ஹதீஸ்களின் வகைகள்
அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.
- முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
- கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)
முதவாதிர்
(அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது)
ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன.
உதாரணம்:
“என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ உள்ளிட்ட ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.
இப்படியே ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ணற்றவர்கள் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களால் அறிவிக்கப்படுவதே “முதவாதிர்” என்று குறிப்பிடப்படும். முதவாதிர் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் இதுவே பிரபலமான கருத்தாகும்.
கபருல் ஆஹாத்
(தனிநபர் செய்திகள்)
முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது.
- கரீப். 2. அஜீஸ். 3. மஷ்ஹூர்.
இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்.
கரீப்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.
உதாரணம்:
“பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1804
நபி(ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி)” மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.
அவர்களிடமிருந்து “அபூ ஸாலிஹ்” என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.
அவரிடமிருந்து “சுமைஇ” என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
அவரிடமிருந்து “மாலிக் பின் அனஸ்” என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில் இது “கரீப்” என்று குறிப்பிடப்படப்படுகிறது.
அஜீஸ்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஜீஸ் என்றே சொல்லப்படும்.
உதாரணம்:
“உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி).
நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 179.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் “அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி)” ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து “கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்” என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.
கதாதாவிடமிருந்து “ஷுஃபா மற்றும் சயீத்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.
அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து “இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்” என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஜீஸ் என்று குறிப்பிடப்படும்.
மஷ்ஹூர்
மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.
உதாரணம்:
“நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 100
இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்.
யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்
- குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ
- அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்
- நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்
- நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்
- தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.
குத்ஸீ
அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படும்.
உதாரணம்:
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, “உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்(ரலி), நூல்: புகாரி 1038.
இந்த ஹதீஸில், “அல்லாஹ் கூறுகிறான்” என்று அல்லாஹ்வுடன் இணைத்து நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதால் இது ஹதீஸ் குத்ஸீ எனப்படுகிறது. குத்தூஸ் (பரிசுத்தமானவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகும். அத்தகைய அல்லாஹ்வுடன் இந்த செய்தி இணைக்கப் படுவதால் “ஹதீஸ் குத்ஸீ” என்று சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகம் சொல்லும் அனைத்து ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்ட இறைச்செய்திகள் தான். இறைச்செய்திகளுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எனவே ஹதீஸ் குத்ஸிக்கு என்று தனிச்சிறப்புகள் ஏதும் கிடையாது.
மர்ஃபூவு
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களுக்கு மர்ஃபூவு எனப்படும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரும் விடுபட்டிருக்கலாம், விடுபடாமலும் இருக்கலாம். எனவே மர்ஃபூவு தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
உதாரணம்:
“இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
நூல்: புகாரி 9
இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக, அங்கீகரித்ததாக வரும் செய்திகள் அனைத்தும் “மர்ஃபூவு” என்று ஹதீஸ் கலையில் சொல்லப்படும்.
மவ்கூஃப்
நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.
உதாரணம்:
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 1022
இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.
இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு “மவ்கூஃப்” என்று பெயரிடப்படும்.
மக்தூஃ
தாபீயீன்களின் சொல், செயல் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளுக்கு மக்தூஃ என்று சொல்லப்படும். இந்தச் செய்தியில் நபிகள் நாயகமோ, நபித்தோழர்களோ சம்பந்தப்பட மாட்டார்கள்.
உதாரணம்:
“மஸ்ருக் என்பவருடைய வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்”.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (25575)
இந்தச் செய்தி மஸ்ருக் என்ற தாபியை பற்றி அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இதுபோன்று தாபியைப் பற்றிய செய்திகளுக்கு “மக்தூஃ” என்று சொல்லப்படும்.
அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து
மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்
- முர்ஸல் 2. முஃளல் 3. முன்கதிஃ 4. முஅல்லக்
முர்ஸல்
அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபியி, நபிகள் நாயகம் சொன்னதாக இதில் அறிவிப்பார்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்”.
அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ். நூல்: தபகாத் 1455.
இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், “இம்ரான் பின் அபீ அனஸ்” என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.
இது போன்ற செய்திகள் “முர்ஸல்” என்று குறிப்பிடப்படும்.
முஃளல்
அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்தச் செய்திக்கு முஃளல் எனப்படும்.
உதாரணம்:
“அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஅத்தா 1769
இந்தச் செய்தியில், தொடர்ந்து இரண்டு அறிவிப்பாளர்கள் விடுப்பட்டிருக்கிறார்கள்.
இமாம் மாலிக் அவர்களின் மாணவரான மாலிக் பின் அனஸ் அவர்கள், தனக்கு மேலுள்ள இரண்டு அறிவிப்பாளர்களை விட்டு விட்டு தானே நேரடியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டது போன்று அறிவித்திருப்பதால் இது “முஃளல்” என்று குறிப்பிடப்படுகிறது.
முன்கதிஃ
முன்கதிஃ என்றால் தொடர்பு அறுந்தது என்று பொருள். அறிவிப்பாளர் வரிசையில் தாபியியோ அல்லது தாபியிக்குக் கீழுள்ள ஏதோ ஒரு அறிவிப்பாளரோ விடுப்பட்டிருக்கும் செய்திக்கு முன்கதிஃ என்று சொல்லப்படும்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஓதுவதைக் கொண்டும் ஆரம்பிப்பார்கள். ருகூஃவு செய்தால் தலையை உயர்த்தி விடாமலும், தாழ்த்தி விடாமலும் நடுத்தரமாக வைப்பார்கள். ருகூவிலிருந்து நிமர்ந்தால் சீராக நிற்கும் வரை ஸஜதா செய்ய மாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து எழுந்தால் சீராக அமரும் வரை மீண்டும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். தனது இடது காலை விரித்து வலது காலை நட்டி வைத்து ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் அத்தஹிய்யாத்தை கூறுவார்கள். இன்னும் ஷைத்தானின் அமர்வை விட்டும், ஒரு மனிதன் குடங்கையை கால்நடை விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதை விட்டும் தடுத்தார்கள். மேலும், தொழுகையை ஸலாமைக் கொண்டு முடிப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768
இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து அபுல் ஜவ்ஸா என்பவர் அறிவித்ததாக அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
அவருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் மற்றொரு அறிவிப்பாளர் விடுப்பட்டிருக்கிறார்.
எனவே, இந்தச் செய்தி “முன்கதிஃ” என்று சொல்லப்படும்.
முஅல்லக்
ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்”. என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி
இந்தச் செய்தியை பத்தொன்பதாவது பாடத்தில் (634வது ஹதீஸின் கீழ்) புகாரி இமாம் கொண்டு வந்துள்ளார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அனைத்தையும் போக்கிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்களை மட்டும் குறிப்பிடுவதால் இது “முஅல்லக்” எனப்படும்.
(இந்த ஹதீஸின் முழுமையான அறிவிப்பாளர் தொடர் “ஸஹீஹ் முஸ்லிமில்” இடம்பெறுகிறது.)
இன்னும், இந்த வகை ஹதீஸ்களில் “முதல்லஸ்” என்று ஒரு வகையுள்ளது. இதைப் பற்றி 40ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.