இப்ராஹிம்(அலை) அவர்களின் வரலாறு – பாகம் 4
ஆக்கம் : உம்மு சுஹைப்
கொடுங்கோல் மன்னனின் பரிசு..
பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன .
அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் .
தன் கணவருக்கு முற்றும் கட்டுப்பட்டவராக , உறுதுணையாகத் திகழ்ந்த அற்புதமான பெண்மணி.
பலகாலம் அந்த ஊரில் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லியும் யாரும் ஏற்பதாய் இல்லை. இருவரும் எகிப்து நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். அந்த நாட்டை ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு விசித்திரமானவன். அவனிடம் அந்த ஊருக்கு வந்திருக்கும் மனிதரைப் பற்றி சொல்லப்பட்டது. அவன் இப்ராஹீம் (அலை ) அவர்களை அழைத்து வரச் சொன்னான் .
அவரும் வந்தார். உடன் வந்திருக்கும் பெண்ணைப் பற்றிக் கேட்டான். மனைவி என்று சொன்னால் ஏதேனும் செய்து விடுவானோ என்று அஞ்சி சகோதரி என்று சொல்லி விட்டார் .
இப்ராஹீம் (அலை) வலிமை வாய்ந்த வீரர் தான், எனினும் அஞ்ச வேண்டிய விசயத்திற்கு அஞ்சாமல் நடந்து கொள்வது அறிவீனமாக ஆகிவிடும். இந்த அறிவற்ற கொடுங்கோலன் முன்பு வாதிட்டுக் கொண்டிருப்பத்திக் காட்டிலும் தப்பித்து விடுவது தான் மேலானது என்பதை விவேகம் மிக்க இப்ராஹிம் (அலை ) அறிந்தே இருந்தார்கள் .
இப்ராஹிம்(அலை) சாரா அவர்களிடம் வந்தார்கள் , “பூமியில் உன்னையும் என்னையும் தவிர இறைநம்பிக்கை உடையவர் யாரும் இல்லை ; அவனோ உன்னைப் பற்றிக் கேட்க நான் சகோதரி என்று கூறி விட்டேன் ;” என்று கூறி எச்சரித்தார்.
ஆனால் அவன் ஒரு மோசமான மிருக குணமுள்ளவன் . எந்த பெண்ணாக இருந்தாலும் , பெண்களைப் பாதுகாப்பது தான் ஒரு ஆண் மகனின் உயர்ந்த குணம் என்பதெல்லாம் அவன் அறிவிற்கு ஏறவில்லை. அந்நிய பெண்ணின் மீது பார்வை கூட படாமல் இருப்பது தான் ஒழுக்கம் என்பது மதியிழந்த அவனுக்கு தெரியவில்லை .
சாரா (அலை) அவர்களை அழைத்து வரச் சொன்னான். சாரா (அலை) அவர்களும் வந்தார்கள் .
மோசமான ஒருவனிடம் சிக்கி விட்டோம் என்று எண்ணி இறைவனிடம் துஆ செய்தார் சாரா (அலை) .
அவன் அருகில் நெருங்கவே , உடனே வலிப்பு நோய் வந்து தரையில் விழுந்து விட்டான் .
“உனக்கு தீங்கு செய்ய மாட்டேன் ; எனக்காக பிரார்தனை செய் “ என்றான் .
சாரா அவர்கள் துஆ செய்தார்கள் . அவனுக்கு நோய் சரி ஆனது .
மீண்டும் அருகில் நெருங்கினான் .
வலிப்பு வந்து விழுந்து விட்டான் .
மீண்டும் பிரார்தனை செய்யச் சொன்னான் ;
சாரா அவர்கள் இரக்கப் பட்டு பிரார்த்தனை செய்தார்கள் .
அவன் எழுந்து விட்டான் .
“யார் அங்கே !!” காவலனை அழைத்தான் ..
“நீங்கள் ஒரு மனிதப் பெண்ணை கொண்டு வரவில்லை ; ஷைத்தானை கொண்டு வந்து இருக்கிறீர்கள்;”
ஏதாவது கொடுத்து அனுப்பிவிட்டு தொலைத்தால் சரி என்று மன்னன் எண்ணினான் .
ஹாஜரா என்ற பணிப்பெண்ணை சாரா அலை அவர்களுக்கு கொடுத்து அனுப்பி விட்டான் .
சாரா, இப்ராஹிம் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததை தெரிவித்தார்கள்.
ஹாஜிராவை இப்ராஹிம் அலை அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள்.
கியாமத் நாள் வரை இஸ்லாமிய சமூகத்துக்கு ஒரு பெரும் வழிபாடு கிடைக்கக் காரணமான ஒரு பெண்ணும் , இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பரம்பரைக்கே தாயாகவும் திகழவிருக்கக் கூடிய ஒரு பெண்ணுமான அந்த பாக்கியமிக்க நமது தாய் ஒரு கொடுங்கோலனின் பரிசு என்பது ஆச்சரியமான ஒன்று அல்லவா!!
எதிரியின் கூடாரங்களில் இருந்தும் , ஈமானின் ஊற்றுக்கள் பிறப்பெடுக்கின்றன..
இறைவனின் திட்டங்கள் ஆச்சரியமானவை…
ஒட்டும் இல்லை உறவும் இல்லை..
ஹாஜரா (அலை) அவர்கள் வந்தவுடன் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாக ஆனது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அழைப்பு பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
மெல்ல மெல்ல ஒவ்வொருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர் .
இஸ்லாம் என்பது, தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டுச் சரணடைதல் ஆகும் . இறைவனல்லாத மற்ற பொருட்களை விட்டும் முற்றிலும் விலகி விடுதலும் ஆகும் . இறைவனின் நீதியான சட்டதிட்டங்களுக்கு மனிதகுலம் கீழ்படியும் போது சுரண்டல்களில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் மக்கள் விடுதலை அடைகிறார்கள் .
இறை நம்பிக்கைகள் தான் மனித சமூகத்தை ஆள்கின்றன.
அது எத்தகைய நம்பிக்கையாகவும் இருக்கலாம் . தம் தலைவர்கள் தமக்கு நன்மை தான் செய்வார்கள் என்று மக்கள் நம்பும் விதமாக ஒரு நம்பிக்கை அல்லது ஒரு சித்தாந்தம் அந்த சூழலில் கட்டமைக்கப் பட்டிருக்கும் .
எந்த ஒரு சமூகத்திலும் அதிகார வர்க்கம் என்று ஒரு குழு இருக்கும். அந்த சமூகத்தை சார்ந்த மற்ற மனிதர்கள் அவர்களுக்குக் கீழே அடிமைப்பட்டு இருப்பார்கள் . சாமானிய மக்கள் சுரண்டப்பட்டு அதிகார வர்க்கம் கொழுக்கும்.
அந்த நம்பிக்கை அறுந்து விழும் போது, அதிகார மட்டம் தம் தலைமையை இழப்பார்கள் .
சிலை வழிபாடும் அத்தகைய ஒரு தலைமையை கட்டமைக்கும் நம்பிக்கை தான் . கடவுளின் பெயரால் மக்கள் கீழ்ப்படிவார்கள் . ஏவல்கள் சடங்குகளாக்கப்படும்; விலக்கல்கள் தெய்வ குத்தங்களாக பார்க்கப் படும் .
தலைவர்களது சுயநலனுக்கு தகுந்தவாறு , அல்லது மேல்வர்க்க மக்களுக்கு தகுந்தவாறு சட்டங்கள் இயற்றி அதற்கு கடவுள் பெயர் வைக்கப்படும் . மக்கள் பயந்து கொண்டு இவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள் . மக்கள் எந்த வகையிலும் விழிப்புணர்வு பெற்று விடாமல் இருக்கும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் உருவாக்கி வைத்திருப்பார்கள் .
கடவுள் இல்லை என்ற நாத்திக கொள்கையும் அத்தகைய மூடநம்பிக்கைகளில் ஒன்று தானே தவிர அதில் உண்மை ஒன்றும் இல்லை . அதிகாரம் பெறுவதற்காகவே பொய்நம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன .
உண்மை இறைவனையும் , அவனது வல்லமைகளையும் மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் இப்ராஹீம் (அலை). மக்கள் அனைவரும் சுயாமரியாதை உடையவர்களாகவும் , பகுத்தறிவு உடையவர்களாகவும் மாற வேண்டும் என்பதே அவரது இலட்சியம்.
ஆனால் ,பெரும்பாலான மக்களுக்குத் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பது உரைப்பதே இல்லை . சுயநலமான எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதில் அவ்வளவு தீவிரம்!
அடிமைத் தனத்தில் மிக மோசமானது சிந்தனை அடிமைப்பட்டு இருப்பதாகும் . மூடத்தனங்களில் மூழ்கி சிந்தனை செயலற்று இருப்பதைக் கூட அவர்கள் அறிய முடியாமல் அவர்களது சிந்தனைகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்திருந்தன.
ஆடுகள் , தம்மைக் காக்க இருக்கும் காவலனை விரட்டிவிட்டு ஓநாயின் மடியில் தஞ்சம் அடைவது எத்தகைய மடமையோ , அந்த மக்களும் அவ்வாறே நடந்து கொண்டனர் .
அந்தச் சமூகத்தினர் தம்மை காக்க வந்த தூதர் தான் இப்ராஹீம் (அலை) என்பதைப் புறக்கணித்து , தம் சுயநலத் தலைவர்களுக்கும் , கற்சிலை தெய்வங்களுக்கும் அடிமையாய் இருப்பதைப் பேறாய் எண்ணினர்.
அவர்களது நம்பிக்கைகளுக்கு வெளியில் , வேறொரு வாழ்க்கைப் பாதை இருக்கிறது ; இவர்களது இருளான பாதை போலல்லாமல் , அது ஒளிவீசி பிரபஞ்சமெங்கும் வியாபித்து இருக்கக் கூடிய பாதை;
அந்தப் பாதை அவர்களை கண்ணியப்படுத்தும்; வளம் சேர்க்கும்; பாதுகாப்பளிக்கும் ; நீதியை நிலைநிறுத்தும் ; உரிமைகளைப் பெற்றுத் தரும்; கடமைகளை பகிர்ந்தளிக்கும் ; ஆதிக்கங்களிலிருந்து விடுதலையளிக்கும் ; சிந்தனைகளை சீர் செய்யும் ; இறைவன் அருள் பெற்றுத் தரும்;
அதை நோக்கித் தான் இப்ராஹீம் அழைத்தார் . அவர்கள் புறக்கணித்தார்கள் ; அவரை எள்ளி நகையாடினார்கள் ; வைரத்தின் பெறுமதியைக் கோழிகள் அறிவதில்லை .
தமக்கு விடுதலை பெற்றுத் தர வந்த ஒரு மனிதரை அவமதித்து , தம் அடிமைத்தனத்தைப் பொருந்திக் கொண்டவர்களை விட நன்றி கொன்றவர்கள் யார் இருக்க முடியும் ??
சத்தியம் இது தான் என்று தெரிந்தும் , அதிகாரத்தின் இருப்பிடமாய் இருப்பதால் அசத்தியத்தின் பக்கம் நிற்பதை விட கோழைத்தனம் வேறு இருக்க முடியுமா ??
இத்தகையவர்கள் மனிதகுலத்தின் விடுதலையை விட தமது சுயநலம் மட்டும் தான் பெரிது என்று வாழக்கூடிய ஒட்டுண்ணிகள்.
சுயநலவாதிகளும் , நன்றிகெட்டவர்களும் மனித குலத்தின் துருவேறிய பாகங்கள் . அவர்களால் எந்த நன்மையையும் விளையப் போவது இல்லை .
இத்தகைய மனிதர்களை முற்றிலும் புறக்கணிப்பதே உண்மைக்கு நாம் செய்யும் நன்மையாகும் .
இப்ராஹிமும் அவருடன் இருந்தவர்களும் அதைத் தான் செய்தார்கள் .
நமது உடல் பாகம் என்பதற்காக அழுகின பாகத்தையோ, புற்றுக் கட்டியையோ வெட்டி எரியாமல் இருக்க முடியாது .
இப்ராஹிமும் இறைநம்பிக்கையாளர்களும் , தங்களை எதிர்த்த அடிமைச் சமூகத்தை அழைத்துச் சொன்னார்கள் ,
“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கத்தக்க இறைவனாக ,கட்டுப்படத்தக்க எஜமானனாக , எடுத்துக் கொண்டு சுயமரியாதை அடையும் வரைக்கும் ,
அல்லாஹ்வை அன்றி நீங்கள் அடிமையாய் இருக்கும் ஒவ்வொன்றை விட்டும் நாங்கள் விலகி விட்டோம் ;
உங்களையும் நிராகரித்து விட்டோம் ;
நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்கும் வரை -உங்கள் சிந்தனை தெளியும் வரை – உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் நீடித்து இருக்கும் ;
உங்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை ;”
விடுதலையைப் புறக்கணித்த அறிவற்ற அடிமைச் சமூகத்தை விட்டும் அனைவரும் ஒதுங்கினார்கள் .
வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள் .
தனியாக ஒரு சமூகமாக வாழத் தொடங்கினார்கள் .
கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை அடைந்த சமூகத்தின் சனத்தொகை பெருக ஆரம்பித்தது ..
அது ஒரு தனி ஊராக வளரத் தொடங்கியது ..
காத்திருந்து கிடைத்த அருட்பேறு
ஆண்டுகள் உருண்டோடின . இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது .
பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன ??
அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார் .
“இறைவா ! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா …” என்று பிரார்த்தனை செய்தார் .
இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம் .
தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் அவர்களின் தந்தையாக இருந்தாலும் இறைமறுப்பாளர்களை இறைவன் மன்னிப்பதில்லை . அது நியாயமும் அல்ல .
மற்ற எல்லா பிரார்த்தனைகளையும் இறைவன் அங்கீகரித்தான்.
பொறுமை மிக்க பிள்ளை கிட்டும் என்று நற்செய்தி கிடைத்தது .
அவரது மனைவி ஹாஜரா தாயானார் .
அழகிய ஆண் குழந்தை பிறந்தது . இஸ்மாயில் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .
பல ஆண்டுகள் காத்திருந்து பெற்ற வரம் அந்தப் பிள்ளை .
பிஞ்சு விரல்களைப் பற்றிக்கொள்ளவும் , மொட்டு போன்ற அந்த முகத்தைக் கண்டு களிக்கவும் , அழுகையையும் சிரிப்பையும் , அதன் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பதற்கு ஒரு தந்தையாக இப்ராஹிமிற்கு எவ்வளவு இன்பமாய் இருந்திருக்கும் !
பிள்ளை மீது பெரும் பாசம் அவருக்கு..
பிள்ளை மீது தாயின் பாசம் அதிகம் என்றாலும் , தந்தையின் உணர்வு அலாதியானது .
ஒரு பெண் தன் பிள்ளைக்கு பாலூட்டுவதாலும், பராமரிப்பதாலும் தன் அன்பை வெளிப்படுத்தி விடுவாள் . ஆனால் ஒரு தந்தை தன் பிள்ளையின் மீது காட்டும் பாச உணர்வுக்கும் பொறுப்புணர்வுக்கும் வேறு யாரும் ஈடாக மாட்டார்.
பிள்ளை பிறந்து சில நாட்கள் கடந்தன ..
அப்போது தான் இறைவனிடம் இருந்து அந்தக் கட்டளை வந்தது .
கட்டுப்படுதலில் ஒவ்வொருவரும் ஒரு தகுதியில் இருப்பார்கள் .
இப்ராஹீம் (அலை) அதில் முதலாமவராக இருந்தார் . அவரது கட்டுப்படுதல் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாக ஆனது . இஸ்லாம் என்பதற்கு இலக்கணமாக இப்ராஹீம் (அலை) இருந்தார்கள் .
எண்ணங்களே செயல்பாடுகளின் பிறப்பிடமாகும் .
இப்ராஹீம் (அலை) தனது ஆழ்மனதின் எண்ணத்தை இறைவனிடம் சொன்னார் .
“வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன் எவனோ அவன் பக்கம் சத்திய நெறியில் நின்றவனாக என் முகத்தை திருப்பி விட்டேன் .நான் இணை வைப்பவன் அல்ல “
இது அவரது மனதின் அடியாழத்தின் கூற்று .
(இந்த வார்த்தைகளைத் தான் ஒவ்வொரு முஸ்லிமும் தமது தொழுகையின் ஆரம்பத்தில் ஓதுவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்தான்)
இறைவனின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்படுதலை பேரின்பமாக கருதினார் .
அந்த கட்டளை எத்தகையதாக இருந்தாலும் அவருக்கு அது இன்பம் தான் .
இறைவன் அவரது கட்டுப்படுதலை சோதித்தான் .
தனது அன்பு மனைவியையும் , அருமைப் பிள்ளையையும் பல மைல்கள் தொலைவில் உள்ள பாலைவனமான மக்காவில் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் என்பது தான் அந்த கட்டளை .
இறைவன் கட்டளையிட்டு விட்டால் இப்ராஹீம் தாமதிப்பது இல்லை .
உடனே கிளம்பி விட்டார் .
பிள்ளையை ஏந்திக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு பயணம் தொடங்கியது .