ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு – பாகம் 2
ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது.
இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்!
தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டு ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத் தான் ஹதீஸ்களின் மீது தீராப்பற்று கொண்ட ஜமாஅத்தாகும்.
தமிழக மக்களிடையே புரையோடிப் போயிருந்த, நபிவழிக்கு மாற்றமான அனாச்சாரங்களைக் கடுமையாக எதிர்த்து, அவற்றை ஒழிக்கப் பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஜமாஅத்தும் இதுவே!
முன்னோர்கள், பெரியார்கள், ஊர்ப் பழக்கம் போன்றவற்றைக் காரணம் காட்டி எண்ணற்ற நபிமொழிகளைத் தமிழக மக்கள் அடியோடு புறக்கணித்து வாழ்ந்து வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத் தான் அவர்களிடையே மறக்கடிக்கப்பட்ட அந்நபிவழிகளை உயிர்ப்பித்து, நடைமுறைப் படுத்தியது. அதற்காகப் பல்வேறு எதிர்ப்புகளையும், சொல்லொணா இன்னல்களையும் எதிர்கொண்டுள்ளது.
தமிழக வரலாற்றில் இந்த ஜமாஅத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நபிமொழிகள் ஏராளம். அவற்றை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக இந்தத் தகவலைத் தொகுத்து தருகிறோம்.
இந்தப் பட்டியலைக் கண்ட பிறகு தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸ்களை மக்களிடையே நிலைநாட்ட, நடைமுறையில் கொண்டுவர எந்த அளவு பாடுபட்டுள்ளது என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதற்கு மேலும் இந்த ஜமாஅத் ஹதீஸ்களை மறுக்கின்றது என்று குற்றம் சாட்டுவார்களேயானால் சந்தேகமற அவர்கள் மனநோயாளிகளே!
இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாக விளங்குவது தொழுகையாகும். அத்தகைய தொழுகை முறை, தொழுகைக்கான பாங்கு முறை ஆகியவற்றைக் கூட மக்கள் நபிவழி அடிப்படையில் அமைத்துக் கொள்ளவில்லை.
தொழுகை, பாங்கு ஆகிய வணக்கங்கள் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப் படுத்திய நபிமொழிகள் பின்வருமாறு:
அத்தஹிய்யாத்தில் விரலசைத்தல்
“நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன்கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜர் (ரலி)
நூல்: நஸயீ 879
இந்த நபிமொழியை செயல்படுத்துவதற்காகத் தான் ஊர் நீக்கம் உள்ளிட்ட இன்னல்களை இந்த ஜமாஅத் எதிர்கொண்டது. இந்த ஹதீஸைக் காப்பதற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டது.
நெஞ்சின் மீது கைகளை வைத்தல்
“நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும்போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்” என்று ஹுல்புத் தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதைச் சொல்லும்போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அஹ்மத் 20961
கை கட்டும் விஷயத்தில் ஹதீஸ் ஆதாரமில்லாமலும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முறைகளை இந்த ஹதீஸின் துணையுடன் இந்த ஜமாஅத் முறியடித்தது.
மஃக்ரிபுக்கு முன் சுன்னத்
“மஃக்ரிபிற்கு முன்னர் தொழுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை “விரும்பியவர் தொழட்டும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி).
நூல்: புகாரி 1183
அபூதாவூதின் (1089) அறிவிப்பில் “மஃக்ரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்” என்று இடம் பெற்றுள்ளது.
முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித்தோழர்கள் (சுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்(ரலி).
நூல்: புகாரி 625
மக்ரிப் பாங்கு 6 மணிக்கு என்றும், இகாமத் உடன் என்றும் பள்ளிவாசல்களில் எழுதிப் போட்டு இந்த ஹதீஸைச் சாகடித்தனர், ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மேற்கண்ட ஹதீஸ்களுக்கு உயிரூட்டியது.
திடலில் பெருநாள் தொழுகை
“நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர் களாக இருந்தார்கள்”
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 956 (ஹதீஸின்சுருக்கம்)
“தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்லுமாறு (பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்போது, மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், மணமுடித்த பெண்கள், திரைக்குள்ளிருக்கும் (குமரிப்) பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்லிம்கள் கூடும் இடங்களிலும் அவர்களின் வணக்க வழிபாட்டிலும் கலந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி),
நூல்: புகாரி 351
ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் உள்ளிட்ட போலித் தவ்ஹீத்வாதிகள் புறக்கணித்த இந்த ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் தான் செயல்படுத்திக் காட்டியது.
ஸஹர் பாங்கு
“பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்போர்: ஆயிஷா(ரலி), இப்னுஉமர்(ரலி).
நூல்: புகாரி 621, 5299, 7247
மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இருக்கும் என்பதை விளக்கும்போது, “அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார்” என்று ஆயிஷா (ரலி) இப்னுஉமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம்பெற்றுள்ளது.
நூல்: முஸ்லிம் 1829, புகாரி 1919.
தமிழகத்தில் இந்த ஹதீஸைச் செயல்படுத்தி வரும் ஒரே ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது. இந்தக் காலத்தில் கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டதால் ஸஹர் பாங்கு தேவையில்லை என்று போலி தவ்ஹீத் கூட்டமான ஜாக் பகிரங்கமாக எழுதியதை எண்ணிப் பாருங்கள்!
இரவுத்தொழுகை
“ரமளானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று ஆயிஷா (ரலி )இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்: புகாரி 1147, 2013, 3569
“நபி (ஸல்) அவர்கள் (இரவில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்துகள், மறுபடியும் இரண்டு ரக்அத்துகள், மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும்வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள். (சுருக்கம்)
நூல்: புகாரி 183
அல்லாஹ்வின் தூதர் சொல்லாத, செய்யாத 20 ரக்அத் தொழுகையை உண்டாக்கி அதுதான் மார்க்கம் என்று போலி உலமாக்கள் மக்களுக்குத் தவறான வழிகாட்டி வந்தனர். இதை உடைத்து நபிவழியைச் செயல்படுத்தியதற்காக புனித ரமலானிலும் அடிஉதைகளைச் சந்தித்தது தவ்ஹீத் ஜமாஅத்.
பித்ரா-நோன்புப் பெருநாள் தர்மம்
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்ள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர், ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும், (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி),
நூல்: புகாரி 1503
பித்ரா என்றால் என்னவென்றே முஸ்லிம்கள் அறியாதிருந்தனர். ஏதோ பத்து, இருபது ரூபாய்களைச் சில்லறைகளாக மாற்றி, வாசலில் வரும் யாசகர்களுக்கு 20 பைசா 50 பைசா என்று கொடுப்பதே பித்ரா என்று தவறாகப் புரிந்து கொண்டு மக்கள் நடைமுறைப்படுத்தி வந்த வேளையில் நபிகள் நாயகம் காட்டித் தந்த பித்ராவின் சரியான முறையை இந்த ஜமாஅத்தான் மக்களிடையே எடுத்து சொல்லியது.
பெருநாள் தினத்தில் ஏழைகள் பசியாற உண்டு மகிழும் வகையில் பித்ரா அமைய வேண்டும் எனவும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் பித்ரா வழங்குவது கட்டாயக் கடமை என்றும் பறைசாற்றக் கூடிய மேற்கண்ட நபிமொழிகளை மக்களிடையே எடுத்துரைத்து பித்ரா வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தது இந்த ஜமாஅத்தே.
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஹதீஸ்களை நிலைநாட்டுவதில் இந்த ஜமாஅத் கொண்டுள்ள பற்றை இதிலிருந்து அறியலாம்.
பெண்கள் பள்ளிக்கு வருதல்
அல்லாஹ்வின் ஆலயமான பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று நபிவழிக்கு மாற்றமாக சட்டமியற்றி அதற்கு மார்க்கத்தின் சாயம் பூசி, பெண்களை பள்ளிக்குள் வரவிடமால் தடுத்த காலம் தமிழகத்தில் இருந்தது.
இதன் காரணமாக தர்காவுக்குப் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் ஆலிம்கள் என்போர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் தான் பெண்கள் பள்ளிக்கு வரும் நபிவழியை நடைமுறைப் படுத்தியது. தர்காவுக்குச் செல்லும் கூட்டத்தை பெருவாரியாகக் கட்டுப்படுத்தியது.
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் சுப்ஹு இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச்செல்வார்கள். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு செல்வதை வெறுக்கிறார்கள்; ரோஷப் படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “(என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களை தடுக்கிறது” என்று பதில் வந்தது.
நூல் : புகாரி 849
எளிய திருமணம்
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்னத் அஹ்மத் 23388
தவ்ஹீதின் ஆதிவாசிகள் என்று கூறிக் கொள்வோரும், மார்க்க அறிஞர்கள் என்று தம்பட்டம் அடிப்போரும் கூட பெரும் பொருட் செலவில் திருமணம் செய்யும் போது, தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே இதை முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி செயல்படுத்தி வருகிறது.
மூன்று தலாக்
“நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலக்காக கருதப்பட்டு வந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று இப்னு அப்பாஸிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் ஆம் என்றார்கள்
நூல்: முஸ்லிம் 2690
இஸ்லாத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலி முத்தலாக் சட்டத்தை உடைத்து எறிந்து இந்த நபிவழிக்கு உயிரூட்டியது தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.
பாங்கிற்குப் பின் நபி மீது ஸலவாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்பவரின் தொழுகை அழைப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அவருக்கு அருள் புரிகிறான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள் வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும் அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமைநாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
நூல்: முஸ்லிம் 384
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு
ஒருவர் ரமலானில் நோன்பு நோற்று அடுத்து தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் நோன்பு வைத்தால் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1164
ஒரு சில முதியவர்கள் மட்டுமே ஆறு நோன்பு நோற்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆண்கள், பெண்கள், இளம் வயதினர் என அனைத்து தரப்பு மக்களும் இந்நோன்பை நோற்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது இந்த ஜமாஅத்தாகும்.
இந்த அடிப்படையில் ஆறு நோன்பும் இந்த ஜமாஅத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நபிவழியே.
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த நோன்பு அதற்கு முன்சென்ற ஒரு ஆண்டு பாவத்தையும் அதற்கு பின் வரும் ஒரு வருட பாவத்தையும் அழித்து விடுகிறது என்று பதில் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2804
ஆஷுரா நோன்பு
ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் அந்நாளில் நோன்பு வைப்பது அதற்கு முன்சென்ற வருடத்தின் பாவங்களை அழிக்கிறது என்று பதில் கூறினார்கள்
நூல்: முஸ்லிம் 2804
கூட்டுக் குர்பானி
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும் ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்) கொள்ள கட்டளையிட்டார்கள்
நூல்: முஸ்லிம் 2999
குர்பானிப் பிராணிகளின் தோல்
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக் கூடியவருக்கு கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
நூல்: புகாரி 1717
கூட்டாகச் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்பதும், குர்பானியின் தோல் முழுக்க முழுக்க ஏழைகளுக்குப் பயனளிக்கும் வகையில் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுமே மேற்கண்ட நபிமொழிகள் சொல்லும் பாடங்களாகும்.
தமிழக முஸ்லிம்கள் இந்த நபிமொழிகளையும் புறக்கணிக்கவே செய்தனர்.
இந்நபிமொழிக்கு மாற்றமாக மக்களிடமிருந்து தோல்களைப் பெற்றுக் கொண்டு அதை பணமாக்கி காலம் காலமாக அதைச் சேமித்து வைக்கும் பழக்கமே பல பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து இருந்து வந்தது.
தோல்கள் மூலம் பெற்ற வருவாயை வைத்து மத்ரஸாக்கள் நடத்துவதும், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிடுவதும் என முற்றிலும் நபிவழிக்கு மாற்றமாகவே இவர்கள் பயன்படுத்தி வந்தனர். அல்ஹம்துலில்லாஹ். இந்தத் தவறான நடைமுறையையும் தவ்ஹீத் ஜமாஅத்தான் களைந்தது.
மக்களிடமிருந்து குர்பானித் தோல்களை பெற்று, அதைப் பணமாக்கி உரிய ஏழைகளிடம் முறையாக கொண்டு சேர்ப்பிக்கும் நபிவழி அடிப்படையிலான பணியை தவ்ஹீத் ஜமாஅத்தே மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.
நபிகள் நாயகம் கற்றுத் தந்த கூட்டுக் குர்பானி முறையை மக்களின் நடைமுறைக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி இன்றைக்கு ஆயிரக் கணக்கான கூட்டுக் குர்பானி பங்குகள், பல லட்சம் மதிப்புள்ள தோல்கள் இந்த ஜமாஅத்திடம் வருகிறது. அதன் வருவாயை உரிய ஏழைகள் பயன்பெறும் வகையில் பெரும் சேவையையும் இந்த ஜமாஅத் ஆற்றி வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் பல நபிமொழிகளை நடைமுறைப் படுத்தியுள்ளது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
தொழுகையில் தக்பீரின் போது கையை உயர்த்துதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போது தமது தோல்களுக்கு நேராக கையை உயர்த்துவார்கள் ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) மீண்டும் இரண்டு கைகளையும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலக்கல் ஹம்து என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதும் ஸஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்)
நூல்: புகாரி 735
ஷாபி மதஹபுக்கு மட்டுமே உள்ளதாகக் கருதப்பட்டு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த சுன்னத்தை அனைவருக்கும் உரியதாக ஆக்கியது இந்த ஜமாஅத் தான்.
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை
நூல்: முஸ்லிம் 2309
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி மேற்கண்ட நபிமொழியை அமலுக்குக் கொண்டு வந்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.
மெல்லிய குரலில் திக்ர் செய்தல்
திக்ர் என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் அடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களிடேயே திக்ர் என்ற வணக்கத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நபிவழியையையும் இந்த ஜமாஅத் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2992
நரைமுடிக்குச் சாயமிடுதல்
நரைமுடிக்குச் சாயமிடும் பழக்கம் தமிழக மக்களிடையே அறவே இல்லாமலிருந்தது. அது ஏதோ சபிக்கப்பட்டுள்ள செயல் போன்று கருதி வந்தனர். சாயமிடும் சிலர் கூட மார்க்க அடிப்படையில் அல்லாமல் கருப்பு நிற சாயமிடுபவர்களாகவே இருந்தனர்.
ஆனால் நரைமுடிகளைக் கறுப்பு அல்லாத நிறத்தைக் கொண்டு சாயமிடுவது நல்ல விஷயமே என்று அது தொடர்பான நபிவழியை, நடைமுறையை மக்களிடையே அறிமுகப் படுத்தியதும் இந்த ஜமாஅத் செய்த பணியாகும்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன.
அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3925
தடுக்கப்பட்ட இசை
இசையையும் இஸ்லாத்தையும் பிரித்து பார்க்க முடியாது எனும் வகையில் இசையை இஸ்லாத்தின் ஒரு அம்சமாகவே முஸ்லிம்கள் கருதினர்.
நாகூர் ஹனிபாவின் பாடல்களை பெருநாள் தினத்தன்று ஒலிக்கவிட்டு தங்கள் மார்க்கப்பற்றை வெளிப்படுத்துவதாகக் கருதிவந்த காலம் அது. இக்கால கட்டத்தில் ஆலிம்கள் என்போர் இதை அகற்ற ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.
அத்தகைய அறியாமையை அகற்றி இசை இஸ்லாத்தில் ஹராம் எனும் ஹதீஸை மக்களிடையே தெளிவுபடுத்தி இசைப்பிரியர்களை இறைப்பிரியர்களாக இந்த ஜமாஅத் வார்த்தெடுத்தது என்றால் அது மிகையல்ல.
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், “நாளை எங்கüடம் வா” என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(üல் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
நூல்: புகாரி 5590
தடை செய்யப்பட்ட கப்ர் வழிபாடு
தர்கா வழிபாட்டின் மூலம் நிரந்தர நரகில் தள்ளும் இணைவைப்பில் இருந்த அதிகமான முஸ்லிம்களை தர்கா கட்டுவது கூடாது, அது சாபத்திற்குரிய செயல் என்பது தொடர்பான நபிமொழிகளை மக்களிடையே எடுத்துரைத்து அவர்களை ஏகத்துவவாதிகளாக மாற்றியது இந்த ஜமாஅத்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது, தம் முகத்தின் மீது சதுரமான கறுப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
நூல்: புகாரி 3454, 3453
கப்ரைச் சமப்படுத்துதல்
கப்ருகள் கட்டப்படுவதையும் அதில் அதிகப்படுத்தப்படுவதையும் அது பூசப்படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
நூல்: திர்மீதி 1052
மஹர் கொடுத்து மணம் முடித்தல்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டதாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நபியவர் கüடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக் கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அüப்பீராக!” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5153
நோன்பு துறப்பதை விரைவுப்படுத்துதல்
தங்கள் இஷ்டத்திற்கு விடி ஸஹர் செய்து கொண்டு, காலதாமதாக நோன்பு துறக்கம் வழக்கம் கொண்டவர்களை நபிவழி அடிப்படையில் குறித்த நேரத்தில் விரைவாக நோன்பு திறக்கும் பழக்கம் கொண்டவர்களாக ஆக்கியதும் இந்த ஜமாஅத்தான் என்பதை மறந்து விடக் கூடாது.
நோன்பு துறப்பதை விரைவுப்படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: புகாரி 634
பயணத் தொழுகை
பயணத்தில் சுருக்கி தொழும் சலுகையை மக்களில் பலர் அறியாதிருந்தனர். நபிவழியில் வழங்கப்பட்டுள்ள இச்சலுகையையும், அது தொடர்பான நபிவழி சட்டங்களையும் மக்களிடையே அறியச் செய்தது இந்த ஜமாஅத் நடைமுறைப்படுத்தியவைகளில் ஒன்றாகும்.
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
நூல்: முஸ்லிம் 1116
ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாதிஹா
ஜனாஸா தொழுகையில் பாத்திஹா அத்தியாயத்தை ஓதும் வழக்கம் இல்லாமலிருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே பாத்திஹா அத்தியாத்தை ஓதாவிடில் தொழுகை கூடாது எனும் நபிவழியை நடைமுறைப்படுத்தியது இந்த ஜமாஅத்தே.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா (ரலி)
நூல்: புகாரி 1335
களா தொழுகை இல்லை
தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை எனும் குர்ஆன் வசனத்தை மறுக்கும் விதமாக முஸ்லிம்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய தொழுகைகளை களாத் தொழுகை என்ற பெயரில் தொழுது வந்தார்கள்.
குறித்த நேரத்தில் குறித்த தொழுகையைத் தொழவேண்டும். தூக்கம், மறதி மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பிரச்சனை ஆகிய காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழக் கூடாது என்பதை விளக்கி, களாத் தொழுகை என ஒன்று கிடையாது என்பது தொடர்பான நபிமொழியை இந்த ஜமாஅத்தே மக்களிடம் பிரச்சாரம் செய்தது.
யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1600
தொழுகையின் ஆரம்ப துஆ
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். நான் (நபி (ஸல்) அவர்கüடம்) “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கு மிடையே நீங்கள் மௌனமாக இருக்கும்போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “நான், “அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்’ என்று கூறுகிறேன்” என்றார்கள்.
(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)
நூல்: புகாரி 744
மத்ஹபு அடிப்படையில் ஸனாவை ஓதிவந்த மக்களிடம் மேற்கண்ட நபிமொழியைச் செயல்படுத்திக் காட்டியது தவ்ஹீத் ஜமாஅத்.
சோதனையின் போது குனூத்
முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்படும் போது அவர்களுக்காகத் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் விதமாக குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த நபிவழியையும் தவ்ஹீத் ஜமாஅத் பல நேரங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவுக்கப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணை வைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். இவர்கள் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்கள் எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்
நூல்: புகாரி 1002
இவை மட்டுமின்றி, குல்ஆ எனும் பெண்களுக்கான விவாகரத்து உரிமையை நிலைநாட்டியது, இத்தா என்ற பெயரில் நடைபெற்ற மூடப்பழக்கங்களை ஒழித்து நபிவழியில் இத்தாவை எளிமைப்படுத்தியது, லைலத்துல் கத்ரு 27ஆம் இரவு என்ற நம்பிக்கையைத் தகர்த்து ரமளானின் பிந்திய பத்து இரவுகளிலும் மக்களை அமல் செய்ய வைத்தது, பெருநாள் தொழுகையை விரைவுபடுத்தியது, ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு என்ற நடைமுறையை மாற்றி ஒரு பாங்கை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் இரண்டாவது ஜமாஅத் நடத்துதல், தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை, தஹிய்யத்துல் உளூ தொழுகை என்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய ஹதீஸ்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
இது போன்ற இன்னும் ஏராளமான ஹதீஸ்களையும் மக்களிடையே நிலைநாட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம்.