இப்ராஹீம் நபி (அலை) ஹனீஃப் முஸ்லிமா? அப்படியென்றால் என்ன? என்று ஒருவர் ஆச்சரியத்துடன் விழிப்புருவங்களை உயர்த்தி வினா எழுப்பலாம். ஹனஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதென்ன ஹனீஃப் முஸ்லிம் என்று கேட்கலாம். ஆம்! அல்லாஹ் திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஹனீஃப் முஸ்லிம் என்று குறிப்பிடுகின்றான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பவர்கள் ஆகியோர் அவர்களைத் தங்களுக்கென்று உரிமைக் கொண்டாடும்போது அவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றான.
உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், (முஷ்ரிக்குகள் எனும்) இணைவைப்பவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு பெரும் சமுதாயங்கள் இப்ராஹீம் நபி தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள். அதாவது தாங்கள் இப்ராஹீம் நபியின் நேரடியான இரத்த வாரிசுகள் என்ற அடிப்படையில் அந்த உரிமையைக் கோரினார்கள். இந்தச் சமுதாயங்கள் இப்ராஹீம் நபி (அலை) அவர்களுக்கு இரத்த பந்த அடிப்படையில் எப்படி சொந்தமாகின்றார்கள் என்பதை வரிசையாகப் பார்ப்போம்.
யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பனூ இஸ்ராயீல் இனத்தைச் சார்ந்தவர்கள். இஸ்ராயீல் என்பது யஃகூப் நபி (அலை) அவர்களின் பெயராகும். அவர் இஸ்ஹாக் நபி (அலை) அவர்களின் மகனாவார். இஸ்ஹாக் (அலை), இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனாவார். இந்த அடிப்படையில் பனூ இஸ்ராயீல் அதாவது இஸ்ரவேல் மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் நேரடி இரத்த பந்தங்களாகி விடுகின்றனர். இப்ரஹீம் (அலை) அவர்கள் நேரடி சந்ததிகளாகி விடுகின்றனர். அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதே சந்ததியைச் சார்ந்த மூஸா (அலை) அவர்கள் ஆவார்கள்.
கிறிஸ்தவர்களும் பனூ இஸ்ரவேலர்கள் தான். வித்தியாசம் அவர்களின் நபி ஈஸா (அலை) தூதர் ஆவார்கள். அவ்வளவு தான். இந்த அடிப்படையில் இரு சமுதாயங்களும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் நேரடி வாரிசுகள்;நேரடி இரத்த பந்தங்கள் ஆவர்.
மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் எனும் இணைவைப்பாளர்களின் நிலை? அவர்களும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வாரிசுகள் தான். இப்ராஹீம் நபி (அலை) அவர்களது மகனான இஸ்மாயீல் (அலை) அவர்களின் நேரடி சந்ததிகள் தான் மக்காவிலிருந்த இணைவைப்பாளர்கள். ஹஜ் வணக்கத்தின் மிச்ச சொச்சங்கள் இதற்கு சாட்சியங்களாக அமைந்தன. ஆனால் அவற்றில் இணைவைப்புகள், பித்அத்துகள் இனம் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து கிடந்தன.
நபி (ஸல்) அவர்கள் தூதரான பின் கலப்படங்கள் அகற்றப்பட்டு தூய இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய ஹஜ் வணக்கங்கள் மறுவடிவம் பெற்றன. முந்தைய இரு சமுதாயங்களின் உரிமையைக் காட்டிலும் இவர்களது உரிமை ஒரு படி மேலே இருந்தது என்று சொல்லும் அளவுக்கு ஹஜ் வணக்கங்கள் இவர்களுக்குக் கை கொடுத்தன.
முஸ்லிம்களும் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள். முஹம்மது (ஸல்) அவர்களும் மக்காவாசி என்ற அடிப்படையில் இரத்த பந்தந்தால் அதே இனத்தை சார்ந்தவர்கள் தான். ஆனால் ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டார்கள். அல்லாஹ் இந்நான்கு சாரார்களுக்கு மத்தியில் கொள்கை அடிப்படையில் தீர்ப்பளிக்கின்றான்.
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3:67
இந்த வசனத்தில் அல்லாஹ் இப்ராஹீம் நபி மூன்று சாரர்களிலும் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு ஹனீஃபாக இருந்தார். அதாவது முஸ்லிம் ஹனீஃபாக இருந்தார் என்று குறிப்பிடுகின்றான். அத்துடன் கீழ்க்காணும் வசனத்தில்,
இப்ராஹீமின் விஷயத்தில் மக்களிலேயே மிகத் தகுதி படைத்தவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டோருமே ஆவர். அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்.
அல்குர்ஆன் 3:68
இப்ராஹீம் நபி, முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று தெரிவிக்கின்றான்.
ஏகபோக வாரிசுகள் இல்லை ஏகத்துவ வாரிசுகள் மட்டுமே
நான்கு சாரார்களில் இப்ராஹீம் நபி (அலை) அவர்களுக்கு மிகவும் தகுதியானவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களும், நம்பிக்கை கொண்ட இந்த முஸ்லிம்களும்தான் என்று அல்லாஹ் இப்ராஹீம் நபி (அலை) அவர்களுடனான உறவு இரத்த பந்த அடிப்படையில் அல்ல; இலட்சிய பந்த அடிப்படையில் தான்; குருதி அடிப்படையில் அல்ல; கொள்கை அடிப்படையில் தான் என்று சரியான தீர்ப்பை எழுதி முடித்து விட்டான்.
இரத்த அடிப்படையில் நீங்கள் இப்ராஹீம் நபி (அலை)க்கு ஏகபோக வாரிசுகள் என்று வாதிடலாம். அதனால் இப்ராஹீம் (அலை) உங்களுக்குச் சொந்தமாக மாட்டார்கள். ஆனால் ஏகத்துவ வாரிசுகளே அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்று உறுதியாக இந்த வசனங்களில் கூறி விட்டான்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் ‘மில்லத்த இப்ராஹீம ஹனீஃபன்’ என்றும் ‘ஹனீஃபன் முஸ்லிமன்’ என்றும் குறிப்பிடுகின்றான். அவற்றை இப்போது பார்ப்போம்.
மில்லத்த இப்ராஹீம ஹனீஃபா
“நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 2:135
“அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 3:95
நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்
அல்குர்ஆன் 4:125
“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 6:161
(நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!“ என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:123
சத்திய நெறியில் நின்று, இம்மார்க்கத்தில் உமது முகத்தை நிலைபெறச் செய்வீராக! (இதுவே) அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாகும். அதன்மீதே அவன் மனிதர்களைப் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் மாறுதல் இல்லை. இதுவே நேரான மார்க்கமாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
அல்குர்ஆன் 30:30
ஹனீஃபன் முஸ்லிமன்
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3:67
ஹனீஃபன்
சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன். இது மிகப் பெரியது” என்று கூறினார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணையாக்குபவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனை நோக்கி, சத்திய நெறியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை வைப்போரில் உள்ளவன் அல்ல” என்று கூறினார்.
அல்குர்ஆன் 6:78,79
சத்திய நெறியில் நின்று, இம்மார்க்கத்தில் உமது முகத்தை நிலைபெறச் செய்வீராக! நீர் இணைவைப்போருள் ஒருவராக ஆகிவிடாதீர்!
அல்குர்ஆன் 10:105
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
அல்குர்ஆன் 16:120
இத்தனை வசனங்களில் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் ஹனீஃபன் என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றான். ஹனீஃபன் என்றால் அது யூத, கிறிஸ்துவ, இணைவைப்பு மார்க்கத்தைச் சாராத சத்திய நெறியாகும்.
முஸ்லிம் ஹனீஃபாவாக இருந்த ஸைத் பின் அம்ர்!
முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பே அறியாமைக் காலத்தில் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அந்த சத்திய நெறியில், அதாவது இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் மார்க்கத்தில் இருந்துள்ளார்கள். அதற்கு அவர்களே விளக்கமாக இருந்துள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் அழகாக விளக்குகின்றது.
ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல், (நபித்துவ காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின்பற்றுவதற்காக ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கதைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அந்த அறிஞரிடம், ‘நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக் கூடும். எனவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்’ என்று கூறினார். அதற்கு அந்த அறிஞர், ‘அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் (கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்) கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது’ என்று கூறினார்.
ஸைத் அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தானே வெருண்டோடி வருகிறேன். மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தரமுடியுமா?’ என்று கேட்டார்.
அந்த அறிஞர், ‘அது (ஹனீஃபாகவே அதாவது சத்திய நெறியான) நேரிய மார்க்கமாகத் தவிர இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்’ என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், ‘ஹனீஃப்- சத்திய நெறி- என்பதென்ன?’ என்று கேட்டதற்கு அந்த அறிஞர், ‘இது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவும் இருக்கவில்லை. கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்’ என்று கூறினார்.
(மீண்டும்) புறப்பட்டுச் சென்று கிறிஸ்தவ அறிஞர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் யூத அறிஞரைப் போன்றே, ‘அல்லாஹ்வின் (கருணையைவிட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ‘அல்லாஹ்வின் சாபத்திலிருந்து தானே நான் வெருண்டோடி வருகிறேன். அல்லாஹ்வின் சாபத்திலிருந்தும் அவனுடைய கோபத்திலிருந்தும் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். (அவற்றை) எப்படி என்னால் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு நீங்கள் அறிவித்துத் தருவீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர், (ஹனீஃபாகவே அதாவது சத்திய நெறியான) ‘நேரிய (ஏகத்துவ) மார்க்கமாகத் தான் அது இருக்குமென்பதை நான் நன்கறிவேன்’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ஹனீஃப்- சத்திய நெறி- என்பதென்ன?’ என்று கேட்டதற்கு அந்த அறிஞர், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம், அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
ஸைத் அவர்கள் அந்த அறிஞர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பற்றிக் கூறியதைக் கண்டபோது, (அவர்களிடமிருந்து) புறப்பட்டு வெளியே வந்ததும் தம் கைகளை உயர்த்தி, ‘இறைவா! நான் இப்ராஹீம் (அலை) அவர்களின் (ஏகத்துவ) மார்க்கத்தில் உள்ளேன் என்று உறுதி கூறுகிறேன்’ எனக் கூறினார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 3827.
இந்த ஹதீஸ் ஹனீஃப் என்றால் அது யூத, கிறிஸ்த்துவ, இணை வைப்பு மார்க்கமல்ல! தூய இப்ராஹீம் நபியின் மார்க்கம் என்று தெளிவுபடுத்துகின்றது. இன்றைக்கு சமுதாய முஸ்லிம்கள் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருக்கின்றனர். ஆனால் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் போன்று முஸ்லிம் ஹனீஃபாக இல்லை என்பதே உண்மையாகும்.
படைத்தவற்றை உண்ணாத உறுதிமிக்க கொள்கையாளர்
இன்று முஸ்லிம்கள் கப்ருகளில் அடங்கியிருக்கும் இறந்து போன அவ்லியாக்கள் பெயரில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுகிற இணைவைப்புக் காரியத்தை சர்வ சாதாரணமாக செய்யக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களோ அறியாமைக் காலத்தில் இதுபோன்ற இணைவைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதை நாம் காண முடிகின்றது. ஒரு பக்கம் எதிர்த்து நின்றதுடன் மட்டுமல்லாமல், இன்னொரு பக்கம் அவர்கள் அறுத்து பலியிட்ட இறைச்சியை சாப்பிடாமல் இப்ராஹீம் நபி பாணியில் புறக்கணிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
நபி(ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு பல்தஹில் ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயணஉணவு ஒன்று நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் இப்னு அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), ‘நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன்’ என்று கூறினார்கள். ஸைத் இப்னு அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், ‘ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற் பூண்டுகளை) முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரால்லாத மற்ற (கற்பனை தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரைக் கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கூறி வந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3826
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வருதற்கு முன்பே ஸைத் பின் அம்ர் (ரலி) இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் உறுதியாக இருந்திருக்கின்றார்கள் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆம்! ஸைத் பின் அம்ர் (ரலி) அன்று இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் சேற்றில் வளர்ந்த செந்தாமரையாக தவ்ஹீதின் சின்னமாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். இம்மாமனிதர் மட்டும் அம்மக்களுக்கு மத்தியில் தனித்து நின்றிருக்கின்றார் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது
இப்ராஹீமின் மார்க்கத்தில் இவரைத் தவிர யாருமில்லை
அறியாமைக் காலத்தில் இவரைத் தவிர இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் வேறு யாருமில்லை என்று பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, ‘குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின் படி நடக்கவில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தேன். மேலும், அவர் உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், ‘அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), ‘நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளுடைய செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்’ என்று சொல்வார்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி)
நூல்: புகாரி 3828
இம்மாமனிதரே அறியாமைக்கால இணை வைப்பாளர்களை நோக்கி, ‘என்னை தவிர உங்களில் யாரும் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் இல்லை’ என்று போட்டு உடைக்கின்றார்கள்.
அவரைப் போன்றுதான் இன்றைக்கு தவ்ஹீது ஜமாஅத்தினர், சுன்னத் வல் ஜமாஅத்தினரை நோக்கி, குறிப்பாக உலமாக்களை நோக்கிக் கூறுகின்றனர்.
உங்களில் எவரும் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் இல்லை. ஹனீஃபான முஸ்லிமாகவும் இல்லை. காரணம் கப்ரு வணக்கங்கள், முஹம்மது (ஸல்) அவர்களையும் முஹ்யீத்தீன் போன்றவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது, சுப்ஹான மவ்லிது என்ற பெயரில் ரசூல் (ஸல்) அவர்களைக் கடவுளாக்குவது போன்ற இணைவைக்கும் கொடுமை உங்களிடம் மலிந்து கிடக்கின்றது. உங்களில் யாரும் ஹனீஃபான முஸ்லிமாக இருப்பதில்லை. தர்ஹா வழிபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை.
இன்று தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே திருமணங்களில் ஆடம்பரச் செலவு வேண்டாம், திருமணத்தில் வரதட்சணை வேண்டாம், பெண் வீட்டு விருந்து வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வதுடன் மட்டுமல்லாது அவற்றில் கலந்து கொள்ள வேண்டாம், அவற்றை புறக்கணியுங்கள் என்று சொல்கிறது. அதை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் கடைப்பிடித்து வருகின்றான். இதன் மூலம் பெண் சிசுக்களைக் கருவிலேயே கொல்லும் பாவத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி வருகின்றது.
பெண்ணினத்தைக் காப்பதற்கு ஸைத் பின் அம்ர் (ரலி) அவர்களை ஏகத்துவக் கொள்கை எப்படி இயக்கியதோ அதுபோல் இன்று ஒவ்வொரு ஏகத்துவக் கொள்கைவாதியையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான்.
ஆனால் சமுதாயமும் ஆலிம்களும் அந்தக் கொள்கையில் இல்லை. அதன் வெளிப்பாடு தான் அண்மையில் கள்ளக்குறிச்சியில் நடந்த ஹஃப்சா என்ற மணப் பெண்ணின் தற்கொலை. வரதட்சணை கொடுமை காரணமாக இரண்டு மாதப் பெண் குழந்தையைப் பரிதாபமாக விட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். சத்திய முழக்கம் செப்டம்பர் 2022 மாத இதழில் ஹஃப்ஸாவின் தற்கொலைக்கு ஆலிம்களே காரணம் என்று தலைப்பிட்டு ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
இதற்கும், இன்னும் பல சீர்கேடுகளுக்கும் சீரழிவுகளுக்கும் காரணம் இன்றைய சமுதாய மக்கள் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றாததும், ஹனீஃப் முஸ்லிமாக இல்லாததும் தான் என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து கொள்கின்றோம்.
இந்தச் சமுதாய மக்களை, அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றச் செய்வதற்கு, ஹனீஃப் முஸ்லிமாக வாழச் செய்வதற்காகவே ‘அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)’ என்ற செயல்திட்டத்தை வீரியத்துடன் இந்த ஜமாஅத் எடுத்துச் செல்கின்றது என்பதைப் பணிவாய், கனிவாய் தெரிவித்துக் கொள்கிறோம்.