இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு
இமாம் அஹ்மத்
முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்
இயற்பெயர் : அஹ்மத்
தந்தைப்பெயர் : முஹம்மது
பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்
பிறந்த நாள் : ஹிஜ்ரி 164ம் ஆண்டு
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.
இவர் தொகுத்த நூல்கள்:
முஸ்னத் அஹ்மத்
அஸ்ஸுஹுத்
ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)
அல்அஷ்ரிபத்
அல்இலல்
அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்
அல்மனாசிக்
கிதாபுல் ஃபிதன்
கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்
முஸ்னத் அஹ்லில் பைத்
அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)
கிதாபுத்தாரிக்
அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)
இவரது ஆசிரியர்கள்:
இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இவரது மாணவர்கள்:
முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும்.
இமாம் மாலிக்
முழுப்பெயர் : மாலிக் இப்னு அனஸ் இப்னு அபீ ஆமிர் இப்னு அம்ரில் அஸ்பஹானீ அல்ஹுமய்ரீக் (அல்முஅத்தா என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
புனைப்பெயர் : அபு அப்துல்லாஹ் அல்மதனீ
இயற்பெயர் : மாலிக்
தந்தைப்பெயர் : அனஸ்
பிறந்த ஊர் : அஸ்பஹானீ என்ற ஊரில் பிறந்தார். இவர் அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர்.
பிறப்பு : ஹிஜ்ரி 93
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:
இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயத்தை அறிந்து இருந்ததால் பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஒரு தடவை மட்டும் மக்காவிற்கு ஹஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார். என்றாலும் மார்க்கச் சட்டங்களை நன்கு அறிந்தவாராக இருந்தார். இவர் 21வது வயதில், தான் படித்ததைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் தொகுத்த நூல்கள் :
புகாரி, முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பாகவே இவர் எழுதிய அல்முஅத்தா என்ற நூல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து இமாம்களும் அதன் பக்கமே சார்ந்து இருந்தனர்.
ரிஸாலதுன்ஃபில் கத்ர்
ரிஸாலதுன் ஃபின் நஜ்ம்
ரிஸாலதுன் ஃபில் அக்லியா
ரிஸாலதுன் இலா அபிஹஸ்ஸான்
ரிஸாலதுன் இலல் லைஸ்
கிதாபுஸ் ஸிர்
இன்னும் பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.
இவரது ஆசிரியர்கள்:
சியாத் இப்னு ஸஅத், ஸைது இப்னு அஸ்லம், ஸைது இப்னு அபீஉனைஸ், ஸைது இப்னு ரிபாஹ், சாலிம் அபிநல்ர், அப்துல்லாஹ் இப்னு தீனார், மூஸா இப்னு உக்பா, ஆயிஷா பின்த் ஸஅத் இப்னு அபிவகாஸ், ஹிஷாம் இப்னு உர்வா போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இவரது மாணவர்கள்:
இமாம் மாலிக் அவர்களுக்கு உலகின் அனைத்து பாகங்களிருந்தும் மாணவர்கள் அதிகமானார்கள். ஹிஜாஸ், யமன், குராஸான், ஷாம், மிஸ்ர், அன்தலூஸ் போன்ற பகுதிகளில் இவருக்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க சிலர்:
இப்ராஹீம் இப்னு தஹான், இஸ்மாயீல் இப்னு உலய்யா, சுஃப்யான் இப்னு உயைனா, அப்துல்லாஹ் இப்னு வஹாப், அபூஅலீ அல்ஹனஃபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: ஹிஜ்ரி 179, ரபிவுல்அவ்வல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அப்போது அவருக்கு 86 வயதாகும்.
இமாம் தாரமீ
முழுப்பெயர்: அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னுல் ஃபலுல் இப்னு பஹ்ராமுத்தாரமீ அத்தைமீ (ஸுனன் அத்தாரமி என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)
புனைப்பெயர்: அபுமுஹம்மதுல் ஸம்ரகன்தீ அல்ஹாபிழ்
இயற்ப்பெயர்: அப்துல்லாஹ்
தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்
பிறந்த ஊர் : ஸமரகன்த் என்ற ஊரில் பிறந்தார்.
பிறந்த நாள் : ஹிஜ்ரி 181
கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கில் கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் பஸரா, ஷாம், வாஸித், திமிஷ்க், ஜஸீரா போன்ற ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்
இவர் தொகுத்த நூல்கள்:
சுனனுத்தாரமீ
தஃப்ஸீர்
அல்ஜாமிஃ
முஸ்னதுத் தாரமீ
போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.
இவரது ஆசிரியர்கள்:
இப்ராஹீம் இப்னுல் முன்திர், கபீஸா இப்னு உக்பா, முஹம்மது இப்னு அஹ்மத் இப்னு அபிகலஃப், முஹம்மது இப்னு குதாமா, காலித் இப்னு மக்லத், அஃப்வான் இப்னு முஸ்லிம், இஸ்மாயில் இப்னு அபிஅவ்ஸ், ஜஃபர் இப்னு அவ்ன், சுலைமான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு யஹ்யா அஸ்ஸகஃபி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
இவரது மாணவர்கள்:
முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, அபூஸுர்ஆ, பகீ இப்னு மக்லதில் அன்த லூஸ், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அபூ யஃகூபில் வர்ராக், இப்ராஹீம் இப்னு அபிதாலிபின் நைஸாபூரி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: இவர் ஹிஜ்ரி 255ல் மரணித்தார். அரஃபாவுடைய நாளில் (வெள்ளிக்கிழமை அன்று) அவர் அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயதாகும்.
ஹாபிழ் இப்னு ஹஜர்
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் மறக்க முடியாத மாபெரும் அறிஞர்; மாமேதை.
ஹதீஸ் எனும் சமுத்திரத்தில் காலமெல்லாம் முத்துக்குளித்து அடுக்கடுக்கான ஆய்வு முத்துக்களை அகிலத்திற்கு அளித்த அரும்பெரும் ஆற்றல் ஞானி.
ஸஹீஹுல் புகாரிக்குப் பல்வேறு அறிஞர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். ஆனால் இவர்கள் எழுதிய ஃபத்ஹுல் பாரி என்ற விரிவுரை தலைசிறந்த விரிவுரையாகும்.
இந்த விரிவுரை அவரது அறிவின் ஆழத்தையும், கடின உழைப்பையும் எடுத்துரைக்கும்.
கணிணி இல்லாத – கையெழுத்து பிரதிகள் மட்டுமே உள்ள காலத்தில் புகாரியில் இடம்பெறுகின்ற அதே ஹதீஸ் அல்லது அதே கருத்தில் அமைந்த அல்லது கூடுதல் குறைவான கருத்தில் அமைந்த ஹதீஸ் அல்லது நேர்மாற்றமான ஹதீஸ் இன்ன நூலில் இடம் பெற்றுள்ளது என்று அவர் காட்டுகின்ற மேற்கோள், மேனியை சிலிர்க்க வைத்து விடுகின்றது.
அத்தனை ஹதீஸ் நூற்களிலும் அவரது ஆய்வுப் பார்வை பதிந்திருப்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம், அவர்களின் குறை நிறையைப் பற்றிய அலசல் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர். ஹதீஸ் துறையில் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
ஹதீஸ் வரலாற்று வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இருந்த போதிலும் தமிழ்பேசும் மக்களிடம் அவருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை.
ஹதீஸ் ஆய்வுகளில் அவருக்கு ஓர் உயரிய இடத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய இந்தக் கூடுதல் விளக்கம் தரப்பட்டுள்ளது.
முழுப்பெயர்: அஹ்மத் இப்னு அலீ இப்னு முஹம்மத் இப்னு முஹம்மது இப்னு அலீ அல்கனானீ அல்அஸ்கலானீ
புனைப்பெயர்: ஷஹாபுத்தீன் அபுல்ஃபலலுல், இப்னு ஹஜர் (இந்தப் பெயரால் தான் இவர் பிரபலமாக அறியப்பட்டுள்ளார்)
இயற்பெயர் : அஹ்மத்
தந்தைப்பெயர்: அலீ
பிறந்த ஊர்: எகிப்தில் உள்ள காஹிரா என்ற ஊரில் பிறந்தார். இவரது குலம் அல்கனானீ என்பதாகும்.
பிறப்பு : ஹிஜ்ரி 773ம் ஆண்டு பிறந்தார்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இவர் மிஸ்ரிலிருந்து மக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு வருடம் தங்கிப் பயின்றார். பிறகு ஷாம், ஹிஜாஸ், யமன், இவற்றுக்கு இடையில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றுள்ளார். ஃபலஸ்தீன், அங்குள்ள காஸா இன்னும் இது போன்ற பகுதிகளுக்கும் சென்றுள்ளார். மிஸ்ரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்றுள்ளார்.
இவர்தொகுத்த நூல்கள்:
ஃபத்ஹுல் பாரி ஃபி ஷர்ஹி ஸஹீஹுல் புகாரி (இது மிகவும் பிரபலமான நூலாகும்)
அல்அஜாயிபு ஃபி பயானில் அஸ்பாப்
நுஸ்ஹதந்நல்ர் ஃபிதவ்லீகீ நுஹ்பதுல் ஃபிக்ர் (ஹதீஸ் கலை விதிகள் பற்றிய சிறு ஏடு)
அல்கவ்லுல் முஸத்தது ஃபி தப்பி அனில் முஸ்னத்
நதாயிஜுல் அஃப்கார் ஃபி தக்ரீஜீ அஹாதீஸுல் அத்கார்
முவாஃபிகாதுல் கபரில் கபர்
அந்நுகதுல்லிராஃப் அலல் அத்ராஃப்
தக்ரீபுத் தஹ்தீப் (அறிவிப்பாளர்களின் குறை நிறை தொடர்பானது)
ஸில்ஸிலதுத்தஹப்
புலூகுல் மராம் (நோக்கங்களை அடைவது)
இவை அல்லாத சுமாôர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துள்ளார்.
இவரது ஆசிரியர்கள்:
அப்துர்ரஹ்மான் அல்இராகீ, இஸ் இப்னு ஜமாஆ, ஸகாவீ, அஹ்மத் இப்னு முஹம்மத், அல்ஐகீ, ஷம்சுதீன் கல்கஷன்தீ, அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கலீலீ, ஜமாலுத்தீன் இப்னு அல்லஹீரா போன்ற பல அறிஞர்களிடம் பல்வேறு கலைகளைக் கற்றுள்ளார்.
இவரது மாணவர்கள்:
இவருக்கு மக்கா, ஸீராஷீ, ஷாம், பக்தாத் போன்ற பகுதிகளில் இருந்து 626க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர்:
இப்னு காலி, இப்னு ஃபஹ்த், இப்னு தஃக்ரீ, முஹம்மதுல் காஃபினீ, ஷம்சுதீன் ஸஹாவீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
இறப்பு: இவர் எகிப்தில் ஹிஜ்ரி 852ஆம் வருடம் துல்ஹஜ் கடைசியில் மரணித்தார். அப்போது அவருக்கு 79 வயதாகும்.