இப்ராஹீம் நபியின் அழைப்புப் பணி

இவ்வுலகில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வாழ்க்கை செயல்திட்டத்தை இறைவன் வரையறை செய்துள்ளான். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இறைத்தூதர்களையும் நியமித்து அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுத் தருகிறான். இவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் இறைத்தூதர்களை நியமித்து, தமது சமூகத்தை சீர்திருத்த இறைவன் ஏற்பாடு செய்துள்ளான்.
ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் பலவீனமான படைப்பாகும். படைத்தவனின் போதனையை மீண்டும், மீண்டும் மனதில் பதியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இழிசெயலிலும், இணைவைப்பு என்னும் இருளிலும் மனிதன் விழுந்துவிடுவான்.
இதுபோன்ற இழிசெயலிலும், இணை வைப்பிலும் விழுத்துவிடக்கூடாது என பல இறைத்தூதர்கள் தம் சமூகத்திற்கு மார்க்கத்தை எடுத்துச் சொன்னாலும் அவர்களின் மரணத்திற்கு பிறகு அம்மக்கள் வந்த வழியே சென்றுவிட்டனர். பிறகு மற்றொரு இறைத்தூதரை இறைவன் நியமிப்பான். இவ்வாறு இறைத்தூதர்கள் வந்துகொண்டே இருந்தார்கள் அவர்களின் பணி இறைமார்க்கத்தை மக்களுக்குத் தூய முறையில் எடுத்துச் சொல்வதே!
இந்தப் பணிக்காகவே இப்ராஹீம் நபியும் வந்தார்கள். அவர்களின் சமுகத்திலிருந்த தீமைகளைத் தீவிரமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அவற்றை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.

தூதர்களின் பணி தூதுப் பணியே!

இறைத்தூதர்களுக்கு இறைவன் வழங்கிய பணி இறை மார்க்கத்தை எல்லா மக்களுக்கும் எத்திவைப்பதே!
தூதர்களை நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிப்போராகவுமே நாம் அனுப்புகின்றோம். யார் இறைநம்பிக்கை கொண்டு, தம்மைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் (6:48)
இறைவன் கூறிய இந்தப் பணியை இப்ராஹீம் நபியவர்களும் மிக வீரியமாகச் செய்தார்கள். இருப்பினும் அவர்களின் அழைப்புப் பணிக்கு ஆரம்பத்தில் மக்கள் ஆர்வமும், ஆசையும் கொள்ளவில்லை. அடக்குமுறையைத் தான் கையாண்டார்கள். எனினும் இறைவன் அவர்களுக்குச் சொன்ன கட்டளை, மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்து வரவேண்டும் என்பதல்ல! மாறாக நேர்வழியின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டி, அவர்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான். இதுவே அனைத்து தூதர்களுக்கும் இறைவன் இட்ட கட்டளையாகும்.
இறைவன் கட்டளையிட்டதைப் போன்று இந்தப் பணியை இப்ராஹீம் நபியவர்கள் அழகாக, செம்மையாகச் செய்து முடித்தார்கள்.

இப்ராஹீம் நபியின் பிரச்சாரம்

இப்ராஹீம் நபியின் சமுதாய மக்கள் சிலை வழிபாடு, சூரிய, சந்திர வழிபாடு என்னும் இணைவைப்பில் மூழ்கிக் கிடந்தார்கள், மூடத்தனத்தின் உச்சத்தில் இருந்துவந்தார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்கள் இளைஞராகவும், தனி மனிதராகவும் இருந்து துணிவுடன் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துரைக்கிறார்கள். அவர்கள் செய்த ஏகத்துவப் பிரச்சாரத்தை நான்கு வகையாக நாம் வகைப்படுத்தலாம்.
1. தந்தையிடம் தவ்ஹீத் பிரச்சாரம்
2. மகன்களிடம் மார்க்கப் பிரச்சாரம்
3. மக்களிடம் மார்க்கப் பிரச்சாரம்
4. மன்னனிடம் மார்க்கப் பிரச்சாரம்

தந்தையிடம் தவ்ஹீது பிரச்சாரம்

இப்ராஹீம் (அலை) அவர்களது தந்தையின் பெயர் ஆஸர் ஆகும். இவரைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம், “சிலைகளைக் கடவுள்களாக எடுத்துக்கொள்கிறீரா? உம்மையும், உமது கூட்டத்தாரையும் பகிரங்க வழிகேட்டிலேயே காண்கிறேன்” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
அல்குர்ஆன் (6:74)
இப்ராஹீம் நபியின் தந்தையான ஆஸர் என்பவர் சிலைகளை வணங்குவதன் மூலம் இணைவைப்பு என்னும் பெரும் பாவத்தைச் செய்பவராக இருந்தார். தமது தந்தையின் தவறான செயலைப் பார்த்த இப்ராஹீம் நபி தந்தையிடம் அழகிய முறையில் அழைப்பு பணி செய்கிறார்கள்.

தந்தையிடம் அன்பான அழைப்பு

தமது தந்தையை இப்ராஹீம் நபியவர்கள் அன்போடும், பாசத்தோடும் அழைத்து வணக்கத்திற்குத் தகுதியானவன் யார் என்பதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்கும் விதமாகவும், அவர்களின் கொள்கை அறியாமையை அவர்களுக்கு அழகாக தெளிவுபடுத்தும் விதமாகவும் தமது பிரச்சாரத்தைத் துவங்குகிறார்கள்.
அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (19:42)
ஏதேனும் ஒன்று, அல்லது ஒருவர், நமக்குப் பயனளிக்க வேண்டுமானால் அதற்கான ஆற்றல் அவைகளுக்கு, அல்லது அவர்களுக்கு இருக்க வேண்டும். நமது கோரிக்கையை அவை செவியுற வேண்டும், நம்மைப் பார்க்க வேண்டும், நமது தேவையைத் தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு இல்லாமல் நமது தேவையை அறியாதவையாக, நமது கோரிக்கையைச் செவியுறாதவையாக இருந்தால் அவை எப்படி நமக்குப் பதிலளிக்கும், பயனளிக்கும் என்ற அடிப்படையான வாதத்தைக் கொண்டு தமது தந்தையிடம் இப்ராஹீம் நபி கேள்வியை முன்வைக்கிறார்கள்.
ஏனென்றால், சிலைகள் என்பது மனிதனால் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்குச் செவியுறும் ஆற்றல் இல்லை, பார்க்கும் ஆற்றல் இல்லை, இன்னும் பயனளிக்கும் ஆற்றலும் இல்லை. எந்தத் தன்மையில் சிலையை நாம் வடிவமைத்தோமோ அதே நிலையில் தான் அது இறுதிவரை இருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை.
உயிரற்றவர்களிடம், அல்லது மற்ற பொருட்களிடம் யாராவது பேசினால் மக்கள் அவரை மூடன் என்பார்கள். ஏனெனில், அந்தப் பொருளால் நமக்கு எந்தப் பதிலும் தரமுடியாது, எந்தப் பயனும் தரமுடியாது.
குழந்தைகள் பொம்மையை வைத்து விளையாடும்போது, அதனிடம் பேசினால்கூட அதை நாம் விவரமில்லாமல் செய்கின்றது, இது குழந்தைத் தனம் என்போம். சிறிய பிள்ளைகள் இவ்வாறு செய்வதற்கும் சிந்தனையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா? சிந்திக்கும் திறன் படைத்த யாரும் பொம்மைகளுடன் பேசும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனத்தைச் செய்வதில்லை. காரணம் இது பகுத்தறிவுக்கு எதிரானது என்பதே!
ஆனால் பல மக்கள் உண்மையை உணராமல் சிறு பிள்ளைகளைப் போன்று, சிந்தனையற்றவர்களைப் போன்று தங்களை அறிந்தும், அறியாமலும் இதுபோன்ற அறியாமையைச் செய்து வருகின்றனர். இது மாபெரும் பாவம். இணைவைப்புக் காரியம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய வணக்கத்தை சிறுபிள்ளைத்தனமாக சிலைகளுக்குச் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கு மட்டும் உள்ள ஆற்றல் சிலைகளுக்கு இருப்பதாக நினைக்கின்றார்கள். இது எப்படி பகுத்தறிவு சிந்தனையாக இருக்கும்?
எனவே இதை விளக்கும் விதமாகவே இப்ராஹீம் நபி அழகிய முறையில் தந்தையிடம் இவ்வாறு கேள்விகளை முன்வைத்தார்கள்.
மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடம் அடுத்தடுத்து ஆணித்தரமான வாதங்களை அடுக்கடுக்காக முன்வைக்கிறார்கள்.
“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
அல்குர்ஆன் (19:43)
நேர்வழியறியாத தனது தந்தைக்கு இப்ராஹீம் நபியவர்கள், “நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் நான் உங்களுக்கு நேர்வழி காட்டுகிறேன்” என அன்பாக அழைப்பு விடுக்கிறார்கள். பொதுவாகவே தந்தைதான் பிள்ளைகளுக்குப் பக்குவத்தைப் பயிற்றுவிப்பார்கள். ஆனால், இங்கே இப்ராஹீம் நபியவர்களோ இளம் வயதிலேயே தமது தந்தைக்குப் பகுத்தறிவைப் பயிற்சியளிக்க விரும்புகிறார்கள். காரணம் அவர்களின் தந்தை அறியாமையில் இருக்கிறார்.
ஒருவர் அறியாமையில் இருக்கிறார் என்பதை நாம் அறிந்தால் அவர்களுக்கு நாம் அறிவுப்பூர்வமானவைகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு வயது வரம்பு ஒரு தடையல்ல. சிந்தனைத் தெளிவு யாரிடமிருக்கிறதோ அவர்கள் மக்களுக்கு அதைத் தெளிவுப்படுத்தும் கடமையுண்டு. அவர்கள் நம்மைவிட வயதில் முதுமையானவராக இருக்கிறார்களே, தமது தந்தையாக இருக்கிறார்களே என தயங்கி நிற்க வேண்டியதில்லை. நமக்கு ஒன்று தவறு என தெளிவாகத் தெரிந்தால் அதை எந்தத் தயக்கமுமின்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இப்ராஹீம் நபியின் இந்தச் சம்பவம் விவரிக்கின்றது.
அடுத்ததாக, தந்தையின் தீய செயலுக்குக் காரணமாக இருப்பவற்றை விளக்குகிறார்கள்.
“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவிலா அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”
“என் தந்தையே! அளவிலா அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் (19:44,45)
எல்லா தீய செயலுக்கும் அடிப்படை ஷைத்தானின் சூழ்ச்சியே என்பதை விளக்கும் விதமாகவே இப்ராஹீம் நபியவர்கள் தமது தந்தைக்கு ஷைத்தானைக் குறித்து எச்சரிக்கை செய்கிறார்கள். ஷைத்தானின் சதியால் தனது தந்தைக்குத் தண்டனை வருவதை அஞ்சி அவர்களுக்கு எச்சரிக்கையூட்டுகிறார்கள். அவர்கள் என்ன நிலைக்கு ஆளானால் நமக்கென்ன என்று இப்ராஹீம் நபி இருக்கவில்லை. தந்தைமீது அளவு கடந்த அக்கறை கொண்டார்கள். நரக நெருப்பில் தந்தை விழுந்து விடக்கூடாது என்ற உருக்கமான அக்கறையை அவர்கள் தமது தந்தையிடம் செய்த அழைப்புப் பணியில் நம்மால் பார்க்க முடிகிறது.
இன்று நாம் சந்திக்கும் அதே பிரச்சனையை இப்ராஹீம் நபி அன்றே சந்தித்து நமக்கு அழகிய வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்கள். நாம் இன்று ஏகத்துவக் கொள்கையில் இருக்கின்றோம். ஆனால் நமது தாயோ, தந்தையோ, மற்ற உறவுகளோ ஏகத்துவத்திற்கு எதிராகவும், எதிரியாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் நமது உறவுகளுக்கும் இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் அழகிய முறையில் அழைப்புப் பணி செய்யவேண்டும். இறைவனும் நமக்கு இதையே வலியுறுத்துகிறான்.
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருளாவர்.
அல்குர்ஆன் (66:6)
உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப இப்ராஹீம் நபி, முதலில் தனது தந்தையிடமிருந்து இந்த அழைப்புப் பணியைத் துவங்குகிறார்கள். இவ்வாறே ஒவ்வொரு ஏகத்துவவாதியும் இருக்கவேண்டும்.
நாம் எப்படியாவது சொர்க்கம் என்ற இன்பத்தை அடைய வேண்டும் என்ற சுயநலத்துடன் இல்லாமல் நமது குடும்பமும், உறவுகளும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற பொது நலத்துடன் வாழவேண்டும்.
ஆனால், நாம் அவர்களுக்கு நன்மைதான் செய்கிறோம் என்பதை அறியாமல் அவர்கள் நமக்குப் பலவிதமான துன்பங்களைத் தருவார்கள். அவர்களிடமிருந்து நமக்கு ஏராளமான எதிர்ப்புகள் புயலைப் போன்று ஏற்படும். அதையெல்லாம் நாம் பொருட்படுத்தாமல் அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட வேண்டும். அதை ஏற்பதும், ஏற்க மறுப்பதும் அவர்களின் உரிமை, சொல்வதுதான் நமது கடமை. இந்தக் கடமையை கன கச்சிதமாக இப்ராஹீம் நபி செய்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களின் தந்தை அதை ஏற்க முன்வராமல் மறுத்துவிட்டார். ஏகத்துவத்திற்கு முதல் எதிரியாகவும் மாறிவிட்டார்.
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (19:46)
இந்த நிகழ்விலிருந்து இப்ராஹீம் நபியின் தந்தை, இப்ராஹீம் நபிக்கு மட்டுமின்றி ஏகத்துவக் கொள்கைக்கும் எதிரியாகவே காட்சியளிக்கிறார். இந்த நிலை இறுதிவரை நீடித்து, இறக்கும் வரை இறை மார்க்கத்திற்கு எதிரியாகவே இப்ராஹீம் நபியின் தந்தை இருந்தார்கள். நபியின் தந்தை என்பதாலேயே ஒருவருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நற்பேறு கிடைத்துவிடாது, மாறாக இறைவனின் நாட்டம் இருக்க வேண்டும் என்பதற்கு இப்ராஹீம் நபியின் தந்தை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை ஏகத்துவத்தை ஏற்கவில்லை என்றாலும் இப்ராஹீம் நபி தமது கடமையை சிறப்பாகச் செய்து முடித்தார்கள். அவர்களைப் போன்று நாமும் நமது குடும்பத்தார்களுக்கு மார்க்கத்தை, ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையை நம்மில் எத்தனை பேர் நிறைவேற்றி விட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். அதிகமானவர்கள் குடும்பத்தார்களுக்கு மார்க்கத்தைச் சொல்வதில்லை. ஆனால் வெளி மக்களுக்கு வீரியமாகப் பிரச்சாரம் செய்கிறோம். நாம் முதலில் நமது குடும்பத்தாருக்கு அழைப்புப் பணி செய்யவேண்டும். நபிகளாருக்கும் இவ்வாறே அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உறவினர்களை எச்சரிப்பீராக!

(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!
அல்குர்ஆன் (26:214)
“(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214) இறை வசனத்தை அல்லாஹ் அருளியபொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), “ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்துமனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன். ஆனால்) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2753), முஸ்லிம் (303)
நாம் என்னதான் அழைப்பு பணியை சீராகவும், செம்மையாகவும் செய்தாலும் அதனால் அவர்கள் நேர்வழியை அடையமுடியாது. மாறாக இறைவன் நாடினால் மட்டுமே அவர்கள் நேர்வழி பெறமுடியும். அல்லாஹ்வின் நாட்டம் தான் இதற்கும் முக்கியம்.
அல்லாஹ்வின் நாட்டமின்றி யாரும் இறை நம்பிக்கை கொள்ள முடியாது.
அல்குர்ஆன் (10:100)
அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதனால் நாம் மறுமையில் ஒருபோதும் குற்றவாளியாக நிற்க மாட்டோம் என்பதை கவனத்தில் கொண்டு நமக்கான பணியை நாம் நிறைவேற்றிவிட வேண்டும்.

சமூகத்திடம் சத்தியப் பிரச்சாரம்

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையைத் தொடர்ந்து தமது சமூகத்தார்களையும் சீர்திருத்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அவர்களிடமும் அறிவுப்பூர்வமான வாதங்களை அடுக்கினார்கள்.
அவர்தம் தந்தையிடமும் சமுதாயத் தினரிடமும், “எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “சிலைகளை வணங்குகிறோம்; அவற்றை வணங்கிக் கொண்டே இருப்போம்” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (26:70, 71)
நீங்கள் எதை வணங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு சிலைகளை வணங்குகின்றோம், இன்னும் அதை வணங்கிக்கொண்டே இருப்போம் என்று அந்த மக்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். உடனே இப்ராஹீம் நபியவர்கள் அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.
“நீங்கள் அழைக்கின்றபோது அவை உங்களுக்குச் செவிசாய்க்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?” என அவர் கேட்டார்.
அல்குர்ஆன் (26:72,73)
தனது தந்தையிடமும், சமூகத்தார்களிடமும் எந்த நன்மையும், தீமையும் செய்யாத நிலையில் ஏன் சிலைகளை வணங்குகிறீர்கள் என்ற அழகான, அறிவுப்பூர்வமான கேள்வியை இப்ராஹீம் நபியவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் சமூகமோ அதற்குக் கூறும் அர்த்தமற்ற பதிலை பாருங்கள்.
“எனினும் இவ்வாறு செய்பவர்களாக எங்கள் முன்னோரைக் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (26:74)
நாங்கள் செய்வதுதான் சரியானது, இதுதான் அறிவுப்பூர்வமானது, இதுவே அல்லாஹ் கட்டளையிட்டது என தாங்கள் செய்வது சரி என்பதற்கு எந்தச் சான்றும் கூறாமல், எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் அப்படியே செய்கிறோம் என்று இன்றைய இணைவைப்பாளர்கள் கூறும் அதே பதிலை அன்றைய இணைவைப்பாளர்கள் இப்ராஹீம் நபியிடம் கூறுகிறார்கள்.
நாம் செய்வது சரியானதா? அல்லது தவறானதா? என்ற புரிதல் இல்லாமல் முன்னோர்கள் செய்தார்கள், எனவே நாங்களும் செய்கிறோம் என்று கூறும் நபர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஒருவராக இப்ராஹீம் நபி இருந்தார்கள். முன்னோர்கள் செய்தார்கள் நாங்களும் செய்வோம், செய்து கொண்டே இருப்போம் என்பது “தகர்த்து எறியப்படவேண்டிய தத்துவம்” என்பதைத் தமது பிரச்சாரத்தின் வாயிலாக நமக்குப் பறைசாற்றுகிறார்கள்.
“நீங்களும் முன் சென்றுவிட்ட உங்கள் முன்னோரும் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைச் சிந்தித்தீர்களா?” என அவர் கேட்டார்.
அல்குர்ஆன் (26:75,76)
நீங்களும், உங்கள் முன்னோர்களும் சிலைகளை வணங்குகிறீர்கள் சரி! ஆனால், அது எப்படிப்பட்டது, நீங்கள் எப்படிப்பட்டதை வணக்குகிறீர்கள் என்பதை சிந்தித்தீர்களா? என கேள்வியை இப்ராஹீம் (அலை) அவர்கள் முன்வைக்கிறார்கள். ஒருவன் ஒரு காரியத்தைச் செய்கிறான், காலம் காலமாகச் செய்கிறான். ஆனால், அதை ஏன் செய்கிறான், எதற்குச் செய்கிறான், அவன் என்னதான் செய்கிறான் என்ற புரிதல் இல்லாமல் செய்வது மூடத்தனமாகும் என்பதையும், நீங்கள்தான் இந்த மூடத்தனத்தில் உள்ளீர்கள் என்று பார்த்தால் உங்கள் முன்னோர்களுக்கும் உங்களைப் போன்று மூடத்தனத்தில்தான் உள்ளார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறார்கள். மேலும் உண்மையான வணக்கத்திற்குத் தகுதியானவன் யார் என்பதை உணர்த்தும் வகையில் ஓரிறைக் கொள்கையை, இறைவனின் இலக்கணத்தை அவர்களுக்குப் போதிக்கிறார்கள்.
(நீங்கள் எதை வணங்குகிறீர்களோ) அவை எனக்கு எதிரிகளே! அகிலங்களின் இறைவனைத் தவிர! அவனே என்னைப் படைத்தான். அவனே என்னை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே எனக்கு உணவளிக்கிறான்; எனக்கு அருந்துவதற்கும் தருகிறான். நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் என்னை உயிர்ப்பிப்பான். இறுதித் தீர்ப்பு நாளில் அவன் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என அவனிடமே ஆதரவு வைக்கிறேன். என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! பின்வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கி வைப்பாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகி விட்டார். (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே!
அல்குர்ஆன் (26:77-87)
வணங்குவதற்குத் தகுதியானவன் யார்? நாம் யாரை வணங்க வேண்டும்? ஏன் வணங்க வேண்டும்? நாம் வணங்குவதற்கான காரணம் என்ன? என்பதை இவ்விடத்தில் இப்ராஹீம் (அலை) அற்புதமாகவே விவரிக்கிறார்கள்.
உண்மைத்தன்மையை அறியாமல் முன்னோர்கள், மூதாதையர்கள் செய்தார்கள் என்று ஒன்றை நாமும் செய்தோமென்றால் நிச்சயமாக நாம் வழிகேட்டில் வீழ்ந்துவிடுவோம். ஒன்றை நாம் செய்வதாக இருந்தால் அதை ஏன் செய்கின்றோம், எதற்குச் செய்கின்றோம். நாம் செய்வது சரியானதுதானா? அல்லது தவறானதா? இவ்வாறு செய்தால் நமக்கு நன்மை கிடைக்குமா? அல்லது தீமை கிடைக்குமா? என்ற புரிதல் இருக்கவேண்டும் என்பதை என இப்ராஹீம் (அலை) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.
அழைப்புப் பணி அடுத்த இதழில் தொடரும் இன்ஷா அல்லாஹ்…