மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது.
எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும், அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே!
இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். எனவே அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பினைகளில் அவர்கள் செய்த பிரார்த்தனையும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இறைவனிடமிருந்து ஏராளமான சிறப்புகள் அவர்களுக்குக் கிடைத்ததற்கும் அவர்களின் பிரார்த்தனைக்குப் பெரும்பங்கு உண்டு.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளை நாம் படிக்கும்போது அது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது, ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது. நல்ல மனிதராக இருந்தாலும், நபியாக இருந்தாலும் ஏன்? வல்ல நாயனின் நண்பராகவே இருந்தாலும் நாம் நாடியதையெல்லாம் செய்துவிடமுடியாது; அல்லாஹ்வின் நாட்டம்தான் அனைத்திற்கும் அஸ்திவாரம் என இப்ராஹீம் நபியவர்கள் ஒவ்வொரு பிரார்த்தனையின் வாயிலாக நானும் அல்லாஹ்வின் அடிமையே என்பதை நம்மவர்களுக்கெல்லாம் ஆணித்தரமாக எடுத்துரைத்துப் பாடம் புகட்டுகிறார்கள்.
பிரார்த்தனை ஒரு வணக்கம் என மார்க்கம் கூறுகிறது. இந்த வணக்கத்திலும் இப்ராஹீம் நபி குறை வைத்திடவில்லை.
இப்ராஹீம் நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் அதிகமான பிரார்த்தனைகளை முன்வைத்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் மூலமாக அவர்களுக்கும், அவர்களது சமுதாயத்தார்களுக்கும் மட்டுமின்றி நமது சமூகத்தார்களுக்கும் கூட பல நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளார்கள். இப்ராஹீம் நபியின் அந்த அற்புதமான பிரார்த்தனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பிரார்த்தனை பற்றி இப்ராஹீம் நபியின் எண்ணம்
முதலில் பிரார்த்தனை பற்றி இப்ராஹீம் நபியின் எண்ணத்தைப் பாருங்கள்.
“என் இறைவனிடமே நான் பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் (19:48)
தனது கோரிக்கையை இறைவனிடம் முன்வைப்பதை விட்டும் துர்பாக்கியசாலியாக மாட்டேன் என்பதில் இப்ராஹீம் நபி உறுதியாக இருந்தார்கள்.
ஆனால் நம்மில் அதிகமானவர்கள் நமது தேவைகளையும், கோரிக்கைகளையும் அல்லாஹ்தான் நிறைவேற்ற ஆற்றல் உள்ளவன் என்பதை அறிந்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை விட்டும் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கின்றோம்.
இன்று பலர் தங்களின் தேவைகளை யாராலும் நிறைவேற்ற முடியாது என்ற நிலை வரும்போது தான் பிரார்த்தனை என்னும் கருவியைக் கையில் எடுக்கின்றனர். இவர்களுக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகள் ஆழமான பாடத்தை நிச்சயமாகக் கற்றுத் தரும்.
அபய பூமி
رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (14:35)
رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا
“என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார்.
அல்குர்ஆன் (2:126)
இப்ராஹீம் நபி தனது மனைவியையும், மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் மாநகரமாக உருமானது. அவ்வூரை அபயமாக ஆக்க அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். அந்த ஊரில் வாழும் மக்களுக்கு பாதுகாப்புத் தலமாக அமையவேண்டும் என சமூக அக்கறையுடன் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்ததின் விளைவாகவே இன்றளவும் மக்களுக்கு அல்லாஹ் மக்காவை அபய பூமியாக ஆக்கினான்.
ஞானத்தை வேண்டுதல்
رَبِّ هَبْ لِي حُكْمًا
என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக!
அல்குர்ஆன் (26:83)
இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் அழைப்புப் பணி செய்யும்போது உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது என்றுதான் பிரச்சாரத்தையே துவங்குகிறார்கள்.
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி (ஞானம்) என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
அல்குர்ஆன் (19:43)
அம்மக்களில் அனைவரை விடவும் ஞானம் கொடுக்கப்பட்டவர்களாக இப்ராஹீம் நபியே இருந்தார்கள். இருப்பினும் ஞானத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். மக்களுக்கு நன்மையின் பக்கம் வழிகாட்ட, இன்னும் அவர்களை வழிநடத்த கல்வித்திறன் மிக அவசியமானதாகும். மேலும் இதன் மூலம் தான் மற்றவர்களின் அடுக்கடுக்கான வாதங்களை அறிவுப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதை இப்ராஹீம் நபியவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். எனவே தான் இவ்வாறு அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
இப்ராஹீம் நபியின் ஞானத்தை அவர்களின் அறிவுப்பூர்வமான அழைப்புப்பணியில் நம்மால் பார்க்க முடிகின்றது. அந்த அளவிற்கு அறிவுக் கூர்மை கொண்டவர்களாவே இப்ராஹீம் நபி இருந்தார்கள். இருப்பினும் அந்தக் கல்வி என் புறத்திலிருந்து கிடைக்கப் போவதல்ல! என் இறைவனின் புறத்திலிருந்து வருபவை என்பதால்தான் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
அவன், தான் நாடியோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். அறிவுடையோரைத் தவிர எவரும் படிப்பினை பெறுவதில்லை.
அல்குர்ஆன் (2:269)
கல்வியின் முக்கியதுவத்தை ஏராளமான செய்திகள் நமக்கு விளக்குகின்றன என்றாலும் அதிகமான மக்கள் கல்வி கற்பதில் மிகவும் அலட்சியத்தோடுதான் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் கல்வியறிவைக் கேட்குமாறு வழியுறுத்துகிறான்.
رَبِّ زِدْنِيْ عِلْمًا
“என் இறைவனே! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (20:114)
அனைத்திற்கும் கல்வி என்பதே உயிர் நாடியாக உள்ளது. எனவேதான் கல்வியாளர்களுக்கு அல்லாஹ் பல சிறப்புகளை வழங்கியுள்ளான். கல்விக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கற்றுத் தருகிறான்.
எனவே நாமும் இப்ராஹீம் நபியைப் போல் வாழ்க்கை என்ற தேர்வில் தேர்ச்சி பெற கல்வியைத் தேடக் கூடியவர்களாகவும் அதற்காக அல்லாஹ்விடம் வேண்டக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
பிள்ளையை வேண்டி…
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.)
அல்குர்ஆன் (37:100)
உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான்.
ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே அர்த்தமற்றதாக நினைக்கிறார். இந்த அளவிற்கு மனிதனால் ஏக்கத்துடன் எதிர்பார்க்கப்படும் இவ்வருட்கொடையை அனைவருக்கும் வழங்கவில்லை என்றே அல்லாஹ் கூறுகிறான்.
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கிவிடுகிறான்.
அல்குர்ஆன் (42:49,50)
இறைவன் தான் நாடியவாறு சிலருக்குப் பிள்ளைகளைக் கொடுத்து சோதிக்கின்றான். இன்னும் சிலருக்குப் பிள்ளைகளைக் கொடுக்காமல் சோதிக்கின்றான். இந்தச் சோதனைகளில் அதிகமான மக்கள் தோல்வியைதான் தழுவுகின்றனர். அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு விடுகின்றனர், பொறுமையையும் இழந்து விடுகின்றனர். ஆனால் அவ்வாறில்லாமல் இந்தச் சோதனையின் போதும் இப்ராஹீம் நபி சோர்ந்து விடாமல் அல்லாஹ்விடம் தனக்கு ஓர் வாரிசைக் கேட்கிறார்கள்.
இன்னும் பலருக்குப் பிள்ளைகள் இருந்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு உதவியாகவோ, உறுதுணையாகவோ இல்லாமல் பொறுப்பற்ற பிள்ளைகளாக இருக்கின்றனர். பெற்றோர்களைப் பேணி, பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்புள்ள பிள்ளைகளாக தங்களின் பிள்ளைகள் இல்லாததை நினைத்து இப்படிபட்ட பிள்ளையை நான் ஏன் பெற்றேன்? என்ற சிந்தனைக்கு வருமளவிற்கு சில பிள்ளைகளின் நிலையுள்ளது.
பிள்ளைகள் இருந்தும் அரவணைக்க யாருமின்றி அனாதைகளாக உள்ள பெற்றோர்கள் ஏராளம் உள்ளனர். அதேபோன்று எத்தனையோ தாய், தந்தைகள் நன்மக்களாக, நற்குணமுடையவர்களாக இருந்தபோதும் அவர்களின் பிள்ளைகள் நற்குணமுள்ளவர்களாகவோ, நல்லவர்களாகவோ இருப்பதில்லை. பெற்றோரின் பெயர்களையும் சேர்த்து நாசம் செய்துவிடுகின்றனர். இவர்கள்தான் தன் பிள்ளை என்று பிறரிடம் பகிர அவமானப்படும் அவலத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். பிள்ளை என்றாலே தொல்லை என்னுமளவிற்கு நம் சமூகத்தின் நிலையுள்ளது.
இதுபோன்ற தீய பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருப்பதில் நபிமார்களும் விதிவிலக்கல்ல எனலாம். உதாரணமாக நூஹ் நபியின் பிள்ளையை எடுத்துக்கொள்ளலாம்.
பிள்ளைகள் இருப்பதினாலேயே பெற்றோர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகளையும் கண்கூடாகவே பார்க்கின்றோம். ஆதலால் தான் இப்ராஹீம் நபி தனக்குப் பிள்ளையைக் கேட்கும்போதும் கூட அந்தப் பிள்ளை, நல்லப் பிள்ளையாக இருக்க வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
சிலர் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குத் தாமதமானால் அதை நினைத்தே ஏங்கி தமது வாழ்க்கையை இழக்கின்றார்கள். இதுபோன்ற சோதனையின் போது மனம் தளர்ந்து விடாமல் நாம் பொறுமையோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதை நீங்கள் வெறுக்கக் கூடும். ஒரு விஷயம் உங்களுக்குத் தீயதாக இருக்கும் நிலையில் அதை நீங்கள் விரும்பக்கூடும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அல்குர்ஆன் (2:216)
நமக்கு எது நல்லது, கெட்டது என்பதை நம்மைப் படைத்த அல்லாஹ் நன்கறிவான். நாம் அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லாஹ்விடம் இப்ராஹீம் நபியைப் போன்று அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு, நமது இலக்கை நோக்கி நம் பயணத்தை தொடர வேண்டும். இதை நினைத்து, நினைத்து நமது வாழ்வை வீனடித்து விடக்கூடாது.
இதுபோன்ற தருணங்களில் தனது மாமியாரால், இன்னும் பிற மக்களால் பெண்கள் மிகுதியான துன்பத்திற்கும், மனக் கவலைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த நேரத்தில் கணவன்மார்கள்தான் தங்களின் மனைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிள்ளைகள் இல்லை என்பது கணவன், மனைவி என்ற இன்பமான வாழ்விற்கு ஒருபோதும் இடையூறாகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
பிள்ளை இல்லை என்பதாலேயே பிரச்சனைகள் வருவதை பார்க்கின்றோம். ஆனால் பிள்ளைகள் இன்றியும் பிரச்சனையில்லை என்று நமக்கு முன்னுதாரணமாக முதுமை வரை வாழ்ந்தவர்கள் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
இன்று சிலர், எனக்குப் பிள்ளையில்லையே! சமூகத்தில் தலைகாட்ட முடியாது என்ற எண்ணத்தில் எப்படியாவது பிள்ளை வேண்டும் என்று நினைத்து இணைவைப்புக் காரியங்களில் தள்ளப்படுவதை பார்க்கின்றோம். தர்ஹாக்களுக்குச் சென்று தொட்டில் கட்டிப் போடுவது, அவ்லியாக்களிடம் உதவி தேடுவது போன்ற இணைவைப்பின் பக்கம் மக்கள் சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பாக்கியத்தைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது மாபெரும் இணைவைப்பு காரியம் என்பதைச் சிந்திக்க மறந்து விட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களோ தனக்குப் பிள்ளை வேண்டும் என்று அல்லாஹ்விடம் தான் கேட்கிறார்கள். ஒரு நபியவர்களே அல்லாஹ்விடம்தான் கேட்கிறார்கள் என்றால் நாம் யாரிடம் கேட்க வேண்டும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் தடுமாறும் பெற்றோர்களுக்கு இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையில் சிறந்தப் பாடம் உள்ளது.
கட்டுப்பாட்டைக் கேட்டவர்
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!
அல்குர்ஆன் (2:128)
இப்ராஹீம் நபியின் கட்டுப்பாடு எப்படிப்பட்டது என்பதை அல்லாஹ்வே பறைசாற்றுகிறான். குடும்பத்தார்களை வனாந்தரையில் விட்டுவந்ததும், பச்சிளம் பிள்ளையை பலி கொடுக்கத் துணிந்ததும் உச்சக்கட்டக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடே! இவ்வாறு கட்டுப்படுவதின் உச்சக்கட்ட காப்பாளராக இருக்கும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்விடம் கட்டுப்பாட்டைக் கேட்பதன் மூலம் நான் அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை ஆணித்தரமாக நமக்கு எடுத்துரைக்கிறார்கள்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.
அல்குர்ஆன் (33:36)
இறைவன் கூறுவதைப்போன்று அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் அதற்கு மறு பேச்சே இல்லாமல் கட்டுப்படுவதுதான் ஏகத்துவத் தந்தை இப்ராஹீம் நபி தனது வாழ்க்கை மூலமாகக் கற்றுத் தரும் மிகப் பெரிய படிப்பினையாகும். மேலும் அந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ்விடம் தான் கேட்கவேண்டும் என்ற ஏகத்துவப் பாடத்தை இந்தப் பிரார்த்தனை வாயிலாக வலியுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற பிரார்த்தனை நமது வாழ்வில் இருக்கிறதா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் கட்டுப்பாடே இல்லாத நாம்தான் இதுபோன்ற பிரார்த்தனையைக் கேட்க அதிகம் தகுதியானவர்கள் ஆவோம். நமது வாழ்க்கையில் இதுபோன்ற எண்ணற்ற நற்காரியங்கள் கவனிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஆனால் இப்ராஹீம் நபி இதுபோன்ற விசயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் விடவில்லை. எனவேதான் அவர்களின் வாழ்க்கை வெற்றிக்கு இவையாவும் உறுதுணையாக இருந்தன. எனவே இதுபோன்ற பிரார்த்தனைகளை நாம் அல்லாஹ்விடம் அதிகம் கேட்கவேண்டும்.
வணக்கத்திற்கு வழிகாட்ட…
وَأَرِنَا مَنَاسِكَنَا
எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக!
அல்குர்ஆன் (2:128)
அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை நரகில் தள்ளும் பாவமாகத்தான் பார்க்கப்படும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
நூல்: புகாரி (2697)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை யாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
நூல்: நஸயீ (1560)
எனவே நாம் எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதை நமக்கு வணக்கத்திற்குரியவன் வஹீயால் வழிகாட்டுவான்.
இதனால்தான் இப்ராஹீம் நபியவர்கள் இவ்வாறு துஆ செய்கிறார்கள். ஒரு நபியாகவே இருந்தாலும்கூட சுயமாக ஒரு வணக்கத்தை வழிகாட்ட அதிகாரம் பெறமாட்டார்கள். அல்லாஹ் எதை வணக்கமாக வழிகாட்டினானோ அதைத்தான் அவர்களும் செய்வார்கள், மக்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.
ஆனால் இன்று மார்க்கம் காட்டித்தராத பலவற்றை மார்க்கம் என்ற பெயரில் பலர் செய்கிறார்கள். தங்களுக்கு இமாம்கள் வழிகாட்டினார்கள், முன்னோர்கள், மகான்கள் வழிகாட்டினார்கள் என்று கூறுபவர்களுக்கு இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனை சவுக்கடி கொடுக்கிறது.
அல்லாஹ்வின் தோழர் இப்ராஹீம் நபியே அல்லாஹ்விடம் தான் வணக்கத்தை வழிகாட்டக் கேட்கிறார்கள் என்றால் மற்றவர்களால் எப்படி வணக்கத்தை வழிகாட்ட முடியும்? மற்றவர்கள் சொல்வது எப்படி வணக்கமாக இருக்கமுடியும் என்பதைச் சிந்தியுங்கள். இந்தப் பிரார்த்தனையின் மூலமாக நான் அல்லாஹ்வின் அடிமையே! அல்லாஹ்தான் அரசன், அதிபதி அனைத்திற்கும் தகுதியானவன் என்பதை அழகாகக் கற்றுத் தருகிறார்கள்.
வணக்கசாலியாக ஆக்கக் கோரி…
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக!
அல்குர்ஆன் (14:40)
ஒரு நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் இவ்வாறு செய்வதற்கு அல்லாஹ்வின் நாட்டம் தான் அவசியம் என்பதை உணர்ந்துதான் இதுபோன்ற பிரார்த்தனையைக் கேட்கிறார்கள். ஏனெனில் நாம் நினைத்தையெல்லாம் நம்மால் செய்துவிடமுடியாது.
இன்றும்கூட நாம் பார்க்கலாம். தொழ வேண்டும், வணக்கங்களைச் செய்யவேண்டும், நல்லவனாக வாழவேண்டும் என்றெல்லாம் பலர் நினைக்கின்றோம். என்றாலும் நம்மால் அவ்வாறு இருக்க முடியவில்லையே! ஏன்? இதற்கான காரணம் என்ன? அல்லாஹ்வின் நாட்டம் இல்லை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. இதுபோன்ற நிலையிலிருந்து இந்தப் பிரார்த்தனை நம்மைக் காக்கும்.
ஆனால் இவ்வாறான பிரார்த்தனைகள் நம்மில் எத்தனை நபர்களிடம் உள்ளது? இவ்வாறான பிரார்த்தனைகளை செய்தால்தானே அதன் மூலமாவது நாம் வணக்கசாலியாக மாறமுடியும்! இன்று மார்க்கத்தை அறிந்தவர்கள், அதை மக்களுக்கு அறிவிப்பவர்கள் கூட வணக்கத்தில் பின்தங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இதுபோன்ற பிரார்த்தனையை அலட்சியப் படுத்திவிடாமல் அல்லாஹ்விடம் அதிகமாகக் கேட்டால் நாமும் இன்ஷா அல்லாஹ் மாபெரும் வணக்கசாலியாக மாறிவிடலாம்.
வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)
அல்குர்ஆன் (2:127)
இப்ராஹீம் நபியிடமும், இஸ்மாயில் நபியிடமும் கஃபாவைக் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு விட்டோம்; நமது கடமை முடிந்து விட்டது என்று அவர்கள் கலைந்து செல்லவில்லை. மாறாக நாம் செய்த இப்பணியை இறைவன் ஏற்றுக் கொண்டானா? இதற்காக மறுமையில் நமக்கு நன்மை கிடைக்குமா? அவ்வாறு கிடைக்கா விட்டால் நமது பணி வீணாகி விடுமே என் அஞ்சி அவர்கள் செய்தப் பணியை ஏற்றுக்கொள்ள துஆ செய்கிறார்கள்.
இந்த துஆவையும் நாம் கேட்கத் தவறி விட்டோம். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற எண்ணற்ற வணக்கங்களை நாம் செய்கின்றோம். இவற்றை நாம் செய்த பிறகு இறைவா! இதை உனக்காக நான் செய்துள்ளேன், எனது காரியத்தை ஏற்றுக்கொள்வாயாக, இதற்குப் பன்மடங்கு நன்மையை வாரி வழங்குவாயாக! என்று பிரார்த்தனை கேட்டுள்ளோமா?
ஒரு வணக்கத்தைச் செய்துவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என கருதுகிறோம். அந்த வணக்கத்தை வல்லோன் ஏற்றுக் கொண்டானா என்பது பற்றிய கவலையில்லாமல் கடந்து செல்கின்றோம். ஆனால் நமது வணக்கம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அதன் விளைவு தற்போது தெரியாது. மறுமையில்தான் நாம் நஷ்டமடைதுள்ளோம், கைசேதப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து கொள்வோம்.
அதற்கு முன்பாகவே நாம் செய்யும் எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் செய்வதுடன் இப்ராஹீம் நபியைப் போன்று அவை ஏற்றுக்கொள்ளப்படவும் அல்லாஹ்விடம் இதுபோல் பிரார்த்தனையை நாம் முற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்வதால் நமது அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட இந்தப் பிரார்த்தனையும் உதவியாக இருக்கும்.
வேண்டாம் சிலைவழிபாடு
وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ
“என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (14:35)
இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தார்கள். ஒரு கட்டத்திலும் இணைவைக்கவில்லை, சிலை வழிபாடும் செய்யவில்லை, மாறாக சிலை வழிபாட்டிற்கு எதிராகக் கடும் பிரச்சாரத்தை செய்தார்கள்.
பின்னர் எதற்காக அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்? நம்மைப் பொறுத்தவரை ஒரு நபி இணை வைப்பாரா என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால் நபிமார்களின் எண்ணம் அவ்வாறு இருக்கவில்லை.
“ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிலிம் (5161)
நபிமார்களுக்கு இறைவன் செய்த எச்சரிக்கையை அவர்கள் தன்னுள்ளத்தில் ஆழப் பதிய வைத்தவர்களாக இருந்ததன் காரணமே இப்பிரார்த்தனை.
“நீர் இணைவைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் (39:65)
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை இவ்வசனத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் நாட்டம் இல்லையென்றால் நாம் வழிகேட்டிற்குச் சென்று விடுவோம், அவ்வாறு சென்று விட்டால் நம்முடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நாசமாகிவிடுமே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் நமது நிலை என்ன? நாம் தான் இன்று ஏகத்துவவாதியாக இருக்கின்றோமே இவ்வாறு இறுதிவரை இருந்துவிடுவோம் என்று நினைக்கின்றோம். ஒரு கட்டத்திலும் இவ்வாறு நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் நல்லவர்களாக இருந்த, கொள்கையில் உறுதியாக இருந்த எத்தனையோ நபர்கள் இறுதியில் கொள்கை எதிரியாக வழிகேட்டிற்குச் சென்று விட்டார்கள். ஏன்? இப்லீஸும் கூட ஆரம்பத்தில் நல்லவனாகத்தானே இருந்தான். பிறகு தான் வழிகேட்டிற்குச் சென்றுவிட்டான். இந்த அவல நிலைக்கு நாமும் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்றால் இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் இணைவைப்பை விட்டுப் பாதுகாப்பு தேடவேண்டும். நாம்தான் இணைவைக்கவில்லை, இணைவைப்பிற்கு எதிராகக் களம் காண்கிறோமே என்று பொடும்போக்காக இருந்துவிடாமல் அல்லாஹ்விடம் அதிகம் துஆ செய்யவேண்டும்.
மன்னிப்பை வேண்டுதல்
وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيم
“எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
அல்குர்ஆன் (2:128)
وَاغْفِرْ لَنَا
எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக!
அல்குர்ஆன் (60:5)
உலகில் வாழும் எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம், சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதில் இறைத்தோழர் இப்ராஹீம் நபியும் விதிவிலக்கல்ல!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால் அல்லாஹ் உங்களைப் போக்கிவிட்டு பாவம் செய்கிற வேறொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிப்பான்.
நூல்: முஸ்லிம் (5304)
நாம் பாவம் செய்யக் கூடியவர்களாக இருந்தாலும் நமது பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடவேண்டும் என மார்க்கம் கற்றுத் தருகிறது.
பாவம் செய்பவர் இப்ராஹீம் நபியாக இருந்தாலும், ஏனைய நபிமார்களாக இருந்தாலும் இன்னும் உலகில் வாழும் எந்த மனிதராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் அல்லாஹ்தான் மன்னிக்கவேண்டும்.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் (4:106)
எனவேதான் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடமே மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில் அவன் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என அவனிடமே ஆதரவு வைக்கிறேன்.
அல்குர்ஆன் (26:82)
ஆனால் இன்று சிலர் நபிமார்களிடமும், நல்லவர்களிடமும் மன்னிப்பை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது மாபெரும் இணைவைப்பாகும். இறை நேசர் இப்ராஹீம் நபி அவர்களே இறைவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கும்போது நாம் மற்றவர்களிடம் எப்படி மன்னிப்பை வேண்ட முடியும்?
இறைத்தோழர் இப்ராஹீம் நபியவர்கள் நம்மைப் போன்று பாவங்களில் மூழ்கித் திளைக்கவில்லை. பெரும், பெரும் பாவங்கள் செய்யவில்லை என்றாலும் தான் செய்த சில பாவங்களை நினைத்து அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் நமது நிலையோ பாவங்களின் மறு பெயராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, இறைத் தண்டனையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது பாவத்திற்குப் பல்வேறு நியாயங்களைக் கூறிவருகிறோம். இவ்வாறு இருக்கும் நாம் இப்ராஹீம் நபியின் இந்த துஆவை படிப்பினையாக எடுத்துக்கொண்டு நமது பாவத்தை நினைத்து அல்லாஹ்விடம் அதிகமதிகம் மன்னிப்பு தேடவேண்டும். அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவதில் அலட்சியமாகவோ, அவ நம்பிக்கையாகவோ இருந்து விடாமல் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பு தேடுவோமாக!
தந்தைக்காகப் பாவ மன்னிப்பு தேடுதல்
وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகிவிட்டார்.
அல்குர்ஆன் (26:86)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)
அல்குர்ஆன் (14:41)
இப்ராஹீம் நபி தன் தந்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்பை வேண்டுகிறார்கள். பின்னர் அவர்கள் இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு மன்னிப்பு தேடுவது தவறானது என்று தெரிந்த பின்பு அவற்றிலிருந்து விலகி விட்டார்கள்.
பொதுவாக பெற்றோர்களுக்காகப் பிள்ளைகள் பிரார்த்திப்பது மார்க்கம் வழிகாட்டிய, வலியுறுத்திய ஒன்றாகும்.
“என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!” என்று பிரார்த்திப்பீராக!
அல்குர்ஆன் (17:24)
“என் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளராக என் வீட்டிற்குள் நுழைந்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக!
அல்குர்ஆன் (71:28)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. 1. நிலையான அறக்கொடை, 2. பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
நூல்: முஸ்லிம்(3358)
இந்த ஆதாரங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்காகப் பிரார்த்திப்பதை வழிகாட்டுகின்றன. எனவே நாம் நமது பெற்றோர்களுக்காக அதிகம் துஆ செய்யக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இருப்பினும் நமது பெற்றோர் (தாய், தந்தை) அல்லாஹ்விற்கு இணைவைக்கும் நபர்களாக இருந்து, அதிலேயே மரணித்திருந்தால் அப்போது நாம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடாது.
நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த நமது தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தனது தாய், தந்தை ஆகியோருக்காகப் பாவமன்னிப்பு கேட்க முடியவில்லை. காரணம் அவர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆகவே நாம் நமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், அதையும் கன கச்சிதமாக இப்ராஹீம் நபி செய்தார்கள். இவ்வாறு மார்க்கம் காட்டித்தந்த அடிப்படியில் நமது தந்தையோ, தாயோ மரணித்திருந்தால் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம். அதே போன்று உயிரோடு வாழும் போதும் அவர்கள் நேர்வழியை அடைவதற்காகவும் பிரார்த்தனை செய்யலாம். அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தால் ஒருபோதும் பாவமன்னிப்பு தேட முடியாது.
மேலும் இவற்றில் இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கும் மன்னிப்பை வேண்டுகிறார்கள். தனது பாவம் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும், தனது உறவுகளின் பாவம் மட்டும் மன்னிக்கப்பட வேண்டும் என்று சுயநலமாக இல்லாமல் அனைத்து இறைநம்பிக்கையாளர்களின் பாவமும் மன்னிக்கப்பட்ட பிரார்த்தனை செய்கிறார்கள்.
அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவனே! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!
அல்குர்ஆன் (59:10)
(நபியே!) உமது பாவத்திற்காகவும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக!
அல்குர்ஆன் (47:19)
மற்றவர்களுக்காகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது. நாம் நமது வாழ்க்கையை மட்டும் நினைக்காமல் மற்றவர்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்மோடு வாழ்ந்தவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் எத்தனையோ நபர்கள் மரணித்துவிட்டார்கள். அவர்களின் மறுமை வாழ்க்கைக்கு அவர்களால் எந்த நன்மையையும் இப்போது செய்யமுடியாது. அவர்களின் பாவத்திற்கு மன்னிப்பும் தேடமுடியாது. எனவே அவர்களுக்காகவும் இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் துஆ செய்வோமாக!
நற்பெயரை வேண்டுதல்
وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
பின் வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
அல்குர்ஆன் (26:84)
சிலர் மறுமை வாழ்வில் வெற்றிப் பெற்றால் போதுமானது என்று நினைக்கின்றனர் இவ்வுலகத்தை அலட்சியமாகக் கருதுகின்றனர். ஆனால் மார்க்கம் நமக்கு அவ்வாறு வழிகாட்டவில்லை. நபியவர்கள் இரண்டையும் இணைத்தே துஆ செய்தார்கள்
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்:புகாரி (6389), முஸ்லிம் (5219)
இம்மை, மறுமை ஆகிய இருவாழ்க்கையிலும் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றுதான் மார்க்கம் கற்றுத்தருகிறது. அதேபோன்று நாம் அல்லாஹ்விடம் நல்ல பெயரை பெற வேண்டும் என்பதற்காகதான் எல்லா நற்காரியங்களையும் செய்யவேண்டும். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய எல்லா நற்காரியங்களையும் சரிவர செய்து சகமனிதருக்குச் செய்யவேண்டிய காரியங்களை சரியாகச் செய்யாமல் அவர்களிடம் கெட்ட பெயரோடும், அவர்களின் சாபத்தோடும் சென்றுவிடக் கூடாது.
சில மக்களைப் பற்றி வெளியுலகில் விசாரித்தால் நல்லவர், வல்லவர் என்பார்கள். ஆனால் அவர்களின் குடும்பத்தார்களிடமோ, அக்கம், பக்கம் உள்ளவர்களிடமோ விசாரித்தால் அவரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் நிலைதான் இருக்கும். அவர்களின் சாபத்திற்கும் ஆளான நிலையில் மரணத்தை அடைந்திருப்பார். ஒரு ஏகத்துவவாதி ஒருபோதும் இவ்வாறு வாழ்ந்துவிடக் கூடாது. அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை சரிவரச் செய்வதோடு சக மனிதர்களிடமும் இணக்கமாகவும், நற்குணத்தோடும், நல்ல முறையில் பழக, வாழ வேண்டும்.
நாம் மரணித்த பின் நம்மைப் பார்த்து நான்கு பேர் நன்மை செய்ய, நமக்காகப் பிரார்த்தனை செய்ய முன்வர வேண்டும். அப்படிபட்ட வாழ்க்கையை வாழத்தான் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். நாம் வாழும்போது நம்மை ஆயிரம் பேர் புகழ்ந்தாலும் மரணத்திற்குப் பின் நம்மைத் தூற்றுவோராக இருக்கும் நிலையில்தான் பலர் வாழ்வதைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் மரணித்தாலும் நம்மீது நல்லெண்ணம் வைக்கும் நபர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியே! இந்த நிலையில் தாம் மரணித்து விடக்கூடாது என்ற ஆசையுடன் தான் இப்ராஹீம் நபி இவ்வாறு கேட்கிறார்கள். நாம் மரணித்த பின்பு நம்மை வெறுக்கும், சபிக்கும் சாபத்திற்குரியவர்களாக நாம் மாறி விடாமல் இருக்கவேண்டுமென்றால் இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையையும் நாம் செய்ய வேண்டும்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை பிறர் பாராட்ட, புகழ, பெருமைப்படுத்த வேண்டும் என பிற மக்களுக்காக நாம் வாழ்ந்துவிடக்கூடாது. அப்படி பிற மக்களின் மதிப்பைப் பெற வேண்டும் என அவர்களுக்காக ஒரு காரியத்தைச் செய்தால் அவை நிச்சயம் நம்மை நரகில் சேர்த்துவிடும். நாம் செய்யும் அனைத்து காரியத்தையும் கலப்பற்ற முறையில் அல்லாஹ்விற்காகத் தூய எண்ணத்துடன் செய்ய வேண்டும்.
மறுமையில் இழிவை விட்டும் பாதுகாக்க!
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
(உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே!
அல்குர்ஆன் (26:87)
எல்லா மனிதர்களும் ஒருநாள் அழிக்கப்படுவோம்; இன்னும் இப்பூமி முழுவதும் அழிக்கப்படும். பின்னர் மஹ்ஷர் மன்றத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு உலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கப்படுவோம். இந்த உலகில் கண்ணியாமாக வாழ்ந்த பலர் நாளை மறுமையில் இழிவுக்குள்ளாவார்கள். அல்லாஹ்விற்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பார்கள். தனது நிலை என்னவாகும் என்று பதறுவார்கள். உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை விட்டு ஒருவர் ஓடுவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் மறுமையில் நிகழும்.
அந்நாளில் யார் இழிவுக்கு உள்ளானார்களோ அவர்களின் மறுமை வாழ்க்கை கைசேதம்தான். யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அந்தக் கொடூரமான நிலையில் அல்லாஹ் யாரை இழிவுக்குள்ளாக்கினானோ அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதுதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
எனவே தான் இப்ராஹீம் நபி இவ்வாறு பிரார்த்தனை செய்கிறார்கள். நாமும் அந்த மறுமையில் வெற்றி பெற மறுமையில் ஏற்படும் இழிவைவிட்டும் பாதுகாக்க இப்ராஹீம் நபியைப் போன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.
எதிரிக்கு இரையாக்காதே!
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا
“எங்கள் இறைவா! எங்களை இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாக ஆக்கிவிடாதே!
அல்குர்ஆன் (60:5)
இறை மார்க்கத்தை இளைஞராகவும், தனி மனிதராகவும் இருக்கும் நிலையில் இப்ராஹீம் நபி தம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வீரியமாக எடுத்துரைக்கும்போது எதிரிக்கு இரையாகாமல் இருக்க இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
இன்றளவிலும் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் போது எட்டுத்திக்கும் எதிர்ப்பலைகள் ஏற்பட்டு அவை நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
இன்றைய காலத்திலேயே இவ்வாறு இருக்கிறது என்றால் ஏகத்துவத் தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ எதிரிகளின் கோட்டையில் ஒற்றை மனிதராக இருந்த நேரத்தின் நிலையை சொல்லவேண்டுமா? அப்போது எந்த அளவிற்கு எதிரிகளின் எதிர்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கும். இதுபோன்ற எதிர்ப்புகளில் எதிரிக்கு இரையாகாமல் இருக்க இறைவனின் உதவிதான் அவசியம் என்பதால் அல்லாஹ்விடம் இவ்வாறு வேண்டுகிறார்கள்.
இவ்வாறு நாமும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும்போது அல்லாஹ்வின் உதவியை இரு கரமேந்தி பிரார்த்திக்க வேண்டும். குறிப்பாக இன்றைய காலத்தில் முஸ்லிமாக வாழும் ஒரே காரணத்திற்காக இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்படுத்தப்படும் இன்னல்களையெல்லாம் கவனத்தில் கொண்டு இப்ராஹீம் நபியைப்போல் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் இந்தப் பிரார்த்தனை இன்றைய சூழலில் அவசியமானதாகவும், அழகிய படிப்பினையாகவும் இருக்கிறது.
நல்லவர்களுடன் சேர்க்க…
وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!
அல்குர்ஆன் (26:83)
அல்லாஹு அக்பர்! இப்ராஹீம் நபியின் சிறப்புகள் என்ன? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதையெல்லாம் நாம் அறிவோம். இப்ராஹீம் (அலை) எம்மாம்பெரிய தியாகி என்பதை அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வே உலக மக்களுக்கு உரைத்துவிட்டான். அவர்களின் வாழ்க்கையைப் பின்வரும் மக்களுக்குப் பாடமாகவும், படிப்பினையாகவும் பறைசாற்றிவிட்டான். அவர்களை மக்களுக்குத் தலைவராகவும் ஆக்கிவிட்டான். இன்னும் அவர்களைத் தன் உற்ற தோழராகவும் எடுத்துக் கொண்டான்.
இப்ராஹீம் நபியை மறுமையில் பார்க்க வேண்டும், அவர்களுடன் இருக்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு ஏகத்துவவாதியும் அளப்பரிய ஆசைகளையும், கனவு கோட்டைகளையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்பேற்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் ‘என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!’ என இறைவனிடம் கேட்கிறார்கள்.
இதிலிருந்து இப்ராஹீம் நபி எப்பேற்பட்ட மனப்பான்மையுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா? நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை! தனது பிரார்த்தனை நெடுகிலும் நான் அல்லாஹ்வின் அடிமை, நான் அல்லாஹ்வின் அடிமை, நான் அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை ஆழப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த துஆவை முன்வைத்து மனிதர்களுக்கு மீண்டும் பசுமரத்தாணி போல் பதியவைக்கிறார்கள்.
சொர்க்கத்தின் வாரிசாக்க வேண்டுதல்
وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக!
அல்குர்ஆன் (26:85)
இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அறிந்த மக்களுக்கு இந்தப் பிரார்த்தனை என்பது ஒரு பேரிடியாகதான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. என்னமாதிரியான வாழ்க்கையை இப்ராஹீம் நபி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களும் இப்புவியில் பிரவேசித்தார்களா? இப்படியான வாழ்க்கையை மனிதனால் வாழமுடியுமா? என்று நமது புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இப்ராஹீம் நபியவர்களின் வாயிலிருந்து இவ்வாறு வருவது, ‘வெறுமனே முஸ்லிமாகப் பிறந்து விட்டோம்! எனவே நிச்சயமாக நாம்தான் சொர்க்கத்தின் வாரிசு’ என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களை வாயடைக்கச் செய்கிறது.
நான் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டேன், ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறேன், ஏகத்துவத்திற்காக எதிரிகளின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானேன் என்று நினைத்து திருப்தி கொள்ளும் நாம், இந்தப் பிரார்த்தனையை நன்கு சிந்தித்து பார்க்கவேண்டும்.
நாம் செய்த தியாகங்களை இப்ராஹீம் நபியின் தியாகத்திற்கு முன்னால் ஒப்பிட்டு உரசிப் பார்க்க முடியுமா என்ன? நம்மைவிட கோடான கோடிமடங்கு தியாகம் செய்து தியாகத்தின் தலைவர் என வர்ணம் தீட்டப்படும் இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையைப் படித்த பிறகு நான் சொர்க்கவாசிதான் என்று சொல்வதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டுத்தான் ஒவ்வொருவரும் செல்ல வேண்டும். நமது நிலைமை என்னவாகும் என்ற ஏக்கத்திற்கு உள்ளாகி இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை நாமும் வாய்மொழிய வேண்டும்.
நபியவர்கள் கூறினார்கள்:
‘(இறையருள் இல்லாவிட்டால்) யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் நுழைவித்துவிடாது’ என்று கூறினார்கள். மக்கள் ‘தங்களையுமா? இறைத்தூதர்அவர்களே!’ என்று வினவினார்கள். ‘என்னையும் தான்; அல்லாஹ் மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்றார்கள்.
நூல்: புகாரி (6467)
முஹம்மது நபியின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. உலகில் யாரும், யாருக்கும் இவர் சொர்க்கவாசி, அவர் சொர்க்கவாசி என்று நாம் உத்தரவாதத்தை வழங்கிவிட முடியாது. நபிமார்களாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும், மகான்கள் என்று சொல்லப்படுபவர்களாக இருந்தாலும் அனைவரையும் அல்லாஹ்வின் நாட்டம் தான் சொர்க்கத்தில் சேர்க்கும் என்பதை இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையும், நபிகளார் கூறிய செய்தியும் நமக்குப் பளிச்சென்று பாடம் நடத்துகிறது. இப்போது அதள பாதாளத்தில் இருக்கும் நமது நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நபி கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனையை நமது வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
பிரார்த்தனை ஏற்கப்படுவதற்காகப் பிரார்த்தனை
இப்ராஹீம் நபி செய்த துஆக்களை நாம் பார்த்து வருகின்றோம் அவற்றில் இந்தப் பிரார்த்தனையும் மிக முக்கியமான படிப்பினையை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.
رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!
அல்குர்ஆன் (14:40)
நாம் எத்தனையோ பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் முன்வைக்கின்றோம் அவையனைத்தும் பயனற்றதாகி விடக்கூடாது என்பதற்காகவும், அதன் பயனைக் கட்டாயம் அடையவேண்டும் என்பதற்காகவும் இப்ராஹீம் நபி இவ்வாறு துஆ செய்கிறார்கள். பெயரளவில் நானும் பிரார்த்தித்தேன் என்று சென்று விடவில்லை இப்ராஹீம் நபியவர்கள்.
நாம் அல்லாஹ்விடம் கேட்டுவிட்டோம், அல்லாஹ் நாடினால் தருவான், நாடினால் தராமலும் இருப்பான். கேட்பது நமது கடமை! என்றும் கடந்து செல்லவில்லை. நாம் கேட்டது கட்டாயம் கிடைக்கவேண்டும் என்ற கனவோடும், ஆர்வத்தோடும் ஆசைகளோடும் பிரார்த்தித்தார்கள். எங்கே நமது கோரிக்கை வீணாகிவிடுமோ என அச்ச்த்தால் அதற்கு உறுதுணையாகவே தமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளபடவும் பிரார்த்திக்கிறார்கள். நபிகளாரும் நமக்கு அதைத்தான் கற்றும் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
இறைவா! உன்னிடம் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்பு கேட்கிறேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)
நூல்: முஸ்லிம் (5266)
துஆ என்ற வணக்கத்தில் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. பிரார்த்திப்பதில் துர்பாக்கியசாலியாகவும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இப்ராஹீம் நபி இருக்கிறார்கள். இறையருளில் அவர்களின் இறைநம்பிக்கை அளப்பரியதாக இருந்தது.
“வழிகேடர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நிராசையடைவார்கள்?” என அவர் கூறினார்.
அல்குர்ஆன் (15:56)
மனிதனுக்காக இறைவன் கொடுத்த துஆ என்னும் மகத்தான வாய்ப்பினை கன கச்சிதமாக இப்ராஹீம் (அலை) கையாண்டார்கள்.
இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையை நம்மில் பலர் கேட்டாலும் அவர்களின் உறுதியான நம்பிக்கையைப் போன்று நம்பிக்கையுடன் நாம் கேட்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
அச்சத்துடனும் ஆவலுடனும் அவனைப் பிரார்த்தியுங்கள்! நன்மை செய்வோருக்கு அல்லாஹ்வின் அருள் அருகில் இருக்கிறது.
அல்குர்ஆன் (7:56)
அல்லாஹ் தருவான் என்ற நம்பிக்கையுடன் கேட்கவேண்டும்.
இவ்வாறு உறுதியாகக் கேட்டால் இப்ராஹீம் நபிக்கு வழங்கியதைப் போன்று இறைவன் நமக்கும் இன்ஷா அல்லாஹ் வழங்குவான்.
சமூகத்திற்காகவும், சந்ததிக்காகவும் செய்த பிரார்த்தனைகள்
இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்யும்போது தமக்காக மட்டும் பிரார்த்தித்து (சுயநலமாக, தன்னலமாக) தமது பிரார்த்தனையை முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அவற்றில் தனது சந்ததிகளையும், சமூகத்தார்களையும் பின்வரும் மக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களையும் தனது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்கிறார்கள். அவைகளை இனி காண்போம்.
சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு
“என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (14:35)
வணக்கத்தை நிலைநாட்ட…
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக்கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக!
அல்குர்ஆன் (14:40)
வணக்கத்தை வழிகாட்ட…
எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக!
அல்குர்ஆன் (2:128)
கட்டுப்பாட்டைக் கேட்டல்
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!”
அல்குர்ஆன் (2:128)
நற்குணமுடைய பிள்ளை
“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.)
அல்குர்ஆன் (37:100)
பிள்ளைக்குப் பாதுகாப்பு வேண்டி…
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.
“அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும், தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்”
எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
நூல்: புகாரி (3371)
மக்களுக்குக் தலைவராக்க வேண்டி…
إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِنْ ذُرِّيَّتِي
“மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (2:124)
சந்ததியில் தூதரை அனுப்பக் கோரி…
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ
“எங்கள் இறைவனே! (எங்கள் தலைமுறையினரான) அவர்களிலிருந்து ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக!
அல்குர்ஆன் (2:129)
மனைவியையும், பிள்ளையையும் பாலைவனத்தில் விட்டு வந்த போது…
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!
அல்குர்ஆன் (14:37)
நம்பிக்கை கொண்டோருக்கு உணவை வேண்டுதல்
وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
“இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாயாக!”
அல்குர்ஆன் (2:126)
நம்பிக்கை கொண்டோருக்கும், சந்ததிக்கும் மன்னிப்பை வேண்டுதல்
“எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறை நம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!” (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)
அல்குர்ஆன் (14:41)
“எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலாஅன்பாளன்”
அல்குர்ஆன் (2:128)
இப்ராஹீம் (அலை) அவர்கள் எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும் சரி! தனக்குக் கட்டுப்பாட்டை வேண்டும்போதும் சரி! சந்ததியையும் இணைத்துக் கொள்கிறார்கள். உம்மை மக்களுக்குக் தலைவராக்கப் போகிறேன் என இறைவன் கூறிய போது ‘என் சந்ததியையும் அவ்வாறு ஆக்கு’ என்றார்கள். சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு தேடும்போதும் சந்ததிகளையும் இணைக்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுவதற்குக் கேட்ட போதும், மன்னிப்பு தேடும்போதும் அவர்களையும் இணைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளுக்குப் பாதுகாவலும் தேடுகிறார்கள்.
பாலைவனத்திலே மனைவியையும் பிள்ளையையும் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப விட்டு வந்தபோதும் தனது கடமை முடிந்து விட்டது என்றில்லாமல் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறார்கள். பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கி மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறார்கள். இன்னும் தனது சந்ததிகளிலிருந்து தூதர்களை நியமிக்குமாறும் கேட்கிறார்கள்.
தனக்கு எது தேவையோ அதை மட்டும் அல்லாஹ்விடம் கேட்காமல் தனது சந்ததிக்கும், சமூகத்திற்கும் எது தேவையோ அவையனைத்தையும் அல்லாஹ்விடம் கேட்டு குடும்ப மற்றும் சமூகப் பொறுப்பாளராகவும், பாதுகாவலராகவும் சமுதாய அக்கறையோடு இப்ராஹீம் நபி இருந்தார்கள்.
அவர்களின் சமூகம் மட்டுமின்றி இறுதிவரை இறைநம்பிக்கையாளராக இருக்கும் அனைவரையும் தமது பிரார்த்தனையில் இணைத்து அவர்களுக்காகவும் பாவ மன்னிப்பைக் கேட்கிறார்கள்.
ஆனால் இன்று தங்களை சமுதாயப் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதுன்டா? இறை உதவி தான் முதன்மையானது என்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இப்ராஹீம் நபி அவர்களின் இம்மாதிரியான பிரார்த்தனையுடன் ஒப்பிடுகையில் நமது நிலை நமக்குத் தலைகுனிவைத் தான் ஏற்படுத்துகிறது. நமக்கே நாம் பிரார்த்தனை செய்யாமல் நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கின்றோம் என்னும் போது எப்படி மற்றவர்களுக்காகப் பிரார்த்திக்கமுடியும்? உண்மையான சமூகப் போராளியாக எப்படி இருக்க முடியும்? இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் நமது குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
நமது சமூகத்தின் இன்றைய சூழ்நிலைகளையும், சமுதாய அவலங்களையும் கவனத்தில் கொண்டு உண்மையான சமூகப் போராளியாகவும், சந்ததியின் பொறுப்பாளியாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்காக இப்ராஹீம் நபியைப் போன்று இவ்வாறு துஆ செய்யவேண்டும்.
இறுதியாக இப்ராஹீம் நபி துஆவின் போது கடைப்பிடித்த வழிமுறைகளையும் நாம் கற்றுக்கொண்டு அதையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையின் போங்கு
இப்ராஹீம் நபி தனது துஆவில் சில ஒழுங்கு முறைகளைக் கையாளுகிறார்கள். அவற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவைகள் பின்வருமாறு:
“என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆகமாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். – அல்குர்ஆன் (19:47,48)
“எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டுவிட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.) – அல்குர்ஆன் (60:4)
அவன் என்னிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார். – அல்குர்ஆன் (19:47,48)
எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நீயே அறிவாய். பூமியிலோ, வானத்திலோ எந்த ஒன்றுமே அல்லாஹ்வைவிட்டும் மறையாது. – அல்குர்ஆன் (14:38)
நீயே செவியேற்பவன், நன்கறிந்தவன். – அல்குர்ஆன் (2:127)
நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன். – அல்குர்ஆன் (2:128,14:36)
நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன். – அல்குர்ஆன் – (2:129,60:05)
எனது இறைவன் பிரார்த்தனையை செவியேற்பவன். – அல்குர்ஆன் (14:39)
இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் மீதும், பிரார்த்தனையின் மீதுமுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தனது பிரார்த்தனையின் முடிவின்போது மன்னிப்பு மிக்கவன், நிகரிலா அன்பாளன், மிகைத்தவன், நன்கறிந்தவன், நுண்ணறிவாளன், பிரார்த்தனையை செவியேற்பவன் என்ற இறைவனின் பண்புகளான இம்மாதிரியான வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
பிரார்த்திக்கும் போது அல்லாஹ்வின் மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இப்ராஹீம் நபியும் அவ்வாறு இறை நம்பிக்கையோடுதான் தனது பிரார்த்தனையை அமைத்துக்கொண்டார்கள்.
அதேபோன்று பொதுவாகவே நமது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்றபோது அதற்கு உறுதுணையாக, இறைவா! நீயே மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன் என்பதுபோன்ற இம்மாதிரியான வாசகங்கள் அமைந்துள்ளன. இவைகளைக் கூறும்போது நமது அடிமைத் தனம் இன்னும் வலுப்பெறுகிறது. அல்லாஹ்வின் ஆளுமை மேலோங்குகிறது. நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன் என்பது போன்ற வாசகம் நம்மை அல்லாஹ்விடம் மென்மேலும் நெருங்கச் செய்யும் வாசகமாகவே அமைந்துள்ளது. இவ்வாறு கேட்பது அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்றுத் தருபவையாகவே உள்ளது.
“நீங்கள் ‘அல்லாஹ்’ என அழையுங்கள்! அல்லது ‘அர்-ரஹ்மான்’ என அழையுங்கள்! நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகியப் பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (17:110)
அவன்தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவன். அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்.
அவன் தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. (அவனே) அரசன், தூய்மையானவன், அமைதியளிப்பவன், அடைக்கலமளிப்பவன், கண்காணிப்பவன், மிகைத்தவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
அவன்தான் அல்லாஹ்! (அவன்) படைப்பாளன்; தோற்றுவிப்பவன்; உருவம் கொடுப்பவன். அவனுக்கு அழகியப் பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனையே போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
அல்குர்ஆன் (59:22,23,24)
இப்படி அல்லாஹ்விற்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. இவற்றில் நமது பிரார்த்தனைக்கு ஏற்றாற்போல் அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் முன்னிறுத்தி இப்ராஹீம் நபியைப் போன்று அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
இப்ராஹீம் நபி மாத்திரமின்றி மற்ற நபிமார்களும் இந்த வழிமுறையை கையாண்டுள்ளார்கள்.
நூஹ் நபி
நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்து தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் (11:45)
மூஸா நபி
“என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார்.
அல்குர்ஆன் (7:151)
அய்யூப் நபி
அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டது. நீ கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்” என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது அவருக்குப்பதிலளித்து, அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இது நமது அருளும், வணங்குவோருக்குப் படிப்பினையுமாகும்.
அல்குர்ஆன் (21:83,84)
யூனுஸ் நபி
“உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார்.
அல்குர்ஆன் (21:87)
ஸக்கரிய்யா நபி
ஸக்கரிய்யாவையும் (நினைவு கூர்வீராக!) “என் இறைவனே! என்னைத் தன்னந் தனியாக விட்டுவிடாதே! நீயே உரிமையாளர்களில் மிகச் சிறந்தவன்” என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது, அவருக்குப் பதிலளித்து, யஹ்யாவை அவருக்குப் பரிசளித்தோம். அவரது மனைவியை அவருக்காகச் சீராக்கினோம். அவர்கள் நற்காரியங்களில் விரைவோராக இருந்தனர். ஆசையுடனும், அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்தித்தனர். நமக்கே பணிவோராக இருந்தனர்.அல்குர்ஆன் (21:89,90)
நமது கோரிக்கை ஏற்கப்பட இந்த முறையையும் நாம் பயன்படுத்துவோமாக. அல்லாஹ் நமது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளப் போதுமானவன், அல்லாஹ்வே பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன்.
