இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்

இப்ராஹீம் நபியின் வரலாறு பாகம் 3

ஆக்கம் : உம்மு சுஹைப்

திருவிழா

ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது .

எங்கு பார்த்தாலும்  மக்கள் கூட்டம் .

ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது .

சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் .

இப்ராஹீம்(அலை)  போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்.

திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்;

“ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார்.

“ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) .

சமாளிக்க வேறு எதுவும் சட்டென்று நினைவில் வரவில்லை .

அவரது தந்தையிடமும் கூட்டத்தாரிடமும் , “ நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் எல்லாம் என்ன ?” என்றார் .

“முன்னோர்கள் எல்லாம் இவைகளைத் தானே வணங்கி வந்தார்கள் “ என்றார்கள்.

அந்த சிலைகள் தான் அவர்களைப் படைத்தன என்று கூறுவதற்கு அவர்களுக்குத்  துணிவு வரவில்லை. அவர்களது வாய் தான் பதில் சொன்னதே தவிர , சிந்தனை பதிலளிக்கவில்லை .

“நீங்களும் , உங்கள் முன்னோர்களும் …..!!!!”

“எல்லோரும் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கிறீர்கள்…!” இப்ராஹீம் சொன்னார்.

“என்ன சொல்கிறீர் ? உண்மையை தான் சொல்கிறீரா ?? விளையாடுகிறீரா ??” கேட்டவர்கள் ஆவேசப் பட்டார்கள் .

“விளையாடவெல்லாம் இல்லை..,

வானங்களுக்கும் பூமிக்கும் யார் இறைவனோ , அவன் தான் உங்கள் இறைவன் ; அவன் தான் அவற்றை படைத்தான் ; அதற்கு நானும் ஒரு சாட்சி !”

“ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நீங்கள் சென்ற பிறகு சிலைகள் விசயத்தில் ஒரு தந்திரம் செய்யப் போகிறேன் “ என்றார் .

அனைவரும் திருவிழாவுக்கு சென்று விட்டனர் .

இப்ராஹீம் ஒரு திட்டத்தோடு தான் காத்திருந்தார் போலும்,

சிறிது நேரம் கழித்து அங்கிருந்து எழுந்தார்…

ஊர் மக்களெல்லாம் படையலிட்டுப் , பூஜை செய்து,  கொண்டாடி வரும் சிலைகளெல்லாம் அசைவற்று நின்று கொண்டிருந்தன .

மதிகெட்ட மனிதர்கள் செய்வதற்கு அந்த கற்கள் தான் என்ன செய்யும் ??

வெறும் கல்லாய் இருந்த தம்மைக் கடவுளாய் மாற்றிய குற்றம் மனிதர்களைத் தானே சேரும் ??

அவ்விடம் நிசப்தமாய் இருந்தது ;

சிற்பிகளால் நேர்த்தியாக செதுக்கப்பட்டு , அவைகளின் கண்களும் காதுகளும் தத்ரூபமாக இருந்தாலும் கூட , கேட்காத காதை வைத்துக் கொண்டு என்ன தான் செய்து விட முடியும் ?

இப்ராஹீம்(அலை) நுழைந்த சப்தத்தை அவைகள் உணரவில்லை .

வரிசையாய் நின்று கொண்டிருந்தவைகளின் எதிரில் வந்து பார்த்தார் இப்ராஹீம் . ஒரு சிலை மட்டும் பெரியதாக இருந்தது . மற்ற குட்டி சிலைகளுக்கு அது தான் தலைவன் போலும் ;

ஒரு இளைஞன் தம் எதிரில்  நின்று கவனிப்பதைக் கூட அவற்றால் பார்க்க முடியவில்லை , கண்கள் திறந்து இருப்பது போன்று சிலை வடித்து என்ன பயன் ? பார்வை வேண்டுமே !?

அந்த சிலைகளின் முன் போய் நின்று கொண்டார் .

பொதுவாக சிலைகள் முன் உணவுப்  பொருட்கள் படையல் செய்து வைத்திருப்பார்கள் தானே?, அங்கேயும் அப்படி வைத்திருந்தார்களோ என்னவோ , இப்ராஹீம் (அலை) அவற்றிடம் பேச ஆரம்பித்தார்.

“ சிலைகளே !!”

“என்ன ? சாப்பிட மாட்டீர்களா ????”

“என்ன ஆயிற்று உங்களுக்கு ??”

“எதுவும் பேச மாட்டேன் என்கிறீர்கள் ??”

அவை அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தன , எந்த பதிலும் சொல்லவில்லை .

பதில் சொல்வதற்கு வாய் வேண்டுமே ?

என்ன கேட்டார் என்று கூட அவற்றிற்கு புரியாது , காது கேட்க வேண்டுமே ?

இப்ராஹீம் (அலை) நேராக சென்றார் .

தனது  வலது கையில் ஒரு கோடாரியை எடுத்து வந்தார்  .

ஒவ்வொரு சிலையாக அடித்து உடைத்தார்  .

அவை நொறுங்கி விழுந்தன .

கோடரியைக் கொண்டு போய் பெரிய சிலையின் அருகில் வைத்துவிட்டு வெளியேறினார் .

அலங்காரமாய் இருந்த இடம் அலங்கோலமாக ஆனது.

ஊர்ப் பஞ்சாயத்து

கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் .

வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் ..

உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி..,

நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன.

கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது .

செய்தது யாராய் இருக்கும் ?

இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை .

கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது .

யார் அவன்? கூட்டி வாருங்கள் ..

ஊர்த் தலைவர்கள் கூடினர்.

மக்கள் ஒன்று திரண்டனர் .

பெரும் அவமானமாய் தலைவர்கள் உணர்ந்தனர் .

பெரும் அபசகுனம் நிகழ்ந்ததாய் மக்கள் கருதினர் .

என்ன செய்யப் போகிறார்கள் ?

பெரியவர் ஆசரின் மகனாமே ?

சலசலப்புகளுக்கு மத்தியில் இப்ராஹீம்(அலை) அழைத்து வரப்பட்டார் .

………………..

இறைவனை விட்டுவிட்டு சிலைகளை தெய்வங்களாக வணங்கும் எல்லாரிடமும் ஒரே விதமான குண இயல்புகளை நம்மால் பார்க்க முடியும் .

அவர்களில் பிரிவினை இருக்கும் ; மேல்வர்க்கம் கீழ் வர்க்கம் என்ற வர்க்க பேதம் இருக்கும் ; கடவுள்களில் சக்திவாய்ந்த சிலை ஒன்று இருக்கும் ; சக்தி குறைந்தவை என்று சில இருக்கும் ; ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு தெய்வம் இருக்கும் ;

உலகில் எங்கு போய் சிலை வழிபாட்டாளர்களை பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பர் .

அங்கு சிலைகள் தெய்வங்கள் ,என்பதையும் தாண்டி மேல்வர்க்கத்தினரின் நலன் தான் மத வழிபாடுகளில் பிரதிபலிக்கும் .

ஏராளமான கட்டுக் கதைகள் அந்த சிலைகளின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும்..

அவைகளை நம்பி அவர்களும் பயபக்தியுடன் ஏமாந்து கொண்டிருப்பார்கள் ..

சிலை வழிபாடு தகர்க்கப் பட்டால் பாதிக்கப் படுவது சாமானிய மக்கள் அல்ல…

அதிகாரம் உடையவர்களின் ஆணவம் தான் பாதிக்கப் படும் .

சிலை வழிபாடு என்பது உயர்குடி மக்கள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காக ஏற்ப்படுத்திக் கொண்ட கலாச்சாரம் ஆகும் .

இறைவனை மட்டும் வணங்குவதில் தான் உண்மையான சுதந்திரம் உள்ளது .

இணை வைப்பு தகர்க்கப் பட்டால் , சாமானிய மக்கள் கழுத்தில் பூட்டப்பட்ட அடிமைச் சங்கிலி அறுந்து விழும் .

ஆதிக்க வர்க்கத்தின் ஆணவம் அடங்கி ஒடுங்கும் .

சுரண்டலில் இருந்து மக்கள் விடுதலை பெறுவர்.

பயமுறுத்தல்களில் இருந்து நிம்மதி பெறுவர் .

எவரும் எவரையும் கடவுள் பெயரால் ஏய்க்க முடியாது .

மூடநம்பிக்கைகள் முற்றுப் பெரும் .

மூட நம்பிக்கைகள் மறைந்து விட்டால் மக்களை சுரண்ட முடியாமல் போகும் .

எனவே , சிலை வழிபாட்டுக்கு எதிராக யார் வந்தாலும் அதை ஒடுக்க சாமானிய மக்கள் வர மாட்டார்கள் . அதிகார வர்க்கம் நேரடியாகத் தலையிடும் .

சீர்திருத்த வாதிகளை ஒடுக்கி மக்களை தம் அடிமைகளாகவே வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அந்த அதிகார வர்க்கம் தயாராக இருக்கும் .

……………………

பஞ்சாயத்து கூடியது .

ஊர்ப் பெரியவர்கள் நடுவில் ஆஜர் ஆனார்கள் .

சுற்றிலும் மக்கள் வட்டமிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர் .

தலைவர்கள் பார்வையில் உடைந்தது சிதறிக் கிடந்தது வெறும் சிலைகள் அல்ல ..

அவர்களது  அதிகாரம்… கவுரவம்..

நொறுங்கி கிடப்பது கற்குவியல் அல்ல ..

அதுவரைக்கும் அவர்கள், மக்கள் மனதில் ஏற்ப்படுத்தி வைத்திருந்த பயம்..

எனவே ,

இப்போது கொடுக்கப் போகும் தண்டனை, மக்களின் மனதில் அந்த பயத்தை மீட்ட வேண்டும் .

மீண்டும் பழைய படி இணை வைப்பதை அரங்கேற்ற வேண்டும் .

அதன் மூலம் வருமானம் கொட்ட வேண்டும் .

வேறு எவனும் இது போன்று சீர்திருத்தம் செய்கிறேன் என்று தலையெடுத்து விடக் கூடாது .

………

இப்ராஹீம் தான் செய்திருப்பார் என்று அவர்கள் மனதில் ஊர்ஜிதமாக தெரிந்தாலும் ,

ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்த ஆயத்தம் ஆகினர் .

விசாரணை தொடங்கியது.

நெருப்புக் குண்டம்

“அழைத்து வாருங்கள் அந்த இளைஞனை “

ஊர் தலைவர் முன்பு வந்து நின்றார் இப்ராஹீம் ;அவரிடம் எந்த சலனமும் தென்படவில்லை .

“இப்ராஹீமே !”

“எங்கள் தெய்வங்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா ?”

கூர்த்த அம்பு போல் சொற்கள் சீரின…

“இல்லையே “

அசராமல் அசட்டையாக பதிலளித்தார் இப்ராஹீம் .

“நீர் இல்லை என்றால், வேறு யார் ?”

“கோடாரியை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே அந்த பெரிய சிலை, அது தான் செய்திருக்கும் ..

அது பேசும் என்றால் அதைப் போய்க் கேளுங்கள் ..”

என்றார் .

ஒரு பெருங்க்கூட்டதிற்கு நடுவில் , விசாரணை மன்றத்தில் நின்று கொண்டு இப்படி ஒரு  பதிலைச்  சொல்வதற்கு  அசாத்திய துணிச்சல் வேண்டும் .

அவருக்கு வேண்டியது எல்லாம், மூடி இருக்கும் மக்களின் அறிவுக் கண்கள் திறந்துவிட வேண்டுமே என்பது மட்டும் தான் .

இவரின் பதில் அங்கிருந்தவர்களின் சிந்தனைக்  கதவைத்  தட்டியது .

“நாம் தான் அநியாயக் காரர்கள் ; இதைப் போய் தெய்வம் என்று வழிபட்டு வந்தோமே !”

சில குரல்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டது அந்த அவையில் கேட்டது.

“இவை பேசாது என்பது தான் உமக்கு தெரியுமே “

அவர்களில் ஒருவர் கேள்வி கேட்டார்.

இப்ராஹீம் நிமிர்ந்து நின்று பேச ஆரம்பித்தார் ,

“ அல்லாஹ்வை விட்டு விட்டு , உங்களுக்கு எந்த நன்மையையும் , தீமையையும் செய்ய சக்தி இல்லாத இந்த சிலைகளைப் போயா வணங்குகிறீர்கள் ??

உங்களுக்கும் இவைகளுக்கும் கேவலம் தான் மிஞ்சும்..

சிந்திக்க மாட்டீர்களா ?”

என்றார் .

ஊர்த் தலைவர்கள் உஷார் ஆயினர் .

பொது மக்களின் சிந்தனை கூர் தீட்டப்படுவதை , அவர்கள் விழிப்படைவதை, எந்த ஆதிக்கவாதியும் விரும்புவதில்லை .

மக்களெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் இவர்கள் பிழைப்பை எப்படி ஓட்டுவது?

ஊர் தலைவர் வெறியோடு எழுந்தார் ,

“தீயில் போட்டு பொசுக்குங்கள் ”

“இவனைத் தீயில் கருக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யங்கள் !!!”

“எதாவது செய்ய வேண்டும் என்றால் இதைச் செய்யுங்கள் “

அவரது வார்த்தைகளில் கடும் வன்மம் வெளிப்பட்டது .

மக்கள் பரபரப்பாயினர் .

பெரும் தெய்வக்குற்றத்திற்கு வேண்டிய தண்டனை என்று நினைத்தனர் .

தலைவரின் அடியாட்கள் குழி தோண்டி விறகை நிரப்பினார்கள் .

தீக்குண்டம் தயார் ஆனது .

பார்க்கும் மக்களுக்கே பீதி உண்டானது.

பொதுவாக வீராவேசம் பேசும் இளைஞர்கள் பிரச்சனை என்றால் ஓடி ஒளிவார்கள் ; பதில் சொல்ல மாட்டார்கள் ;

பயமுறுத்தினால் அடிபணிந்து விடுவார்கள் ; வாழ்க்கை மீது ஆசை இருக்கும் .

அங்கு நடந்ததோ தலைகீழ்..

இப்ராஹிமின் முகம் சாந்தமே வடிவாக இருந்தது .

மனத்தின் தெளிவு முகத்தில் வெளிப்பட்டது .

இறப்பைப் பற்றி மட்டுமல்ல , தீயில் கருகுவதைப் பற்றியும் கூட எந்த பயமும் அவரிடம் இல்லை .

தீக்குண்டதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்பட்டார் .

“என் இறைவன் எனக்கு போதும் ; அவனே சிறந்த பொறுப்பாளி என்றார் .”

மக்களுக்கு வியப்பாக இருந்தது .

இப்படியும் ஒரு இளைஞரா ??

சிறு துன்பம் ஏற்பட்டால் கூட தெய்வமே உனக்கு கண் இல்லையா ? என்று வசை பாடும் மக்கள் மத்தியில் ,

உயிர் போகும் சூழலில் கூட எப்படி இறைவனை இவரால் புகழ முடிகிறது ??

அவர்களுக்கு எப்படித் தெரியும் இறைநம்பிக்கையின் கணம்??

உண்மை இறைவனின் எண்ணம் உள்ளத்தில் பதிந்தால் துன்பங்கள் யாவும் துன்பம் அல்ல.. இன்பங்களே..

இறைவன் துணை இருக்க நெருப்பு தான்  என்ன செய்துவிடும்?

இறைவன் மீது இருக்கும் ஆசை முன் நெருப்பின் தீண்டுதல் எல்லாம் அவருக்கு பெரிதாக தெரியவில்லை ..

நெருப்பில் கருகினால் என்ன ? ஈரல் வெந்து போனால் என்ன ? அழகிய உருவம் அகோரமாய் மாறினால் தான் என்ன ?

இறந்து விட்டால் சந்திக்கப் போவது இறைவனை அல்லவா ?

இந்த பிரபஞ்சத்தை படைத்து ஆட்சி செய்யும் பேரரசனை தரிசிப்பதை விட இந்த நெருப்புக் குண்டம் பெரிதல்ல .. என்று எண்ணினார் இப்ராஹீம்.

அவருக்கு இறைவனே போதும் ; வேறு எதுவும் தேவைப்படவில்லை .

………………..

நெருப்பில் தள்ளினர் .

அவர் விழுந்தார் .

இறைவன் மீது அவர் கொண்ட அன்பை இறைவன் ஒப்புக் கொண்டான் .

அவனது படைப்பு  அல்லவா அந்த  நெருப்பு !!??

நெருப்புக்கு இறைவன் ஆணையிட்டான் .

நெருப்பு தன் எஜமானனின் சொல்லைக் கேட்டது .

தன் இயல்பை விட்டு குளிர்ச்சியாக ஆனது .

இப்ராஹீம் எரியவில்லை ..

நெருப்பு இதமளித்தது ; அவர் சுகமாக இருந்தார் .

வேடிக்கை பார்த்தவர்கள் விக்கித்து போயிருப்பார்கள் என்பதில் நமக்கு எந்த ஐயமும் இல்லை .

……………………..

நன்றியுள்ள அடியார்களை இறைவன் எந்நிலையிலும் கைவிடுவது இல்லை ;

ஒவ்வொரு சோதனைக்கும் ஒரு எல்லை உண்டு ; இறைவன் பார்ப்பது எல்லாம் சோதனையின்  எல்லையை அடையும் வரை நாம் பொறுமையாக இருக்கிறோமா என்பதைத் தான் .

அவன் நினைத்தால் சோதனைக்குள்ளும் சொர்க்கம் பிறக்கும் .

 

இனியும் தொடரும்….