்த இளைஞர் இப்ராஹீமுக்கு வேறு வழியில்லை வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர! இதன் காரணமாக அவர்கள் வீட்டை விட்டும் அவர்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிச் செல்கின்றார்.
இப்ராஹீம் நபியின் விலகல் பிரகடனம்
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!” என்று அவர் கூறினார்.
“உம்மீது ஸலாம் உண்டாகட்டும்! என் இறைவனிடம் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன். அவன் என்னிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான். உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் 19:46-48
இப்போது வீட்டை விட்டு வெளியே இறங்கி விட்டார்கள். தனது தந்தையிடம் சொத்துக் கேட்ட தகராறில் அல்ல! கொடுக்கல் வாங்கல் தகராறில் அல்ல! தான் விரும்பி கைப்பிடித்த அல்லது கைப்பிடிக்கப் போகும் மனைவி விவகாரத்தில் அல்ல! மாறாக தனிநாயனை மட்டும் வணங்குவதற்காக, அதாவது தவ்ஹீதுக் கொள்கையின் பக்கம் அழைத்த விவகாரத்திற்காக! அதனால் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். ஆம்! முதலில் அவரது தந்தையெனும் உறவு அவரை வீட்டு விட்டுத் துரத்தியது. அது அவர்களின் வாழ்வில் அடுக்கடுக்காக அணிவகுத்து வரவிருக்கும் சோதனையின் தொடக்கப்புள்ளியாகும். இருப்பினும் அது அவர்களது பிரச்சார வேகத்தைத் தடுத்து நிறுத்தவில்லை.
ஊர் மக்களிடம் அவரது பிரச்சாரம் தொடர்கின்றது. ஊரில் தன் சமுதாய மக்களிடம் அவர்கள் செய்கின்ற பிரச்சாரத்தைப் பற்றிக் கூறும் இறைமறை வசனங்கள் இதோ:
அவர்களுக்கு இப்ராஹீமின் செய்தியை எடுத்துரைப்பீராக!
அவர் தம் தந்தையிடமும் சமுதாயத்தினரிடமும், “எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “சிலைகளை வணங்குகிறோம்; அவற்றை வணங்கிக் கொண்டே இருப்போம்” என்று அவர்கள் கூறினர்.
“நீங்கள் அழைக்கின்றபோது அவை உங்களுக்குச் செவி சாய்க்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?” என அவர் கேட்டார்.
“எனினும் இவ்வாறு செய்பவர்களாக எங்கள் முன்னோரைக் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
“நீங்களும் முன்சென்று விட்ட உங்கள் முன்னோரும் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைச் சிந்தித்தீர்களா?” என அவர் கேட்டார்.
அவை எனக்கு எதிரிகளே! அகிலங்களின் இறைவனைத் தவிர!
அவனே என்னைப் படைத்தான். அவனே என்னை நேர்வழியில் செலுத்துகிறான்.
அவனே எனக்கு உணவளிக்கிறான்; எனக்கு அருந்துவதற்கும் தருகிறான்.
நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் என்னை உயிர்ப்பிப்பான்
அல்குர்ஆன் 26:69-81
சிந்திக்க வைக்கும் சில கேள்விகள்
நீங்கள் அழைத்தால் பதிலளிக்காத, உங்களுக்குப் பயனோ அல்லது தீங்கோ அளிக்க இயலாத சிலைகளை நீங்கள் வணங்குகின்றீர்கள் என்ற அறிவுபூர்வமான, அவர்களது சிந்தனைகளைக் கிளறி விடுகின்ற கேள்விகளைக் கேட்கின்றார்கள். மக்கள் அதற்குப் பதிலாகத் தங்கள் மூதாதையர்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
அதற்கு இப்ராஹீம் நபி, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வணங்கிய தெய்வங்களை சிந்தித்து பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டு விட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஆற்றலை அப்படியே பட்டியலிட்டு அவர்களுக்குத் தெரிவிக்கின்றார்கள். ஊர் மக்களையடுத்து அவர்களது பிரச்சாரம் ஆட்சியாளனிடமும் தொடர்கின்றது.
ஆட்சியாளனுக்கு முன் கர்ஜிக்கும் இப்ராஹீம் நபி
அல்லாஹ், தனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியதன் காரணமாக, இப்ராஹீமிடம் அவரது இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் அறியவில்லையா? “எனது இறைவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கின்றான்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணிக்கவும் வைக்கிறேன்” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம், “அவ்வாறாயின், அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய்” என்று கூறினார். அப்போது அந்த இறைமறுப்பாளன் வாயடைத்துப் போனான். அநியாயக்காரக்கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
தந்தையிடம், ஊர் மக்களிடம், ஆட்சியாளனிடம் என்று தொடர்ந்த அவர்களது துணிச்சல் மிக்க பிரச்சாரப் பயணம் இடைவிடாது தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றது.
எரியும் நெருப்பில் எறியப்பட்ட நபி
நாளாக, நாளாக இப்ராஹீம் நபியின் ஏகத்துவப் பிரச்சார நெருப்பு கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. அவர்களின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தைத் தொட்டது. இதுவரைக்கும் வாய்மொழியான வாதங்களை வைத்துக் கொண்டிருந்த அவர்கள் செயல்பூர்வமான ஒரு திட்டத்தைக் கையில் எடுக்கின்றார்கள். அந்தக் காட்சியைத் திருக்குர்ஆன் இரு இடங்களில் நமக்கு நேரலையாகப் பதிவு செய்கின்றது.
இதற்கு முன்னர், இப்ராஹீமுக்கு அவருக்கான நேர்வழியை வழங்கினோம். அவரைப் பற்றி நாம் அறிந்தோராக இருந்தோம்.
அவர் தமது தந்தையிடமும் தமது கூட்டத்தாரிடமும், “நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று கேட்டபோது, “இவற்றை எங்கள் முன்னோர் வணங்குவதை நாங்கள் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
“நீங்களும் உங்கள் முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்!” என அவர் கூறினார்.
“நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது விளையாடுகிறீரா?” என அவர்கள் கேட்டனர்.
“அவ்வாறல்ல! வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே உங்கள் இறைவன். அவனே அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுவோரில் நானும் ஒருவன். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு உங்கள் சிலைகள் விஷயத்தில் நான் ஒரு தந்திரத்தைக் கையாள்வேன்” என அவர் கூறினார்.
அவர், அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கினார். அவற்றில் பெரியதைத் தவிர! அதனிடம் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்பதற்காக (அதை விட்டு வைத்தார்.)
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே!” என அவர்கள் கூறினர்.
“இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் (குறை) கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்” என்று சிலர் கூறினர்.
“மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர்.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர்தானா?” எனக் கேட்டனர்.
“இல்லை! இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக் கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்!” என அவர் கூறினார்.
அவர்கள் தங்கள் பக்கமே திரும்பி, “நீங்களே அநியாயக்காரர்கள்” என்று கூறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தலைக்குனிவுக்கு உள்ளாக்கப்பட்டு, “இவை பேசாது என்பதுதான் உமக்குத் தெரியுமே!” (என்று கூறினர்.)
“அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
“நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என்று கூறினோம்.
அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
அகிலத்தாருக்கு நாம் அருள்வளம் செய்த பூமிக்கு அவரையும், லூத்தையும் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தோம்.
அல்குர்ஆன் 21:51-71
(இதே சம்பவம் 37:83 முதல் 98 வரையிலும், 29வது அத்தியாயம் 24லிலும் இடம்பெறுகின்றது)
சிலைகளுக்குச் சக்தியில்லை என்பதை இங்கு செயல்பூர்வமாக இப்ராஹீம் நபி நிறுவி விட்டார்கள். ஆனால் எதிரிகள் அதில் நொறுங்கிப் போய் விட்டார்கள். அதனால் தான் அவர்கள் இதற்குக் கடும் எதிர்வினையாற்றுகின்றார்கள். அதன் எதிர்விளைவு எரியும் நெருப்பு! அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி வீசப்படுகின்றார்கள். இந்த இடத்தில் இப்ராஹீம் நபியின் தியாகம் எரியும் நெருப்பை விட மிகவும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது. எள்ளளவு கூட, எள்முனையளவு கூட அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. தீயில் போட்டு பொசுக்கினாலும் நான் சொன்னது சத்தியம் என்று அதில் இரும்பு மனிதராக அவர்கள் உறுதியாக நின்று விட்டார்கள்.
அழைப்புப் பணிக்கு அவசியம் விவேகம்
இப்ராஹீம் நபியின் இந்தப் பணியையும் பாணியையும் இன்று நாம் பின்பற்றலாமா? என்றால் நாம் இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரப் பாணியை அடிப்படையாகக் கொண்டே செயல்படுவது கடமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தச் சிலையையும் போய் இடிக்க வில்லை. சிலைகளுக்கெதிராக தனது வாய் மொழி பிரச்சாரத்தையே மேற்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே நாம் செயல்படக் கடமைப்பட்டிருக்கின்றோம். அத்துடன் எல்லாம் வல்ல அல்லாஹ்,
உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக!
அல்குர்ஆன் 16:125
என்று குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தில் அழகிய அறிவுரை முன்பாக விவேகத்தையே கூறுகின்றான். எனவே அழைப்புப் பணியில் அழகிய அறிவுரைக்கு முன்பு விவேகம் பிரதானமாகும். இப்ராஹீம் நபி காலத்தில் அவர்கள் செய்தது அன்றைக்கு ஹிக்மத் – விவேகமாகும். இன்று இந்தியா போன்ற நாட்டில் முஸ்லிம்களை அழிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும். அதனால் சிலைகளை உடைப்பது விவேகமாக ஆகாது விபரீதமாக ஆகி விடும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்ராஹீம் நபியின் ஹிஜ்ரத் பயணம்
இப்ராஹீம் நபியின் வாழ்க்கை தீக்குண்டத்தில் எறியப்பட்டு அதிலிருந்து அல்லாஹ்வின் அருள் கொண்டு காப்பாற்றப்படும் வரை போர்க்களமாகவும் போர்க்கோலமாகவும் இருந்தது. இவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு தீக்குண்டம் தான் அவர்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. இதற்கடுத்து அவர்கள் இனி இந்த ஊரில் இருந்து பயனில்லை என்று முடிவெடுத்து, தான் வாழ்ந்த ஊரைத் துறந்து தன் மனைவியுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கின்றார்கள். அதற்கு முன்பு அவர்கள் தன் வாழ்வில் ஓர் இளைஞனாகச் சந்தித்த சோதனையை பார்ப்போம்
இளைஞர் இப்ராஹீம் சந்தித்த சோதனை
எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா தன் தூதர்களை சோதனைக்குள்ளாக்காமல் விடுவதில்லை. இதன் பின் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?’’ என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஃத் (ரலி)
நூல்: திர்மிதி 2322
இந்த ஹதீஸின் அடிப்படையில் இப்ராஹீம் நபி அவர்கள் அல்லாஹ் கொடுக்கும் சோதனைகளிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்களல்ல எனபதை நாம் அறியமுடிகின்றது. அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்தச் சோதனை என்ன? ஏறகனவே ஏகத்துவப் பிரச்சாரம் செய்யத் துவங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிர்ப்புகள் வீட்டிலும் ஊரிலும் எரிமலையாய் வெடித்துக் கிளம்பிவிட்டன. இந்தச் சோதனையை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் அவர்கள் தனது சொந்த வாழ்வில் சந்ததியின்மையைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
“என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். (19:48)
இந்த வார்த்தைகள் மூலம் அவர்கள் தமது குறையை வெளிப்படுத்துவதாக நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
முதுமையில் கண்ட சந்ததி பாக்கியம்
அல்லாஹ் திருக்குர்ஆனில் அஸ்ஸாஃப்ஃபாத் என்ற 37வது அத்தியாயத்தில் இப்ராஹீம் நபி அவர்களை மக்கள் தீக்குண்டத்தில் தூக்கியெறிந்த சம்பவத்தைக் குறிப்பிடுகின்றான். அவர்கள் அவ்வூரை விட்டு ஹிஜ்ரத், அதாவது அந்த ஊரை விட்டுத் துறந்து செல்லும் முடிவை எடுக்கின்றார்கள்.
மக்கள் தன்னை நெருப்புக் கிடங்கில் தூக்கி தண்டித்தப் பின்னர், அதிலிருந்து அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சுகமாக தப்பியதற்குப் பிறகும், அல்லாஹ்வின் மகத்தான அந்த அற்புதத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் அவர்களில் எவரும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. லூத் அவர்களை தவிர! இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அவர்மீது லூத் நம்பிக்கை கொண்டார். (இப்ராஹீம்,) “நான் என் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 29:26
இதன் பிறகு இனிமேல் இந்த ஊரில் இருந்து பயனில்லை. இவ்வூரைத் துறந்து விடுவோம் என்று முடிவு செய்து “நான் என் இறைவனை நோக்கிச் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்” (37:99) என்று கூறுகின்றார்கள்.
அப்போது தான் “என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” என்று இறைஞ்சினார். அவர்கள் ஹிஜ்ரத் செய்கின்ற வரைக்கும் பிள்ளை பாக்கியம் இல்லை என்று நாம் தெரிந்து கொள்ளமுடிகின்றது.
அவர்கள் துவக்கத்திலிருந்தே தனக்குப் பிள்ளை பாக்கியம் வேண்டுமென்று துஆச் செய்து கொண்டிருந்தார்கள் இப்போது ஊரை விட்டுப் பிரியும் போது தனக்குத் துணைக்கு யாருமில்லை; தனக்கொரு தவ்ஹீது தலைமுறை வேண்டும் என்ற தவிப்பு அவர்களிடம் தணலாய் பற்றி எரிகின்றது.
அப்போதுதான் மேற்கண்ட துஆவை இறைவனிடம் கேட்கின்றார்கள்.
‘‘எனவே, பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்”
அல்குர்ஆன் 37:100, 101
அவர்களின் நீண்ட கால, தளராத நம்பிக்கையிழக்காத துஆவின் பலனாக அவர்களுக்கு இஸ்மாயீல் என்ற குழந்தையை அல்லாஹ் பாக்கியமாக அளிக்கின்றான்.
வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எனது இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன்.
அல்குர்ஆன் 14:39
வயதான பருவத்தில் தனக்கு பிள்ளைப் பாக்கியத்தை அளித்தமைக்கு நன்றிப் பெருக்கோடு அவர்கள் கூறும் இந்த வார்த்தைகள் அவர்களுக்கு முதிய வயதில்தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது என்பதை உறுதி செய்கின்றது.
ஹிஜ்ரத்திற்குப் பிறகே பிள்ளை பாக்கியம்
மேற்கண்ட 19வது அத்தியாயத்தில் 48வது வசனத்தில், ‘‘உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்” என்று இப்ராஹீம் நபி சொல்லி முடித்த பின்பு அடுத்த வசனத்தில் “அவர்களை விட்டும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றை விட்டும் அவர் விலகியபோது, இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாக அளித்து, ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்” என்று கூறுகின்றான்.
அதாவது தங்களுடையை தந்தையை விட்டும், ஊர் மக்களை விட்டும் அவர்கள் விலகிய பிறகு அவருக்கு நாம் இஸ்ஹாக்கையும் யஃகூபையும் வழங்கினோம் என்று குறிப்பிடுகின்றான்.
அவர்கள் விலகிச் சென்றது எப்போது? அதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.
“இவரைக் கொன்று விடுங்கள்! அல்லது எரித்து விடுங்கள்!” என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது. எனினும் நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான். நம்புகின்ற சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையிலான பற்றின் காரணமாகத்தான். பிறகு மறுமை நாளில் உங்களில் சிலர், சிலரை மறுப்பார்கள். மேலும் உங்களில் சிலர், சிலரைச் சபிப்பார்கள். உங்களின் தங்குமிடம் நரகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அவர்மீது லூத் நம்பிக்கை கொண்டார். (இப்ராஹீம்,) “நான் என் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று கூறினார்.
இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். அவரது வழித்தோன்றலில் நபித்துவத்தையும், வேதத்தையும் அளித்தோம். அவருக்கு இவ்வுலகில் அவரது கூலியை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
அல்குர்ஆன் 29:24-27
அதாவது அவர்கள் தீக்குண்டத்தில் வீசியெறிப்பட்டு அதிலிருந்து தப்பி சுகமாக வெளியே வந்த பிறகு ஊரை விட்டு விலகிச் செல்லும் ஹிஜ்ரத் எனும் நிகழ்வு நடந்தது என்று 37வது அத்தியாயம் குறிப்பிடுவதையே இந்த 29வது அத்தியாயத்தின் வசனங்கள் மேலும் உறுதி செய்கின்றன. அதன் பிறகு தான் அல்லாஹ் அவர்களுக்கு சந்ததி பாக்கியத்தைக் கொடுக்கின்றான். அது வரைக்கும் அதாவது சத்தியப் பிரச்சாரத்தை தனது சமுதாயத்தில் வீரமாக முழங்கிக் கொண்டிருக்கும் அந்த காலம் வரைக்கும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை இந்த வசனங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
ஓர் இளம் வயதில் அதாவது ஓர் இளந்தம்பதியனர் கல்யாணம் முடித்து ஓரிரு ஆண்டுகளில் சந்ததி பாக்கியம் அடைவதை நடைமுறையில் நாம் காண முடிகின்றது. ஆனால் அப்படியொரு பாக்கியம் உரிய காலத்தில் இப்ராஹீம் நபி அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்வில் நாம் காண முடிகின்றது. அழைப்புப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் அவர்களுக்குப் பிள்ளை பாக்கியம் இல்லை. அவர்கள் நீண்ட காலம் போராடி நாட்டை விட்டுத் துறந்து சென்ற பின் முதலில் இஸ்மாயீல், அதன் பின் இஸ்ஹாக், யாக்கூப் என்று சந்ததி பாக்கியத்தை அல்லாஹ் அள்ளிக் கொடுத்ததை நாம் காணமுடிகின்றது.
மனம் தளராத மாபெரும் நபி
ஒரு பக்கம் சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தால் எதிர்ப்பலைகள் எரிமலைகளாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் அவர்களது சொந்த வாழ்க்கையில் சந்ததியில்லாமை ஒரு சோதனையாக இருந்தது. ஆனால் அது அவர்களது சத்தியப் பிரச்சாரத்தின் குறுக்கே வந்து நிற்கவில்லை. ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அது ஒரு தடையாக அமையவில்லை. தொடர்ந்து அவர்கள் தனது சத்தியப் பிரச்சாரப் பாதையில் தளர்வின்றி, விரக்தியின்றி, வெறுப்பின்றி சென்று கொண்டிருந்தார்கள்.
இன்றும் ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஓர் அழைப்பாளனுக்கு இதுபோன்று சோதனைகள் வரலாம். அப்படி வரும்போது அவர் இந்த மாமனிதரைத் தனது மனக்கண் முன்னால் நிறுத்திக் கொண்டால் அவரது கஷ்டம் காற்றாய் பறந்து போய் விடும். அவரது பாரம் பனிக் கட்டியாய் உருகி போய் விடும்.
தந்தைக்கு மன்னிப்பில்லை பிரச்சாரத்தில் தொய்வில்லை
இப்ராஹீம் நபியின் வாழ்க்கையில் அவர்களால் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அவர்களது தந்தைக்கு இறை மன்னிப்பு கிடைக்காமல் போன நிகழ்வாகும். தனது தந்தையை தவ்ஹீது கொள்கைக்கு அழைக்கும் போது அவர் மறுத்துவிட்டதை நாம் பார்த்தோம். அப்போது இப்ராஹீம் நபி தனது தந்தையை நோக்கி,
உம்மீது ஸலாம் உண்டாகட்டும்! என் இறைவனிடம் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன். அவன் என்னிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 19:47
உமக்காக துஆச் செய்வேன் என்று தந்தையிடம் வாக்குறுதி அளிக்கின்றார்கள். இறைமறுப்பாளர்களுக்கு இறைவனின் மன்னிப்புக் கிடையாது என்று அறிவித்து விடுகின்றான். அதன் பின்னால் அவர்கள் அவ்வாறு துஆச் செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
அல்குர்ஆன் 9:114
உண்மையில் இது இப்ராஹீம் நபி உள்ளத்தைக் கடுமையாகப் பாதிக்கின்ற விஷயம். ஆனாலும் அல்லாஹ்வின் முடிவை ஏற்றுத் தனது தவ்ஹீது பிரச்சாரத்தைத் தளர்வின்றி தொடர்கின்றார்கள்.
துஆ செய்வதில் விரக்தி இல்லை
“என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்ற இப்ராஹீம் நபியின் இந்த வார்த்தைகள் ஒருவர் தன்னுடைய இறைவனிடத்தில் வைத்த கோரிக்கையில் ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது. நம்பிக்கை இழந்து விடக் கூடாது என்பதை இம்மாமனிதரின் வாழ்விலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6340), முஸ்லிம் 5284
வழிப்பயணத்தில் சந்தித்த வலி மிகுந்த சோதனை
“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1
உலகில் ஒரு நாடு விட்டு இன்னொரு நாடு சென்றோரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால் அவர்கள் ஒன்று பெண்ணுக்காக அல்லது பொன் பொருளுக்காகச் சென்றிருப்பார்கள்.
ஆனால் இறைத்தூதர்களின் வாழ்க்கையில் நாடு துறந்து செல்லும் பயணம் அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கைக்காக, அந்தக் கொள்கையைக் காப்பதற்காக மட்டுமே அமைந்திருக்கின்றது. இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தில், தனது சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் சோதனையை அனுபவித்தார்கள் என்றால் அதைவிட்டு அங்கிருந்து விடுதலை பெற்று வேறு ஓர் ஊருக்குச் செல்லும் போது வழிப்பயணத்தில் சந்தித்த சோதனை மிகவும் வேதனைக்குரியதாகும்.
“ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று “சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே” என்று கூறினார்கள்.
அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்) “அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும் “எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து, “நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு, “நிராகரிப்பாளனின்….. அல்லது தீயவனின்…… சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான்” என்று கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 3358
இது இப்ராஹீம் நபி அவர்களின் ஹிஜ்ரத் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய வரலாற்றுச் செய்தியாகும்.
வழிப்பயணத்தில் சந்தித்த இந்தச் சோதனையும் அவர்களது இலட்சியத்தை விட்டும் சிதறடிக்கவில்லை. ஏகத்துவம் எனும் இலட்சிய வானில் பறந்து செல்கின்ற அவர்களின் சிறகை ஒடித்து விடவில்லை.
அன்னாருக்கு வாய்த்த அருமையான மனைவி
வழிப்பயணத்தில் அன்னார் இந்தச் சோதனையைச் சந்திக்கும் போது தனது அருமை மனைவியார் சாரா அன்னையாரிடம் சாரா (அலை) அவர்களிடம் சென்று, “சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே” என்று கூறினார்கள்.
இப்ராஹீம் நபியின் இந்த வார்த்தைகள் தெரிவிப்பது என்னவெனில், அவர்கள் காலத்தில் குடும்பம் என்ற கணக்கில் அன்னாரையும் அவர்களது மனைவியையும் தவிர வேறு இறைநம்பிக்கையாளர்கள் இல்லை.தனிமனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் லூத் (அலை) அவர்களையும் சேர்த்து 3 பேர்கள் மட்டும் தான் இருந்துள்ளார்கள் என்பதை இது காட்டுகின்றது. இந்தத் தனிமை அவர்களுக்கு விரக்தியையோ மன அழுத்தத்தையோ தரவில்லை. இது போல் அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த லூத் (அலை) எடுத்துக் கொண்டால் அவ்வூர் மக்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்ததால் மலக்குகள் அவ்வூரை அழிக்க வருகையில்,
அவ்வூரில் (லூத்துடைய) ஒரு வீட்டைத் தவிர முஸ்லிம்களில் எவரையும் நாம் காணவில்லை. (அல்குர்ஆன் 51:36)
என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இவ்விரு சம்பவங்களும் ஓர் அழைப்பாளனோ அவனுடைய குடும்பமோ தனிமைக்குள்ளானால் அதன் தவிப்பையும் வேதனையையும் சொல்லி மாளாது. ஆனால் அன்று சத்தியத்தை ஏற்றுக் கொண்ட இப்ராஹீம் நபி, அவர்களது மனைவியார், லூத் (அலை) ஆகியோர் சத்தியத்தில் உறுதியாக நின்றுள்ளார்கள். இப்ராஹீம் நபி அவர்களுக்கு அவர்களது மனைவியார் சத்தியக் கொள்கையில் இருந்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அவரது மனைவியே நேர் விரோதியாகி விட்டார்கள் என்பதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
அன்னை சாராவின் கொள்கைப் பிடிப்பு
அப்படியிருந்தும் அவர்கள் கொள்கையைச் சொல்வதில் ஓய்ந்திடவில்லை. ஒதுங்கிடவில்லை. இதில் அன்னை சாரா அவர்களின் கொள்கைப் பிடிப்பு நமக்கு மாபெரும் பாடமும் படிப்பினையும் ஆகும். காமுகன் அவர்களை அடையத் துடிக்கும்போது அவர்கள் உலூ செய்து விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிய அவர்களின் இறை நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு, அழைப்பாளர்களாக இருப்பவர்களின் மனைவியருக்கு ஒரு பாடமாகும்.
இன்று தவ்ஹீதுவாதிகளுக்குப் பெண்கள் வாழ்க்கைப்பட்டு விட்டால் அவர்களின் வாழ்க்கை போர்க்களமாகத்தான் இருக்கும். காவல்துறை, வழக்கு, நீதிமன்றம், சிறைச்சாலை என்று சோதனைகள் அணிவகுத்து வரும்.
அந்த சமயத்தில் தாயீக்களின் மனைவியர் தங்களுடைய கணவர்களை நோக்கி, எதிர்த்து வீட்டு யஹ்யாவைப் பாருங்கள், அடுத்து அஹ்மதைப் பாருங்கள், பக்கத்து வீட்டு பாதுஷாவைப் பாருங்கள். அவர்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கைப்பட்ட நாளிலிருந்து கோர்ட் கச்சேரி, ஊர் நீக்கம், அடக்கத்தல மறுப்பு என்று ஏகப்பட்ட எக்கச்சக்கமான பிரச்சனைகளைத் தான் நான் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லி புலம்ப ஆரம்பித்து விடக் கூடாது.
அவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டால் தாயீக்களின் தவ்ஹீது பயணம் சோர்வையும் சோகத்தையும் காண நேரிடும். அதனால், அத்தகையோர் அன்னை சாரா அவர்களைத் தங்கள் வாழ்வில் ஒளி வீசும் ஓர் அழகிய முன் மாதிரியாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
மேற்கண்ட ஹிஜ்ரத் சம்பவத்தில் இன்னொரு செய்தியையும் நாம் பார்க்க முடிகின்றது. என்னதான் இப்ராஹீம் நபி இறைத்தூதராக இருந்தாலும் தன் மனைவி அராஜக அரசனின் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் அவர்கள் தொழுது கொண்டு நிற்கின்றார்கள். அந்த சமயத்தில் அன்னை சாரா அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பி வருகின்ற வேளையில் மனிதர் என்ற அடிப்படையில் ஆர்வமிகுதியில் ஒரு பரபரப்பில், என்ன நடந்தது என்று சமிக்ஞையாகக் கேட்கின்றார்கள். அதற்கு அன்னையார் அவர்கள், “தீயவனின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான்” என்று சொல்லும் பதில் சுவாரஸ்யமான செய்தியாக அமைந்துள்ளது.
அன்னை சாராவுக்கு வஸீலாவான அமல்!
அன்னை சாரா (அலை) அவர்கள் காமுக அரசனிடம் மாட்டிக் கொண்ட அந்த ஹதீல் அதே புகாரியில் 6950 எண்ணில் பதிவாகியுள்ளது. அதில் “சாரா அவர்கள் எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து, தொழுதுவிட்டு, ‘அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே’ என்று பிரார்த்தித்தார்கள்” என்று இடம்பெறுகின்றது.
அநியாயக்கார அரசன் அன்னை சாரா அவர்களிடத்தில் நெருங்கும் போது இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்கள். அதாவது தனது இறைநம்பிக்கையை வஸீலாவாக வைத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதை நாம் பார்க்க முடிகின்றது. இன்று ஒரு கூட்டம் ஆட்கள் பெயரால் வஸீலா தேடலாம் என்று கண் மூடித்தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கு அன்னை சாரா அவர்கள் தனது கணவரும் அல்லாஹ்வின் இறைத்தூதரும் அவனது நண்பருமான இப்ராஹீம் நபி அவர்கள் பொருட்டால் என்னை ஆட்கொள்ள விடாதே என்று கேட்கவில்லை! தனது ஏகத்துவக் கொள்கையை வஸீலாவாக வைத்து இறைவனிடத்தில் பிரார்த்திக்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவத்தில் காணமுடிகின்றது.
இதுதான் அன்னாரது ஹிஜ்ரத் தொடர்பாக நாம் குர்ஆனிலிருந்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் பெறும் அவர்களது வரலாறாகும். இப்ராஹீம் (அலை) இளமைப் பருவம் பல அடுக்கடுக்கான சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றது. அதுபோன்றே அவர்களது முதுமைப்பருவம் சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்வு நம் அனைவருக்கும் பாடமாகவும் படிப்பினையாகவும் ஆகட்டுமாக! அதற்கு இப்ராஹீம் நபியின் இளைமைப் பருவம் என்ற இந்த ஆக்கம் துணை நிற்கட்டுமாக! அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!